\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

உங்கள் மின்னிணைய வரலாறு ஏலத்தில்

மின் வலயமானது அதன் ஆரம்பத்தில் சிற்சில  புத்திஜீவிகள், கணனித் தொழினுட்பவியலாளர்கள் குழுக்கள் தமது அறிவியல் தேவைக்காக அமைக்கப்பட்டது. மின் வலயம்  திறந்த மனப்பாங்குடன் கருத்துப் பரிமாறலையும் ஒருவர் தன்னிச்சையான கருத்துக்களைப் பரிமாறும் இடமாகவும் கருதப்பட்டது.  இந்தப் புரிந்துணர்வு பெருமளவில் தற்போது மாறிவிட்டது. இன்று நுகர்வோர் அந்தரங்கங்களைப் பகிரங்கமாக்குதல் ஆதாயமான விடயம். இந்த வர்த்தகக் குறிக்கோளை நோக்கி நுகர்வோரைப் பாதுகாக்கும் அமெரிக்கச் சட்டங்கள் பலவீனமாக்கப்பட்டு வருகின்றன.

தற்போதைய மின் இணையம் ஆக்கப்பூர்வமான படைப்பாளிகளுக்கு இடமல்ல; வெறும் நுகர்வோர் மையங்களே. இணையத்தின் நூற்றில் தொண்ணுற்றியொன்பது சதவீத படைப்புக்கள் நகல் பிரதிகளே. ஆயினும் வெவ்வேறு வகையில் நுகர்வோரைப் பொறி வைத்துப் பிடிக்கும் யுக்திச் சாதனங்களாக மாத்திரமே உள்ளன. மேலும் இன்று நாம்  பார்க்கும் ஒவ்வொரு சிறிய கைத்தொலைபேசி தொட்டு, தொலைகாட்சிப் பெட்டிகள் வரை அனைத்தும்  நிரந்தர மின் இணையத் தொடர்பை அடிப்படையாகக் கொண்டே இயங்குகின்றன. இந்த இணைப்புக்கள் யாவும் தனி ஐப்பி இலக்க (IP Number) முகவரியைக் கொண்டே தொழிற்படும். இந்த இணைப்பு முகவரி தாம் எம்மை மின்னிணைய வலயத்தில் கட்டி வைக்கும் பூட்டும், சாவியும் ஆகும்.

சரி இனி இதை வைத்து உங்களைப் பற்றிய தகவல்களை மாத்திரம் சேகரிக்கும் தரவு தகவல்  கோர்ப்பகத்தை (database) எண்ணிப் பாருங்கள்.

ஒவ்வொரு நுணுக்கமான உங்கள் விருப்பு, வெறுப்புக்கள், நீங்கள் பொருட்படுத்தாதவை, அதே சமயம் உங்கள் நீண்ட அந்தரங்க ஆசைகள், மனக்குறைகள் போன்றவை சேகரித்தல்; நீங்கள் விஜயம் செய்த தளங்களின்  மின்னிணைய  முகவரிகள்; நீங்கள் சற்று ஆத்திரத்துடன் சற்றுத் துச்சமாக, எதிர்த்து சமூக வலயங்களில் பதிவு செய்த கருத்துகள்; உங்கள் கைத்தொலைபேசி உபயோக முறைகள்; நீங்கள் வழக்கமாகப் போய் வரும் இடங்கள் (காப்பிக்கடை, பீஸ்ஸா, பேக்கரி, எரிபொருள் நிலயம், வேலைத் தலம் முதலியன); அமேசான் அலெக்ஸா, ஆப்பிள் சீரி மற்றும் கூகிள் ஹோம் போன்ற உபகரணங்களில் நீங்கள் பணித்தவை, பேசியவை – இவை யாவற்றையும் வேறு யாராவது படித்து,  ஒட்டுக்கேட்டு ஆராயாலாம் என்றால் நீங்கள் அதற்கு உடன்படுவீர்களா?

நுகர்வோர் உரிமையை நசுக்கும் மசோதா

நாம் யாவரும் அன்றாட வாழ்வில் அலைந்து கொண்டு இருக்கும் போது, எமது அந்தரங்கத்தைக் காக்கும் உரிமைச் சட்டத்தை அமெரிக்கக் காங்கிரஸ் சூழ்ச்சியாக ஒரு சிலர் ஆதாயத்திற்காகத் தூக்கி எறிந்துள்ளது. அதாவது நாம் மேலே குறிப்பிட்ட மின் வலய நுகர்வோர் அந்தரங்க மின் வலய சஞ்சர வரலாற்றையும் (Browsing history) உங்கள் தொலைபேசி, கேபிள் இணைப்பாளர்கள் உங்கள் அனுமதியின்றி பின்னணியில் ஏலத்தில் பேரம் பேசி விளம்பரத்தார், வர்த்தகதாபனங்களுக்கு விற்கலாம்.

இது உங்களைப் பற்றிய வருமானம், வயது, வாழ்விடம் போன்ற போன்ற குடியெடுப்புப் புள்ளிவிபரவியல் ( demographic) தகவல்கள் மாத்திரமல்ல உங்கள் மின் வலயக் குணாதிசயங்கள் (online behaviors, habits). இந்த நுகர்வோர் பற்றிய அந்தரங்க உளவு முறை தகவல் திரட்டலே மின் வலய தனிப்பட்ட விளம்பரங்களில் அத்திவாரம் எனலாம். இதன் காரணமாகவே அமேசான் (Amazon), வால்மார்ட்(Walmart), ரார் கெட்(Target), குறோகர் சந்தை(Kroeger) போன்ற வர்த்தக தாபனங்கள் வெற்றிகரமாகத் தொழிற்படுகின்றன.

வலயத்தின் வசீகர விளம்பரங்கள்

வர்த்தக விளம்பரமானது ஒரு சூசகமான வசியக்கலை. ஒரு விற்பனை தாபனம் எவ்வளவு ஊடுருவி உங்கள் அந்தரங்க ஆசைகளை, விருப்பு, வெறுப்புக்களை அறிந்து கொள்ள முடியுமோ அந்தளவுக்கு தமது விற்பனை விளம்பரங்களில் உங்கள் கரிசனையை,நாட்டத்தைப் பெற்றுக் கொள்ளலாம். குறிப்பாக மனோவியலில் எடுத்துப் பார்த்தால் நாம் ஒவ்வொருவரும் வலுக்கட்டாயமாக வரும், திணிக்கப்படும் தகவல்களை இயல்பாகவே எதிர்த்துத் தடுக்க முனைவோம். ஆயினும் எமது அந்தரங்க குணாதியங்களை அறிந்த விளம்பரத்தார் எமக்கு இயல்பாக வரும் தடை மனப்பாங்களை இலகுவாக முறியடித்து எமது நுகர்வை, தமது விளம்பர விற்பனையை ஊக்குவிக்கலாம்.

இது என்ன நம்மையும் சிறு குழந்தைகள் போல ஏமாற்றிவிட இவர்கள் நினைக்கிறார்களே என்ற யோசனையும் உங்களுக்குள் வரலாம். ஆயினும் சாதாரண நுகர்வோரை மின் இணையங்களில் முறியடிப்பது சாதாரண மனித விளம்பர விற்பனையாளர்கள் மாத்திரம் இல்லை.

தற்போது பாரிய செயற்கைப் புரிந்துணர்வு Artificial Inteligence கணனிகளும், அவற்றின் ஏந்திர அறிவியல் கணிப்புக்களும் நுகர்வோர் தகவல்களைத் தொடர்ந்து திரட்டி நுகர்வோர் பழக்க வழக்க மாற்றங்களை உடன் அறிந்து, அதன் படி விற்பனை யுக்திகளை மாற்றி பெரும் ஆதாயம் திரட்டும் வகையில் தொழிற்பட வழிவகுத்துள்ளது.

விற்பனை விளம்பரங்கள் மனிதர் கையில் மாத்திரம் இல்லை

இந்த நவீன விளம்பர, விற்பனை வழிமுறைகளில் மனித தொழிற்பாடுகள், அன்றாட பங்களிப்புக்கள் மிகவும் சொற்பமே. இன்று மின் வலய நுகர்வோர் ஆகிய நாம் வர்த்தக உலக விற்பனை மேடையில் நடிகர்களும் பார்வையாளர்களாகவும் நாமே இடம்பெறுகிறோம்.

பண்டைய காலத்து சினிமா, தொலைக்காட்சி சீரியல் சுவரொட்டிப் போஸ்டர்கள், பற்பசை விளம்பரம், கோல்ப் மைதான விளம்பரம் போன்ற வழக்கமான வெளி வர்த்தக விளம்பரப் பலகைகள், ஒலி, ஒளிபரப்பு பிரச்சாரங்கள் அவ்வளவு ஆதாயத்தைக் கொண்டு வருவது இல்லை. இன்று பார்வையாளர் தொலைக்காட்சிப் பெட்டிகளில் விளம்பரங்கள் பார்ப்பதே கிடையாது. நுகர்கோர் விளம்பரங்களை உடன் தவிர்க்கும்  யுக்திகள் பலதையும் கையாளுகிறார்கள்.

இதனால் விளம்பரக்காரர் அதி உக்கிர யுக்திகளைக் கைய்யாள முனைகின்றனர். எனவே வழக்கமான விளம்பரம் பார்த்தோர் தரவு தகவல் மாத்திரம் தற்போதைய வர்த்தகருக்குப் போதவில்லை. இதைவிட அதிக நுகர்வோர் பற்றிய உளவு தகவல்களைப் போட்டி போட்டு துருவித் துளைத்துப் பெற முனைந்தவாறுள்ளனர்.இன்று பலதரப்பட்ட நுகர்வோர் மின் இணைய, மற்றும் அவர்கள் வெவ்வேறு சஞ்சார தகவல்கள் அனைத்தும் உலகளாவிய வகையில் சேகரித்து, அவற்றிலிருந்து தங்களுக்குத்  தேவையான தகவலைப் பொறுக்கி எடுக்கும்  மென்பொருட்கள் பல உள்ளன.

