\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

இருபத்தி நான்கு மணி நேரம் – பகுதி 5

Filed in இலக்கியம், கதை by on June 10, 2014 0 Comments


24hours-2-620x516முன்கதைச் சுருக்கம்:

(பகுதி 4) கணேஷும், பாரதியும் அவர்களுடன் ஒன்றாகக் கல்லூரியில் பயிலும் இன்னும் சில நண்பர்களும் தேர்வு எழுதுவதற்காகக் காலை நேரத்தில் புறப்பட்டுப் பேருந்தில் சென்று கொண்டிருக்கின்றனர். வழியில் கத்தியால் குத்தப்பட்ட தட்சிணா மூர்த்தியை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர். தட்சிணா மூர்த்தி கணேஷிடம் ரகசியமாக ஒப்படைக்கும் மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஒன்றில், கடை வீதியில் தங்க நகை செய்யும் கடை வைத்திருக்கும் சபாரத்தினம் ஆசாரியைக் கொலை செய்வது பதிவாகியுள்ளது. ஒரு மர்ம நபர் மருத்துவமனையில் போலிஸ் அதிகாரி ராஜேந்திரனின் குழுவுக்கு அருகில் நின்று கொண்டிருக்கும் கணேஷின் செல் ஃபோனில் அழைத்து மைக்ரோ எஸ் டி. கார்டைக் கொடுத்து விடும்படி மிரட்டுகிறான். அந்த மிரட்டல் குறித்து போலிஸ் அதிகாரி ராஜேந்திரனிடம் கணேஷ் விவரம் கூறி, எஸ்.டி கார்டையும் ஒப்படைக்கிறான். ஆனால், ராஜேந்திரன் அந்த கார்டுடன் தனது பர்ஸ் முழுவதையும் தவற விடுகிறார். அதே நேரத்தில் இறந்த சபாரத்தினத்தின் சம்பந்தி சண்முக சுந்தரத்திடம் போலிஸ் விசாரணை நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. தட்சிணா மூர்த்தியின் உயிரைக் காப்பாற்ற அறுவைச் சிகிச்சை செய்யும் டாக்டர் தேசிகனின் மகள் டாக்டர் புஷ்பா கடத்தப் படுகிறாள், தட்சிணா மூர்த்தியை அவர் கொலை செய்தால் புஷ்பாவை விட்டு விடுவதாக  ஃபோனில் மிரட்டல் வருகிறது. இதற்கு நடுவில் செல்வந்தர் வேலாயுதமும் ஒரு சில தனவான்களும் தட்சிணா மூர்த்தியிடம் சிக்கிய மைக்ரோ எஸ்.டி கார்டை எவ்வாறு கைப்பற்றுவது எனப் பேசிக் கொண்டு இருக்கின்ற பொழுது, வேலாயுதம் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படுகிறார். ராஜேந்திரன் தவற விட்ட பர்ஸைக் கண்டெடுத்த துப்புறவு ஊழியன் மாசான், பர்ஸிலிருந்த பணத்திற்காக அதனைத் தானே வைத்துக் கொள்வது என்று முடிவு செய்கிறான். அதன் பிறகு என்ன நடக்கிறதென்று பார்ப்போம்.

திங்கட்கிழமை மதியம் நான்கு மணி:

விஸ்வேஸ்வரய்யா மருத்துவமனையின் மெயின் ப்ளாக்.. முன்புறம் உள்ள கார்பார்க்கிலிருந்து நடந்து வந்து படியேறி வலது புறம் திரும்பினால் ஒரு நீளமான வராந்தா. அந்த வராந்தாவின் கோடியில் இருப்பது சீஃப் டாக்டர் தேசிகனுடைய அறை. கார்னர் ஆஃபிஸ். அறையின் பின்புறச் சுவர்களில் இருந்த பெரிய ஜன்னல்களின் மூலம் மாலை நேரச் சூரியன் உள்ளே நுழையப் போராடிக் கொண்டிருந்தான். அந்தப் பெரிய வளாகத்தில், அந்த அறையின் பின்னால் வளர்ந்து இருந்த பல பெரிய மரங்கள், பசுமையைக் கொடுப்பதுடன் வருடலான தென்றல் காற்றை உள்ளே தவழ வைத்துக் கொண்டிருந்தது.

பொறுமை முழுவதும் இழந்தவராக கைவிரல்களைச் சொடக்குப் போட்டுக் கொண்டே டென்ஷனுடன் தலையை இப்படியும் அப்படியும் ஆட்டிக் கொண்டே நாற்காலியில் அமர்ந்திருந்தார் டாக்டர் தேசிகன். தட்சிணா மூர்த்திக்கு அறுவைச் சிகிச்சை செய்து கொண்டிருந்த நேரத்தில் வந்த தொலைபேசி அழைப்பு நினைவிலிருக்கும். அந்த அழைப்பில் மறுமுனையில் மிரட்டியது ஒரு முரட்டுக் குரல். மிரட்டியது என்பதைச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. தட்சிணா மூர்த்தியின் அறுவைச் சிகிச்சை நடந்து கொண்டிருக்கையில், எல்லோர் கவனமும் தேவையான வேலைகளில் இருக்க, டாக்டர் தேசிகனின் மகள் டாக்டர் புஷ்பா காணாமல் போனதை யாரும் கவனித்திருக்கவில்லை, அந்தத் தொலைபேசிச் செய்தி வரும்வரை. தொலைபேசியில் பேசிய முரடன், டாக்டர் புஷ்பா உயிரோடு எந்தவிதமான சேதமும் இல்லாமல் வந்து சேர வேண்டுமெனில், ஒரு கட்டளை விதித்திருந்தான். அது குறித்த நினைவில்தான் டாக்டர் தேசிகன் டென்ஷன் ஆகிக் கொண்டிருக்கிறார்.

அவனது கட்டளை தட்சிணா மூர்த்தி மருத்துவமனையிலிருந்து உயிருடன் வெளிவரக் கூடாது என்பதே. யாருக்கும் தெரியாமல் காதும் காதும் வைத்தாற்போல உயிரைப் பறித்து, சிகிச்சை பலனளிக்காமல் இறந்து போனான் என ஊர் முழுவதும் நம்ப வைப்பது அவர் மகளின் உயிரைக் காக்க அவர் கொடுக்க வேண்டிய விலை. தட்சிணா மூர்த்தி இறந்து விட்டான் என்பது உறுதியானதும், புஷ்பா தானாகத் தனது வீட்டிற்கு வந்து சேருவாள் என்று உறுதியளித்திருந்தான். இது குறித்துப் போலிஸைத் தொடர்பு கொண்டால், புஷ்பாவைக் கொலை செய்து விடுவதாக மிரட்டலாகத் தெரிவித்திருந்தான்.

டாக்டர் தேசிகனுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. அன்பு மகள் மற்றும் தொழில் தர்மம் இரண்டில் எதைத் தேர்ந்தெடுப்பதில் அவருக்கு ஏற்பட்ட மனப் போராட்டத்திற்கு விடையெதுவும் கிடைக்காமல் புழுங்கிக் கொண்டிருந்தார். புஷ்பாவிற்கு பத்து வயது ஆகியிருக்கையில் அவளின் தாயார் இறந்து விட்டிருந்தார். அன்றிலிருந்து இன்று வரை அவளைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்துக் கொண்டவர் டாக்டர். இன்னொரு திருமணம் செய்து கொண்டால் புஷ்பாவின்மீது கவனம் செலுத்த முடியாது என்ற பயத்தில், தனி மனிதனாகவே வாழ்க்கையை ஓட்டி இருந்தார்.

அதே சமயத்தில் தான் விரும்பி ஏற்ற, மனித சமுதாயத்திற்குச் சேவை செய்வதற்காக உருவாக்கப்பட்ட இந்தப் புனிதமான மருத்துவர் தொழிலுக்கு துரோகம் செய்வதற்கு மனது வரவில்லை. தவிர, ஒரு உயிரைக் கொலை செய்வது என்பது சாதாரண மனிதர்களால் நினைத்துப் பார்க்க முடியாத செயலன்றோ. இவையனைத்தும் சேர்ந்து அவரைக் குழப்பிக் கொண்டிருந்தன.

யாருடையது என்று தெரியாமல் தனது கோட் பாக்கெட்டில் ??????? போடப்பட்டிருந்து, அதன்மூலம் தன்னிடம் வில்லனுடைய ஆட்கள் தொடர்பு கொள்ள ஏதுவாக இருக்கும் தொலைபேசி அவருக்கு முன்னே இருந்த மேசையில் வைக்கப்பட்டிருந்தது. திடீரென்று அந்தத் தொலைபேசி மீண்டும் அடிக்கத் தொடங்கியது. மீண்டும் அதே முரடன் பேச இருக்கிறான் என்று ஊகித்துக் கொண்ட டாக்டர், தொலைபேசியை எடுத்துப் பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார். பயத்தில் நெற்றியில் முத்துப் போல் வியர்வை வழியத் தொடங்கியிருந்தது. பதட்டத்துடன் தொலைபேசியை எடுத்து மெதுவாய்க் காதினருகில் வைத்து “ஹலோ” என்று பலவீனமான குரலில் தொடங்கி வைத்தார். “என்ன டாக்டரே, என்ன முடிவு பண்ணியிருக்கீங்க… பொண்ணு மேல பாசமே இல்லையா? மூணு மணி நேரமாச்சு, நீங்கபாட்டுக்கு ஆபரேஷனை முடிச்சுட்டு சும்மா ஒக்காந்திருக்கீங்க?”

எல்லாவற்றையும் அருகிலிருந்து பார்ப்பது போல் பேசுகிறானே, யாரிவன்? குழப்பத்துடன் சுற்று முற்றும் பார்த்துக் கொண்டே குரலைக் கனைத்துக் கொண்டு பேசத் தொடங்கினார் டாக்டர். “ம்ம்…. கொஞ்ச யோசிக்க நேரங்குடுப்பா…. எப்படிச் செய்யலாம்னு ப்ளான் போடணும்…” சொல்லி முடித்தபின் அடுத்த முனை ஃபோனைத் துண்டித்தது.

திங்கட்கிழமை மதியம் நான்கு மணி முப்பது நிமிடம்:

காரைக்குடிச் சரகத்தின் கீழ் வரும் மற்றொரு காவல் நிலையம், நகரிலிருந்து பத்துக் கிலோமீட்டர் தொலைவிலுள்ள புதுவயல் என்ற ஊரைச் சேர்ந்த ஒரு சிறிய காவல் நிலையம். சப்-இன்ஸ்பெக்டர் முருகன் ஒரு மர நாற்காலியில் அமர்ந்திருக்க, அவருக்கு முன்னர் போடப்பட்ட ஒயர் பின்னிய நாற்காலியில் நெற்றியில் வழியும் வியர்வையைத் துடைத்துக் கொண்டு வேலாயுதம் அமர்ந்துள்ளார். அவருடன் வந்த வேலைக்காரர்கள் எவருக்கும் காவல் நிலையத்திற்குள் செல்ல அனுமதி இல்லையென்று சொல்லிவிட்டார் கறாரான முருகன். அதற்கேற்ப வெளியில் நின்று கொண்டு, தங்களின் முதலாளிக்கு என்னவாகுமா என்ற பயத்துடன் காத்துக் கொண்டிருந்தது கைத்தடிகள் கூட்டம்.

”மனமகிழ் மன்றத்தில பேச வந்த ஏட்டுகிட்ட பேச மாட்டேன்னு சொன்னியளா?” முருகன். இல்லை சார், ”அவரு யாரு என்னன்னு தெரியல, நம்ம கூட்டாளிகளுக்கு முன்னால மருவாத இல்லாம எதேதோ சொல்லிட்டாரு.. அதான்” என இழுத்தார். இதுவரை இன்னொருவரின் முன்னர் வேலாயுதம் இவ்வளவுப் பணிவாய்ப் பேசிய அனுபவமில்லை. ஆனால் முருகன் காவல்துறையின் நேர்மையான அதிகாரி மற்றும் நேர்மையான கமிஷனர் ராஜேந்திரனின் மதிப்பிற்கும் அன்பிற்கும் பாத்திரமானவர் என்று நன்கு அறிந்திருந்ததால், வேலாயுதம் சற்று அடக்கி வாசிக்கத் தொடங்கியிருந்தார்.

“அந்த மனமகிழ் மன்றத்துல என்ன நடக்குதுங்க?” விசாரணையைத் தொடங்கியிருந்தார் முருகன்.

“பொழுது போக்கு விளையாட்டுங்க. பர்மிட் வாங்கித்தான் எல்லாமே நடக்குது” வேலாயுதத்தின் பயம்.

நீ சொல்வதை நான் நம்பவில்லை என்ற முகபாவத்துடன் “என்ன மாதிரி பொழுது போக்கு?” என்று கேள்வியைத் தொடர்ந்தார்.

“பொதுவா சீட்டுக் கட்டு விளையாடுவோங்க,” வேலாயுதம்

“அப்புறம்?” முருகன்

“அதுதாங்க, சில சமயம் மெட்ராஸ்ல நடக்குற குதிரைப் பந்தயத்திக்குப் பணம் கட்டி வெளையாடுவோம்.. டி.வி. ல அங்குண நடக்குற வெளையாட்டப் பாத்துக் கிட்டே ஃபோன் மூலமா பெட் தொகையைப் பேசலாம்”.. வேலாயுதம் விளக்கிக் கொண்டிருந்தார்.

“எல்லாம் பணத்திமிரு” முருகன் சற்றுக் கடுப்புடன் விமரிசித்து விட்டு, “அது சரி, என்னவோ நீங்க மூணு பேரும் தகராறு பண்ணிகிட்டு இருந்தீங்களாமே, அப்டியா?” என்றார்..

“இல்லங்க.. அப்படி எதுவும் இல்ல..எப்பவும் போல வழக்கமான விஷயங்களைத் தான் பேசிக்கிட்டு இருந்தோம்”

“வழக்கமான விஷயம்னா?” விடுவதாக இல்லை முருகன்.

“இல்லங்க, எங்க பிஸினஸ் பத்தி…” வேலாயுதம் பேசிக் கொண்டே போக “என்ன பிஸினஸ் பண்றீங்க?” இடைமறித்துக் கேட்டார் முருகன்.

“டிரேடிங்க் .. பொதுவா வாங்கி விக்கிறதுங்க… ஒரு அரிசி மண்டி கூட இருக்கு”

”அவுங்க அதுல பார்ட்னர்ஸ்ஸா?”

“ம்ம்… ஆமாங்க… இல்லங்க… அவங்களும் அதே மாதிரி பிஸினஸ் பண்றவங்க…. ஒருத்தருக்கொருத்தர் ஒத்தாசையா இருந்த எல்லாருக்கும் பிரயோசனமா இருக்கும்னு…. “

“உங்களுக்கு சபாரத்தின ஆசாரியைத் தெரியுமா?”

எதையோ பேசிக் கொண்டு இருக்கும் போது எதிர்பாராத சந்தர்ப்பத்தில் இப்படித் திடீரென வந்து விழுந்த கேள்வி, வேலாயுதத்தை நிலை குலையச் செய்தது. இதுவே காவல் துறையினரின் பயிற்சியில் கற்றுக் கொடுக்கும் விஷயமோ என்னவோ, விசாரணை செய்யப்படுபவரிடமிருந்து உண்மையைக் கொண்டு வர அவர் எதிர்பாராத நேரங்களில் இதுபோன்ற கேள்விக் கணைகளைத் தொடுத்தெறிவது என்பது அவர்களுக்குக் கை வந்த கலையாக இருக்கிறது.

