\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

இருபத்தி நான்கு மணி நேரம்– பகுதி 4

Filed in இலக்கியம், கதை by on March 23, 2014 0 Comments

24hours_520x520பகுதி 3 

முன்கதைச் சுருக்கம்: கணேஷும், பாரதியும் அவர்களுடன் ஒன்றாகக் கல்லூரியில் பயிலும் இன்னும் சில நண்பர்களும் தேர்வு எழுதுவதற்காகக் காலை நேரத்தில் புறப்பட்டுப் பேருந்தில் சென்று கொண்டிருக்கின்றனர். வழியில் கத்தியால் குத்தப்பட்ட தட்சிணா மூர்த்தியை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர். தட்சிணா மூர்த்தி கணேஷிடம் ரகசியமாக ஒப்படைக்கும் மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஒன்றில், கடை வீதியில் தங்க நகை செய்யும் கடை வைத்திருக்கும் சபாரத்தினம் ஆசாரியைக் கொலை செய்வது பதிவாகியுள்ளது. ஒரு மர்ம நபர் மருத்துவமனையில் போலிஸ் அதிகாரி ராஜேந்திரனின் குழுவுக்கு அருகில் நின்று கொண்டிருக்கும் கணேஷின் செல் ஃபோனில் அழைத்து மைக்ரோ எஸ் டி. கார்டைக் கொடுத்து விடும்படி மிரட்டுகிறான். அந்த மிரட்டல் குறித்து போலிஸ் அதிகாரி ராஜேந்திரனிடம் கணேஷ் விவரம் கூற முனைகிறான், அதே நேரத்தில் இறந்த சபாரத்தினத்தின் சம்பந்தி சண்முக சுந்தரத்திடம் போலிஸ் விசாரணை நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. தட்சிணா மூர்த்தியின் உயிரைக் காப்பாற்ற அறுவைச் சிகிச்சையில் ஈடுபடும் டாக்டர் தேசிகனுக்கு தொலைபேசியில் ஒரு அதிர்ச்சி அழைப்பு வருகிறது. இதற்கு நடுவில் செல்வந்தர் வேலாயுதமும் ஒரு சில தனவான்களும் தட்சிணா மூர்த்தியிடம் சிக்கிய மைக்ரோ எஸ்.டி கார்டை எவ்வாறு கைப்பற்றுவது எனப் பேசிக் கொண்டு இருக்கின்ற பொழுது, அவர்களை விசாரிக்கப் போலீஸ் வருகை தருகிறது. என்ன நடக்கிறதென்று பார்ப்போம்.

திங்கட்கிழமை மதியம் இரண்டு மணி

பாரதி காலையில் தேர்வு நேரத்தில் ஆரம்பித்த விஷயம். கேள்விப் பட்ட உடனேயே அருகிலிருந்த அழகப்பாபுரம் காவல் நிலையத்தைத் தொலை பேசியில் அழைத்துத் தான் கேட்ட விஷயத்தைச் சொல்லி முடித்து விட்டார் பிரின்ஸ்பல் செல்வ கணபதி. அந்த நிமிடத்திலிருந்து கிட்டத்தட்ட மூன்று மணி நேரங்கள் பல சம்பிரதாயமான காரியங்களால் நிரப்பப்பட்டு நகர்ந்திருந்தது.

மிகவும் கறாரான பேர்வழியாகையால் இந்தக் காரணத்திற்காகத் தேர்வை ஒத்தி வைக்க இயலாது எனத் திட்ட வட்டமாக மறுத்து விட்டார். கல்லூரி வளாகத்தில் நடந்திருந்தால் ஒழிய இதற்கும் கல்லூரிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது அவரின் முடிவு.

தன் உயிர் நண்பன் தேர்வு எழுத இயலவில்லை என்ற காரணத்தால் தானும் தேர்வு எழுதுவது இல்லை என்று பாரதி முடிவெடுத்தாள். ஆனால் இரண்டே நிமிடங்களில், மீசையை முறுக்கிக் கொண்டு கூறிய பார்வையால் சுட்டெரிக்கும் அப்பாவின் முகம் நினைவுக்கு வர அந்த முடிவை மாற்றினாள்.  ஏனோ தானோவென்று தேர்வு எழுதி முடித்திருந்தாள் பாரதி.

இதற்குள் காவல் துறை முழுவதும் நடந்த விஷயங்கள் தெரிய வந்திருந்ததால், கல்லூரி வளாகத்தில் இதற்கு பெரியதாய்த் தொடர்புடைய நிகழ்வுகள் எதுவும் இல்லை என்ற முடிவுக்கு வந்திருந்தனர். ஆனால் எதற்கும் இருக்கட்டும் என்று இரண்டு கான்ஸ்டபிள்களைக் காவலுக்குப் போட்டுவிட்டு வந்திருந்த அனைவரும் பிரின்ஸ்பலிடம் விடை பெற்றுக் கொண்டு சென்றிருந்தனர்.

பிரின்ஸ்பல் அனைத்துச் சம்பிரதாயங்களையும் முடித்துக் கொண்டு, நடந்து முடிந்த நடவடிக்கைகளை ஆவணப் படுத்தி, போலிஸ் கொடுத்த ஆவணங்களையும் ஒரு கோப்பில் போட்டு மேனேஜ்மெண்ட் ரிபோர்ட் தயார் செய்து முடித்து விட்டார். சம்பவத்தை நேரில் பார்த்த காரணத்தால் பாரதியை மட்டும் அதுவரை தனது அறையில்   காத்திருக்கும்படி சொல்லியிருந்தார் பிரின்ஸ்பல். தேர்வு நேரமாகையால் கல்லூரி பாதி நாளில் முடிவடைந்து மாணவர்கள் அனைவரும் சென்று விட்டிருந்தனர். ஒருசில ஆசிரியர்கள், அலுவலகர்கள், பிரின்ஸ்பல், இரண்டு கான்ஸ்டபிள்கள் மற்றும் பாரதி மட்டுமே அந்த வளாகத்தில் இருந்தனர்.

“பாரதி, யு ஷுட் கோ ஹோம் இன் மை கார். ஐ வில் ஆஸ்க் மை டிரைவர் டு ட்ராப் யூ” எனக் கூறிவிட்டு, பதிலுக்குக் காத்திராமல் தூரத்தில் வெள்ளை நிறச் சீருடையில் நின்றிருந்த டிரைவரைக் கையசைத்து அழைக்கிறார். பிரின்ஸ்பல் எதற்காகக் காரில் போகச் சொல்கிறார் என்று விளங்காமல், வசதிதான் என்று எண்ணிக் கொண்டே காரில் செல்லத் தயாரானாள் பாரதி. தூரத்திலிருந்து ஓடி வந்து டிரைவர் வடிவேலு, விரைப்பாக ஒரு சல்யூட் அடித்து “சார்” எனக் கூனிக் குறுகி நிற்க, “இந்தப் பொண்ணை வீட்ல கொண்டுபோய் விட்டுட்டு வாப்பா” என ஆணையிட்டார் பிரின்ஸ்பல் செல்வ கணபதி.

ஒரு சில நிமிடங்களில் காரின் பின்பக்கம் பாரதி ஏறிக் கொள்ள, அந்த வெள்ளை நிற பிளிமுத் கார் மெதுவாகக் கல்லூரி வளாகத்தை விட்டு வெளியேறுகிறது. அது வெளியேற, காம்பவுண்ட் சுவருக்கு அருகிலுள்ள தள்ளு வண்டி டீக்கடையில் மரத்தடியில் நின்று தேநீர் பருகிக் கொண்டிருந்த ஒருவன் அருகில் இருக்கும் நண்பனைப் பார்த்து “கார்ல போறாடா, அண்ணங்கிட்ட சொல்லிரனுமுடோய்” என்கிறான். முதலாமவன் தன் சட்டைப் பையிலிருந்து செல் ஃபோன் எடுத்து நம்பர்களை அழுத்தத் தொடங்குகிறான்.

திங்கட்கிழமை மதியம் இரண்டு மணி முப்பது நிமிடம்

காரைக்குடிச் சரக காவல்துறை ஆணையர் அலுவலக வளாகம். மிகப் பெரிய வளாகம். சீருடை அணிந்து பல காவலர்கள் இங்குமங்கும் நடந்து கொண்டிருந்தனர். காம்பவுண்டின் மெய்ன் கேட்டிலிருந்து கிட்டத்தட்ட அரைக் கிலோ மீட்டர் தூரம் பயணித்தால் வரும் பழங்கால, ஆனால் மிகவும் வசதியான, கட்டிடம். அதற்கு முன்னர் வட்டமாக அமைக்கப்பட்ட சிறிய மேடை போன்ற அமைப்பைச் சுற்றிலும் அளவாய் வெட்டப்பட்ட புல் தரை. அதற்கு மத்தியில் பீறிட்டு எழும் ஒரு வாட்டர் ஃபவுண்டன். கட்டிடத்தைச் சுற்றிலும் மிகவும் அழகாக வரிசையாய் நடப்பட்ட அசோக மரங்கள்.

கட்டிடத்திற்கு இரண்டு மாடிகள். வராண்டா முழுவதும் நடக்க வேண்டுமென்றால் ஒரு கிலோ மீட்டருக்கு மேல் இருக்குமளவு மிகப் பெரிய கட்டிடம். கணக்கற்ற அறைகள். ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு அதிகாரி, அதனைச் சுற்றிலும் அவரது துறையினரைச் சேர்ந்த அலுவலர்கள். இரண்டாம் மாடி வராந்தாவில் பாதிதூரம் நடந்து சென்றால் கட்டிடத்திலேயே மிகப்பெரிய அறையை அடையலாம். அதுதான் துணை ஆய்வாளர் ராஜேந்திரனின் அலுவலகம்.

அறையின் மத்தியில் போடப்பட்டிருந்த மேஜைக்குப் பின்னர் உள்ள சுழல் நாற்காலியில் காவல் துறை உடையில் அதே கம்பீரத்துடன் ராஜேந்திரன் அமர்ந்துள்ளார். கையில் ஒரு பேப்பர் வெய்ட்டைச் சுழற்றிக் கொண்டே கணேஷ் மருத்துவமனையில் கூறிய தகவல்களை அசை போட்டபடி அமர்ந்துள்ளார் ராஜேந்திரன்.

கணேஷ் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்ட காரணத்தால், காயம்பட்ட தட்சிணா மூர்த்தி கொடுத்த மைக்ரோ எஸ்.டி. கார்டையும் அதில் தான் பார்த்த கொலையையும் விலாவாரியாக விளக்குகிறான். அதிர்ச்சி அடைந்த ராஜேந்திரன் அந்த எஸ்.டி. கார்டைக் கணேஷிடமிருந்து வாங்கிக் கொண்ட பின்னர் அரை மணி நேரத்திற்கு மேலாகக் குறுக்கு விசாரணைச் செய்து முடித்திருந்தார் ராஜேந்திரன்.

கணேஷ் கூறிய பதில்கள் அனைத்தையும் தனது ஐ. ஃபோனில் பதிவு செய்திருந்தார். இதோடு அதனை மூன்று முறைத் திரும்பத் திரும்பப் போட்டுக் கேட்டுக் கொண்டிருந்தார். அப்பொழுது கதவு மெதுவாகத் தட்டப்பட, ராஜேந்திரன் “எஸ்..” எனக் குரல் கொடுத்ததைத் தொடர்ந்து ஹெட் கான்ஸ்டபிள் காதர் உள்ளே நுழைகிறார்.

“என்ன காதர் அண்ணே, மைக்ரோ எஸ். டி. கார்டை பிளே பண்ண கம்பேடிபுளான ஃபோன் ஒண்ணைக் கொண்டு வந்தீங்களா எனக் கேட்க, “இதோ இருக்கு சார்” என ஒரு ஆண்டிராய்டு ஃபோனை நீட்டுகிறார் காதர். ஃபோனைக் கையில் வாங்கிக் கொண்டு, பேண்ட் சைடு பாக்கெட்டில் கை விட்டு எஸ்.டி. கார்ட் வைக்கப் பட்டிருந்த வாலட்டை எடுக்க எத்தனித்த ராஜேந்திரனுக்கு மிகப் பெரிய ஷாக்.

”அண்ணே.. காதர் அண்ணே, பர்ஸைக் காணம்ணே” என அதிர்ச்சியாய்க் கூக்குரலிடுகிறார் ராஜேந்திரன்.

திங்கட்கிழமை மதியம் மூன்று மணி

ஆசிரியர் சேவியர் வீட்டிற்குள் கிட்டத்தட்ட கடந்த இரண்டு மணி நேரங்களாகக்  குறுக்கு விசாரணை நடந்து முடிந்திருந்தது. ஹெட் கான்ஸ்டபிள் சுப்பையாவும், கான்ஸ்டபிள் ஏகாம்பரமும், சண்முக சுந்தரத்தைப் பல விதத்தில் குறுக்கு விசாரணை செய்து முடித்திருந்தனர். கேட்டு முடித்த கேள்விகளையும் அதற்காக சண்முக சுந்தரம் கொடுத்த பதில்களையும் ஷார்ட் ஹேண்டில் ஒரு எழுத்து விடாமல் குறித்து வைத்திருந்தார் ஏகாம்பரம்.

ஷார்ட் ஹேண்டில் எழுதப் பட்டிருந்ததை தனது குறிப்பேட்டில் விரிவாக்கி ஆங்கிலத்தில் எழுதத் தொடங்கியிருந்தார் ஏகாம்பரம். பார்ப்பதற்குப் பழைய காலத்து மனிதராய்க் காணப்பட்ட ஏகாம்பரத்திற்கு இவ்வளவு அற்புதமான ஆங்கிலப் புலமையா எனப் பார்ப்பவர் வியக்கும் வண்ணம் அழகான ஆங்கிலத்தில் எழுதித் தள்ளிக் கொண்டிருந்தார். அந்தக் காலத்து எஸ். எஸ். ஏல். சி இந்தக் காலத்து எம்.ஏ விற்குச் சமம் என்று வயதானவர்கள் கூறுவதை உண்மையாக்கும் வண்ணம் இருந்தது அவரின் ஆங்கிலப் புலமை. குறுக்கு விசாரணையின் சாராம்சம் இதோ;

“செத்துப் போன சபாரத்தினம் ஐயா உங்களுக்கு என்ன உறவு” சுப்பையாவின் கேள்வி

“நான் அவுகளுக்குப் பொண்ணு குடுத்த சம்பந்தி” சண்முக சுந்தரத்தின் பதில்.

உங்க பொண்ணு பேரென்ன, மாப்பிள்ளை பேரென்ன, அவுகளுக்கு எப்போ கல்யாணமாச்சு, எத்தன பசங்க எனத் தொடங்கி மொத்த விவரங்களையும் கேட்டறியப்பட்ட பிறகு, நேற்று சாயுங்காலத்திலிருந்து நிகழ்ந்த சம்பவங்கள் சண்முக சுந்தரத்தின் பார்வையிலிருந்து எடுத்தியம்பப் பட்டிருந்தது.

எதற்காக வந்தார், எப்போது வந்தார், எதற்காக இரவு அங்கே தங்கினார், விடிந்தவுடன் எப்பொழுது வீட்டை விட்டுக் கிளம்பினார் எனப் பல விவரங்களை பகிர்ந்தளித்த சண்முக சுந்தரத்தின் பதில்களில் சுப்பையாவின் கவனத்தைக் கவர்ந்தது ஒன்றே ஒன்றுதான்.

”ராவு ஒரு பதினோரு மணியைப் போல வீட்டுக்கு ஒரு போனு வந்துச்சுய்யா.. பேசுன பய ஒரு மாரி மெரட்டலாத்தான் பேசின மாரி இருந்துச்சு… ஐயாகிட்ட பேசனும்னு கேட்டான், நான் யாரோ மாப்ளேகிட்ட கேட்டு ஐய அம்ம வீட்ல இருக்குரது தெரிஞ்சுகினு அங்குன கூப்டான்னு அசால்டா விட்டுட்டேன்.. என்ன பேசுனாகன்னு வெவரம் எதுவும் கேட்டுக்கலய்யா..”

இந்தப் பதிலை மனது முழுவதும் போட்டு மென்று கொண்டிருந்த சுப்பையா, “அண்ணே, ஏகாம்பரண்ணே, இந்த ஃபோன் பண்ணவன் யாருன்னு தெரிஞ்சுகிடனுமண்ணே.. அவனுக்கு இந்தக் கொலயப் பத்தித் தெரிஞ்சுருக்குமுனு நெனக்கிறேன்…” எனக் கூற ஏகாம்பரமும் அந்தக் கருத்தை ஆமோதிப்பதாகத் தலையசைக்கிறார்.

“சார், நான் கானாடுகாத்தான் டெலஃபோன் எக்சேஞ்ச் ஃபோன் பண்ணி, அவங்க வீட்டுக்கு வந்த ஃபோன் வெவரம் முழுக்க சாரிச்சு வைக்கிறேன் சார்” எனக் கூற, “நல்ல யோசனை அண்ணே, உடனே செய்ங்க” என உத்தரவிடுகிறார் சுப்பையா.

திங்கட்கிழமை மதியம் மூன்று மணி முப்பது நிமிடம்

கொத்தரிக் குப்பம்.

உழைப்பாளிகள் வசிக்கும் குடிசைகள் நிறைந்த ஒதுக்குப்புறமான குப்பம். மொத்தமாய் ஒரு பதினைந்து குடிசைகள் கொண்ட ஒரு தெரு ஆனால் அதற்கு ஒரு ஊர் போன்ற அந்தஸ்து வந்து விட்டிருந்தது. அந்தக் குடிசை வாழ் மக்கள் அனைவரும் ஒருவருக் கொருவர் ஏதோ ஒரு விதத்தில் உறவுக் காரர்கள்தான். வெயிலுக்கும் மழைக்கும் ஒண்டுவதற்காகத் தென்னை ஓலையை வைத்துத் தாழ்வாகக் கட்டப்பட்ட குடிசைகள். ஆறிலிருந்து அறுபது வரை அனைத்து வயதினரும் வசிக்கும் குடிசைகள்.

அந்தக் குடிசையை ஒட்டி களைப்பின்றி ஓடும் சாக்கடை நீர் நிறைந்த கால்வாய். அருகிலிருந்த நாச்சம்மை மில்லிலிருந்து வழிந்தோடி வரும் கழிவு நீர் கலந்து, ஒரு காலத்தில் சுத்தமான தண்ணீர் ஓடிக் கொண்டிருந்த கால்வாயைச் சாக்கடையாக்கியிருந்தது. அந்தச் சாக்கடைப் பகுதியோரமாய் ஒரு சில பன்றிகள் வெயிலுக்கு இதமாக படுத்துச் சுகம் கண்டு கொண்டிருந்தன. அந்தப் பன்றிகளின் மேல் ஒன்று மேல் ஒன்றாய்க் கணக்கற்ற பன்றிக் குட்டிகள் படுத்துறங்கிக் கொண்டிருந்தன.

சாதாரணமாய் அங்கு வாழ்ந்து பழக்கமில்லாதவர்களால் அந்தத் தெருவைக் கடந்து இரண்டு நிமிடங்கள் கூட நடக்க இயலாது. அந்த அளவுக்கு துர்வாசனை நாசியைத் துளைத்தெடுக்கும். ஆனால் அங்கேயே பலகாலம் வாழ்ந்து முடித்திருந்த மக்களுக்கு இது ஒரு அசௌகரியமாகத் தெரியவில்லை.

அவற்றின் மத்தியில் இருந்த குடிசையொன்றில் இருப்புக் கொள்ளாமல் அமர்ந்திருக்கிறான் மாசான். நாற்பத்தி ஐந்து வயதான மாசானுக்குக் கல்யாணம் முடிந்து மூன்று பெண் குழந்தைகள். ஒன்பது, ஏழு மற்றும் ஐந்து வயது கொண்ட பெண்கள். விஸ்வேஸ்வரய்யா மருத்துவ மனையில் துப்புறவுத் தொழிலாளியாய் வேலை செய்து கொண்டிருந்தான் மாசான். அவன் மனைவி சோலையும் அதே மருத்துவ மனையில் அதே வேலை செய்து கொண்டிருந்தாள். இருவரின் வருமானத்தைச் சேர்த்தாலும் அந்தக் குடும்பத்தை நடத்த மிகவும் சிரமப் பட்டுக் கொண்டிருந்தார்கள்.

அந்தச் சூழ்நிலையில் ஒரு இரண்டு மணி நேரத்திற்கு முன்னர், அவசரச் சிகிச்சை வார்டைச் சுத்தம் செய்து கொண்டிருக்கும் பொழுது ஒரு கொழுத்த பர்ஸ் ஒன்று சோலையின் கண்ணில் பட உடனே எடுத்துக் கொண்டு வந்து கணவன் மாசானிடம் கொடுக்கிறாள். உள்ளே பார்த்தவுடன் அதிர்ச்சி அடைந்த மாசான், கத்தை கத்தையாய் ரூபாய் நோட்டுக்கள் இருப்பதைப் பார்த்து உடனே அதனைத் தன்னுடன் வைத்துக் கொள்வது எனத் தீர்மானித்து விட்டான்.

ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லிவிட்டு இருவரும் குடிசைக்குத் திரும்பியிருந்தனர். நியாமாய் இருக்க வேண்டுமென்ற உணர்வு இருந்தாலும் அடுத்த வேளைச் சோற்றிற்கே பெருமளவு துன்பப்படும் நிலையில், குழந்தைகளை மகிழ்ச்சியாக வளர்க்க முடியாத நிலையில் இது போன்ற ஒரு பர்ஸ் கண்ணில் கிடைத்தால் மிகப் பெரிய தர்மவானும் அதனை வைத்துக் கொள்ள வேண்டுமென்றுதான் நினைப்பான். ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் எனக் கிட்டத்தட்ட இருபதினாயிரம் ரூபாய் இருந்தது அந்தப் பர்ஸில். பல காலங்கள் கடினமாக உழைத்தாலும் பார்க்க முடியாத பணம், அதனைத் தங்களுடனேயே வைத்துக் கொண்டு விடுவது என்று முடிவு செய்வதில் எந்தக் குழப்பமும் இருக்கவில்லை அவர்களிடம்.

பணத்தை மட்டும் எடுத்துக் கொண்டு மற்றவற்றைத் தூக்கி எறிய எத்தனித்த போது அந்தப் பர்ஸில் இருந்த ஒரு ஃபோட்டோ அவர்களின் கவனத்தை ஈர்த்தது. ஆஜானுபாகுவாக ஆறடி உயரமும் முறுக்கி விடப்பட்ட மீசையுமாய் நின்று கொண்டிருந்த போலிஸ் அதிகாரி ராஜேந்திரனும், அவரின் மனைவி மற்றும் மகளும் நிற்கும் புகைப்படம் அது. அது போலிஸ் அதிகாரியின் பர்ஸ் மற்றும் பணம் என்று புரிந்தவுடன் கிட்டத்தட்ட அங்கேயே விழுந்து இறந்திருப்பான் மாசான். பயத்தில் கை கால்கள் நடுங்க ஆரம்பித்தன.

கீழ கிடந்ததைப் பாத்தேன் சார் என எடுத்துக் கொண்டு போய்க் கொடுத்து விடலாம் எனத் தோன்ற, இருபதினாயிரம் ரூபாயை இழக்க மனமில்லை. எப்படிக் கண்டு பிடிப்பார், நாமே வைத்துக் கொள்ளலாம் என்று தோன்றிய மறு கணமே, ஐயோ, அவரு பெரிய ஆபிசரு, எப்படியும் புடிச்சாருன்னா என்ன பண்ணுவாருன்னு நெனச்சு பாக்கயில கொல நடுங்குதுடி என மனைவியிடம் சொல்கிறான் மாசான்.

பல வாத விவாதங்களுக்குப் பிறகு, பணத்தைக் கொடுப்பதில்லையென்றும் பணத்தை மட்டும் வைத்துக் கொண்டு, பர்ஸ் மற்றும் ஃபோட்டோ எல்லாவற்றையும் எரித்து விடலாமென்றும் முடிவானது. சோலை சென்று நெருப்புப் பெட்டியை எடுத்து வர, பணத்தை மட்டும் உருவி விட்டு பர்ஸைக் கீழே போடுகிறான் மாசான். கீழே விழும் பர்ஸிலிருந்து மைக்ரோ எஸ்.டி. கார்ட் வந்து விழ, அது என்னவென்று தெரியாமல் கையிலெடுத்துப் பார்த்து விழித்துக் கொண்டு நின்றான் மாசான்.

(தொடரும்)

–    வெ. மதுசூதனன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad