\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

பாகுபலி – The Conclusion

பாகுபலி வழக்கமான இந்தியச் சினிமா அல்ல என்பது நிச்சயம். பல ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் அதிசயம். பல ஆண்டுகளைத் தாண்டியும் பேசப்படப் போகும் படம். பேருழைப்பு தாங்கிய அசாதாரண வணிகச் சினிமா. இந்தியப் புராண அம்சங்களைக் கமர்ஷியலாகச் சொல்லத் துணிந்த கதை.

மிகுந்த பொருட்செலவில், பலரது கடும் உழைப்பில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு, மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. முதல் பாகத்தின் இறுதியில் எழுப்பப்பட்ட கேள்வியான “கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார்?” இப்படி எதிர்பார்ப்பு எழுப்ப நன்றாகவே உதவியது. இக்கேள்வி சமூக வலைத்தளங்களில் ஒரு வைரல் பண்புடன் பரப்பப்பட்டது. முதல் பாகத்தின் பிரமாண்ட வெற்றி, படக் குழுவினரின் சாமர்த்தியமான மார்க்கெட்டிங், படத்தை வாங்கி வெளியிட்டவர்களின் புது வகையான வர்த்தக முயற்சிகள், படத்திற்கு எதிரான போராட்டங்கள், வழக்குகள் என இப்படம் மீதான எதிர்பார்ப்பு கூடிக்கொண்டேயிருந்தது.

பொதுவாக, இவ்வகையான எதிர்பார்ப்புகளைப் பூர்த்திச் செய்வது கடினம். ஆனால், முதல் சில தினங்களில் படம் பார்த்த அனைவரும் திருப்தி கொண்டதாகக் கூறினர். குறை கூறும் வண்ணம் படம் இல்லையென்றாலும், ரசிக மனம் குறித்து ஒன்றைக் கூறியாக வேண்டும். பொதுவாக, நாம் எதிர்பார்க்கும் எந்தப் படம் குறித்தும் நமக்குள் பலவிதக் கற்பனைகள் எழும். இப்படி இருக்குமோ, அப்படி இருக்குமோ என நாமாக நமக்குள் ஒரு படம் ஓட்டிப் பார்ப்போம். முதல் நாளே பார்க்கத் துடிக்கும். டிக்கெட் விலை எவ்வளவு என்றாலும், அதற்கெனச் செலவழிக்க முடிவெடுப்போம். இப்படி முதல் நாளே படத்தைப் பார்க்கும் போது, நமது கற்பனைகளோடு  மட்டும் ஒப்பிட்டு பார்ப்போம். படத்தைப் பற்றி மற்றவர்கள் கூறக் கேட்டிருக்க மாட்டோம்.

நமது கற்பனை செய்திருந்த அளவுக்கு , இயக்குனர் முயன்றிருந்தால் மகிழ்வோம். அதைத் தாண்டிப் போய்விட்டார் என்றால் கொண்டாடத் தொடங்கி விடுவோம். இதற்கு மேல், முதல் நாள் பார்க்க கணிசமாகச் செலவு செய்திருந்தோமானால் (அமெரிக்காவில் டிக்கெட் விலை – $35), படத்திற்குப் பங்குதாரராகி இலவச மார்க்கெட்டிங்கும் செய்யத் தொடங்கி விடுவோம். முதல் நாள் படம் பார்த்த பெருமையும் இதனுடன் சேர்ந்து கொள்ளும். பாகுபலியின் வெற்றிகரமான மவுத் – டாக்கிற்குப் பின்னால் இவ்வளவு இருக்கின்றன.

பாகுபலி கதை எழுதும் போதே, இரண்டு பாகங்களாக எழுதப்பட்ட கதையல்ல. முதல் பாக படப்பிடிப்பின் போது, இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஒரு முடிவும் அதனுடன் ஒரு தொடரும் கேள்வியை வைத்து, இரண்டு பாகங்களாகப் பிரித்தது இயக்குனருக்கும், தயாரிப்பாளருக்கும் வெற்றிகரமாக அமைந்துள்ளது. குறை என்னவென்றால், தனியாக ஒரு பாகத்தை மட்டும் பார்த்தால் ஒரு முழுமை இருக்கப் போவதில்லை.

கதை, நமது புராணங்களிலும், பிற மசாலாப் படங்களிலும் ஆண்டாண்டு காலமாகக் கேட்டு, பார்த்த கதைதான். ஆனால், அதைப் பிரமாண்டமாகக் கற்பனை செய்து, கணினி வரைகலையில் அந்த உலகைச் சிருஷ்டித்து, நம் கண் முன்னே அந்தக் கதாபாத்திரங்களை ரத்தமும், சதையுமாக உலவவிட்டிருப்பதில் இயக்குனர் ராஜமெளலி முழு வெற்றிப் பெற்றிருக்கிறார். அடுத்ததாக, கதாபாத்திரங்களுக்கான நடிகர் தேர்வு . மிகப் பொருத்தமான நடிகர்களைத் தேர்வு செய்து, அவர்களிடம் இருந்து மிகச் சிறந்த நடிப்பினைப் பெற்றிருக்கிறார்.

பாகுபலியாக ராஜ குடும்பக் கதாபாத்திரத்தில்

ஒரு ராஜாவின் மிடுக்குடன் நடித்திருக்கிறார் பிரபாஸ். இது அவருடைய வாழ்நாளுக்கான திரைப்படம். தனது நடிப்புலக வாழ்வின் ஐந்து வருடங்களை இப்படத்திற்கு அர்பணித்திருக்கிறார். ஒரு புது வகை இதிகாச சூப்பர் ஹீரோ கேரக்டரில், கிடைத்த வாய்ப்பில் தனது முழுமையான பங்களிப்பை அளித்திருக்கிறார். ஜோதா அக்பர் படத்தில் ஹிரித்திக் ரோஷனைப் பார்க்கும் போது, நடை, பாவனை என எல்லாவற்றிலும் ஒரு ராஜாவுக்கான கம்பீரம், பக்குவம் இருக்கும். இதிலும் பிரபாஸ் அது போல் பாகுபலி என்னும் ராஜ கதாபாத்திரத்திற்கு உயிரூட்டியிருக்கிறார்.

இப்படத்தில் பெண் கதாபாத்திரங்களை எல்லாம் மிகுந்த தன்மானம் மிக்கவர்களாக, வீரமிக்கவர்களாக, சுய முடிவு எடுப்பவர்களாக அமைத்திருக்கிறார் ராஜமெளலி. ரம்யா கிருஷ்ணன், அனுஷ்கா ஆகியோரின் கதாபாத்திரக் குணாதிசயங்கள் படத்தின் தன்மையை உயரத் தூக்கி பிடிக்கிறது. ஒவ்வொரு முறையும், “இதுவே என் முடிவு, இதுவே என் சாசனம்“ எனும் போது, நாமும் சேர்ந்து அச்சொற்களுக்குக் கட்டுப்படுகிறோம். அதே போல், ராணி சிவகாமியின் கைது உத்தரவை ஏற்றுக் கொள்ளாமல் தன்மானத்துடன் பேசும் போதும், தளபதியின் கை விரல்களை வெட்டி விட்டு மிடுக்குடன் அரசவையில் நிற்கும் போதும், தேவசேனா கதாபாத்திரத்திற்கு உரிய நியாயம் செய்திருக்கிறார் அனுஷ்கா. முதல் பாகத்தில் படம் முழுக்க வந்த தமன்னாவிற்கு இதில் அதிகம் வேலை இல்லை. முதல் பாகத்தில், அவருடைய கதாபாத்திரமும் வீரமுடன், கொள்கைப் பிடிப்புடன் அமைந்திருந்ததை நினைவு கூறலாம். பெண்களை இவ்வளவு சிறப்பாகக் காட்டிய கமர்ஷியல் திரைப்படங்களில் பாகுபலிக்கு முக்கிய இடம் உண்டு.

இப்படத்தின் அடுத்த பலம் – படத்தின் கதையைச் சில கதாபாத்திரங்களைச் சுற்றி மட்டும் அமைக்காமல், ராணா, சத்யராஜ், நாசர் மற்றும் படத்தில் சில காட்சிகள் மட்டும் வரும் நடிகர்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்துக் காட்சிகள் அமைத்திருப்பது. எதிர்மறை கதாபாத்திரம் என்றாலும், பல்லாள தேவனாகப் பாகுபலியை விடப் பலம் கொண்டவனாக ராணா சித்தரிக்கப்பட்டிருக்கிறார். கட்டப்பாவாகப் படம் முழுக்க வருகிறார் சத்யராஜ். அவர் கதாநாயகனாக நடித்துக்கொண்டிருந்த காலக்கட்டத்தில் வாங்கிய சம்பளத்தை விட, இப்படத்தில் அதிகம் வாங்கியிருப்பதாக அவரே கூறியிருப்பது போல், அவருக்கு முன்பை விட முக்கியத்துவம் வாய்ந்த திரைப்படங்கள் தற்சமயம் அமைகிறது. செண்டிமெண்ட், ஆக்ஷன், காமெடி என்று படம் முழுக்கப் பலவகை நடிப்பைக் காட்டும் வாய்ப்பு, இப்படத்தில் சத்யராஜுக்குக் கிடைத்துள்ளது. இப்படிப் படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொரு நடிகர்களும், தங்களது சிறப்பான நடிப்பை இப்படத்தில் அளித்திருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்குமே, அவர்களது திரையுலக வாழ்வில், பாகுபலி முக்கியப் படமாக இருக்கும்.

படத்தின் கதையை எழுதியிருப்பவர் – விஜயேந்திர பிரசாத். ராஜமௌலியின் தந்தையான இவரது கதைகளைத் தான், ராஜமௌலி தொடர்ந்து படமாக்கி வெற்றிப்பெற்று வருகிறார். இந்திய இதிகாசங்களில் இருக்கும் சிறுசிறு கருக்களை அங்கொன்றும், இங்கொன்றுமாகக் கோர்த்து உருவாக்கப்பட்டிருக்கும் இக்கதையை, ராஜமௌலி வணிகச் சினிமாவுக்கான திரைக்கதையில் மேலும் அழகாக வார்த்தெடுத்திருக்கிறார். முக்கியமாக, போர் தந்திரக் காட்சிகளை, மிகவும் சுவாரஸ்யமான முறையில் அமைத்திருக்கிறார். ராஜமௌலியின் படங்களில் ஒரு காட்சியிலாவது, ரசிகர்களைப் படத்துடன் ஒன்ற வைத்து, மெது மெதுவாக ஒரு உச்சக்கட்டத்திற்குக் கொண்டு சென்று, முடிவில் புல்லரிக்க வைக்கும் ஒரு திருப்தியைக் கொடுப்பார். அப்படியான காட்சிகள், பாகுபலியில் பல உள்ளன.

இசை அமைத்திருப்பது, ராஜமௌலியின் ஆஸ்தான இசையமைப்பாளர் கீரவாணி. ராஜமௌலியின் நெருங்கிய உறவினர். தமிழில் மரகதமணி என்ற பெயரில் பல படங்களுக்கு இசையமைத்திருக்கும் இவர், தனது வழக்கமான வகை தேனிசைப் பாடல்களை இப்படத்திலும் அளித்திருக்கிறார். படத்துடன் பார்க்கும் போது, இப்பாடல்கள் நன்றாக இருக்கிறது. பின்னணி இசையும், ஒளிப்பதிவும், படத்தின் பிரமாண்டத்தை இன்னமும் நன்றாகத் தூக்கி நிறுத்துகின்றன. செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஆர்ட் டைரக்ஷனைக் கவனித்திருப்பது, சாபு சிரிலும், மனு ஜெகத்தும். படத்தின் கணினி வரைகலையை, பார்ப்போர் அனைவரும் புகழும் வகையில் செய்திருப்பது, மகுதா என்னும் நிறுவனம். இயக்குனரின் கற்பனையில் இருந்த அனைத்தையும், திரையில் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். படத்தின் முக்கியக் காட்சிகளான போர்க்காட்சிகளை ராஜமௌலி வடிவமைக்க, அதற்கு ஆக்ஷன் காட்சிகள் அமைத்திருப்பது பீட்டர் ஹெயின். பாகுபலியும், தேவசேனாவும் ஒரு நடனத்திற்கான நளினத்துடன் வில்விட்டுப் போரிடும் காட்சியையும் குறிப்பிடலாம். இப்படிப் படத்திற்குப் பின்னும் பல சிறந்த கலைஞர்கள் பணியாற்றியிருக்கிறார்.

படத்தில் லாஜிக் குறைகள், டப்பிங் குறைகள் இருந்தாலும், அதையெல்லாம் தூக்கி ஓரத்தில் வைத்துவிட்டு, இது ஒரு ஃபேண்டஸி படம் என்ற கணக்கில், படம் பார்ப்பவர்கள் சில மணி நேரங்கள் வேறு ஒரு உலகிற்குச் சென்று வரும் அனுபவத்தைப் பெறலாம். இந்திய சினிமாவுக்கான சாத்தியங்களை, அவ்வப்போது வெளிவரும் சில படங்கள் காட்டும். இது பாகுபலி முறை. இதன் மூலம், இந்திய சினிமாவில், திரை தொழில்நுட்பத்தில், வர்த்தகத்தில் என்னவெல்லாம் செய்து காட்டலாம் என்று இந்தக் குழு காட்டியிருக்கிறது. இது மேலும் பல மடங்கு முன் கொண்டு செல்லப்படும் என நம்பலாம்.

பாகுபலி – பலத்தைக் காட்டியிருக்கிறான்.

  • சரவணகுமரன்

 

Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad