இருபத்தி நான்கு மணி நேரம் – பகுதி 2
முன்கதைச் சுருக்கம்: கணேஷும், பாரதியும் அவர்களுடன் ஒன்றாகக் கல்லூரியில் பயிலும் இன்னும் சில நண்பர்களும் தேர்வு எழுதுவதற்காகக் காலை நேரத்தில் புறப்பட்டுப் பேருந்தில் சென்று கொண்டிருக்கின்றனர். வழியில் ஒருவன் இன்னொருவனைக் கத்தியால் குத்துவதைப் பார்க்கின்றனர். பேருந்திலிருந்து இறங்கி ஓடிச் செல்வதற்குள் குத்தியவன் ஓடிவிட, கணேஷும் சிதம்பரமும் மட்டும் காயமடைந்தவனை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர். சிகிச்சை பெறுகையில் காயமடைந்தவன் கணேஷிடம் மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஒன்றைக் கொடுக்க, அதில் ஒரு கொலை நடப்பதை வீடியோவாகப் பதிவு செய்யப் பட்டிருப்பதைப் பார்க்கிறார்கள். இனி என்ன நடக்கிறதென்று பார்ப்போம்.
(இருபத்தி நான்கு மணி நேரம் – பகுதி 1)
திங்கட்கிழமை காலை பத்து மணி
ஐந்து ஏக்கருக்குமேல் உள்ள நிலத்தை வளைத்துப் போட்டுக் கட்டப்பட்ட வீடு. ஆறடி உயர காம்பவுண்ட் சுவர் அந்த நிலத்தைச் சுற்றிலும் இருக்க, இரண்டு கார் நுழையுமளவுக்கு அகலமுள்ள பெரிய நுழைவாயில். அந்த நுழைவாயில் இரும்பு க்ரில் போட்ட இரண்டு கதவுகளால் மூடப்பட்டுள்ளது. கதவுக்கு உட்புறம் வளைந்து செல்லும் பாதை, இரண்டு பக்கங்களிலும் கொரியன் க்ராஸ் வளர்த்து விட்டிருந்தனர், அதனை வேலையாள் ஒருவன் தரையிலமர்ந்து பெரிய கத்திரிக்கோலால் அளவாக வெட்டிக் கொண்டிருக்கிறான் (நம்மூர் லான் மோயிங்). இங்கொன்றும் அங்கொன்றுமாக பசுமையாய் வளர்ந்து, நறுமணத்தை வீசிக் கொண்டிருக்கும் வெண்பூக்கள் கொண்ட நந்தியாவட்டை மரங்கள் சில. அவற்றின் மத்தியிலே கடப்பாக் கற்களைக் கொண்டு பதிக்கப் பட்ட தரை மற்றும் கான்க்ரீட் கூரையினால் மறைக்கப் பட்ட அழகான போர்டிகோ…. கிரீச் என்ற சத்தத்துடன் அவசரமாய் வந்து நிற்கிறது கருப்புக் கலர் மெர்சிடீஸ். கார்க்கதவைத் திறந்த டிரைவர் அவசர அவசரமாக ஓடி பின்பக்கக் கதவைத் திறக்க, கோபமாய் இறங்கும் முதலாளியின் பெயர் வேலாயுதம் பிள்ளை. ஊரில் பெரிய புள்ளி, கொழுத்த பணக்காரர், ஊரிலுள்ள கோயில்கள் பலவற்றிற்கு தர்ம கர்த்தா, பல நன்கொடைகள் வழங்கியிருக்கிறார். ஊரில் அவரைக் கேட்காமல் ஒரு விஷயமும் நடக்காது.
கோபமாக உள்ளே வந்தவர், விறுவிறுவென நடந்து சென்று, ஏதோ திட்டிக் கொண்டே சோஃபாவில் அமர்கிறார்.
“டேய், எவண்டா அவன்.. எங்க போய்டீங்கடா..”
“இங்குண இருக்கோம் ஐயா” அடுத்து என்ன நடக்குமோ என்ற பயத்தில், கையைக் கட்டிக் கொண்டு முன் வந்து நின்றான் துலுக்காணம். அவன் பின்னால் ஒரு நான்கைந்து அடியாட்கள் அனைவரும் ஐயா என்ன செய்வாரோ என்ற பயத்தில், கையைக் கட்டிக் கொண்டு பின் நின்றனர்.
“எப்ட்ரா? எப்டிடா விட்டீங்க அவன”… கண்களில் கோபம் கொப்புளிக்க உச்சஸ்தாயில் சத்தம் போடுகிறார் வேலாயுதம். “அந்தக் க….. மயனோட அந்த டிஸ்குமிலடா அம்புட்டுகிடுச்சு”… என அச்சில் பிரசுரிக்க இயலாத வட்டார வழக்கில் கெட்ட வார்த்தையை உபயோகிக்கிறார்.
“ஐயா, அவன ரெண்டு காலேசு பசங்க கூட்டிக்கிட்டு போனாய்ங்களாமய்யா.. நம்ம டீக்கட ஆறுமுகம் பாத்துப்புட்டு போன் பண்ணாய்யா… நம்ம பெரிய ஆசிரிபத்திரியில சேத்துருக்காய்ங்களா.. இன்னக்கு ரவைக்குப் போயி எடுத்துகுனு வந்தர்ரமய்யா….”
நடுங்கும் குரலில் சொல்லி முடிக்கிறான் துலுக்காணம். எப்படியாவது தன் முதலாளியின் கோபத்தைத் தணிக்க வேண்டுமென்ற ஆர்வத்தில்.
“சொல்லாத, செஞ்சு முடி. சுப்பு அப்புறம் வேலு ரெண்டு பேரயும் கூட்டிகினு போ. இந்த மொற தவறிச்சு, எந்தப் பயலும் உயிரோட இருக்க மாட்டீங்க, ஆமா சொல்லிப்புட்டேன்…”
கோபத்தில் பொரிந்து கொண்டே மாடியிலிருக்கும் தன்னறை நோக்கி நடக்கிறார் வேலாயுதம்.
திங்கட்கிழமை காலை பத்து மணி முப்பது நிமிடம்
கல்லூரி வளாகத்தில் தேர்வறையில் அமர்ந்து தனது நண்பன் இன்னும் வந்து சேரவில்லையென்ற கவலையில் ஜன்னல் வழியாய் வெளியே பார்த்துக் கொண்டிருக்கிறாள் பாரதி. பத்தரை மணிக்குப் பிறகு தேர்வு அறைக்குள் நுழைவதற்கு அனுமதியில்லை என்ற காரணத்தால் கணேஷால் தேர்வு எழுத முடியாதென்ற கவலை அவளுக்கு. “என்னத்துக்காக ஊர் வம்பெல்லாந் தன் தலையில போட்டுக்கிறானோ, எத்தன தடவ சொல்றது. சொன்னாக் கேட்டாத்தானே, அசமஞ்சம்” மனதுக்குள் திட்டித் தீர்த்த பாரதி தான் தேர்வு எழுதுவதை நிறுத்தி விடலாம் என நினைக்கிறாள். அடுத்த கணமே தனது ஸ்ட்ரிக்டான அப்பாவிற்கு என்ன பதில் சொல்வது என்ற பயம் அவளைத் தொற்றிக் கொள்கிறது. உடனடியாக ஒரு யோசனை தோன்றுகிறது.
எழுந்து தேர்வுக் கண்காணிப்பாளர் அருகில் சென்று, “சார், ஒரு முக்கியமான விஷயம். பிரின்ஸ்பலண்ட பேசணும்” என்கிறாள். “என்னம்மா, என்னவாயிருந்தாலும் எங்கிட்ட சொல்லு மொதல்ல” என அவர் பதில் கூற, “இல்ல சார், இது ரொம்பவும் சீரியஸான விஷயம். போலீஸ் இன்வால்வ்மெண்ட் வரும்னு நெனைக்கிறேன். பிரின்ஸ்பலண்ட சொல்றதுதான் சரின்னு படறது நேக்கு. பிளீஸ் சார்…” என இவள் இழுக்க, போலீஸ் என்ற வார்த்தையைக் கேட்ட மாத்திரத்தில், இனி நாம் இதில் தலையிடுவது நல்லதல்ல என்ற முடிவுக்கு வருகிறார். மெதுவாய் ரூமைவிட்டு வெளிநோக்கித் தலையை நீட்ட, வராண்டாவில் உட்கார்ந்திருந்த காக்கி உடையணிந்த பியூன் கண்ணுக்குத் தெரிய, அவனை கைதட்டி அழைக்கிறார். அருகில் வந்தவுடன், போய் பிரின்ஸ்பலைக் கூட்டிக் கொண்டு வரச் சொல்லிக் கேட்க, அவனும் செல்கிறான்.
ஐந்து நிமிட காத்திருப்பிற்குப் பிறகு அங்கு தோன்றுகிறார் ஆஜானுபாகுவான செல்வ கணபதி, அந்தக் கலைக் கல்லூரியின் முதல்வர். தூய்மையான வெள்ளை நிற பேண்ட் ஷர்ட், நெற்றியில் அகலமாய் நேர்கோடு போல் வரைந்த சிவப்பு நிறக் குங்குமம், படிய வாரிய எண்பது சதவீதத்திற்கும் மேல் வெண்மையான தலை முடி, பளபளவென மின்னும் பிரௌன் நிற ஷூஸ். வராண்டாவில் நடந்து வருகிறாரென்றால் ஆசிரியர்களில் தொடங்கி மாணவர்கள் வரை – கலாட்டா பல புரியும் மாணவர்கள் உட்பட – அனைவருக்குள்ளும் ஒரு சிறு நடுக்கம் தெரியும். நேர்மையும், எதற்கும் சமாதானம் செய்து கொள்ளாத் தன்மையும், தகுதிக்கு மட்டுமே முதலிடம் கொடுக்கும் கறாரான தன்மையும், தெளிவும் அவருக்கு வாங்கித் தந்த மரியாதை அது.
“யெஸ், வாட்ஸ் கோயிங்க் ஆன் ஹியர்? ஒய் இஸ் தெர் எ டைவர்ஷன் வென் எவரி ஒன் இஸ் சப்போஸ்ட் டு பி ஃபோகஸிங்க் ஆன் தெ எக்ஸாம்”
[கல்லூரியில் இருக்கும் நேரங்களில் ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டுமென்பதில் மிகவும் கண்டிப்பாக இருப்பவர் செல்வ கணபதி. ஆனால் கதையின் போக்கிற்காக அவர்களின் சம்பாஷணைகளைத் தமிழில் தருகிறோம்.]
”சார், நேக்கு உங்களண்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்ல வேண்ட்ருக்கு” பாரதி.
“பரீட்சையை விட முக்கியமான விஷயமென்ன” தோரணை சற்றும் குறையாத பதில் கேள்வி முதல்வரிடமிருந்து.
“நம்ம கணேஷ், எக்ஸாமுக்கு வரல்ல…. வர்ர வழியில”… என்று ஆரம்பித்த பாரதி, மொத்த வகுப்பும் கவனித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து, “சார், கொஞ்சம் பிரைவேட்டாப் பேசலாமே” என்கிறாள்.
பதிலேதும் சொல்லாமல், பிரின்ஸ்பல், புரஃபஸர் மற்றும் பாரதி வகுப்பை விட்டு வெளியே வந்து வராண்டாவின் கடைசியில் ஆளரவமில்லாத இடத்தை நோக்கி நடக்கின்றனர்.
ஒருவரும் கேட்க இயலாது என்று உறுதி செய்து கொண்ட பின்னர் பாரதி, “சார், பஸ்ல வரச்ச ஒரு கொலையைப் பார்த்தோம்” எனத் தொடங்கி கதை முழுவதையும் சொல்லி முடிக்கிறாள்.
திங்கட்கிழமை காலை பதினொரு மணி
கொப்புடையம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள சபாரத்தினத்தின் நகைக் கடை. நகைக் கடையென்றால் கண்ணாடிகள் எங்கும் மின்ன கோடிக் கணக்கில் தங்கமும், வைரமும் பூட்டி வைத்து விற்கும் கடையெனத் தவறாய் கற்பனை செய்து கொள்ள வேண்டாம். இது நகை விற்கும் கடையன்று. நகை செய்யும் தங்க ஆசாரியின் கடை. ஒரு இருபதடிக்கு இருபதடி உள்ள ஒரு சிறிய பழைய பாணியில் அமைந்த கடை. நான்கு மூலைகளில் நான்கு சிறிய மரத்தாலான டெஸ்க்குகள் போடப்பட்டுள்ளன. ஒவ்வொரு டெஸ்க்கிற்குப் பின்னாலும் தரையில் ஒவ்வொருவர் அமரும் அளவிற்கு இடம் விடப்பட்டுள்ளது. நான்கில் மூன்று டெஸ்கிற்கு அருகில் கொல்லன் உலை பொருத்தப் பட்டுள்ளது. ஒரு சிறிய சக்கரத்தைச் சுற்றினால் காற்று வந்து உலையில் நெருப்பு உயர்ந்து எரியும். அதிக அளவு நெருப்பு வேண்டாமென்றால் ஒரு சிறிய ஊதுகுழலில் காற்றூதியும் தீ வளர்த்துக் கொள்ளலாம். தங்கத்தை உருக்குவதற்கான உலையது.
நான்காவது டெஸ்க்கில் இருப்பது கல்லாப் பெட்டி, மற்றும் எடை பார்க்கும் தராசு. ஒரு சிறிய கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்பட்டிருக்கும் தராசு. இந்த இடமே சபாரத்தினத்தின் இருக்கை. தினமும் அதிகாலை எழுந்து குளித்து முடித்து, அரை மணி நேரத்திற்கும் மேலாக பூஜை செய்து முடித்து, அளவாய் டிஃபன் முடித்து ஒன்பது மணிக்குக் கடை திறந்து அந்த டெஸ்கில் அமர்ந்து விடுவார் சபாரத்தினம். வீட்டிலிருந்து போட்டுக் கொண்டு வந்த சட்டையைக் கழற்றி சுவற்றில் டெஸ்கிற்கு மேலடிக்கப்பட்டுள்ள ஆணியில் மாட்டி வைத்து விட்டு, பூணூலணிந்த வெற்றுடம்புடன் அமர்ந்திருப்பதே அவரின் வழக்கம். “ஆசாரி ரொம்பவும் கைராசிக்கார ஆளு, அம்ம வீட்டுக் கல்யாணம் எல்லாத்துக்கும் அவருதான் நகை பண்றது..” ஊரில் பலரும் பெருமையாய்ச் சொல்லும் விஷயம். எப்பொழுதும் ஒன்பது மணிக்கெல்லாம் நேரம் தவறாமல் வந்து சேரும் சபாரத்தினம் பதினொரு மணியாகியும் இன்னும் வந்து சேராமல் கல்லாப்பெட்டி காலியாகவே உள்ளது.
எதிர் டெஸ்க்கில் அமர்ந்து தனது வேலையை மும்முரமாய்ப் பார்த்துக் கொண்டிருந்த சபாரத்தின ஆசாரியின் மகன் லக்ஷ்மணன் தந்தை ஏன் இன்னும் வரவில்லையெனக் குழப்பத்தில் வேலையைத் தொடர்ந்து கொண்டிருந்தான். வழக்கமாய்த் தந்தையும் மகனும் ஒன்றாய் வீட்டிலிருந்து புறப்பட்டு டி.வி.எஸ் ஃபிஃப்டியில் வருவார்கள். நேற்று இரவு ஏதோ முறை வைக்க வேண்டுமென அப்பா பதினைந்து மைல் தொலைவில் இருக்கும் தனது மாமனார் வீடு சென்றிருந்தார். அங்கேயே பேசிக் கொண்டிருந்ததில் கடைசி பஸ்ஸைத் தவர விட்டதால் அங்கே தங்கியிருந்து விட்டு காலையில் வருவதாய் வீட்டிற்கு ஃபோன் செய்து சொல்லியிருந்ததால் தான்மட்டும் வீட்டிலிருந்து நேராக வந்திருந்தான்.
“அப்பச்சி நேரா கடைக்கு வந்துருவாக” என அம்மாவிடம் சொல்லி விட்டுப் புறப்பட்டு வந்திருந்த லக்ஷ்மணன், பதினோரு மணியாகியும் தந்தை வந்திராததால் கவலை கொள்ளத் தொடங்கியிருந்தான்.
பின்னால் இருந்த இரண்டு டெஸ்கிலும் அமர்ந்து வேலை செய்து கொண்டிருந்தவர்கள் அந்தக் கடையில் சம்பளத்திற்காக வேலை செய்பவர்கள். சபாரத்தினம் ஆசாரிக்குத் தூரத்து உறவு. கஷ்டப் படும் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் என்பதால், வேலையும் கொடுத்துத் தொழில் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார் ஆசாரி. அவர்களைப் பார்த்து லக்ஷ்மணன், “டேய், கடையைப் பாத்துக்கங்கடா.. நான் பக்கத்துப் பி.சி.ஓ லருந்து ஒரு ஃபோனடிச்சு அப்பா கெளம்பிட்டாகளான்னு சாரிச்சிட்டு வாரேன்” எனச் சொல்லிப் புறப்பட்டான்..
லைன் கடைகளில் மூன்று கடை தாண்டி இருப்பது ஒரு பப்ளிக் போன் பூத். அங்கு சென்று, தனது மாமனாரின் வீட்டிற்கு பக்கத்து வீட்டிற்கு ஃபோன் செய்கிறான் லக்ஷ்மணன். மாமனார் வீட்டில் ஃபோன் வசதி இல்லை என்ற காரணத்தால். மாமனார் விவரமறிந்து வந்து ஃபோனெடுத்துப் பேசுவதற்கு ஒரு ஐந்து நிமிடம் ஆனது. ஐந்து நிமிடம் கழித்து வந்த மாமனார், “மாப்ளே, என்ன வெசயம்?” என்று வினவி, இவனிடமிருந்த கேள்வியைக் கேட்ட பிறகு, “ஐயய்யோ, அவுக வெள்ளென எளுந்திருச்சு மொத பஸ்ஸுக்கே கெளம்பிட்டாகளே, இன்னுமா வரல, எங்க போயிருப்பாக மாப்ளே” என்று பதட்டத்துடன் பதில் கூற, லக்ஷ்மணனுக்கு பயம் இன்னும் அதிகரித்தது.
என்ன செய்வதென்று தெரியாமல், ஃபோனை வைத்து விட்டு, காசு கொடுப்பதையும் மறந்து தனது கடைக்குத் திரும்பிய லக்ஷ்மணன், தனது கடையின் முன் போலிஸ் இருவர் நிற்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறான். “ஆத்தா, கொப்புடையம்மா, எங்க அப்பச்சிக்கி ஒண்ணுமாயிருக்கக் கூடாதாத்தா” என வேண்டிக் கொண்டே, குழப்பம் தேங்கிய முகத்துடன் போலீஸ்காரர்களை நோக்கி நடக்கிறான் லக்ஷ்மணன்.
“என்ன சார் சமாச்சாரம்?” என தைரியத்தை வரவழைத்துக் கொண்டு லக்ஷ்மணன் கேட்க, “நீங்க யாரு?” எனப் பதில் கேள்வி கேட்கிறார் போலிஸ்காரர். “நாந்தாங்க லக்ஷ்மணன், இந்தக் கடை முதலாளி சபாரத்தினம் ஆசாரியோட ஒரே மயன்” எனப் பதிலளிக்க, சற்றே தயங்கிய போலிஸ்காரர், தன் சட்டைப் பையிலிருந்து சற்றே கசங்கிய புகைப்படம் ஒன்றைக் காட்டுகிறார். போலராய்ட் கேமராவினால் எடுக்கப்பட்ட அந்தப் புகைப்படத்தில், கணேஷும் சிதம்பரமும், மைக்ரோ எஸ் டி கார்டில் பார்த்த அதே தோட்டம், அதே கிணற்றையொட்டிய புல்தரை, அதே வெள்ளையும் சொள்ளையும் அணிந்த மரியாதைக்குரிய் மனிதர்… ரத்த வெள்ளத்தில் புல் தரையில் விழுந்திருந்த உருவம் தன் தந்தை என்பதைப் பார்த்தவுடனே புரிந்து கொண்ட லக்ஷ்மணன் பதிலேதும் கூறுவதற்கு முன்னர் மூர்ச்சையாகி அங்கேயே விழுகிறான்.
திங்கட்கிழமை காலை பதினொரு மணி முப்பது நிமிடம்
கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்கு மேலாக வராண்டாவிலேயே காத்திருந்தனர் கணேஷும் சிதம்பரமும். “மாப்ளே, ரொம்பப் பசிக்குதுரா, போயி ஒரு டீயடிச்சுட்டு வருவோம் வாடா” என அழைக்கிறான் சிதம்பரம். கணேஷிற்கும் சற்றுப் பசிதான். “போலாண்டா” எனக் கூறிக் கொண்டே மருத்துவமனை வளாகத்தில் சைக்கிளில் கொண்டு வந்து டீ விற்கும் ஒருவனின் கடையை – சைக்கிளை – நோக்கி நடக்கத் துவங்குகிறான்.
அவர்கள் காயம் பட்டவனைக் கொண்டு வந்து சேர்த்ததிலிருந்து கடந்த இரண்டு மணி நேரத்தில் பல விஷயங்கள் நடந்து விட்டிருந்தன. ரோஸி சிஸ்டர் அவசர அவசரமாய் பெரிய டாக்டருக்குப் ஃபோன் செய்து விட்டிருந்தாள். அவரின் அறிவுரையின் பேரில் போலிஸிற்கும் ஃபோன் செய்திருந்தாள். அறிவுரை செய்த சில நிமிடங்களிலேயே தனது பிரிமியர் பத்மினி காரை எடுத்துக் கொண்டு மருத்துவமனை நோக்கி விரைந்து வந்து சேர்ந்திருந்தார் டாக்டர் தேசிகன்.
மருத்துவப் படிப்பு முடித்து, வெளி நாட்டிலெல்லாம் படித்து முடித்துப் பல பெரிய மருத்துவமனைகளில் வேலை செய்து பெரும்பொருள் ஈட்டி அரசாங்க மருத்துவர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் தனது சொந்த கிராமத்திற்குத் திரும்பியவர். அவரது திறமையைப் பற்றித் தெரிந்திருந்த தனியார் மருத்துவமனையான விஸ்வேஸ்வரய்யா மருத்துவமனை அதிபர் அவரை கௌரவ டாக்டராக வரச் செய்திருந்தார். அந்தச் சிறிய நகரத்தில் பல கடினமான சிகிச்சைகளைச் செய்வதற்கு டாக்டர் தேசிகனை விட்டால் ஒருவரும் இல்லையென்ற நிலை. தனியார் மருத்துவமனை என்றாலும், பணம்பறிப்பது நமது தொழிலல்ல என்பதில் உறுதியாக இருந்தவர்கள் அந்த மருத்துவமனை நிர்வாகிகள். அவர்களுக்காக வேலை செய்வதைப் பெருமையாகக் கருதிய தேசிகனுக்கு ஒரே மகள். இருபத்தி எட்டு வயதாகி இன்னும் திருமணம் செய்து கொள்ளாத அவரின் மகளின் பெயர் புஷ்பா. டாக்டர் புஷ்பா. தஞ்சாவூரிலிருந்த பெருமை பெற்ற மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் முடித்து சென்னையில் மேல் படிப்பு முடித்தவள். படித்த படிப்பை வைத்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு சேவை புரிய வேண்டும் என்ற இளமை வேகத்திலிருந்த புஷ்பாவும் தந்தையுடன் புறப்பட்டு அறுவைச் சிகிச்சைக்கு உதவ வந்திருந்தாள்.
ரோஸியின் ஃபோன்காலைக் கேட்டவுடன் உடனே புறப்பட்டு வந்திருந்தார் அந்த மாவட்டத்தின் ஏ.எஸ்.பி ராஜேந்திரன். அந்த மாவட்டத்தில் ஒரு கிராமப்பள்ளியில் பயின்று, கணேஷ் இன்று பயிலும் கல்லூரியில் பட்டம் பெற்று, அதன் பின்னர் மதுரை சரகத்தில் ஐ.பி.எஸ். தேர்வு முடித்து, பல பயிற்சிகளைப் பெற்று, பல ஊர்களில் வேலை செய்து, சொந்த மாகாணத்திற்கே கூடுதல் எஸ்.பியாகப் பணியேற்றதைக் குறித்து மிகவும் பெருமைப்படுபவர் ராஜேந்திரன் ஐ.பி.எஸ். நேர்மையான அதிகாரி. அந்த நேர்மையாலேயே பல துன்பங்களைச் சந்தித்தவர். அதற்கெல்லாம் சற்றும் அசராமல் இந்தக் காலத்திலேயும் நேர்மையாய் வாழ முடியும் என உலகுக்கு உணர்த்திக் கொண்டிருப்பவர். கட்டு மஸ்தான தேகம், மேல் நோக்கி முறுக்கி விடப்பட்ட கரு கருவென அடர்த்தியாய் வளர்ந்த மீசை, வலப் புறத்தில் கட்டப்பட்ட கைக்கெடிகாரம், பின்னால் கைகட்டி நின்றாரென்றால் நிமிர்ந்து நிற்கும் நெஞ்சு பார்த்தவர்களை அவர்களையும் அறியாமல் சல்யூட் செய்ய வைக்கும்.
டாக்டர்களைத் தவிர மற்ற அனைவரும் அதே வராண்டாவில் காத்திருக்கின்றனர். ராஜேந்திரன் மற்றும் அத்தனை போலிஸ்காரர்களும் கணேஷையும் சிதம்பரத்தையும் குடைந்தெடுத்து விட்டனர். ராஜேந்திரன் மட்டும் இவர்களின் துணிச்சலையும், அக்கறையையும் பாராட்டி சில வார்த்தைகள் பேசினார். ஆனாலும், போலிஸுக்கே உரிய ஒரு சந்தேகம் அவரிடம் ஒட்டியிருந்ததாகக் கணேஷ் உணர்ந்தான். சற்று விசாரணையில் கணேஷின் தந்தை கோவிந்தராஜன் என்பதையும் தனது பள்ளிகால ஆசான் என்பதையும் அறிகிறார் ராஜேந்திரன். அது தெரிந்தபின் கணேஷின் மீது நம்பிக்கை வந்தாலும், தான் புரியும் தொழில் காரணமாக அதனை வெளிக் காட்டிக் கொள்ளாமல் நடந்து கொண்டார் ராஜேந்திரன். தனது அனுமதியில்லாமல் கணேஷும் சிதம்பரமும் எங்கும் செல்லக் கூடாது என்று கட்டளையிட்டிருந்தார் ராஜேந்திரன்.
