ஒரே ஒரு சந்திரன் -பாகம் 2
(பாகம் 1)
ராமச்சந்திரனின் சிறு வயதிலேயே அவரது தந்தை இறந்துவிட, அவர்களது குடும்பம் ஏழ்மையில் மூழ்கியது. பின்னர் அவரது தாயார் சத்யபாமா மிகுந்த சிரமங்களுக்கிடையே, ராமச்சந்திரனையும், அவரது மூத்த சகோதரர் எம்.ஜி.சக்ரபாணியையும் வளர்க்க வேண்டியிருந்தது. இந்தச் சமயத்தில் தன் பிள்ளைகளுக்கு மூன்று வேளைச் சாப்பாடு கிடைக்கும் என்ற ஒரே காரணத்தால், அவர்களை மதுரை பாய்ஸ் நாடகக் கம்பெனியில் சேர்த்து விடுகிறார் சத்யபாமா.
களையான முகமும், சிவந்த நிறமும் கொண்டிருந்த ராமச்சந்திரனுக்குப் பயிற்சியளிக்கத் துவங்கினர் பாய்ஸ் கம்பெனியினர். போதுமான அளவு ஊட்டமில்லாத ராமச்சந்திரன் உடல் வலிமை பெற பலவகையான உடற் பயிற்சிகளும், சண்டைப் பயிற்சிகளும் அளிக்கப்பட்டன. கண்ணும் கருத்துமாக அவற்றைப் பயின்ற ராமச்சந்திரனுக்கு நடனமும், பாடல் பாடுவதும் சிரமமாகயிருந்தது. இதனாலேயே, அவருக்கு நாடகங்களில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்புக் கிட்டாமல் போனது. இருப்பினும் துணை வேடங்களில் நடித்து வந்த அவருக்கு, மூத்த சக நடிகரான பி.யு. சின்னப்பாவுக்கு உடல்நிலை குன்றியபோது, முதன் முறையாகச் சற்றுப் பெரிய வேடத்தில் நடிக்கும் வாய்ப்புக் கிட்டியது. கிடைத்த சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார் ராமச்சந்திரன். அதிர்ஷ்டவசமாக அன்று நாடகத்தைக் காண வந்திருந்த கிட்டப்பாவின் கவனமும் அவர் மீது விழுந்தது. சில நாட்களில் பாய்ஸ் கம்பெனி சென்னைக்கு வந்தபோது, ராமச்சந்திரனுக்கும், சக்ரபாணிக்கும் சென்னை செல்ல வாய்ப்புக் கிடைத்தது. காங்கிரஸின் சுதந்திரக் கொள்கைகள் நாடகங்களில் இடம்பெறத் துவங்கிய காலத்தில் ராமச்சந்திரனுக்குப் பல வேடங்கள் கிடைத்தன.
இருந்தாலும், சினிமாவில் நடிக்க வேண்டுமென்ற தாகம் கொண்டிருந்த ராமச்சந்திரன் பல வகைகளில் தொடர்புகள் ஏற்படுத்திக்கொண்டு சினிமா வாய்ப்புகளுக்காக அலைந்தார்.
நாடக நடிப்பு வேறு, சினிமா நடிப்பு வேறு என்பதைப் புரிந்துக்கொண்டவர், கந்தசாமி முதலியார் என்பவரிடம் சினிமாவுக்கான நடிப்புப் பயிற்சியை மேற்கொண்டார். அவர் ஏற்படுத்திக் கொடுத்த வாய்ப்பினால் சதிலீலாவதி படத்தைத் தயாரித்த மருதாச்சலம் செட்டியார் என்பவரின் அறிமுகம் கிடைக்க, அப்படத்தின் இயக்குனர் எல்லிஸ். ஆர். டங்கன் முன் நிறுத்தப்படுகிறார் ராமச்சந்திரன். ராமச்சந்திரனின் கட்டுடலைக் கண்ட டங்கன் ராமச்சந்திரனுக்கு சிறிய இன்ஸ்பெக்டர் வேடமொன்றை அளிக்க, முதன் முறையாக ‘ராமச்சந்தர்’ என்ற பெயரில் திரையில் தோன்றினார் ராமச்சந்திரன். தன் தந்தையிடம் ஆங்கிலம் கற்றுக் கொண்ட சக்ரபாணி, டங்கனின் எதிர்பார்ப்புகளை ராமச்சந்திரனுக்கு விளக்கினார்.
1936ல் வெளிவந்த இப்படத்துக்குப் பின்னர் ராமச்சந்திரனுக்குப் பெரிய வாய்ப்புகள் எதுவம் கிட்டவில்லை. சின்னஞ்சிறு வேடங்கள், துணைப் பாத்திரங்கள் மட்டுமே கிடைத்தன. பாட்டுப் பாடத் தெரியாததும், சரியாக நடனம் வராததுமே இதற்குக் காரணம். பலரிடம் நடனப் பயிற்சி பெற்று, 1946ல் வெளியான ஸ்ரீ முருகன் என்ற படத்தில் பாரம்பரிய நடனமாடும் காட்சியைக் கேட்டுப் பெற்றார் ராமச்சந்திரன். இதில் அவரது நடனத்துக்கு ஓரளவு பாராட்டுகள் கிடைத்தன. எனினும் பாட்டுப் பாட வராததால் அவரது சிக்கல்கள் தொடர்ந்தன.
1947ல் ஜூபிடர் பிக்சர்ஸ் சார்பில் திரைப்படம் ஒன்று தயாரிக்க இருந்தார்கள் பங்குதாரர்களான சோமுவும், மொயிதீனும். அரபுக் கதைகளின் பின்னணியில் திரைக்கதை புனைந்திருந்தார் இயக்குனரான ஏ.எஸ்.ஏ. சாமி. அவர் புதிய இயக்குனராகையால், அதிக முதலீடின்றி ஜூபிடர் கம்பெனியின் நடிகர்களை வைத்தே படத்தைத் தயாரிக்க முடிவானது. ஆனால் திரைக்கதை முழுதுமாக உருவான பின்பு, பொருட்செலவு பாராமல் பி.யு. சின்னப்பாவையும், டி.ஆர். ராஜகுமாரியையும் நடிக்க வைக்க வற்புறுத்தினார் மொயிதீன். எனினும் செலவைக் கட்டுப்படுத்த எண்ணிய சோமு, ஏ.எஸ்.ஏ. சாமியிடம் கம்பெனி நடிகர்களை வைத்தே படத்தைத் தொடங்கச் சொல்லிவிட்டார்.
ஏ.எஸ்.ஏ. சாமி தெலுங்குப் படங்களில் நடித்துக் கொண்டிருந்த கே. மாலதி எனும் நடிகையைக் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்தார். ஜூபிடர்ஸ் நிறுவனத்தில் எழுத்தாளராக இருந்த மு. கருணாநிதி முதன் முதலாக வசனமெழுத ஒப்பந்தமானார். கதாநாயகனாக எம்.ஜி.ஆரைப் போட முடிவு செய்தார் சாமி. அவருக்குப் பாட வராது என்ற சிக்கலைத் தீர்க்க முதன் முதலாகப் பின்னணிக்கு திருச்சி லோகநாதன் ஏற்பாடானார். (பின்னணி பாடும் வசதி அறிமுகமாகியிருந்ததால், முதன் முதலாக தமிழில் பின்னணிப் பாடல் இடம் பெற்ற படம் இதுதான்). எம். என். நம்பியாருக்கும் இது தான் முதல் படம். இப்படத்தில் தான் பால் வியாபாரம் செய்து வந்த சாண்டோ சின்னப்பா (தேவர்) வில்லனாக அறிமுகப்படுத்தப்பட்டார். இப்படிப் பல ‘முதல்’ களுடன் படம் வளர்ந்து வந்தது. முக்கால் பாகம் வரை வளர்ந்த படத்தைப் பார்த்த மொயிதீன் திருப்தியில்லாமல் படத்தை நிறுத்திவிட வற்புறுத்தினார்.
எப்படியும் படத்தை முடித்து முழு நேர இயக்குனராக விரும்பிய ஏ.எஸ்.ஏ. சாமிக்குத் திரைப்படத்தைப் பாதியில் விட மனமில்லை. எப்படியாவது படத்தை வெற்றிபெறச் செய்துவிட வேண்டுமென எண்ணிய அவர் இலங்கையைச் சார்ந்த தவமணி தேவியைக் ‘காட்டேரி’ பாத்திரத்தில் அறிமுகப்படுத்தினார். அந்தக் காலத்திலேயே கவர்ச்சிகர வேடங்களில் நடித்து புகழ் பெற்றிருந்தவர் தவமணி தேவி.
இப்படிப் பல இடையூறுகளைத் தாண்டி வெளியான படம் தான் ‘ராஜகுமாரி’. படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. படத்தின் வெற்றிக்குக் காரணமாக அமைந்தவை திருச்சி லோகநாதனின் குரல், எஸ்.எம், சுப்பையா நாயுடுவின் இசை, கருணாநிதியின் வசனம் ஆகியவை. இவையெல்லாவற்றையும் விட நடிகை தவமணி தேவியின் பாத்திரம் படத்தைப் பிரபலப்படுத்தியது என்றால் மிகையில்லை
இந்த வெற்றி காரணிகள் ராமச்சந்திரனின் மனதில் மிக ஆழமாகப் பதிந்து விட்டன. பிற்காலத்தில் அவர் தனது படங்களுக்கான வெற்றிச் சூத்திரத்தை நிர்ணயித்துக் கொள்ள ‘ராஜகுமாரி’ காரணமாக அமைந்தது.
– ரவிக்குமார்.