பெண்களை அடிமைப்படுத்தாதே !
பொய்யானதே பெண் வாழ்வு
பொய்யானதே!
கேட்பதற்கு நாதியில்லாஇனமாகிப் போனதே
பெண்ணினம்!
கேட்பதற்கு நாதியில்லா
இனமாகிப் போனதே
பெண்ணினம்!
வயது ஐந்து கொண்ட சின்ன
வண்ணக்குயில் கூட
உன் கண்ணிற்குப்
பதினெட்டாய்த்
தெரிவதேன்?
பதினெட்டாய்த்
தெரிவதேன்?
மன்னன் அந்தப்புர மகளிராய்
அடிமைப்படுத்தப்பட்டோம்
இன்று வரை
அடிமை ஆனோம்
இன்று வரை
அடிமை ஆனோம்!
அரசியல் மேடை ஏறி வென்றால்
உன் காமப் பார்வையை
பாய்ச்சுகின்றாய்
பள்ளியிலும்
இதுதான்
செல்லும் வீதியிலும்
இதுதான்
எங்கும் இதுதான்
உன்னைப் பெற்றவளும்
பெண்தானே
உடன் பிறந்தவளும்
பெண்தானே
நீ கட்டியவளும்
பெண்தானே
இருந்தும் ஏனடா
அடிமைப் படுத்துகின்றாய்?
இருந்தும் ஏனடா
அடிமைப் படுத்துகின்றாய்?
மாதர் தம்மை இழிவு செய்யும்
மடமையைக் கொளுத்துவோம்
எனப் பாரதி சொல்லிய வேதம்
மறந்து விட்டாயா?
பாரதி சொல்லிய வேதம்
மறந்து விட்டாயா?
பெண் வேசி என முரசு முழங்கிக்
கொண்டு அலைபவனே
முலைப்பால் ஊட்டியவளை
மறந்துவிட்டுத் திரிபவனே
இதையும் கேளடா!
நன்றாய்க் கேளடா!
கண்ணகியாய், சீதையாய்
தமயந்தியாய் நெஞ்சில்
வீர உரம் கொண்டு
கற்பு நெறி தவறாது
வாழ்கின்ற பெண்களைக்
கண்டிர வில்லையோ
நீ இன்னும்?
கண்டிர வில்லையோ
நீ இன்னும்?
அரசன் ஐந்தாறு
மனைவிகளோடு
மகிழ்ப் பெருங்கடலில்
வாழ்ந்தான்
எனக் கேட்டிருப்பீர்!
அரசி ஒருத்தி
சேர சோழ பாண்டியனை
வகை வகையாய்க் கொண்டாள்
எனக் கேட்டிருப்பீரோ?
கேட்டிருப்பீரோ?
மனதால் கவரப்படுகின்றவனைக்
கொன்று விட்டு
கள்வனாய் வந்து
கவர்ந்தல்லவோ போவான்
குதிரை மன்னன்
ஈவிரக்கமில்லா கொடியோன்!
ஈவிரக்கமில்லா கொடியோன்!
இக்காரியம் புரி
உனக்கென் மகள்
எனச் சொல்லியே
கழுதையின் கழுத்தில்
பொற்கிழியைக் கட்டிவிடுவான்
கேடுகெட்ட தந்தை காரன்
கேடுகெட்ட தந்தை காரன்!
மதுவிற்கு அடிமையாகி
மாதுவின் வாழ்வுதனைத்
துர்நாசம் செய்து
மகாலட்சுமியாய் வந்தவளை
மூதேவி கூட மதிக்காத
பரதேசியாக்கி விடுவான்
கட்டியவன்
பரதேசியாக்கி விடுவான்
கட்டியவன்!
பிள்ளை இல்லா சனியன்
என்னும் பட்டம்
பல்கலைக் கூடத்தில்
கூடக் கிடைக்காது
மாமியார் வீட்டில்
கிடைத்து விடும்
பன்னீர் மாதங்களில்
பன்னீர் மாதங்களில் !
தமிழ் தழைக்கச் செய்த
எம் பாட்டன் வள்ளுவன்
பாட்டி ஔவை
வழி வந்த
எங்களால்
காம வெறியோன்
கள்வன்
போதையான்
இவ் வையகத்தை
நாசம் செய்வதைப்
பார்க்க முடியவில்லை!
நாசம் செய்வதைப்
பார்க்க முடியவில்லை!
பட்டப் பகல்
வெட்ட வெளிச்சம்
நட்ட நடு வீதி
பொட்டப்புள்ள கற்பழிப்பு
இதுதானே முதல் செய்தி
பத்திரிகை புரட்டுகையில்
பாரதி நீ கண்ட
பெண் விடுதலை இதுதானா?
நீ கண்ட
பெண் விடுதலை இதுதானா?
மகா கவியே
சொல்லித் திருந்தா
உலகமடா
நல்லவன் போல்
வேசம் போட்டு
கலகக்காரன்
வாழும் இடமடா இது!
கலகக்காரன்
வாழும் இடமடா இது!
மனிதனே !
காமவெறி கொண்டு
பற்றைக்குள்
பெண்ணினத்தை
வதம் செய்யாது
உலகில் விருட்சமாய் அவள்
தழைக்க இடம் கொடு
விருட்சமாய் அவள்
தழைக்க இடம்கொடு!
வையவாழ்வு தன்னில் எந்த
வகையினும் நமக்குள்ளே
தாதர் என்ற நிலைமை மாறி
ஆண்களோடு பெண்களும்
சரிநிகர் சமானமாக
வாழ்வோம் இந்த நாட்டிலே!
வாழ்வோம் இந்த நாட்டிலே!
– Sivaroopini Ariyanayagam