\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

உலகின் வாட்டர் பார்க் தலைநகரம் – விஸ்கான்சின் டெல்ஸ்

உலகின் வாட்டர் பார்க் தலைநகரம் என்று தங்களைப் பிரகடனப்படுத்திக் கொண்ட விஸ்கான்சின் டெல்ஸ், மினசோட்டாவில் இருந்து மூன்றரை மணி நேரப் பயணத் தூரத்தில் அமைந்துள்ளது. உள்ளூர் கேளிக்கை மையங்கள் போரடித்து விட்டால், வாரயிறுதிக்கு வண்டியெடுத்துக் கொண்டு கிளம்பி விடலாம். கோடையாக இருந்தாலும் சரி, குளிர் காலமாக இருந்தாலும் சரி, குடும்பத்துடன் குதூகலிக்கப் பல பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த ஊர் – விஸ்கான்சின் டெல்ஸ்.

இவ்வூருக்கு இப்பெயர் வந்தது 1931இல். அதற்கு முன்பு வரை, இது கில்போர்ன் சிட்டி (Kilbourn City) என்று அழைக்கப்பட்டு வந்தது. கில்போர்ன் சிட்டி வரை தெரிந்துகொண்ட நாம், கில்போர்ன் என்ற நபரைப் பற்றியும் தெரிந்துகொள்வோம்.

தற்காலத்தில் நம்மூர் எம்.எல்.ஏ.க்கள் செய்யும் தகிடுதத்தங்களுக்கு முன்னோடி இவர். நம்மூரில் அதிகாரத்தில் இருப்பவர், அவருக்குச் சொந்தமான இடத்தில் அரசு திட்டங்களை வலுகட்டாயமாகக் கொண்டு வந்து, தனிபட்ட ஆதாயம் காணும் செய்திகளைக் கடந்து வருகிறோம் இல்லையா? அது போன்ற நபர் இவர்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில், நில அளவையராக இருந்த இவர், கூடவே அரசியல் செல்வாக்குக் கொண்ட பணக்காரர். இன்று விஸ்கான்சின் டெல்ஸ் இருக்கும் இடத்திற்குக் கிழக்கே சில மைல் தொலைவில் இருக்கும் நியூபோர்ட் எனும் இடத்தில் விஸ்கான்சின் ஆற்றைக் கடக்கும் வகையில் ரயில் இருப்புப்பாதை அமைக்கத் திட்டம் இருந்தது. ஆனால், கில்போர்ன், தான் மலிவாக இடத்தை வாங்கி வைத்திருக்கும் இடத்திற்கு அந்தத் திட்டத்தைக் கொண்டு வந்தார். அந்த இடத்தைக் கில்போர்ன் சிட்டி என்ற நகரமாக உருவாக்கினார். இவரே, மில்வாக்கி நகரை உருவாக்கியவரும் கூட. பின்னாட்களில், நிர்வாகச் சீர்கேடு குற்றச்சாட்டுகளில் சிக்கி, தனது பெயரை இழந்து, நோயுற்று இறந்தார்.

இப்படி இவர் உருவாக்கிய இந்த ஊர், பொழுதுபோக்குக் கேந்திரமாக, பின்னாளில் உருவாகியது. மரங்களால் சூழ்ந்தச் சிறு பள்ளத்தாக்கை, ஆங்கிலத்தில் டெல்ஸ் (dells) என்றழைப்பார்கள். அது போன்ற இடம் என்பதால், இது விஸ்கான்சின் டெல்ஸ் ஆனது. இங்கிருக்கும் ஆற்றில் படகுச் சவாரி, ஆற்றில் நடக்கும் சாகச விளையாட்டுக் காட்சிகள் என மகிழ்வுக்கு அக்கம்பக்கத்தினர் இந்த ஊருக்கு  வந்தனர். வாட்டர் பார்க் என்றழைக்கப்படும் தண்ணீர் சார்ந்த விளையாட்டுகள் அமைந்த தீம் பார்க்குகள் நிறையத் தொடக்கப்பட்டன. தற்சமயம், இவை இவ்வூரின் அடையாளமாகிப் போயின.

