\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

வினா வினா ஒரே வினா

Filed in இலக்கியம், கதை by on February 26, 2017 0 Comments

ட்லி குக்கர் வேகமாகச் சத்தம் கொடுத்தது. அடுப்பைச் சின்னதாக்கி விட்டு, பொங்கி வரும் பாலை அமர்த்தினாள் பானு. வீட்டின் முன் அறையில் ஒரு ஓரமாக சுப்ரபாதம் ஒலித்துக் கொண்டு இருந்தது. வேகமாக புது டிகாக்ஷனை ஊற்றி நாலு காபிகளைத் தயார் செய்தாள். பால்கனியில் அமர்ந்து காலைச் செய்தித்தாளைப் புரட்டிக் கொண்டு இருந்த மாமனாருக்கும், மாமியாருக்கும் இரண்டு குவளைகளைக் கொடுத்து விட்டு, மீண்டும் சமையல் அறைக்குள் நுழைந்தாள். தயார் செய்து, ஆற வைத்திருந்த புதினா சாதம் , வடகம், கேரட் பொரியல் மூன்றையும் சிறு சிறு டப்பர் டப்பாக்களில் அடைத்தாள் .

மூன்று சாப்பாட்டுப் பைகளை மூட்டை கட்டி விட்டு நேரம் பார்த்தாள். மணி 6.30. நெற்றியில் அரும்பிய வியர்வைத் துளிகளை குர்த்தாவின் கையினை உயர்த்தித் துடைத்தாள்.

90 களில் வெளி வந்த மணி ரத்னத்தின் படத்தில் உள்ளது போன்ற குடியிருப்பு வீடு அவர்களுடையது. ஒரு  பெரிய வரவேற்பு அறை, பெரிய சமையல் அறை ,மூன்று படுக்கை அறை, எனப் பார்த்துப் பார்த்து, திருமணம் முடிந்த முதல் வருடம் கட்டியது . சேதுவின் பெற்றோருக்கு ஒரு அறையும், இவர்களுக்கு அறையும், இவர்கள் சீமந்த புத்திரன் ஏக வாரிசு அனிருத்திற்கு ஒரு அறையும் எனத் தனித் தனியாக அழகாக வகுத்து வைத்து இருந்தார்கள்.

அந்தக் குடியிருப்பில் மொத்தம் 300 குடும்பங்கள் இருந்தன. நாலு கட்டிடம் கொண்ட வளாகம். இவர்களுடையது நாலாவது மடியில் உள்ளது. இவர்கள் வீ ட்டு பால்கனியில் இருந்து சுற்றி இருக்கும் மூன்று கட்டிடங்களும் நன்கு தெரியும்படி அமைந்து இருக்கும்.

அருகில் இருக்கும் கட்டிடங்களில் உள்ள சிலர் வீடுகளும் , சில சமயம் அவர்கள் வீட்டில் நடக்கும் விஷயங்களும் கூட இவர்கள் பால்கனியில் இருந்து பார்த்து விடலாம்.

சேது குளித்து விட்டுச் சமையல் அறைக்குள் நுழைந்தான். அலுவலகம் செல்ல முழுவதும் தயாராக இருந்தான்.

அவன் கையில் ஒரு குவளை காபியை நீட்டினாள் பானு. சமையல் அரை ஜன்னல் வழியே வெளியே பார்த்தான்.

அப்பா அம்மா என்ன பண்றாங்க ? வழக்கம் போலவா?”

பானுஆமாம் வழக்கம் போல தான்“.

ஒண்ணுமே சொல்றதுக்கு இல்லை. இதுக்கு ஒரு முடிவே இல்லையாசொல்லியபடி தன்னுடைய கண்ணாடியைச் சரி செய்து கொண்டு காபியை அருந்தினான்

அவனுக்குப் பதில் சொல்லாமல்,  நான் போய் அனிருத்தை எழுப்பறேன். நீங்க இந்த இட்லியைத் தட்டில் எடுத்துப் போட்டுச் சாப்பிடுங்க . எனக்கும் நேரம் ஆகுது. அவனைக் கிளப்பி, நானும் கிளம்பணும்“.

சரி எனும் விதமாக சேது தட்டை எடுக்க, அவள் வேகமாக அனிருத் அறையை நோக்கி நடக்கத் தொடங்கினாள். சமையல் அறையில் இருந்து பால்கனி கடந்து செல்லும் பொழுது மாமியார் கனகம் உரைப்பது காதுகளில் விழுந்தது.

வழக்கம் போல அவன் தான் சமைக்கிறான். இவ ஏதோ வேலைக்குப் போறேன்னு சொல்லிட்டு நல்லாத் தூங்கறா போல”. சுருக்கென்றிருந்தது பானுவிற்கு. யாரைப் பற்றிய விமர்சனம் என்று புரிந்தது.

இவர்கள் நிறுத்த மாட்டார்களா?. செய்தாலும் ஒரு விமர்சனம், செய்யாவிட்டாலும் விமர்சனம். ஆனாலும் மனிதர்களுக்கு இந்த நாவடக்கம் வாராதா? நாக்கின் மீது பல் போட்டுப் பேசுவது போல, பளிச்சென்று ஒரு விமர்சனம். முழுதாகப் புரிந்து கொள்ளாத அரை வேக்காட்டுப் பேச்சுகள். எந்த வயதில் முதிர்ச்சியும் பக்குவமும் வரும் ?

பொறுமையை இழுத்ததுப் பிடித்தபடி அனிருத்தை எழுப்பக் குரல் கொடுத்தாள் .

அடுத்த அரைமணி நேரம் போன இடம் தெரியவில்லை. யாருடைய பேச்சுகளும் காதில் விழவில்லை. சிட்டாக அவனை பள்ளிக்குக் கிளப்பி, இவளும் ஒரு காட்டன் புடவைக்கு மாறி. அவனைப் பள்ளி பேருந்தில் ஏற்றி விட்டாள்

அவளது கைனெடிக் வண்டியில் கைப்பையை வைத்து விட்டு, வண்டியில் ஏறினாள்.

ஒரு முறை வண்டியின் கண்ணாடியில் முகம் பார்த்தாள் . பளிச்சென்ற தீர்க்கமான முகம். முகம் மனம் பிரதிபலிக்கும் கண்ணாடி என்ற மொழிக்கு ஏற்ப அவள் முகம். தலையில் பழக்கமான ஒரு சின்னக் குதிரை குடுமி. வட்டமான முகத்தில், புருவங்களுக்கு நடுவில் ஒரு சின்ன வட்டப் பொட்டு.

வண்டியை கவனமாக, லாவகமாகத் திருப்பினாள் . பழக்கமான சாலைகளில் வண்டியைச் செலுத்திய பொழுது, மீண்டும் மாமியார் காலையில் செய்த விமர்சனம் மனதில் வந்து போனது.

அவர்கள் இருவருக்கும் இது ஒரு பொழுது போக்கு. வீட்டின் பால்கனியில் அமர்ந்து எல்லார் வீட்டிலும் நடக்கும் விஷயங்களை ஜன்னல் வழியாகப் பார்த்து வம்பு பேசுவது. அவர்கள் வீட்டில் இப்படி அப்படி என்று மதிப்பீடு செய்வது. இவர்கள் மனதில் இருக்கும் மதிப்பீடு என்பது ஜன்னல் வழியாகப் பார்ப்பதினால் மட்டுமே என்று புரிந்து கொள்வது இல்லை.  

இன்று அவர் விமர்சனம் செய்தது எதிர்த்த வீட்டு பவித்ராவை பத்தி. பாவம் தான் பவி. கல்லூரியில் பானுவுடன் வேலை பார்க்கும் சக ஆசிரியை. இரவு தூங்க அவளுக்கு ஏன் நேரம் ஆகிறது என்று பானுவிற்குத் தெரியும் தான். அவளும் அவள் கணவனும் எவ்ளோ பெரிய கஷ்டத்தைக் கடந்து கொண்டு இருக்கிறார்கள் என்று நன்கு தெரியும் ஆதலால் மாமியார் அரை வேக்காட்டு மதிப்பீடு இன்னுமே அதிகமாக உறுத்தியது.

பானு அப்படித்தான். அவளால் யாரையும் சட்டென்று மனதால்கூடக் காயப் படுத்த முடியாது. நமக்குத் தெரியாத விஷயங்களை விமர்சனம் செய்வது தவறு என்று கொள்கை கொண்டவள். அவளுக்கு அப்படி ஒரு மாமியார் !!.

அடுத்தவர்கள் என்று இல்லை. இவளுக்குமே அதே கத்தி தான். அவர்களோடு பேசும் பொழுதெல்லாம் மனம் காயப்பட்டு, மட்டம் தட்டப்படுவாள். இவள் MPhil படித்து முனைவர் பயின்று கொண்டு இருக்கும் ஒரு கல்லூரி ஆசிரியை. அது எல்லாம் அவர்களுக்கு எந்த விதத்திலும் பெரியதோ பெருமையோ இல்லை. காலையில் செய்கிற வீட்டு வேலைகளில் குறைகள் இருந்தால் பெரிய சண்டை கிளப்பிப் பேசுவார்கள்.

நம்முடைய குடும்பத்திலேயே நமக்கு ஒரு மரியாதை , அங்கீகாரம் இல்லை என்று உணரும் பொழுது வெளியே என்ன செய்து என்ன பயன்? தொண்டையில் துக்கம் அடைத்துக் கொள்ளும்.

பானு  சில நேரங்களில் கண்டு கொள்ள மாட்டாள். சில நேரம் பொறுத்துப் போவாள். சில நேரம் எதிர்த்துச் சண்டை போடுவாள். பத்து  வருடம் அவர்களுடன் கூட்டு குடும்ப வாழ்க்கை நடத்தியதில் அவர்களைப் பழகிக் கொண்டாள் .

ஆனால் சில நாட்கள் உறுத்தலுடனே செல்லும். நமக்கு வாரிசு உண்டு. இவர்கள் செய்யும் தவறுகள் அவர்களைக் கஷ்டப்படுத்தாமல் பார்த்துக் கொள் கடவுளே என்று வேண்டிக் கொண்டாள்.

என்னதான் இருக்கிறது இந்த வாழ்க்கையில்? திரும்பத் திரும்ப வரும் ஒரே கேள்வியாக மனதை அரித்தது.

வண்டி சாலையின் சிவப்பு விளக்கில் நின்றது. பக்கத்தில் நின்ற ஒரு காரின் ஜன்னல் திறந்து இருந்தது. உள்ளே இருந்து

வினா வினா ஒரே வினா விடாமலே எழும் வினா

விடாமல் எழும் வினா

பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. சில பாடல் ஆசிரியர்களுக்கு எப்படி வார்த்தைகள் அமைகின்றன. இந்தப் பாடல் வாழ்க்கையின் எத்தனை நேரங்களுக்குப் பொருத்தமாக அமைகிறது !! எவ்வளவு தூரம் மன வலியை வெளிக் கொண்டு வருகிறது?!! அன்று அவள் மன உறுத்தலையும் வினாவாக்கியது.

பாடலை மனதில் ஒட்டியபடி கல்லூரி வளாகத்தில் கைனெடிக் வண்டியை நிறுத்தினாள் .

கத்தியா புத்தியா இரண்டில் வெல்வதேது சொல் மனமே

புத்தியே புத்தியே உலகில் வெல்லுகின்ற ஆயுதமே

கத்தி என்ற வெளி ஆயுதம் விடுத்து மனதில் ஓலமிடும் கத்தும் எண்ணங்கள் கூட எந்த விதத்திலும் வெற்றி தருவதில்லையோ? புத்தியே வெற்றி தருகிறது. நீண்ட பெருமூச்சு ஒன்றோடு  எல்லா சிந்தனைக்கும் முற்று புள்ளி வைத்தாள்

அடுத்த அடுத்த வகுப்புகள் என புத்திக்கு வேலை இருந்தது. மனம் வேலை செய்யாமல் ஓய்வெடுத்தது. நடுவில் இடைவெளி. பவித்ராவைப் பார்த்துப் பேசும் பொழுது மீண்டும் மாமியாரின் பேச்சு மனதில் வந்து போனது.

என்ன பவி டாக்டர்  கிட்ட போய்ப் பேசினியா? என்ன சொன்னாங்க? “

ம்ம் . முதல் சர்ஜரி அடுத்த வாரம்னு சொல்லி இருக்காங்க. அதுக்கு அப்புறம் அடுத்த மாசம்

இன்னொரு follow upனு சொல்லி இருக்காங்க.”.

இப்போ வலி அதிகமா இல்லையே?”

பரவாயில்லை

பணம் ரெடி பண்ணிட்டியா?”

ஓரளவுக்கு ரெடி. இந்த எக்ஸ்ட்ரா வேலை கொஞ்சம் கூட பணம் தருது. ராத்திரி 1 மணிக்கு தான் வரேன். அதனால பாவம் இவர் தான் காத்தால சமைக்கிறார். என்ன பண்ண? சேமிப்புப் போக இன்னும் ரெண்டு லட்சம் தேவை. அவர் ஆபீஸ்ல கொஞ்சம் லோன் எடுத்திருக்கார். எனக்கு லோன் இல்லாம ஈவினிங் காலேஜ் அண்ட்  ரிசெர்ச் வேலை மாதிரித்தான் HOD கொடுத்திருக்கார். எதுவா இருந்தா என்ன குழந்தைக்குச் சரியாப் போனாப் போதும் அவ்ளோ தான் வேணும்.”

உன் உடம்பு தான் கஷ்டப்படும் பவி” “அதனால என்ன

வளையாமல் நதிகள் இல்லை!

வலிக்காமல் வாழ்க்கை இல்லை!

வருங்காலம் காயம் மாற்றும்!!”

உனக்குப் புடிச்ச கவிஞர் முத்துக்குமார் வரிகள் தான். எல்லாம் சரியாப் போயிடும்”.

உடல் சோர்ந்திருந்தாலும் மனம் தளராமல் முயற்சி செய்ய நம்பும் தோழியிடம் நானிருக்கிறேன் இயன்ற உதவி செய்ய என்று உரைத்துத் தைரியம் கொடுத்தாள் பானு.

மாலை கல்லூரி முடித்து வீடு திரும்பினாள். அனிருத் பள்ளி விஷயங்கள், கதைகள் , குதூகலம், இரவு உணவு, என நேரம் போனது.

நாளைக்கு சனிக் கிழமை இட்லி  மாவு அரைக்கலயா ?” என்ற மாமியாரின் கேள்விக்கு  ,

ஊற வெச்சிட்டேன்என்று பதில் கொடுத்தாள் பானு.

எதுக்கு இவ்ளோ ஊற வெச்சிருக்க?”

ரெண்டு டப்பா அரைச்சி ஒண்ணு பவிக்கு கொடுக்கலாம்னு தான் கூட ஊற வெச்சிருக்கேன்“.

அவ இப்போ மாவு கூட அரைக்கிறது இல்லையா? நானும் காத்தால எல்லாம் பார்க்கறேன். அவ வீட்டுக்காரர் தான் சமைக்கிறார்  . இவ மெதுவா தான் தூங்கி எழுந்து வரா . என்னமோ.. குழந்தைக்கு இட்லி கூட அவ அரைச்சுக் குடுக்க மாட்டாளா?”

வழக்கம் போல தனக்குத் தெரிந்த அரைகுறை விஷயத்தை வைத்து விமர்சிக்க,

பொசு பொசுவென்று வந்தது பானுவிற்கு , பொங்கிய கோபமும் அழுகையும் கலந்து மொத்தமாகக் கத்தத் தொடங்கினாள்.

நாக்கு  மேல பல்லுப் போட்டுப் பேச வேண்டாம். அவங்க வீட்ல என்ன பிரச்சனைன்னு தெரியுமா? அஞ்சு வயசு அபிக்கு மூளை யில கட்டின்னு ஒரு மாசமா அலையோ அலைன்னு அலைஞ்சு, டாக்டர் கிட்ட கூட்டிட்டுப் போயிட்டு வராங்க. இப்போ அவளுக்கு மருத்துவச் செலவுக்குத் தேவைன்னு இன்னொரு  வேலை எடுத்துப் பண்ணறா. அதான் ராத்திரி லேட்டா வரா. நீங்க வெறும் ஜன்னல் வழியாப் பார்த்து judge பண்ணித் தப்பாப் பேசாதீங்க. அவங்களோட வாழ்க்கை என்ன , எப்படின்னு உங்களால வெறும் ஜன்னல் பார்த்து மட்டும் எப்படி முடிவு செய்ய முடியும்?  

மனசார ஒருத்தரைக் கஷ்டப்படுத்தறது விட பெரிய தப்பு வேற எதுவும் இல்லை. அந்தப் பாபம் நமக்கு வேண்டாம். நம்ம வீட்டிலேயும் ஒரு சின்னக் குழந்தை  இருக்கான்.

விஷக்கொடுக்கு மாதிரி வார்த்தைகளைக் கொட்ட வேண்டாம்”. பட பட வெனப் பொறிந்து விட்டு, பானு உள்ளே சென்றாள்.

று நாள் காலை வழக்கம் போல எழுந்து வெளியே வந்தாள் . நேற்று கத்தியதற்கு இன்று பதில் திட்டுகளும் சண்டையும் நிச்சயம் இருக்கும். சமையல் அறையில் பாலைக் காய்ச்சும் பொழுது பால்கனியில் எட்டிப் பார்த்தாள் . இருவரும் அமைதியாகச் செய்தித்தாளை மட்டுமே புரட்டிக் கொண்டு இருந்தனர். காலை நேரம் போகப் போக பால்கனியில் எந்தச் சத்தமும் பேச்சும் வம்புகளும் இல்லாமல் அமைதியாக இருந்தது. பானுவிற்கு உண்மையில் ஆச்சர்யம் தான்.

எங்கேயோ ஒரு வானொலி ,

தெய்வம் வாழ்வது எங்கே தெய்வம் வாழ்வது எங்கே

தவுறுகளை உணரும் மனிதன் நெஞ்சில்

என்ற கவிஞரின் வரிகளைப் பொருத்தமாக பாடிக் கொண்டு இருந்தது.

லட்சுமி சுப்பு

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad