தைப் பொங்கல்
தைப் பொங்கல்
- தைப் பொங்கல் தமிழரின் திருநாள்.
- இது தமிழ் நன்றி நவிலல் நாள்.
- அறுவடை தந்த சூரியனிற்காகப் பொங்கப்படும்
- தைப் பொங்கல் ஆனது தை மாதம் முதலாம் திகதியில் கொண்டாடப்படும்.
- அக்கா முற்றத்தில் கோலம் போடுவார்.
- அண்ணா தலை வாழையிலை விரிப்பார்
- அப்பா நிறைகுடம் வைப்பார்.
- தேங்காய், மா இலைகள், பூக்கள் உடன் அமைந்த நிறைகுடம் கும்பம் எனப்படும்
- அம்மா குத்து விளக்கை ஏற்றுவார்.
- அண்ணா தோரணம் கட்டுவார்
- அக்கா வெற்றிலை, பாக்கு, கரும்பு, பழங்களைப் படைப்பார்.
- அப்பா அடுப்பில் பானையை வைப்பார்.
- அண்ணா அடுப்பின் உள் விறகு வைப்பார்
- அப்பா அடுப்பில் நெருப்பை மூட்டுவார்.
- அம்மா பச்சையரிசி, பால், பனஞ் சர்க்கரை, பல்வித பண்டங்களுடன் பொங்கல் செய்வார்
- பானையில் பால் பொங்கும்.
- தம்பி, தங்கை பட்டாசு வெடிகள், பூந்திரி போட்டு விளையாடுவார்கள்
- அம்மா சூரியனுக்கு இனிய பொங்கலும், பழங்களும், பலகாரம்களும் படைப்பார்
- தங்கையும் , தம்பியும் வணங்கித் தேவாரம் பாடுவர்.
- அனைவரும் பொங்கல், பலகாரம், பழம் உண்டு மகிழ்வோம்.
- தைப்பொங்கலை அடுத்து வரும் தினம் மாட்டுப்பொங்கல் ஆகும்
மேலே வாசித்ததை வைத்து கீழே பதில் தாருங்கள்
- தைப் பொங்கல் யாரின் கொண்டாட்டம்?
- தைப்பொங்கல் எப்போது வரும்?
- தைப்பொங்கல் கொண்டாடப் படுவது ஏன்?
- பொங்கல் செய்ய உபயோகிக்கும் பண்டங்கள் எவை?
- பட்டாசுகள் எப்போது வெடிக்க வைப்போம்?
- நிறைகுடத்தை யார் வைப்பார்?
- தைப் பொங்கலுக்கு அடுத்த நாள் எது?
நாம் அறிந்த சொற்கள்
- தை
- சூரியன்
- பச்சை அரிசி
- கரும்பு
- பாக்கு
- வெற்றிலை
- பானை
- அடுப்பு
- விறகு
- பனஞ் சக்கரை
- பொங்கல்
- கோலம்
- நிறைகுடம்
- மா இலை
- தோரணம்
தமிழ் பழமொழி
நிறைகுடம் தளம்பாது
விளக்கம்: நீர் நிரம்பிய குடம் ஆனது சரிந்து விழாமல் நிலைத்திருக்கும். இதே போல் கற்றவர் மனத்திடமானவர்.
சிந்தனை :எனவே நாம் கல்லாதவர், விவரம் தெரியாத சிலர் பயனற்ற பேச்சில் தம் பொழுதைப் போக்குவர் என்றும் கூறலாம்.
குறிப்பு :
தைப் பொங்கல் கொண்டாடப்படும் தமிழ் தை மாதம் முதலாம் திகதியானது ஆங்கில மாதம் சனவரி 13, 14 திகதிகளில் வரும் |