இந்தத் தீம் பார்க்குகள், ஏராளமான அறைகளுடன் இங்கேயே தங்கும் வசதியுடன் அமைந்துள்ளன. தங்கும் விடுதியில் அறை எடுப்பவர்கள், இலவசமாக அங்கிருக்கும் தீம் பார்க்கில் விளையாடிக் கொள்ளலாம். இது பெரும் வர்த்தகமாக இவ்வூருக்கு அமைந்து விட்டது. அக்கம் பக்கத்து மாநிலங்கள் மட்டுமில்லாமல், தொலைதூர மாநிலங்களில் இருந்தும் இங்கே மக்கள் வந்து குவிகின்றனர்.

ஆனாலும், உள்ளூர் மக்கள் தொகையைப் பார்த்தோமானால், இது இன்னமும் சிறு ஊர்தான். போன நூற்றாண்டில் ஆயிரமாக இருந்த மக்கள்தொகை, இந்த நூற்றாண்டில் இரண்டாயிரமாகக் கூடியுள்ளது. அவ்வளவே.

கோடைக்காலத்தில் படகுச் சவாரி, குதிரைச் சவாரி, சாகச விளையாட்டுக்கள், தண்ணீர் விளையாட்டுகள் என வெளிப்புறப் பொழுதுப்போக்கு அம்சங்களும், குளிர்காலத்தில் அனுபவிப்பதற்கு உள்புற விளையாட்டு அரங்கங்களும், மியூசியம் போன்ற காட்சிச்சாலைகளும் ஏராளமாக உள்ளன. அதனால், எந்தக் காலத்தில் செல்வது என்ற குழப்பம் தேவையில்லை. குளிர்காலத்தில் எங்கே போவது என்று தவிக்கும் மத்திய மேற்கு மாகாணச் சுற்றுலா விரும்பிகள், யோசிக்காமல் இங்கே ஒரு விசிட் அடிக்கலாம்.

Kalahari, Mt. Olympus, Chula Vista, Noah’s Ark, Wilderness Territory, Wildwest எனப் பல தீம் பார்க்குகள் ஒரே ஊரில் அமைந்திருப்பதால், எது பிடித்திருக்கிறதோ அங்குச் சென்று பொழுதைக் கழிக்கலாம். குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அனைத்து வயதினரும் விளையாடுவதற்கான விளையாட்டுகள் இருப்பதால், குடும்பமாகவோ, நண்பர்கள் குழுவாகவோ எப்படிச் சென்றாலும் திருப்தி அளிக்கும். இது தவிர, திம்பவடி வனவுயிர் பூங்கா, விஸ்கான்சின் மான் பூங்கா ஆகிய வெளிப்புற இயற்கை சுற்றுலாத் தலங்களும் இங்கு இருக்கின்றன. Bennett studio, Tommy Bartlett Exploratory, Ripley’s Believe it or not போன்ற காட்சிச்சாலைகள் மியூசியம் விரும்பிகளைக் கவரும்.

உணவு ரசிகர்கள் சுவைப்பதற்கு இவ்வூருக்குப் புகழ்பெற்றுக் கொடுத்த விஸ்கான்சின் சீஸ் மற்றும் ஃபட்ஜ் எனப்படும் சாக்லேட் கூழ், இங்குப் பல இடங்களில் கிடைக்கின்றன. திருநெல்வேலியில் எப்படி எந்தப் பக்கம் பார்த்தாலும், இங்கு ஒரிஜினல் அல்வா கிடைக்கும் என்று எழுதி வைத்திருப்பார்களோ, அது போல் இங்கும் ஒரிஜினல் விஸ்கான்சின் சீஸ், ஃபட்ஜ் போர்டுகளைப் பல இடங்களில் காணலாம். எது உண்மையான ஒரிஜினல் என்று கண்டுபிடிப்பது உங்கள் திறமை.

ஆக, ஒரு வாரயிறுதில் சுற்றி வருவதற்கு ஏகப்பட்ட சங்கதிகள் இருக்கும் ஊர், விஸ்கான்சின் டெல்ஸ்.

  • சரவணகுமரன்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Rotating Banner with Links
ad banner
Bottom Sml Ad