\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

தலையங்கம்

வாசகர்களுக்கு வணக்கம் !

அக்னிக் குஞ்சொன்று கண்டேன் – அதை
அங்கொரு காட்டினில் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு – தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ!!!

– மகாகவி சுப்பிரமணிய பாரதி

அன்றாட வாழ்வில் நாம் கணக்கற்ற அக்னிக் குஞ்சுகளைச் சந்திக்கின்றோம். எழுத்துத் திறமை, பேச்சுத் திறமை, ஓவியம் வரைதல், கதை சொல்வது, பாட்டுப் பாடுதல், அகழ்வாராய்ச்சி, வரலாற்று உண்மைகளின் தெளிவு, நிகழ்வுகளைத் திறனாய்வு செய்யும் திறமை என ஏதோவொரு துறையைக் கை வந்த கலையாகக் கொண்ட அக்னிக் குஞ்சுகள் பல நம்மில், நம் நண்பர் குழாத்தில், நம் ஊரில், நமக்குத் தெரிந்தவர்களின் மத்தியில் எனப் பல பிணைப்புகளிலும் கலந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அந்த அனைத்து அக்னிக் குஞ்சுகளையும் சமுதாயமென்ற காட்டிடை ஒளிரச் செய்யும் பொந்தாக இருப்பதே இந்த சஞ்சிகையின் குறிக்கோள்.

நீங்கள் மேலே காண்பது சரியாக நான்கு ஆண்டுகளுக்கு முன்னர், பனிப்பூக்கள் உதித்த முதல் மாதத்தில் எழுதப்பட்ட தலையங்கத்தின் தொடக்கப் பத்தி. இதனை மீண்டும் வெளியிடுவதில் எங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. இரண்டாயிரத்துப் பதிமூன்றாம் ஆண்டு, ஃபிப்ரவரித் திங்கள் இருபத்தி ஒன்றாம் திகதி, உலகத் தாய்மொழி தினத்தைக் குறிப்பாக வைத்துத் துவங்கியது எங்களின் பத்திரிக்கைப் பயணம். நான்கு வருடங்களாகத் தொடர்ந்திருக்கும் இந்தப் பயணத்தில் நாங்கள் கற்றுக் கொண்டது ஏராளம். மேற்கண்ட பத்தியில் குறிப்பிட்டுள்ளது போல் பல அக்னிக் குஞ்சுகளையும் ஒளிரச் செய்துள்ளோம் என்று பெருமையுடன் பறைசாற்றிக் கொள்ள இயலும் என்றே நம்புகிறோம். இதனை, ஒரு சிறு புள்ளி விபரத்தைப் பகிர்வதன் மூலம் வாசகர்களாகிய உங்களின் முடிவுக்கே விடுகிறோம்.

நான்கு ஆண்டுகளில் மொத்தமாக வெளி வந்துள்ள ஆக்கங்களின் எண்ணிக்கை 991; அதாவது, சராசரியாக ஒவ்வொரு மாதத்திலும் 20க்கும் மேற்பட்ட ஆக்கங்கள் வெளியாகி வந்துள்ளன. இவற்றில் கதைகளும், கட்டுரைகளும், கவிதைகளும் அடக்கம். இவற்றில் பாதி எங்களின் பத்து நபர்களைக் கொண்ட குழுவினரால் எழுதப்பட்டவை. இவை தவிர, இதுவரை நாற்பதுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்களின் ஆக்கங்கள் பனிப்பூக்களில் வெளியாகிவுள்ளன என்பதையும் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஏற்கனவே பனிப்பூக்கள் வாசகர்களுக்குத் தெரிந்த தகவலை இந்தப் பொழுதில் நினைவுபடுத்துவது சாலச் சிறந்ததாக இருக்கும் என்று கருதுவதால் மீண்டும் ஒருமுறை இதனைக் குறிப்பிடுகிறோம். பனிப்பூக்களில் வெளிவரும் அனைத்து ஆக்கங்களும், பனிப்பூக்களுக்காக மட்டுமே எழுதப்பட்டு, வேறு எங்கும் வெளியிடப்படாததாக இருத்தல் அவசியம். எங்களின் குழு இவற்றை உறுதிப்படுத்திய பின்னரே அவை வெளியிடப்படுகின்றன. நம் தாய்த் தமிழில், பல புதிய புதிய படைப்புகளையும் தொடர்ந்து தரவேண்டுமென்ற நல்ல நோக்கத்திலேயே இந்தக் கட்டுப்பாடு. இதனைப் புரிந்து கொண்டு, எங்களுக்குத் தொடர்ந்து தங்களின் படைப்புகளை அனுப்பிக் கொண்டிருக்கும் அனைத்து எழுத்தாளர்களுக்கும் எங்களின் சிரந்தாழ்ந்த நன்றியை உரித்தாக்குகிறோம்.

நான்கு ஆண்டுகளில், எங்களின் இணையதளம் நான்கரை லட்சம் முறை விஜயம் செய்யப்பட்டுள்ளது என்பதை நினைக்கையில், எங்களின் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. அந்தக் கணக்கில், மொத்தம் நாற்பத்தி ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட தனிப்பட்ட வாசகர்கள் என்று எங்களின் கண்காணிப்புச் சாதனம் தெரிவிக்கின்றது. உலகின் பல மூலைகளிலிருந்தும் தொடர்ந்து எங்களின் இணைய தளத்திற்கு மீண்டும் மீண்டும் வருகை தந்து, எங்களின் ஆக்கங்களைப் படித்து ரசிப்பவரின் எண்ணிக்கை நாற்பத்தி ஏழாயிரத்திற்கும் மேற்பட்டது. இதில் இந்தியா, அமெரிக்கா, கனடா, ஐரோப்பா மற்றும் இலங்கை முன்னிலை வகிப்பதாகப் புள்ளி விபரங்கள் கூறுகின்றன. இதனைத் தவிர, வருபவர்கள் எத்தனை நேரம் எந்தெந்தப் பக்கங்களில் செலவிடுகின்றனர், எவ்விதமான ஆங்கங்கள் வாசகர்களுக்குப் பிடித்துள்ளது எனப் பலவிதமான புள்ளி விவரங்களும் அறிந்த வண்ணம் உள்ளோம். இவற்றைத் தெரிந்து கொள்வதன் மூலம், எங்களின் ஆக்கங்களை வாசகர்களின் ஆர்வத்திற்கு ஏற்ப அமைப்பதே இதன் நோக்கம். இவை தவிர, வாசகர்கள் தங்களின் கருத்துக்களைப் பலவகையில் பின்னூட்டங்களாகப் பதிவு செய்து வந்து வண்ணமுள்ளனர், இது எதிர்காலத்திலும் தொடர வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கின்றோம்.

ஆக்கங்களைச் சமர்ப்பிக்கும் எழுத்தாளர்களும் ஆர்வமாய்ப் படித்துக் கருத்துக்களைப் பதிவு செய்யும் வாசகர்களும் இல்லாவிடின் எங்களால் இந்தப் பத்திரிகையை இதுவரைத் தொடர்ந்திருக்க இயலாது என்பது மறுக்க முடியாத உண்மை. நான்காவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் இந்த வேளையில் அவர்கள் அனைவருக்கும் எங்களின் இதயபூர்வமான நன்றியை உரித்தாக்குகிறோம். மேலும் பல முன்னேற்றங்களுடன், இன்னும் அதிக வாசகர்களைப் பெற்று, இதே தரத்துடன் தொடர்ந்து செயல்பட, கடவுளின் ஆசிகளையும், அனைவரின் வாழ்த்துக்களையும் வேண்டி நிற்கும்

–    பனிப்பூக்கள் குழு.

Tags: , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad