மால் ஆஃப் அமெரிக்கா
மினசோட்டாவின் பெருமைகளில் ஒன்றான மால் ஆஃப் அமெரிக்காவிற்கு இது வெள்ளி விழா ஆண்டு. அப்படியென்ன பெருமை என்றால், அமெரிக்காவின் மிகப் பெரிய அங்காடி வளாகம் என்ற பெயரைக் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாகச் சூடிக் கொண்டு நிற்கிறதே.
மினியாபொலிஸ் வாசிகளுக்கு இந்த மால் மேல் எந்தளவு க்ரேஸ் இருக்கிறதோ தெரியாது, இங்கு வரும் வெளியூர் விருந்தினர்களுக்கு இதன் மேல் பெரும் ஆர்வம் இருக்கும். மினியாபொலிஸில் பார்க்க வேண்டிய இடங்கள் என்னும் லிஸ்டில் இது கண்டிப்பாக இருக்கும். இதன் முக்கியச் சிறப்பம்சம், இந்த மாலின் நடுவே இருக்கும் நிக்கலோடியன் யூனிவர்ஸ் (Nickelodeon Universe) உள்ளரங்குக் கேளிக்கைப் பூங்கா.
குழந்தைகளைக் கவரும் கேளிக்கை விளையாட்டுப் பூங்கா இது. உள்ளரங்கில் இருப்பதால், மழை, வெயில், பனி என்று எவ்விதத் தடங்கலும் இல்லாமல், வருடம் முழுக்கச் சென்று விளையாடுவதற்கு ஏற்ற இடம் இது. குளிர்காலத்தில் வெளியே எங்கே செல்வது என்று குழப்பமில்லாமல், ஒருநாள் முழுக்க நேரத்தைக் கழிப்பதற்கு, இவ்விடம் உதவும். இந்த மால் வளாகத்திற்குள்ளோ அல்லது இந்த விளையாட்டுத் திடலுக்கோ நுழைய எந்தக் கட்டணமும் இல்லை. விளையாடுவதற்குத் தனித்தனியாக டிக்கெட்டோ, அல்லது ஒருநாள் முழுக்க அனுமதி அளிக்கும் கை வளையமோ (Wristband) வாங்கிக்கொண்டு செல்லலாம். ஒருநாள் அனுமதி வாங்கினால், எதில் வேண்டுமானாலும், எவ்வளவு முறை வேண்டுமானாலும் விளையாடிக் கொள்ளலாம். அங்கு சென்று வாங்குவதை விட, இணையத்தில் வாங்கினால் கொஞ்சம் சீப்பாகக் கிடைக்கும். அதைவிட மலிவாகக் காஸ்கோவில் (Costco) கிடைக்கும்.
இங்கு குழந்தைகளைக் கவரும் மற்றொரு இடம் – சீ லைஃப் அக்வாரியம் (SeaLife Aquarium). இது ஒரு கடல்வாழ் உயிரினங்களின் அழகிய கண்காட்சிச் சாலை. நட்சத்திர மீன், கடல் குதிரை போன்ற காண்பதற்கு அரிய உயிரினங்களை இங்குக் காணலாம். நட்சத்திர மீன் போன்றவற்றைத் தொட்டுக் கூடப் பார்ப்பதற்கு வாய்ப்புக் கொடுப்பார்கள். இங்குக் கடலுக்கு அடியில் மீன்களுடன் சேர்ந்து நடக்கும் உணர்வை அளிக்கும் கடல் சுரங்கப்பாதை (Ocean Tunnel) பார்வையாளர்களைக் கவரும். இந்த இடத்தில் இரவு முழுக்க விட்டத்தில் மீன்கள் அங்குமிங்கும் சென்று வருவதைப் பார்த்துக் கொண்டே, ஒரு குழுவாக உறங்குவதற்குத் திட்டம் வைத்திருக்கிறார்கள். கடலுக்கு அடியில் தூங்க முடியுமா என்று யோசிப்பவர்கள், இதை முயற்சித்துப் பார்க்கலாம்.
