\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

மோகத்தைக் கொன்றுவிடு !!

Filed in இலக்கியம், கவிதை by on June 26, 2017 0 Comments

ஆயிரம் படித்தும் ஆவது அறிந்தும்
ஆலயம் புகுந்தும் ஆன்மிகம் உணர்ந்தும்
ஆசையை மனதில் ஆறாது செய்வது
ஆண்களின் வாழ்வில் ஆகாத செயலோ?

காணுமிடம் எங்கெங்கும் கன்னியரின் கோலம்
காட்சிப் பிழையோ இல்லை கருத்துப்பிழையோ?
காலங் கடப்பினும் கருவளையம் தோன்றிடினும்
காமக் களிப்பது கருத்துவிட்டு அகலாததேனோ?

சாதிக்கும் காலமதில் சரசமொன்றே நினைப்பாகி
சாத்திரங்கள் சொன்னதெலாம் சடுதியிலே கசப்பாகி
சாணெட்டு உடலதனைச் சரணமாய் அவளதாக்கி
சாதிசனம் மத்தியிலே சஞ்சலமாய் நின்றதேனோ?

தாராளச் சிந்தையுடன் தரணியெங்கும் சுற்றுவோரும்
தாலிகட்டிக் குடும்பமுமாய்த் தரவாழ்வு நடத்துவோரும்
தானாக இருவருமாய்த் தனிவாழ்வு வாழ்பவரும்
தாதிகளாய்ப் பெண்களையும் தன்மனதில் நினைப்பதேனோ?

நீண்டுநெடிய வாழ்விதன் நிதர்சனம் புரிந்து
நீயாரென உணர்ந்து நிர்வாண நிலையடை
நீதிநெறி விளக்கிய நிலையான புத்தன்மறந்து
நீதான் எனக்கென்று நிர்வாணமாய் நின்றதேனோ?

பார்புகழும் தத்துவமாய்ப் பட்டினத்தார் சொன்னதையும்
பாங்குடனே பெருமொழியைப் பயிற்றுவித்த அருணகிரியும்
பார்த்தறிந்த நீதியையும் பகுத்தறிந்த கருத்ததையும்
பாலுறவு ஆசையினால் பட்டெனவே மறந்ததேனோ?

மாதரசி இவளென்றும் மங்கையரே அரிதென்றும்
மாதவம் செய்ததாலே மகத்தான பிறப்பென்றும்
மாளாத தியாகத்தால் மலர்ந்ததொரு சுடரென்றும்
மாறாமல் புகழுரைத்து மயக்கப்பொருளாய் நடத்துவதேனோ?

யாதுமாகி நின்றவளாய் யவனத்தில் பொய்யுரைத்து
யாகத்தில் துளிர்த்தெழுந்த யக்‌ஷன்மகள் எனப்புகழ்ந்து
யாரெனக் கேட்டிடினும் யுகபுருஷன் எனஉரைத்து
யாமத்தில் தேவைதீர்க்க யுவதிகளைத் தேடுவதேனோ?

வாஞ்சையாய் நாம்நினைத்த வஞ்சியவள் விலகியதும்
வாழ்க்கையில் இவளன்றி வளமில்லை என்றிருக்க
வாலிப முறுக்கன்றி வயோதிகம்வரை வராதென்று
வாய்கூசாமல் அறிவுரைகள் வழங்கியதும் மறக்கலையோ?

ஆண்மைக்கே உரியதாய் ஆர்ப்பரித்து எழும்பிடும்
ஆணவ உணர்வை ஆட்கொண்டு பொறுமையாய்
ஆண்பெண் இருவரும் ஆரத்தழுவி அன்பாயியைதல்
ஆழிசூழ் உலகையே ஆதியந்தமிலா சொர்க்கமாக்கிடாதோ ?

– வெ. மதுசூதனன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad