நகுலேச்சரம்
இலங்கையில் தோன்றிய மிகப் பழமை வாய்ந்த ஈச்சரங்களில் ஒன்று நகுலேச்சரம் ஆகும். இது வட முனையில் யாழ் குடா நாட்டின் வலிகாமம் வடக்குப் பிரதேசத்தின் மேற்குக் கரையோரத்தில் அமைந்திருக்கும் திருத்தலம் ஆகும். ‘நகுலம்’ என்பது கீரி என்று பொருள்படும். தக்கிண பூமியின் தேன் பொழியும் தென்னகம் ஆகிய தமிழகத்தில் கீரிமுகமுடைய முனிவர் ஒருவர் வாழ்ந்து வந்தார். இவர் ‘நகுலமுனிவர்’ என்றும் அழைக்கப் பெற்றார். இவர் தமிழகத்தில் இருந்து ‘மணற்திடர்’ என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணம் வந்தார். நகுலேஸ்வரத்தின் அருகேயுள்ள யாழ் கடல் அருகேயுள்ள நன்னீர்த்தடாகத்தில் நீராடி நகுல ஈசனை வணங்கினார், இதன் பொழுது அவர் கீரிமுகம் மீண்டு மனித முகமாக மாறியதாம்.
நகுல முனிவர் முகம் தேற்றிய நீராடிய திருத் தடாகத்தில் இன்றும் முன்னோர்க்குப் பிரதர்ச்சனை செய்யும் (பிதிர்) கடன்கள் ஆடி அமாவாசையன்று அடியார்களால் செய்யப்பட்டு வருகின்றது. ‘கீரிமலைக்கேணி’ என்று அழைக்கப்படும் நகுல முனிவர் நீராடிய தடாகம் பல இயற்கை சுண்ணாம்புப் பாறை உப்பு நீர் ஊற்றுக்களைக் கொண்டது. இது உடல் வியாதிகளை நிவர்த்தி செய்ய வல்லது என்பது ஆதித் தமிழ் மக்கள் மாத்திரம் அல்ல பார்க்கு நீரிணையூடாக பயணித்த பாரசீக அராபிய வர்த்தகர்களுக்கும் தெரிந்திருந்தது.
இந்த ஈச்சரத்தின் பெரும்பான்மையான கட்டட அமைப்புக்கள் யாழ் குடாநாட்டின் 1620 களில் போர்த்துக்கேய ஆதிக்கத்தின் பொழுது உருகுலைத்துச் சிதைக்கப்பட்டது. மேலும் இலங்கையின் உள்ளுர் போர்களினாலும் ஆலயம் பிரதேசம் அழிவுகளை எதிர்நோக்கியது.
ஆயினும் இன்றும் நகுல முனிவர் உருவாக்கிய சிறிய சிவலிங்க ஆலயம் இவ்விடம் உள்ளது. இந்தக் கோவில் ‘’கீரிமலை திருத்தம்பலேச்சரம்’’ என்றும் அழைக்கப்படும்.
– தொகுப்பு யோகி –
– படம் காண்டீபன் –