இளவெயினிற் காலம்
சூழ்ந்திருந்த வெண்பனியும் சுடரொளியால் உருகிடவே
வாழ்ந்திருந்த புள்ளினமும் வடக்குநோக்கித் திரும்பிடவே
ஆழ்ந்திருந்த இருளதுவும் நாட்பொழுதால் குறுகிடவே
தாழ்ந்திருந்த உள்ளங்களும் தளர்நடையாய்ப் புறப்படவே
காய்ந்திருந்த புல்வெளியும் கண்கள்மெல்லத் திறந்திடவே
சாய்ந்திருந்த செடிகொடியும் சிகைவளர்த்துச் சிலிர்த்திடவே
தேய்ந்திருந்த தவளையினம் தனித்தனியாய்த் தாவிடவே
மாய்ந்திருந்த சிறுகொசுக்கள் மறுபடியும் பறந்திடவே
உறைந்திருந்த நீர்நிலைகள் உவப்புடனே உருகிடவே
மறைந்திருந்த மீனினங்கள் மறுபிறவி எடுத்திடவே
குறைந்திருந்த கூட்டமது வீதிகளை நிறைத்திடவே
வரைந்திருந்த ஓவியமாய் வானமெல்லாம் தெளிந்திடவே
வளர்ந்திருந்த பெருமரங்கள் இலைமுளைத்துத் துளிர்த்திடவே
கிளர்ந்திருந்த பிள்ளைகளும் விடுமுறையை நினைந்திடவே
தளர்ந்திருந்த மக்களெலாம் தண்மைநீங்க, மகிழ்ந்திடவே
மிளிர்ந்திருந்த இளவெயினில் மனம்குளிர உதித்ததுவே !!!
– வெ. மதுசூதனன்