மால் ஆஃப் அமெரிக்காவில் இவை சிறார்களைக் கவரும் அம்சம் என்றால், பெண்களைக் கவரும் அம்சமாகப் பல கடைகள் உள்ளன. மொத்தம் ஐநூறுக்கும் மேற்பட்ட கடைகள். பரப்பளவில் மட்டுமல்ல, கடைகளின் எண்ணிக்கையிலும், அமெரிக்காவின் பெரிய மால் இது தான். மேசிஸ், சியர்ஸ், நார்ட்ஸ்ராம், மார்ஷல்ஸ், ஓல்ட் நேவி, ஃபாரெவர் 21 முதலிய பெரிய உடை அலங்கார மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களுக்குமான கடைகளும், ஆப்பிள், மைக்ரோசாஃப்ட், பெஸ்ட் பை போன்ற தொழில்நுட்பக் கடைகளும் இங்கே அமைந்துள்ளன. ஒரு பக்கம் பெண்களையும், மறுபக்கம் குழந்தைகளையும் அனுப்பிவிட்டுவிட்டு, ஆண்கள் இன்னொரு பக்கம் வருவோர் போவோரைப் பராக்குப் பார்க்கலாம்!!
திருமணம் செய்யும் திட்டம் உள்ளவர்கள், இங்கிருக்கும் காதல் தேவாலயத்தை (Chapel of Love) ஒரு முறை சென்று பார்க்கவும். இது வரை இங்கு 7500 க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடந்துள்ளன. திருமணத்திற்குத் தேவையான உடைகளும் பிற பொருட்களும் இங்கே கிடைக்கின்றன. திருமணம் ஆன பின்பு, எப்படியும் குழந்தை குட்டியோடு இங்கு அடிக்கடி வர வேண்டி இருக்கும். அப்படி வரும்போது, இந்த நிலைக்குக் காரணமான நிகழ்வு இங்குதான் நடந்தது என்பதை மகிழ்வாகவோ, அல்லது அவரவர் நிலைக்கு ஏற்பவோ நினைவு படுத்திக் கொள்ளலாம்!!
இன்று மால் ஆஃப் அமெரிக்கா இருக்கும் இடத்தில் தான், 1956 இல் இருந்து 1981 வரை மெட்ரோபாலிடன் ஸ்டேடியம் என்ற விளையாட்டு மைதானம் இருந்தது. 1986 இல் இந்த இடத்தை வாங்கிய கெர்மேசியன் (Germezian) என்ற நிறுவனம், 1989 இல் கட்டுமானப் பணியைத் தொடங்கியது. 1992 இல் கட்டுமானப் பணி நிறைவுற்று, இந்த மால் திறக்கப்பட்டது. திறந்த சமயத்தில் இருந்தே, இதுதான் அமெரிக்காவின் பெரிய ஷாப்பிங் மால். இன்றும் இதுவே அமெரிக்காவின் பெரிய ஷாப்பிங் மால். வட அமெரிக்கக் கண்டம் என்று எடுத்துக் கொண்டால், கனடாவில் இருக்கும் வெஸ்ட் எட்மான்டன் மால் (West Edmonton Mall) தான் பெரியது. அதன் உரிமையாளர்கள் தான், இதைக் கட்டியவர்களும் கூட. முன்பு இங்கு இருந்த ஸ்டேடியத்தின் ஞாபகமார்த்தமாக, அங்கிருந்த ஸ்டேடியத்தின் பெயர் பொறித்த சட்டகத்தினை இங்குத் தரையில் பதித்து வைத்திருக்கிறார்கள். அங்கிருந்த நாற்காலி ஒன்றையும் இங்குள்ள ஒரு சுவரில் மாட்டி வைத்திருக்கிறார்கள்.
மால் ஆஃப் அமெரிக்கா கட்டிடத்தில் மொத்தம் நான்கு தளங்கள் உள்ளன. முதல் தளமான தரைத்தளத்தில் ஏற்கனவே நாம் குறிப்பிட்ட நிக்கலோடியன் யூனிவர்ஸ் விளையாட்டு அரங்கமும், சுற்றிலும் நான்கு பக்கமும் கடைகளும் உள்ளன. இங்கிருக்கும் லெகோ (Lego) கடையில் சிறுவர்கள் உட்கார்ந்து லெகோ விளையாட்டுப் பொருட்கள் கொண்டு விளையாடுவதற்கு வசதி செய்து கொடுத்திருக்கிறார்கள். ஹார்ட் ராக், க்ரேவ் ஆகிய உணவகங்கள் தரைத்தளத்தில் உள்ளன.
இரண்டாம் தளத்தில், ஓக்லே ஸ்டோர், ஸ்கெட்சர்ஸ், அவேடா, சன்க்ளாஸ் ஹட் போன்ற ஆடை, அணிகலன்களுக்கான கடைகள் உள்ளன. மேசிஸ், சியர்ஸ் போன்ற பெரும் நிறுவனங்களின் பேரங்காடிகள் பல தளங்களுக்குப் பரந்து இருக்கின்றன.
மூன்றாவது தளம், உணவுக்கான தளம். பலவித சாப்பாட்டுக் கடைகள் இருக்கின்றன. பஃபலோ வைல்ட் விங்க்ஸ், கிரேவ், ரெயின் பாரஸ்ட் கபே போன்ற சாவகாச உணவகங்களும், சிப்போட்லே, பர்கர் கிங், நூடுல்ஸ் & கம்பெனி உள்ளிட்ட துரித உணவகங்களும் பல இங்குக் கடை விரித்திருக்கிறார்கள். முன்பே சொன்னது போல், ஒருநாள் முழுக்க இருந்து, விதவிதமாகச் சாப்பிட்டு விட்டுச் செல்லலாம். மற்றபடி, நடக்கும் வழியெங்கும் அனைத்து தளங்களிலுமே, கரிபோ, ஸ்டார் பக்ஸ் போன்ற காபிக்கடைகள் இருக்கின்றன.
நான்காவது, ஸ்மாஷ் என்ற விர்சுவல் ரியாலிட்டி விளையாட்டு அரங்கம். இந்திய பூர்வீகத்தைக் கொண்ட நிறுவனம். மற்ற தளங்களை ஒப்பிடுகையில், இங்கு நான்காவது தளம் கொஞ்சம் குறைந்த ஜன நடமாட்டத்துடன் தான் இருக்கும். முன்பு, சில தியேட்டர்கள் இருந்தன. இப்போது அவை மூடப்பட்டு, விளையாட்டுத் தளமும், சில உணவகங்கள் மட்டுமே உள்ளன. மக்கள் அதிகம் சுற்றிக் கொண்டு இருப்பது, முதல் தளத்திலும், மூன்றாம் தளத்திலும் தான். பறக்கும் அனுபவம் (Flyover America), வண்ண அனுபவம் (Crayalo Experience), ஒளி அனுபவம் (Universe of Light) என இன்னும் பார்க்க இங்கு இருக்கின்றன. விருப்பத்திற்கேற்ப ஒரு ரவுண்ட் சென்று வரலாம்.
இந்த மால் ஊரில் சரியான இடத்தில் அமைந்திருக்கிறது எனக் கூறலாம். மினியாபொலிஸிற்குத் தெற்கே இருக்கும் ப்ளுமிங்டன் பகுதியில் இந்த மால் இருக்கிறது. மினியாபொலிஸ் டவுண்டவுன், செயின்ட் பால் டவுண்டவுன் இரண்டுக்குமே சம தொலைவில் அமைந்துள்ளது. இதற்கெனத் தனியாகவே பகுதி இலக்க எண் (Zip Code) தபால் துறையால் அளிக்கப்பட்டிருப்பதாகக் கூறுவர்கள். ஆனால், அது அப்படியல்ல. இந்த எண்ணில் அருகே இருக்கும் பிற பகுதிகளும் அடக்கம். நகருக்குள்ளேயே இந்த மால் இருப்பதால், சென்று வருவது சுலபம். பஸ் வசதி, ரயில் வசதி இரண்டும் உள்ளன. பக்கத்தில் தான் ஏர்போர்ட் என்பதால், ப்ளைட்டில் வந்து கூட இறங்கலாம். டவுன்டவுனில் இருந்தும், ஏர்போர்ட்டில் இருந்தும், மாலுக்கு நேரடியாகச் செல்ல ரயில் இருக்கிறது. இவையனைத்திற்கும் மேல், காரில் சென்றால் பார்க் செய்வதற்கு 12000+ இடங்கள் உள்ளன. பார்க் செய்த தளம் மறந்து விடக் கூடாது என்பதற்காக, ஒவ்வொரு தளத்திற்கு ஒவ்வொரு அமெரிக்க மாகாணத்தின் பெயரைச் சூட்டியுள்ளார்கள்.
மால் ஆஃப் அமெரிக்காவிற்குப் பக்கத்தில் தான் ஐக்கியாயும் (IKEA), வாட்டர் பார்க் ஆஃப் அமெரிக்காவும் (Water Park of America) அமைந்துள்ளன. தற்சமயம், வாட்டர் பார்க் ஆஃப் அமெரிக்கா சீரமைப்பு வேலைகளுக்காக மூடப்பட்டுள்ளது. ஒரே மாதிரி பெயர் இருந்தாலும், இதற்கும் மால் ஆஃப் அமெரிக்காவிற்கும் எந்தச் சம்பந்தமுமில்லை.
ஒவ்வொரு ஊரிலும் ஆங்கிலப் புத்தாண்டுக்கு மக்கள் ஏதேனும் இடத்தில் ஒன்று சேர்ந்துக் கொண்டாடுவது உலக மரபாகிவிட்டது. புத்தாண்டு சமயம் குளிர் உச்சத்தில் இருப்பதால், மினசோட்டாவாசிகளுக்குத் திறந்த வெளியில் புத்தாண்டு கொண்டாடுவது சிரமமான விஷயம். வருடத்தின் முதல் நாளிலேயே அவ்வளவு சிரமத்தை அனுபவிக்கக் கூடாதல்லவா? அதனால் மக்கள் பெரும் திரளாக இந்த மாலுக்குப் படையெடுத்து விடுவார்கள். வருட இறுதி நாளின் மாலையில் இருந்தே சேரத் தொடங்கும் கூட்டம், நடுராத்திரி வரை இங்கேயே உலாவுவார்கள். விளையாடுவார்கள். உண்பார்கள். பனிரெண்டு மணிக்கு முன்பாக மாலின் மத்திய பகுதி ஒன்றில் கவுண்ட் டவுன் தொடங்கப்பட்டு மின்னணுப் பலகையில் ஒளிரத் தொடங்க, மக்கள் அனைவரும் இங்கு சங்கமிக்கத் தொடங்குவார்கள். பனிரெண்டு மணிக்குக் கவுண்ட் டவுன் இறுதியில் பலமான இசைச் சத்தத்துடன் மக்கள் ஆரவாரத்துடன் ஆடத் தொடங்குவார்கள். அப்படியே அரை மணி நேரம் கூட்ட நெரிசலில் ஆடிக் களைத்து, உறங்க வீட்டிற்குக் கலைந்துச் செல்வார்கள்.
இப்படி மினசோட்டாவாசிகள் பலரின் வருடப் பிறப்பு இங்கு தான் தொடங்கும். வருடப் பிறப்பில் முதலில் இந்த மால் தரிசனம். பிறகு தான், மற்ற ஆலய தரிசனமெல்லாம். வருடத்திற்கு வருகை தரும் 40 மில்லியன் விருந்தினர்களில், 40 சதவிகிதம் வெளியூர்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தான் இங்கு வருகிறார்கள். இது மினசோட்டாவின் “டோண்ட் மிஸ்” இடமாக இருப்பதில் ஆச்சரியமேதுமில்லை.
டிம் ஹார்ட்டன்ஸ் மினசோட்டாவில் Tim Hortons |
- சரவணகுமரன்