மருத்துவமனை வளாகத்திலேயே டீ குடிக்கச் செல்வதால் எவரிடமும் அனுமதி கேட்கத் தேவையில்லையென்ற நினைப்பில் நடக்கும் கணேஷையும் சிதம்பரத்தையும் வராண்டாவில் நின்று கொண்டிருந்த போலீஸ்காரர்கள் உன்னிப்பாக கவனிக்கிறார்கள். அவர்களால் மெயின் கேட்டைத் தாண்டி எங்கும் செல்ல இயலாது என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும். எல்லா கேட்டிலும் ஆயுதமேந்திய காவல்காரர்கள் அணி வகுத்து நின்றிருந்தனர் என்பது அனைவராலும் ஊகிக்கக் கூடியதே.
சைக்கிள்காரன் தந்த சூடான டீயை ஊதி ஊதி உறிஞ்சிக் கொண்டிருக்கையில் கணேஷின் கைபேசி சிணுங்குகிறது. எடுத்துப் பார்க்கையில் அந்த எண்ணை அவனால் கண்டு பிடிக்க இயலவில்லை. அதையே பார்த்துக் கொண்டிருந்த கணேஷைப் பார்த்து, “எடுத்துப் பேசுடா” என்கிறான் நண்பன் சிதம்பரம். தயக்கத்துடன் ஃபோனை எடுத்துக் காதில் வைத்த கணேஷ் “ஹலோ” என்று கூறிய வினாடி மறுமுனையிலிருந்து “உனக்கு ஏண்டா இந்த வேண்டாத வேலை? வேலியில போற ஓணான வேட்டியில விட்டுக்குற?” என்று கேட்க, யாரென்று புரியாத கணேஷ், “யாருங்க நீங்க, என்ன வேணும் ஒங்களுக்கு” என்று கேட்கிறான். “ஒளுங்கா உசுரு மேல ஆசையிருந்தா அந்த மெமரி கார்டைக் கொடுத்துரு, காதுங்காதும் வெச்ச மாரி வெசயத்த முடிச்சுக்கிருவோம்… சாகுர வயசா ஒனக்கு?” குரலிலிருந்த கடுமையும் நிதானமும் கணேஷின் வயிற்றைக் கலக்கியது என்பதில் ஐயமில்லை. ஆனால், நேர்மையாயிருந்தால் எதற்கும் பயப்படத் தேவையில்லை என்று தொட்டிலிலிருந்து அப்பாவிடம் பயின்ற பாடம் அப்பொழுதும் அவனுக்குத் துணை புரிந்தது. “என்ன சொல்றீங்க நீங்க, யாரு நீங்க? என்ன வேணும்?” நிதானமாய்த் தெளிவாய்த் தனக்குப் பயம் ஏதுமில்லை எனப் பதிலளித்தான் கணேஷ்.
“டேய்….. இங்கரு… பொட்டுனு போட்டுருவோம் ஆமா… சின்ன வயசு… படிக்கிர வயசு… பொளச்சுப் போ… எனக்கு வேணுங்கரதக் கொடுத்துரு, நீயாருன்னு எனக்குத் தெரிய வேனா, நாயாருன்னு ஒனக்குத் தெரிய வேனா.. ஒம்பாட்டுல நீயும் எம்பாட்டுல நானும் போயிக்கினே இருப்பம்… சரியா??”….
“டேய்.. நீ எந்தக் கொம்பனா வேணா இரு, கொலகாரப் பசங்களுக்கெல்லாம் நாம்பயப்பட மாட்டேன்….”
வீரமாய்ச் சொல்லி வேகமாய் ஃபோனை வைத்துத் திரும்ப, “யாரு ஃபோன்ல” கேட்டுக் கொண்டே பின்னால் நின்றிருந்தார் ராஜேந்திரன் ஐ.பி.எஸ்.
(தொடரும்)
– வெ. மதுசூதனன்