உலகச் செம்மொழி – அத்தியாயம் 4
அத்தியாயம் 3 செல்ல இங்கே சொடுக்கவும்
வணக்கம்!
மனிதகுலம் தோன்றி வளர்ந்து பரவிய விதத்தை இருவிதக் கொள்கைகளில் விளக்குகின்றனர்.
1.மேல்நாட்டவர் சொல்கின்றபடி மனித இனம் ஆப்பிரிக்கா பகுதியில் தோன்றி உலகம் முழுதும் பரவியது.
2.தென்னாட்டு அறிஞர்களின் கருத்தான மாந்த இனம் முதலில் கடல் கொண்ட தென்னாடான குமரிக்கண்டம் என்ற இலமுரியா கண்டத்திலேயே தோன்றி உலகம் முழுதும் பரவியது.
இந்த இரண்டு கருத்துக்களுக்கும் முறையான வாதங்கள் எடுத்து வைக்கப்பட்டாலும், அவற்றை ஆராய்வது நம் நோக்கமில்லை. தமிழ் அறிஞர்களின் கூற்றுப்படியும் நம் செவிவழிச் செய்திகள் படியும், தமிழ் குமரிக்கண்டத்தில் தோன்றி, கடல்கோள் ஏற்பட்டு எல்லா இடங்களுக்கும் பரவியது. முதற்சங்கம் கண்ட தென்மதுரை கடல்கோளால் அழிந்து மக்கள் வடக்கு நோக்கி நகர்ந்ததும் கபாடபுரத்தில் இடைச்சங்கத்தை ஏற்படுத்தினர். அதுவும் கடல் கோளால் அழிய மேலும் வடக்கு நோக்கி நகர்ந்தது. தற்போதைய மதுரையில் கடைச்சங்கம் அமைக்கப்பட்டதில் இருந்து மொழியும் மக்களும் இவ்வாறு புலம் பெயர்ந்தனர் என்று நாம் உணர்ந்துக்கொள்ளலாம். தமிழ் மொழி எப்படிப் பரவியது என்பதை அறிய இந்தப் புவியியல் அமைப்பைத் தெரிந்துக்கொள்வது நல்லது.
குமரிக்கண்டம் பற்றி எழுத ஆரம்பித்திருப்பதால் அதனுடன் ஒட்டிய சில செய்திகளைச் சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.
இலமூரியா என்ற இலத்தினிய சொல், தமிழ் மூலத்தையே கொண்டுள்ளது. இலை-மறை என்ற வார்த்தையின் மருவாகவே இது உள்ளது என்று அறிஞர் பெருமக்கள் கருதுகின்றனர். இலைகளுக்குப் பின் மறைந்து வாழும் ஒரு வகை விலங்கிற்கும் இலமூர் என்றே பெயரிடப்பட்டுள்ளது. இலமுரியா என்பதற்குக் கடல் அடியில் மறைந்து இருக்கும் கண்டம் என்று பொருள்.
இக் கண்டத்தில் ஏழுபனை நாடு, ஏழு தெங்கு நாடு, ஏழு முன்பாலைநாடு, ஏழு பின் பாலைநாடு, ஏழு மதுரை நாடு, ஈழநாடு, நாக நாடு, பெருவள நாடு, ஒளிநாடு போன்ற 49 நாடுகள் இருந்தன என்ற செய்தியும். குமரியாறு, பக்றுளியாறு போன்ற பெரும் ஆறுகளும் மற்றும் குமரிக்கோடு போன்ற பெரும் மலைத் தொடர்களும் இருந்தன என்ற செய்திகள் நமது இலக்கியங்களில் இருந்து தெரிகின்றது.
இந்தக் குமரிக்கண்டம் ஆஸ்திரேலியா முதல் தென் ஆப்ரிக்கா வரை இந்திய நிலப்பகுதியோடு இணைந்து தமிழ்க்கூறும் நல்லுலகாய் இருந்தது. இதற்குச் சான்றாக இந்தப் பகுதியில் உள்ள நாடுகளின் பெயர்கள் எல்லாம் தமிழ் மூலத்தையே கொண்டுள்ளது.
தமிழில் “யா” என்ற எழுத்து தெற்கு என்று பொருள் கொள்ளப்படும். தென்னாட்டின் தலைவன் என்ற பொருளில் தான் எமன்(”யா + மன்னன் = யாமன் = எமன்) அழைக்கப்பட்டான்.. தென்னாடு கடல் கொண்டதால் இம்மன்னன் இறந்தவர்களின் தலைவனாகக் கருதப்பட்டான்.
தெற்குப்பக்கம் இருந்த நாடு தென்தரை நாடு “யா” + “தரை”(யாதரையா) என்று அழைக்கப்பட்டு பின் ஆஸ்திரேலியாவாக உருப்பெற்றது.
குறிப்பிட்ட காலத்தில் மக்கள் தென்தரை நாட்டிற்கு இடம் பெயர்ந்தனர். இவ்விடப்பெயர்ச்சியினால் பயணம் செய்தல் என்ற சொல்லுக்கு “யாத்திரை” போகுதல் என்ற சொல் கையாளப்பட்டது. இந்த “யாத்தரை” (“யா” +தரை”) என்ற இருச் சொற்களும் புணர்ந்து (Compounding) யாத்ரா என்று வடமொழியில் திரிந்தது.
-சத்யா-