இந்தக் கேள்விக்கு எப்படி விடையளிப்பது என்று தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருந்த வேலாயுதத்தைப் பார்த்ததுமே சப்-இன்ஸ்பெக்டர் முருகனுக்கு சில விஷயங்கள் தெளிவானது போன்ற உணர்வு. வேலாயுதம் ஏதோ பேச வாயைத் திறப்பதற்கு முன்னர், மேசை மேலிருந்த டெலிஃபோன் ஒலிக்கத் துவங்கியது. எடுத்துப் பேசிய முருகனின் முகத்தில் ஒரு அவசரம்.

“ஏட்டு, இவரைப் பாத்துக்கங்க, நான் வர வரைக்கும் எங்கயும் போகக் கூடாது” என்று ஆணையிட்டுக் கொண்டே வெளியில் நடந்து செல்லத் தொடங்கினார். “ஐயா, எனக்கு நேரமாச்சு…..” என வேலாயுதம் கேட்டது எவரின் காதிலும் விழாமல் காற்றில் கலந்து மறைந்தது.

திங்கட்கிழமை மதியம் ஐந்து மணி:

காரைக்குடியிலிருந்து தேவகோட்டை செல்லும் சாலை. தேசிய நெடுஞ்சாலை எனப் பெயர் இருந்தாலும், சற்று அகலம் குறைவான ரோடுதான். இரண்டு லாரிகள் எதிரும் புதிருமாக வந்தால், ஒன்றாவது சற்று வேகத்தைக் குறைத்து மண்ரோடில் இறங்கிச் செல்லும் அளவு அகலம் மட்டுமே உள்ள சாலை. காரைக்குடியிலிருந்து ஒரு இருபது கிலோ மீட்டர் தொலைவில் பிரிந்து செல்லும் மண் ரோடில் பயணம் செய்தால் வரும் ஒரு ரைஸ் மில், அதனை அடுத்த ஒரு பாழடைந்த கட்டிடம். உள்ளே எவரும் இருப்பதற்கான அடையாளம் தெரியவில்லை.

அந்தப் பாழடைந்த கட்டிடத்திற்கு வெளியில் பாரதியின் கார் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கார்க்கதவு திறந்து கிடக்கிறது. அருகில் ஆள் இருப்பதற்கான அரவமே இல்லை.

கட்டிடத்திற்குள் எங்கும் குப்பைக் கூளங்கள், அங்குமிங்கும் ஒரு சில எலி மற்றும் கரப்பான் பூச்சி ஓடிக்கொண்டிருக்கின்றன. சுவற்றிலெங்கும் ஒட்டடை படிந்துள்ளது. சில பல்லிகள் ஊர்ந்து கொண்டிருக்கின்றன. ஒரு வித துர்வாசனை வீசிக் கொண்டிருந்தது. முன்னிருந்த ஹாலில் நான்கு பேர் அமர்ந்து சீட்டாடிக் கொண்டிருக்கிறார்கள். நால்வரும் பீடி புகைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஹாலைத் தாண்டிச் உள்ளே பார்த்தால் ஒரு சிறிய அறை தெரிகிறது, அதன் கதவு மூடி வைக்கப்பட்டுள்ளது. அதன் உள்ளே, ம்ம்ம்ம்ம்… என்ற முனகல் சத்தம். சற்று கூர்ந்து கவனித்தால் அது ஒரு பெண்ணின் குரல். நேரம் ஆக ஆக அந்த முனகல் சத்தம் அதிகமாகிக் கொண்டிருக்கிறது.

“டேய்… எழுந்துட்டா போல இருக்குடா”…. முதலாமவன் சொல்ல, “நான் போய் பாக்குறேன்” இரண்டாமவன் பதிலளித்துக் கொண்டே எழுந்து அறை நோக்கிச் செல்லத் தொடங்கினான்.

அறைக்குள், கண்களில் மரண பயத்தைத் தேக்கி வைத்துக் கொண்டு, சுற்று முற்றும் விழித்துக் கொண்டு, கைகள் பின்னால் கட்டி வைக்கப்பட்டு ஒரு உடைந்த நாற்காலியில் உட்கார்ந்து இருக்கிறாள் பாரதி. கல்லூரியை விட்டு காரில் வரும்பொழுது ஒருவன் பார்த்து யாருக்கோ ஃபோன் செய்தது நினைவிருக்கிறதா? அந்த யாரோ, அவளின் காரைப் பின் தொடர்ந்து துரத்தி வந்து, மடக்கிப் பிடித்து விட்டிருந்தனர். அவளை மயக்கமடையச் செய்து இந்தப் பாழடைந்த கட்டிடத்தில் கடந்த மூன்று மணி நேரமாகக் கட்டி வைத்துள்ளனர். மயக்க மருந்தின் வீரியம் குறைந்து இப்பொழுதுதான் எழுந்திருக்கும் பாரதியைப் பார்க்கத்தான் அந்த லுங்கி அணிந்த பீடி பிடிக்கும் மனிதன் நடந்து வந்து கொண்டிருந்தான்.

“ஏய்… இந்தா, ஏதாவது வேணுமா?..” பெருமளவு கரிசனமென்றில்லாமல் அதே சமயத்தில் தனக்குக் கொடுக்கப்பட்ட கட்டளைகளை நிறைவேற்றும் வண்ணம் அவளுக்கு ஏதேனும் உணவு கொடுத்து காப்பாற்றி வைக்க வேண்டும் என்ற உணர்வில் கேட்ட கேள்வி.

“நீ…நீஈ…..நீ.. நீங்க யாரு?..” பயம் மற்றும் கோபம் கலந்த தொனியில் ஹீனமாய்க் கேட்டாள் பாரதி.

“இந்தா புள்ள, தண்ணி வேணாக் குடி… வெறென்ன டீ, பன் திங்கிரியா?..” எனத் தனது பணியைத் தொடர்ந்து கொண்டிருந்தான் அவன்.

“நேக்கு, எதுவும் வேண்டாம். நீங்க யாரு, என்னை ஏன் இங்கே கட்டிப் போட்டிருக்கேள்.. “ சற்று நிதானத்தையும், தைரியத்தையும் வரவழைத்துக் கொண்டு அவனை முகம் பார்த்துக் கேட்டாள்.

“ஏத்தா, அதெல்லாம் உனக்கு தேவல்ல.. ஒளுங்கு, மருவாதயா இதத்தின்னுட்டு பேசாமக் கட.. இல்லா பிரச்சனயாப் போயிரும், ஆமா…”

”நேக்கு, நீங்க யாருன்னு இப்பவே தெரிஞ்சாகணும், என்ன நெனச்சுண்டு இருக்கேள் மனசுல.. எங்கப்பாக்கு தெரிஞ்சா என்ன ஆகும் தெரியுமா” என இவளும் மிரட்டத் துவங்க, இனியும் இவளிடம் பேசிப் பயனில்லை என்ற முடிவுக்கு வந்தான் அந்த லுங்கி மனிதன். அவசரமாய்த் தன் கையிலிருந்த துணி ஒன்றை அவளின் முகத்தில் அழுத்த, இரண்டு நிமிடங்களில் தன்னிலை மறந்து மீண்டும் மயக்கமானாள் பாரதி.

திங்கட்கிழமை மதியம் ஐந்து மணி முப்பது நிமிடம்:

கடந்த மூன்று மணி நேரங்களாகத் தேடாத இடமில்லை. கணேஷ் கையிலிருந்து எஸ்.டி. கார்டை வாங்கியதிலிருந்து எந்த எந்த இடத்திற்கெல்லாம் போய் வந்தாரோ அங்கெல்லாம் மீண்டும் சென்று தேடிப் பார்த்தாகி விட்டது. தெரு, வராந்தா என ஒரு இடம் விடாமல் ஜல்லடை போட்டுத் தேடியாகி விட்டது. அவருடன் சேர்ந்து ஜீப் டிரைவர் காதர் அண்ணன் என அனைவரும் விழுந்து விழுந்து தேடிவிட்டனர்.

கடைசியாக, கணேஷ் அவர் கையில் அந்தக் கார்டை ஒப்படைத்த இடமான விஸ்வேஸ்வரய்யா மருத்துவமனை வளாகத்திற்குச் சென்று கொண்டிருக்கிறார்கள் கமிஷனர் ராஜேந்திரனும் காதர் அண்ணனும். வழியில் ஜீப்பில் போகும்பொழுது, ஓட்டிக் கொண்டே “எப்டி சார் தொலைஞ்சு யிருக்கும், எனக்கு என்னமோ அந்தக் காலேசுப் பயலுவ தான் ஏமாத்திரிப்பாய்ங்கன்னு தோனுது” டிரைவர் சற்றுப் பணிவுடன், தனக்கும் கரிசனமிருப்பதைக் காட்டிக் கொள்ள ஒரு கருத்துச் சொல்லிக் கொண்டிருந்தான்.

”ஏய்.. அதெல்லாமிருக்காதுரா…. சாரப்பாத்தாலே ஒண்ணுக்குப் போறானுவ, அவனுவளாவது.. ஏமாத்துறதாவது.. எங்குணயாவது விளுந்திருக்கணும்.. நல்லாத் தேடிப் பாக்கலாம்.. எங்குட்டுப் போயிரப் போவுது..” காதர் அண்ணனின் பதில்.

எதற்கும் பதில் சொல்லாமல் ரோடைப் பார்த்துக் கொண்டு, மனதில் கறுவிக்கொண்டே உட்கார்ந்திருந்தார் ராஜேந்திரன். சாலையில் செல்லும் வாகனங்கள், நடந்து செல்லும் மனிதர்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு, எதிலும் குறிப்பாகக் கவனம் இல்லாமல் நடந்த நிகழ்வுகளை மனதில் அசைபோட்ட வண்ணம் இருக்கிறார். “எங்க விழுந்திருக்கும், எப்டி இவ்வளவு கவனமில்லாம இருந்தோம்…” நினைத்துக் கொண்டே இருக்கையில் கார் மருத்துவமனை வளாகம் வந்து சேர்ந்தது.

மருத்துவ மனையின் வெளி கேட் மூடப்பட்டிருந்தது. டிரைவர் காரின் முன்னின்று, இரண்டு மூன்று முறை ஹார்ன் அடித்துப் பார்த்து ஒருவரும் வரவில்லையென்றவுடன் கீழே இறங்குகிறான். இறங்கி கதவை நோக்கி நடக்க உட்புறமிருந்து காக்கி அரைக்கால் சட்டையும், காக்கிச் சட்டையும் அணிந்து கொண்டு, உள்ளூர் டவுன் பஞ்சாயத்து சீருடையில் மருத்துவமனை வளாகத்தை சுத்தம் செய்து கொண்டிருந்த மாசான் நிமிர்ந்து பார்க்கிறான்.

வருவது போலிஸ் அதிகாரியின் கார் என்றவுடன் உயிர் முழுவதும் ஒடுங்கியது மாசானுக்கு. என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டே நடந்து வந்து கதவை அடைந்து விட்டான் மாசான். டிரைவரைப் பார்த்து ”என்ன வேணுங்க” என்று கேட்க, “யாருப்பா நீ” என்று மிரட்டலான குரல் அதிகார தொனியுடன் வர, நிமிர்ந்து பார்த்த மாசானுக்கு ஜீப்பிலிருந்து கீழே இறங்கிக் கடுமையான கண்களுடன் விழித்துக் கொண்டிருக்கும் கமிஷனர் ராஜேந்திரன் தெரிந்தார்…..

                                           (தொடரும்)

–    வெ. மதுசூதனன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Rotating Banner with Links
ad banner
Bottom Sml Ad