பொங்கலோ பொங்கல்
பொழுது சாயும் நேரத்துலே
பொதுவான சாலை ஓரத்திலே
பொசுங்கும் குப்பைக் கூளமுமே
போகி வந்ததென அறிவிக்குமே !!
குப்பைக் காகிதம் மத்தியிலே
குறுகிய எண்ணக் கசடுகளும்
குன்றத் தோன்றிய சுயநலமும்
கூடவே சேர்த்துக் கொளுத்துவமே !!
மறுநாள் காலை வைகறையில்
மலர்ந்து வளர்ந்திடும் ஆதவனை
மனதில் நினைந்து வழிபடவே
மாநிலம் முழுதும் கூடினரே !!
முற்றம் நடுவினில் பானைவைத்தே
முனைந்து சுற்றிய மஞ்சளுமே
முழுதாய் நிறுத்திய கரும்புடனே
மூட்டிய அடுப்பினில் பொங்குதுவே !!
கழனி காடு மேடெல்லாம்
கதிரும் நெல்லும் விளைத்திடவே
களைப்புக் கருதாது உழைத்திட்ட
காளை மாட்டினை வணங்குவமே !!
உயிர்கள் என்று வருகையிலே
உயர்திணை மட்டும் சிறப்பன்றி
உய்விக்கும் அந்த அஃறிணையும்
ஊரினில் எங்கும் போற்றுவரே !!
கடவுள் உண்டெனும் பக்தனுமே
கணக்காய் அதனைப் போற்றியுமே
கரும்பும் பொங்கலும் தான்படைத்தே
காத்திடுக வென்றே வேண்டுவனே !!
பண்டிகை பலவும் இல்லையெனப்
பகர்ந்திடும் நாத்திக அன்பனுமே
பதமாய் இயற்கையைத் தொழுதிடவே
பாங்காய் வந்திடும் பொங்கலுமே !!
தமிழர் திருநாள் என்றிந்தத்
தரணி முழுதும் கொண்டாடிடும்
தலை சிறந்த தினமாயந்த
தைப்பொங்கல் அதுவும் மலர்ந்திடுமே !!!
வெ. மதுசூதனன்.