ஈழத் தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி 2
புலம்பெயர்ந்தோர் கவிதைகளின் வடிவம்
(பகுதி 1)
கற்பனையாலும் உணர்ச்சியாலும் உந்தப்பட்டுக் கவிதைகள் பிறக்கின்றன. உலக மொழிகள் எல்லாவற்றிலும் கவிதைகள் உண்டு. கவிதைக்கு மூல காரணமாகக் கற்பனை அமைகின்றது. கற்பனை பொங்கிப் பிரவாகித்து முட்டி மோதுகின்ற போது அதனை வடிவமாக வெளிக்காட்டி கவிதை என்ற பெயர் சூட்டி அழகு பார்க்க மொழி துணை செய்கின்றது. மனிதர்கள் எல்லோருமே கற்பனையில் சிறந்தவர்கள். ஆனால் எல்லோரும் கவிதை எழுதுவோரல்லர். அதேபோல் கற்பனையுடன் எழுதப்படுபவை எல்லாமே கவிதை ஆகிவிடுவதுமில்லை.
கவிதைக்கு உடல், உள்ளம், உயிர், உயிர்த்துடிப்பு எல்லாமே இருக்கிறது. கவிதைக்கு உடல் அதன் உருவமாகும். உள்ளமாக அமைவது உள்ளடக்கம். உணர்த்துமுறை தான் கவிதைக்கு உயிர். நடைச்சிறப்பு அதன் உயிர்த்துடிப்பு. இவை அனைத்தும் ஒருங்குபெற அமையும்போதுதான் அது தரமான கவிதை என்ற பெயரைப் பெறுகின்றது.
வடிவமும் உள்ளடக்கமும் பொருத்தமுற அமைவதுதான் சிறந்த கவிதை1 என்று மேனாட்டு இலக்கியத் திறனாய்வாளர் ஹட்சன் (Hudson) குறிப்பிடுகின்றார். உள்ளடக்கத்துக்குத் தகுந்த வடிவமும் (Form) வடிவத்துக்குத் தகுந்த உள்ளடக்கமும் (Content) அமையவேண்டுமென்பதை இதன்மூலம் அறிய முடிகின்றது. இவ்வகையில் கவிதையை அழகு படுத்துவதற்கு அல்லது செம்மை செய்வதற்கு அல்லது கவிதையைக் கவிதையாக்குவதற்கு ஒரு வடிவம் அவசியம் என்பதை உணர முடிகின்றது.
கவிதையினை உருவாக்கும் முறை; உருவம், வடிவம், யாப்பு எனப் பல பெயர் பெறுகின்றது. நன்னூல் செய்யுளின் இலக்கணம் பற்றிக் கூறுகின்ற போது
‘பல்வகைத் தாதுவின் உயிர்க்கு உடல் போல் பல
சொல்லால் பொருட்கு இடனாக உணர்வினில்
வல்லோர் அணிபெறச் செய்வன செய்யுள்’2
(நன்-எழுத்-நூ.16)
இங்கு செய்யுள்தான் கவிதை என்பது புலனாகின்றது. சொல், பொருள், உணர்ச்சி, அழகு முதலியவற்றாலான சேர்க்கை கவிதை என்ற பொருள்பட அமைந்துள்ளது. தொல்காப்பியர் கவிதை பற்றிச் சொல்லவில்லையாயினும்;
‘பாட்டுரை நூலே வாய்மொழி பிசியே
அங்கதம் முதுசொல்லோடு அவ்வேழ்நிலத்தும்”3
(தொல்-செய்-நூ.78)
என்று பாட்டு இலக்கிய வகையை முதலில் சுட்டியதிலிருந்து அதன் முதன்மையை உணர முடிகின்றது.
‘அடியின் சிறப்பே பாட்டெனப்படுமே4
(தொல்-செய்-நூ.34)
என்பது தொல்காப்பியர் பாட்டிலக்கணம் கூறும் திறனாகும். இங்கு ‘சிறப்பே’ என்ற சொல்லானது அடியளவின் சிறப்பினையும் உணர்ச்சியுடன் கூடிய பொருட் சிறப்பினையும் உணர்த்தும் முறையினால் பாட்டிற்கு ஒலிநய வடிவம் அல்லது யாப்பு வடிவம் இன்றியமையாததென்பது தெளிவாகின்றது.
குறிப்பிட்ட வடிவத்தில் படைத்து விட்டால் மட்டும் அதனைக் கவிதை அல்லது பாட்டு எனக் கருத முடியாது. தமிழ் இலக்கிய மரபில் காலத்துக்குக் காலம் கவிதை இயற்றுவதற்கெனப் பலவகையான யாப்புக்கள் வழக்கிலிருந்து வருகின்றன.
சங்ககாலத்தில் பொதுவாக வெண்கலி, கலிவெண்பா, பரிபாட்டு, வஞ்சிப்பா என்பன வழக்கிலிருந்தும் ஆசிரியப்பாவே அதிகம் செல்வாக்குப் பெற்றிருந்தது. பின்னர் சங்கமருவிய காலத்தில் வெண்பா சிறப்புப் பெற்றாலும் சிலம்பில் தலை காட்டிய விருத்தம் நாளடைவில் வலிமை பெற்று பல்லவர் சோழர் காலங்களில் உச்ச நிலையினை அடைந்தது. கம்பராமாயணத்தின் வெற்றியில் விருத்தப்பாவின் பங்களிப்பினை எவரும் மறுதலித்துவிட முடியாது. அந்த அளவுக்கு கம்பனின் கற்பனைக்கு ஏற்ப விருத்தப்பா இசைவு பெற்றிருந்தது.
காலப்போக்கில் தமிழ் இலக்கணங்கள், சீர் மாறலாம்; தளை உறழலாம்; அடி பிறழலாம் என்ற விதிவிலக்குகளை அளிக்க, அதன்வழி கவிதையின் வடிவ அமைப்பிலும் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. கவிதையின் வடிவ அமைப்பில் இலக்கண ஆசிரியன் தலை நீட்டித் தடை செய்யவில்லை; படையெடுக்கவில்லை; கவிஞனின் பொங்கும் உணர்வுக்குத் தக, பொருளுக்குத் தக கவிதையின் வடிவமும் மாற்றம் பெறத் தொடங்கியது.
கவிஞன் சொல்ல நினைக்கும் கருப்பொருளுக்குத் தகுந்தவாறு அதன் ‘வடிவம்’ இருக்க வேண்டும். கருப்பொருளின் அனைத்து உணர்ச்சிகளுக்கும் இடந்தந்து நிற்பதாக அதன் வடிவம் அமைந்திருத்தல் அவசியம். கவிஞன் சொல்ல நினைக்கும் உணர்ச்சிக்கு நேர்மாறாக வடிவ வார்ப்பு அமைந்து விடக் கூடாது. கவிஞன் கூறுவதை அவன் சொல்ல நினைக்கும் மொழியில்தான் சொல்ல முடியும். மற்ற வழியாகச் சொல்ல முடியாது.
அவனுடைய கவிதைகளில் காதல், அவலம், சினம், இன்பம், துன்பம், அழுகை, சிரிப்பு, போர், வீரம் இன்னும் அவனுடன் என்னவெல்லாம் உள்ளனவோ அவன் எதையெல்லாம் சொல்ல நினைக்கிறானோ அவையெல்லாம் அவனுடைய உணர்வுகள் பொங்கித் ததும்புகின்றபோது கவிதைகளாக உருவாகி அவனது உணர்வுக்கு ஏற்பக் கவிதைகளும் அழும்; விழும்; பாடும்; சிரிக்கும். இவ்வாறு எதையெல்லாம் கவிஞன் சொல்ல நினைக்கின்றானோ அதையெல்லாம் அவனது கவிதை செய்து முடித்துவிடும்.
வளர்ச்சியடைகின்ற எல்லாம் மாறும் என்ற தத்துவத்துக்கேற்ப கவிதையும் காலச் சூழலில் மாறும் தன்மை கொண்டமைந்தது. உலக மொழிகள் அனைத்திலும் இலக்கணம், இலக்கியம் ஆகியவற்றில் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இவ்வகையில் உரைநடையின் அபரிமிதமான வளர்ச்சி காரணமாக அதன் இன்னொரு கூறாக, செய்யுள் அமைப்பு உடைபட்டுப் போக, புதுக்கவிதை தன்னைப் பிறப்பித்துக் கொண்டது.
யாப்பை ஒதுக்கித் தள்ளியதுதான் புதுக்கவிதையின் முதற் பணியாக அமைந்தது. யாப்பு மரபுக்குள் மூழ்கி விடாமல் சுதந்திரமான சிந்தனையுடன் எழுதுவதற்கு புதுக்கவிதை களம் அமைத்துக் கொடுத்தது. இலக்கணத் தளைகளிலிருந்து கவிதை தன்னை விடுவித்துக் கொண்டதனால் கவிதையும் உருவ மாற்றம் பெற்று புதுக்கவிதை என்னும் வடிவம் பெற்றது.
புலம்பெயர்ந்தோர் கவிதைகளின் வடிவம் என்பது பெருமளவுக்கு புதுக்கவிதை வடிவத்தைச் சார்ந்ததாக உள்ளதனை அவதானிக்க முடிகின்றது. மரபுச் சார்புடைய கவிதைகளை எடுத்தாளுகின்ற தன்மை இல்லை என்று சொல்லுமளவிற்கு மரபுக்கவிதைகளைப் பார்ப்பதே அரிதாகக் காணப்படுகின்றது.
பெரும்பான்மையான புலம்பெயர்ந்த கவிஞர்கள் தமது உணர்வுகளினை வெளிப்படுத்தச் சிறந்த வடிவமாக புதுக்கவிதை அமையும் என்பதைத் திடமாக நம்பினர். இதன் விளைவாகக் கணிசமானளவு புலம்பெயர்ந்த கவிஞர்கள் புதுக்கவிதை என்ற வடிவத்துள் நின்றுகொண்டு தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தினர்.
புலம்பெயர்ந்தோரின் கவிதைகள் பெரும்பாலும் பத்து முதல் இருபது, முப்பது வரையிலான அடிகளைக் கொண்டவையாகக் காணப்பட்டன. சிலர்; நீண்ட கவிதைகள் அல்லது நெடுங் கவிதைகளினைப் படைத்தமையினையும் அவதானிக்க முடிகின்றது. குறிப்பாக வ.ஐ.ச.ஜெயபாலன், சேரன், இரமணிதரன் போன்றோரைக் கூறலாம்.
வ.ஐ.ச.ஜெயபாலனின் இலையுதிர் கால நினைவுகள்-19895 என்ற நெடுங்கவிதையில் உறவுகளைப் பிரிவதனால் வரும் துயரம், தாய் நாட்டின் ஏக்கம், புலம்பெயர்ந்த நாட்டில் ஏற்பட்ட அகதி உணர்வு, தகுதிக்கேற்ற தொழிலின்மை போன்ற ஒன்றுக்கு மேற்பட்ட நிகழ்வுகளினைப் பின்னிப் பிணைத்துப் புலம்பெயர்ந்துள்ள நாட்டின் காலநிலையையும் தன் சொந்த நாட்டின் நிலையையும் ஒப்பிட்டுத் தந்துள்ளமையினை அவதானிக்க முடிகின்றது.
பொருண்மைச் சார்பில்லாத ஓசை நயத்துக்கு மட்டும் முக்கியமளிக்கக்கூடிய சொற்களைத் தேடிப்பிடித்து உருவம் அல்லது வடிவத்துக்கு (குழசஅ) முதன்மை தந்து எழுதப்பட்ட சம்பிரதாயக் கவிதைகள் சிலவும் புலம்பெயர்ந்தோரால் படைக்கப்பட்டுள்ளன. இவ்வாறான கவிதைகள் முற்றிலும் புற வடிவப் பொலிவை மட்டுமே அடிப்படையாகக் கொண்டமைந்தன. கவிஞன் தன்னைச் சூழ்ந்துள்ள சமூகத்தின் இன்ப துன்பங்களில் பங்கெடுக்காமல் ஒதுங்கி நின்று உருவத்துக்கு மட்டும் முதன்மையளித்து உள்ளடக்கம் பற்றிக் கவலைப்படாமல் எதுகை மோனைச் சொற்களைக் கோர்வை செய்தும் கவிதைகள் படைக்க முற்பட்ட தன்மையினையும் அவதானிக்க முடிகின்றது.
சான்றாகக் ‘கற்சுறா’வின் தலைப்பிடப்படாத இந்தக் கவிதையைச் சுட்டலாம்.
‘என்னிடம் எதைக் கேட்கிறாய் இன்னும்?
கணங்களின் இடுக்கில்
எரிந்து
சாம்பலாகிக் கொண்டிருக்கிறேன்.
கருகுவது நான்தான்.
காற்றின் எதிர்த்திசையில்
இழுபட,
அடிபட்டு
நார்நாராய்க் கிழிகிறது காலம்.
நிமிர்த்திப் பிடிக்க,
எடுக்கும் வாந்திகளிலெல்லாம்
சிந்திக் கொண்டிருக்கிறது உடல்.
உரியவர்கள் பொறுக்கிக் கொள்கிறார்கள்
பிணங்களின் நடுவே
ஒருவன் ஒழித்துக் கொள்கிறான்
வீடு.
சூரியனை, கடல் அலையை, சந்திரனை, பூக்களை
எப்போதாவது பாடுவான் அவன்.
உனக்காக.’6
இந்தக் கவிதையில் கற்பனை வளம் மிகுந்திருந்த போதிலும் பொருண்மைச் சார்பில்லாத, வடிவத்துக்கே முதன்மையளிக்கக் கூடிய பண்பு மேலோங்கியிருப்பதனைக் காணமுடிகின்றது.
ஒப்பில்லாத சமூக உருவாக்கமே ஒரு இலக்கியத்தின் உயிர்த் துடிப்பாக இருக்க வேண்டும். சிலர் தம்மால் ஒப்பற்ற சமூகத்தை உருவாக்க முடியாத போது இறைவனிடம் மன்றாடிக் கேட்கிறார்கள். வேறுசிலர் பேனா முனையின் மூலம் எழுத்துப் புரட்சி செய்து பெறத் துடிக்கிறார்கள். இன்னும் சிலர் ஆயுதம் தாங்கிய போராட்டத்தின் மூலம் அதனை அடைந்து விடலாம் என நினைக்கிறார்கள். இதனால் ஒப்பில்லாத சமூக அமைப்புக் கானல் நீராகி ஆயுத கலாசாரம் மேலோங்கி அதுவே முதன்மைப்படுத்தப்பட கற்பனை வறட்சி ஏற்பட்டுத் தவிர்க்க முடியாது அதனையே கவிஞன் எழுத வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றான் என்பதை முல்லை அமுதன் எழுதிய தேசத்தின் வேர்கள் கவிதையின் மூலம் உணர முடிகின்றது.
‘கடல்நீரை சிறுசெம்பில்
அடைப்பேன் என்கிறாய்’
மரங்களும்
தலை அசைத்து ஆமோதிக்கின்றன.
…………………………………..
காலம் கிளை முறித்தது.
‘இன்று அவளைக் கொன்றே வருக’
என்று
ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஓட்டுக்குள் முடங்கிக் கிடந்த
ஆமைக்கும்
துப்பாக்கி தரப்பட்டுள்ளது.
தேசத்தின் வேர்கள் காயம் பட்டது
வானம்
பொடியாகாமல் என்ன
செய்யும் சொல்?7
இந்தக் கவிதையில் பொருள் பொதிந்த தற்கால ஈழத்து அரசியல் எதார்த்த நிலையினை அழகாக விளக்குகிறார் கவிஞர்.
புலம்பெயர்ந்துள்ள நாடுகளிலிருந்து கவிதை படைக்கின்ற பலரும் தம்மை இனங்காட்டிக்கொள்ள விரும்பாமையினால் புனைப்பெயர்களினை அதிகளவிலானோர் தமக்கு இட்டுக்கொண்டனர். காலப்போக்கில் புனைப்பெயர் என்பது நாகரிகம் போல் தோன்றியமையாலும் பாதுகாப்புக்கான உத்தரவாதமாக அமைந்தமையினாலும் பெருமளவிலான படைப்பாளிகள் புனைபெயர்களை வைத்துக்கொண்டு எழுதினர்.
இவர்களில் பலர் தம் தாயகத்தில் வசித்த காலத்தில் இலக்கிய முயற்சிகளில், படைப்பாக்க முயற்சிகளில் ஈடுபடாத, தீவிர ஆர்வம் காட்டாதோராகவும், தம்மை வெளியுலகுக்கு இனங்காட்டிக் கொள்ள முடியாதோராகவும் இருந்திருக்கின்றனர். காலப்போக்கில் புலம்பெயர்ந்துள்ள நாடுகளின் சூழல்,பாதுகாப்பு என்பன இவர்களை எழுதத் தூண்ட் மரபுக்கவிதைகளின் வடிவத்தை அறியமுடியாத இவர்களினால் அதைப்பற்றி அறிந்து கொள்வதற்கான காலமும் வாய்ப்பும் கிடைக்காமல் போக, தவிர்க்கமுடியாமல் தங்களது உணர்வுகளை இலகுவாக வெளிக்காட்ட, எடுத்துச் சொல்ல புதுக்கவிதை வடிவத்தைத் தெரிவு செய்திருக்கலாம் என்று கருத இடமுண்டு.
இவ்வகையில் இன்று புலம்பெயர்ந்த நாடுகளில் பெரும்பான்மையானோர் புதுக்கவிதை வடிவத்தை விரும்பி ஏற்பதனை அவதானிக்க முடிவதுடன் மரபுக் கவிதையில் தேர்ச்சி பெற்ற புலம்பெயர்ந்த கவிஞர்கள் சிலரும் தமது உணர்ச்சிகளை இலகுவில் வெளிப்படுத்த புதுக்கவிதையினை விரும்பி ஏற்று எழுதி விருகின்றமையினையும் அவதானிக்க முடிகின்றது.
அடிக்குறிப்புகள்
1. இலக்கியத் திறனாய்வு இசங்கள்-கொள்கைகள், அரங்க சுப்பையா, பக்.262.
2. நன்.நூ.16
3. தொல்.செய்.நூ.பா.78
4. தொல்.செய்.நூ.பா.34
5. திருநாவுக்கரசு.ப, (தொ.ஆ), புலம்பெயர்ந்தோர் கவிதைகள், பக்.36
6. மேலது, பக்.186
7. மேலது, பக்.149
– தியா