மாணவப் படைப்பாளிகள் திட்டம்
பனிப்பூக்களின் மாணவப் படைப்பாளிகள்
புதிய ஆண்டு துவங்கிவிட்டது. பலவிதமான கனவுகள், எதிர்பார்ப்புகள், அபிலாஷை அனைத்தையும் நிறைவேற்ற வந்திருக்கும் 2022, பனிப்பூக்களுக்கும் மகத்தான ஆண்டு. ஆம், இந்தாண்டின் தாய்மொழி தினமான பிப்ரவரி 21ஆம் நாள், பனிப்பூக்கள் சஞ்சிகை பத்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கவுள்ளது. அச்சிதழ் வழியாகவும், இணையம் வழியாகவும் எங்களுக்கு ஆதரவளித்த பல்லாயிரக்கணக்கான வாசகர்களுக்கு எங்களது உளங்கனிந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம். கடந்தாண்டுகளில் கதை, கட்டுரை, கவிதை, போட்டிகள் மூலம் பல படைப்பாளிகளுக்கு மேடையமைத்து அரங்கேற்றிய பெருமை பனிப்பூக்களுக்கு உண்டு. அந்த வகையில் பத்தாமாண்டு தொடக்கத்தினை அமெரிக்க மண்ணில் அடுத்தத் தலைமுறை படைப்பாளிகளை உருவாக்கி வளர்க்கும் முயற்சியில் ‘மாணவப் படைப்பாளிகள்’ திட்டத்தினை அறிமுகம் செய்கிறோம்.
எழுத்து, ஓவியம், புகைப்படமெடுத்தல் என பல்வேறு துறைகளில் படைப்பாற்றல் ஆர்வமிக்க இளவயதினரைத் தெரிவு செய்து, பயிற்சியளித்து, வாய்ப்பளித்து அவர்களது படைப்புகளை வெளிக்கொணர்வதே இத்திட்டத்தின் குறிக்கோள். பதினைந்து முதல் இருபத்தியைந்து வயதுடைய, பள்ளி, கல்லூரி மாணவர்கள் இதில் பங்கேற்கலாம். அயல்நாடு வாழ் இளைஞர்கள் தங்களது தமிழ் மொழியாற்றலை வளர்த்துக் கொள்ள இது ஒரு அரிய வாய்ப்பாக அமையும். மாணவர் படைப்பாளிகளுக்கு தேவையான பயிற்சியளித்து, சிந்தனைத் திறன்களை ஊக்குவித்து அவர்களது படைப்புகளை எமது சஞ்சிகையில் வெளியிடுவதுடன், சான்றிதழ்களும் வழங்கப்படும். உயர்நிலைப் பள்ளியில் தன்னார்வத் திறனுக்கான புள்ளிகளைப் பெறவும் ‘மாணவப் படைப்பாளிகள்’ திட்டம் உதவும்.
பங்குபெற விரும்பும் மாணவ-மாணவியர், படைப்பாற்றல் திறனுடன் தமிழ் மொழியில் தடையின்றி எழுதும் ஆற்றல் பெற்றிருக்க வேண்டும். தமிழில் கணினியில் தட்டச்சு செய்யத் தெரிந்திருப்பது நலம். ‘மாணவப் படைப்பாளிகள்’ திட்டத்துக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, கோரப்பட்டிருக்கும் இணைப்புகளோடு 01/31/2022 தேதிக்கும் முன்னர் அனுப்பி வைக்கவும்.
இளவயது மாணவருக்கென அமைக்கப்பட்டிருக்கும் இத்தளத்தில் களமிறங்கி பரிமளிக்க உங்களை அழைக்கிறோம். இணைந்து சிந்திப்போம், செயல்படுவோம், தமிழ்ச் சுவைப் பருகுவோம்! நல்வாழ்த்துகள்.
விண்ணப்பம் | ← சொடுக்கவும் |