இன்று பெரும் வர்த்தக தாபனங்கள், குறிப்பாகத் தொலை தொடர்பு, மின் வலய இணைப்புச் சேவை தாபனங்கள்  அரசியல் பிரச்சாரங்களுக்கும் பின்னணி அன்பளிப்புக்கள் மூலம் நுகர்வோரைப் பாதுகாக்கும் சட்டங்களை, அரசியல்வாதிகளின் உடந்தையுடன், பலயீனப்படுத்தி வருகின்றனர்.

புதிய சட்ட மாற்றங்கள் நிச்சயமாக அமெரிக்க நுகர்வோர் அந்தரங்கத்தகவல் பாதுகாப்புக்கு ஏமாற்றத்தைத் தரும் விடயமே. இதிலிருந்து மக்கள் விடுதலை பெற சில கை முறைகள் தனிப்பட்ட மின் இணைய சுதந்திரம் கருதும் கொள்கை வாதிகளால் உருவாக்கப் பட்டு வருகின்றது.

சில பரிகாரங்கள்

தனிப்பட்ட நுகர்வோர் மின் சஞ்சார வரலாற்றைக் குழப்ப தனிப்பட்ட செயற்கை – தொலையிணைப்புக்கள் (Virtual Private Network) சேவைகள் உள்ளன. இந்தச் சேவைகள்  உங்கள் கணணி, கைத்தொலைபேசி மின் வலய வரலாற்றை மறைத்து மாற்றி, பலரது சஞ்சார வரலாற்றுடன் கலந்து இத்தகவல்களைச் சேகரிப்பவர்களுக்கு பயனற்ற, பொய்த் தகவல்களாகமாற்றி விடுவர். இதற்கு உதாரணம் – vpn ruinmyhistory – போன்ற சேவை. இதைவிட அநாமதேய சேவைகளும் நுகர்வோர் சஞ்சர வரலாற்றை மறைக்க வல்லன.

மேலே உள்ள யுக்திகள் தொழினுட்பத்தில் வல்லவர்கள் கையாளினும் சாதாரண நுகர்வோர் அந்தரங்கன் இன்று பகிரங்கமே.

இன்று மின் வலயத்தில் சஞ்சரிக்கும் யாவரும், தமது சகல நடவடிக்கைகளும் நாம் மாதாமாதம் காசு கொடுத்து வாங்கும் தொலைத் தொடர்பு , கேபிள் கம்பனிகள் வசம் விற்பனைக்கு உள்ளது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். எமது தகவல் எமக்கே எதிராக விளம்பர , விற்பனை என்ற விதத்தில் வசூலிக்கப்படுவது கவலைக்கு உரிய விடயம்.

நுகர்வோர் உரிமை நமது கைய்யில் தான்

மேலும் இந்த நுகர்வோர் தகவல் கையாளல்களிலும் நேரடி, மற்றும் மறைமுக அபாயங்கள்  பலவுள்ளன. நுகர்வோர் விளம்பரக்காரர் கணனிகள் மேலும் சமூக துரோகிகளால் சூறையாடப்பட்டு பல சூழ்ச்சிகளுக்கும் பாவிக்கப்படலாம். நாம் யாவரும் எமது அந்தரங்க விடயங்கள் யாவற்றையும் தெரியாதவர்களுடன் பகிரத் தயாரில்லை என்பது உண்மை. ஆயினும் அந்தரங்கத் தகவல் பரிமாற்றத்தைப் பாதுகாக்கும் சட்டங்கள் வர்த்தகர் – அரசியல்வாதிகளை வைத்துப் பலயீனப் படுத்துவது தடுக்கப்படவேண்டும். நுகர்வோர் ஆகிய நாம் இதைப் புரிந்துணர்ந்து, சட்டரீதியல்  பரிகாரம் தேடிப் பெற்றுக் கொள்வது அவசியம்.

தொகுப்பு – ஊர்க்குருவி

உச்சாந்துணை:

  1. This activist is collecting money to buy senators’ browsing histories—and everyone is donating – Walter Einekel https://www.dailykos.com/story/2017/3/29/1648419/-This-activist-is-collecting-money-to-buy-senators-browsing-histories-and-everyone-is-donating
  2. Virtual assistant faceoff: Alexa, Cortana, Google Assistant and Siri
  3. https://www.cio.com/article/3127736/software/virtual-assistant-faceoff-alexa-cortana-google-assistant-and-siri.html
  4. State Laws Related Privacy
  5. https://www.ncsl.org/research/telecommunications-and-information-technology/state-laws-related-to-internet-privacy.asp

Tags: , , , , , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad