\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

தொழிலாளர் தினம்

வட அமெரிக்காவில் தொழிலாளர் இயக்கம் 1886, மே 1ஆம் திகதி தொடங்கப்பட்டது. ஒரு நாளைக்கு எட்டு மணிநேரம் மட்டுமே வேலை தரவேண்டும் எனக் கோரி வேலை நிறுத்தத்தில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். இதன்விளைவாகத் தொழிலாளர்களின் தினசரி வேலைநேர அளவு நிர்ணயிக்கப்பட்டது. இதன் பயனாக ஒருநாளில் எட்டு மணிநேரம் வேலை எட்டு மணிநேரம் பொழுதுபோக்கு மற்றும் எட்டு மணிநேரம் ஓய்வு ஆகியவற்றை வாதிட்டு வரையறுக்கப் பட்டது.

உலக சமவுடமையின் தந்தையான கார்ல் மார்க்ஸ் மற்றும் அவரது நண்பன் எங்கெல்ஸ் (Karl marx and Engels) அவர்களின் கம்யூனிஸ்ட் அறிக்கையில் கூறியுள்ளபடி “பாட்டாளி வர்க்கம் பிறந்தது முதலே முதலாளி வர்க்கத்துடன் போராட்டம் தொடங்கிவிடுகிறது’’. அதை மெய்ப்பிக்கும் விதமாக, முதலாளி களுக்கு அடிமையாய் உழைத்த தொழிலாளர்கள் வேலை நேரக் குறைப்புக்கான தங்களின் முதலாவது போராட்டத்தைத் தொடங்கினர்.

‘தொழிற்புரட்சி’ கண்ட இங்கிலாந்தில் தொழிலாளிகளின் நிலை மோசமானதாகவே இருந்தது. வயது வித்தியாசம், பால் வித்தியாசம் இல்லாமல் அனைவரும் 16, 18 மணி நேரம் உழைக்க வேண்டியிருந்தது. முதலாளித்துவ வர்க்கம் குழந்தைகளைக் கூட விட்டு வைக்காமல் வேலை வாங்கியது. இதை எதிர்த்து 1836இல் “சாசன இயக்கம்” என்ற இயக்கம் உருவாக்கப்பட்டு பிரித்தானியா முழுவதும் போராடி பின் உலகெங்கும் விரிந்தது.

பிரித்தானியா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா என உலகமெங்கும் தோற்றம் பெற்ற தொழிலாளர் இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் ஆங்காங்கே போராட்டங்களில் ஈடுபட்டனர். தொழிலாளர் வர்க்கப் போராட்டத்தில் இன  வேற்றுமை இருக்கக்கூடாது என்ற மார்க்ஸின் கொள்கைக்கிணங்க அமெரிக்கா முழுவதும் நாடு தழுவிய வேலை நிறுத்தங்கள் மே 1, 1886 அன்று பேரெழுச்சியோடு துவங்கியது. இதில் நியூயார்க், சிக்காகோ, மில்வாக்கி போன்ற முன்னணித் தொழில் நகரங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் 3,50,000 பேர் இணைந்து அமெரிக்கா முழுவதும் மாபெரும் வேலை நிறுத்தத்தைத்  தொடங்கினர். இவ்வேலை நிறுத்தத்தில் 1200க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் உள்ள தொழிலாளர்கள் பங்கெடுத்தனர்.

மே 3, 1886 அன்று நடந்த கூட்டத்தில் காவல்துறை கண்மூடித்தனமாகச் சுட்டதில் 4 தொழிலாளர்கள் பலியாயினர், 50க்கும் மேற்பட்டோர் காயத்திற்கு உள்ளாயினர். இந்தச் செய்தி நாடு முழுவதும் பரவியபோது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மே 4 இல் சிக்காகோ எழுச்சி நடைபெற்றதும் அதன் பின் புரட்சியில் ஈடுபட்ட சில தொழிலாளர் தலைவர்கள் கைது செய்யப் பட்டு தூக்கிலிடப்பட்டதும் அமெரிக்க வரலாற்றில் கருப்பு பக்கங்களாகப் பதியப்பட்டன.  

அமெரிக்கத் தொழிலாளர் கூட்டமைப்பின் கோரிக்கையான 8 மணிநேர வேலைக்காக அமெரிக்க எங்கும் தொழிலாளர்கள் பெரும் போராட்டம் தொடங்கிய நாள் மே 1 என்பதால் அந்த தினமே உலகத் தொழிலாளர் தினம் என்று முடிவு செய்யப்பட்டது. 1889 -இல் பாரிஸ் நகரில் சர்வதேசத் தொழிலாளர் மாநாடு நடைபெற்றது. 18 நாடுகளிலிருந்து 400 பிரதிநிதிகள் பங்கேற்றனர். இதில்தான் மேதினத் தேதி முடிவு செய்யப்பட்டது. இதில் பங்கேற்ற வர்கள் ஏங்கெல்ஸும், மற்றும் பல பிரபல சோஷலிஸ்ட் தலைவர்களும். மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி வேலை நேரப் போராட்டத்தை உலகெங்கும் முன்னெடுத்துச் செல்வதென இம் மாநாடு முடிவுசெய்தது.

உலகில் அதிகமான நாடுகள் தொழிலாளர் தினத்தை மே 1 அன்று கொண்டாடுகின்றன. இந்நாள், பிரபலமாக “மே தினம்” மற்றும் “சர்வதேச தொழிலாளர் நாள்” என்று அறியப்படுகின்றது. மே தினத்தின் வளர்ந்து வரும் போர்க்குண பாரம்பரியத்தை எதிர்க்கும் வகையில், செப்டம்பர் முதல் திங்கட்கிழமையை மே தினத்துக்கு பதிலான தொழிலாளர் தினமாக கொண்டாடுவதாக அமெரிக்க கூட்டமைப்பின் தலைவர்கள் ஊக்குவித்தனர். அதேபோல அமெரிக்கத் தொழிலாளர் கூட்டமைப்பு சேர்ந்து மே முதல் நாளை குழந்தைகள் நல தினமாக அறிவித்தது. சிக்காகோ புரட்சிக்கு 4 ஆண்டுகள் முன்னதாகவே அமெரிக்காவின் முதலாவது தொழிலாளர் தினம் செப்டெம்பர் 05, 1882 செவ்வாய் கிழமையில் கொண்டாடப்பட்டது. கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் செப்டம்பர் மாதத்தின் முதல் திங்கட்கிழமையில் தொழிலாளர் தினத்தைக் கொண்டாடுகின்றன.

வரலாறு சொல்லும் இந்த உண்மைகள் ஒருபுறம் இருக்கட்டும். தொழிலாளர் தினத்தைத் தொழிலாளர்களுக்காக உண்மையாகக் கொண்டாடத்தான் முடிகிறதா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். “ஐரோப்பிய மையவாதப் பார்வை” கொண்ட பலர் ஆலைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களை உன்னத போராட்ட குணம்கொண்ட மேன்மக்களாக சித்தரித்த அதே சமயம் மண் சார்ந்த, விவசாய மக்களைப் பிற்போக்கானவர்களாக கருதினர். இன்றும் அதிகார வர்க்கங்களால் அல்லது அதிகாரத்தில் இருப்பவர்களினால் விவசாய பெருமக்கள் அடக்கி ஒடுக்கப் படுகின்றனர். விவசாயிகள் தமது உற்பத்திக்கான சந்தைகள் தேடி அதிகார வர்க்கத்தையே அணுக வேண்டிய தேவை உள்ளது. இன்னும் சொல்லப் போனால் விவசாயிகளின் உற்பத்திப் பொருளுக்கான விலை நிர்ணயத்தைக்கூட அதிகார வர்க்கமே தீர்மானிக்கின்றது.

ஐக்கிய நாடுகளின் குழந்தைத் தொழிலாளர் சட்ட 32வது விதிப்படி 16 வயது நிறைவு பெறுவதற்கு முன்பாக குழந்தைகளைப் பணியில் அமர்த்தக்கூடாது என்பதுடன், பெற்றோரின் சம்மதமில்லாமல் வேலைக்கு அனுமதிக்கக்கூடாது என்பதும் உள்ளடக்கப் பட்டுள்ளது. யுனிசெப்அறிக்கையின் படி உலகம் முழுவதிலும் 5 முதல் 14 வயதுக்குட்பட்ட, 158 மில்லியன் சிறுவர், சிறுமிகள் வீட்டு வேலைத் தவிர பிற வேலைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இந்தியா மற்றும் பங்களாதேசம் ஆகிய நாடுகள் குழந்தைத் தொழிலாளர்களைப்  பணிக்கமர்த்துவதில் முன்னணியில் உள்ளன. சிஏசிஎல் (CACL) மதிப்பீட்டின் படி இந்தியாவில் மட்டும் 70 முதல் 80 மில்லியன் குழந்தைத் தொழிலாளர்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகளின் ஓர் அங்கமான பன்னாட்டு தொழிலாளர் அமைப்பினால் (ஐ.எல்.ஓ) அங்கீகரிக்கப்பட்ட இந்த நாள் குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த 2002ம் ஆண்டு முதல் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாள் (World Day Against Child Labour) உலகம் முழுவதும் ஆண்டுதோறும் சூன் 12 ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.

இவ்வாறு நேரடியாகவும் மறைமுகமாகவும் குழந்தைகள், விவசாயிகள் உட்பட பல்வேறு பட்ட தொழில் செய்வோரும் பாதிப்படைவதனால்தான் பலர் தொழிலாளர் தினத்தை கொண்டாடப் பின் நிற்கிறார்கள். ஆனால், தொழிலாளர்களுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டாமா? அவர்கள் ஒரு தேசத்தின் முதுகெலும்பு இல்லையா? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. ஆம், தொழிலாளர்கள் நன்றி சொல்லப்பட வேண்டியவர்கள் தான் ஆனால், நகரம் – கிராமம், ஏழை – பணக்காரன், முதலாளி – தொழிலாளி, உடல் உழைப்பு – மூளை உழைப்பு, விவசாயத் தொழிலாளி – ஆலைத் தொழிலாளி என்று பாகுபடாமல், இயற்கையும் மானுடமும் இணைந்து பணியாற்றும் ஒரு தினமாக அது கொண்டாடப்பட வேண்டும் என்பதே பலரது கருத்தாக உள்ளது.

-ஊர்க்காரன் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad