\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

மஹாகணபதிம் ஆவாஹயாமி……

Filed in இலக்கியம், கதை by on August 28, 2017 0 Comments

”ஏன்னா….. நாளைக்குச் சத்த ஆஃபீஸுக்கு லீவு போட்றேளா?…. “ கேட்ட லக்‌ஷ்மியைச் சற்றுக் எரிச்சலுடன் பார்த்தான் கணேஷ்.

“ஏன், என்னத்துக்காக லீவு போடணும்?” என்று கோபத்தைக் கட்டுப் படுத்திக் கொண்டு சாதாரண தொனியில் கேட்க, “நாளைக்கு கணேஷச் சதுர்த்தின்னா…. ஆத்துல பூஜை பண்ணணும், இது ஆம்பளேள் பண்ற பூஜை”…. என்று இழுக்க, “நோக்குத் தெரியாதாடி, நேக்கு இந்த பூஜை புனஸ்காரத்துலெல்லாம் பெருசா இண்ட்ரஸ்ட் இல்லடி.. என்ன விட்டுடேன்….” என்று கெஞ்சத் தொடங்கினான்.

“நான் உங்கள எப்பப்பாத்தாலுமா தொந்திரவு பண்றேன்… எல்லாப் பூஜையும் நானே பண்ணிண்டுதானே போறேன்… இது மாத்திரம் பொம்மனாட்டிகள் பண்ணக்கூடாதாம், பெரியவா சொல்லுவா…” என்று தொடர, “அதென்னடி, பூஜையில பொம்மனாட்டி, ஆம்பளேள்னு பாகுபாடு… எல்லாரும் எல்லாம் பண்ணலாம், நீயே பண்ணிக்கோ” என்றான் கணேஷ். தினம் விடாமல் ஏதோவொரு பூஜையைச் செய்து கொண்டு வாழ்ந்திருந்த அவன், கடந்த சில ஆண்டுகளாகப் பூஜை, கோவிலுக்குப் போவது போன்ற விஷயங்களை வெகுவாகக் குறைத்திருந்தான். உருவ வழிபாடுகளிலும், சடங்குகளிலும் ஆர்வம் குறைந்து, கடவுள் என்றால் என்னவென்று அறியும் நாட்டம் அதிகமாயிருந்ததே இதற்குக் காரணம்.

லக்‌ஷ்மியுடனான வாக்குவாதம் தொடர்ந்தது. அவளும் விடுவதாக இல்லை.. இறுதியில் வென்றது லக்‌ஷ்மியே. ”காத்தால போர்டு மீட்டிங்க் இருக்கு, ஆஃபிஸுக்குப் போகணும், ஆனா மீட்டிங்க் முடிஞ்ச உடனே ஆத்துக்கு வந்துடறேன்” சொல்லிப் புறப்பட்டான்..

ஸ்மின் பிம்பே மஹாகணபதிம் ஆவாஹயாமி….. “ என்று தொடங்கி, பல விதச் சடங்குகளையும் செய்து முடித்தான் கணேஷ். அனைத்தையும் அருகிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த மகள் பாரதி ஒவ்வொரு சடங்கு குறித்தும் கேள்விகளைக் கேட்டுத் துளைத்துக் கொண்டிருந்தாள். “அப்பா, ஒய் இஸ் கணேஷா மேட் இன் க்ளே?” என்பதில் தொடங்கியது கேள்விகள் ….

“அதும்மா…. தி காட் இஸ் ஆம்னி பிரஸண்ட்.. “ என்று தொடர்ந்த கணேஷைத் தடுத்து நிறுத்திய பதினோரு வயது மகள், “அப்பா… டோண்ட் யூஸ் பிக் வார்ட்ஸ் ஆன் மி… கேன் யூ சே இட் இன் சிம்பிள் டர்ம்ஸ்?” எனக் கேட்க, எப்படி விளக்குவது என்று யோசிக்க ஆரம்பித்தான். படித்த புத்தகங்களிலிருந்து, பல வித தத்துவங்களை எடுத்து விளக்கலாம், ஆனால் அவை பற்றிய முழுமையான ஞானம் தனக்கும் இன்னும் வரவில்லை என்பதை உணர்ந்ததால் அந்த எண்ணத்தைக் கை விட்டான். தொடர்ந்து யோசித்துக் கொண்டிருக்கும் அவன் மனக்கண்முன் வந்து நின்றது ஒரு முப்பது வருத்திற்கு முன் அவனுக்கும் அவன் அப்பாவிற்கும் இடையே நடந்த சம்பாஷணை.

”அப்பா…  ஏம்பா அந்தப் புள்ளையாரை மண்ணுல செய்றா?” கடப்பாக் கல் போடப்பட்ட அந்தக் கிணற்றடியில், மடிமடியாய் ஸ்னானம் முடித்து விட்டு, ஈர வேட்டி, துண்டு சகிதமாய்க் கீழே உட்கார்ந்து கொண்டு பிள்ளையார் செய்து கொண்டிருந்த அப்பாவைப் பார்த்துச் சிறுவன் கணேசனின் கேள்வி.

“வாக்குண்டாம், நல்ல மனமுண்டாம், மாமலராள் நோக்குண்டாம் மேனி நுடங்காது……. “ என்ற ஸ்லோகத்தின் நடுவினிலே, “அதுப்பா கொழந்தே, சுவாமிங்கிறது ஒரு ரூபத்துல இல்ல… அவர் அரூபமா எங்கேயும் நிறைஞ்சு இருக்கார்… நம்ம மனசுக்குள்ள, புத்திக்குள்ள, உடம்புக்குள்ள எல்லா இடத்துலயும் இருக்கார்… ஆடு, மாடு, காக்கா, குருவி, புழு, பூச்சி, மரம் செடி, கொடின்னு எங்கேயும் இருக்கார்… அவர் இல்லாத இடமே இல்ல… ஆனா.. அவர நம்ம சாதாரணக் கண்ணால பாக்க முடியறதில்ல… பாக்காத ஒண்ண நம்புறது எப்படி… பாக்காத ஒண்ண மனசுல பதிச்சுக்கிறது எப்படி… அதுக்குத்தாண்டா கண்ணா இந்தக் களிமண்ணுல விக்ரகம் மாதிரி பண்றது…..” சொல்லிவிட்டுத் தொடர்கிறார்.. “பூக்கொண்டு துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம் தப்பாமற் சார்வார் தமக்கு…..” என்று முதல் ஸ்லோகத்தை முடிக்கையில் கணேஷின் அடுத்த கேள்வி தயாராயிருந்தது…..

அவன் அடுத்த கேள்வி கேட்பதற்கு முன்னர், தனது முந்தைய பதிலைத் தொடர்ந்த அப்பா, “அதுனாலதான் கொழந்தே, மண்ணுல செஞ்ச விக்னேஷ்வரர இரண்டாம் நாள் தண்ணில கொண்டு போய்க் கரைக்கிறா… தாத்பர்யம் என்னன்னா.. இப்ப மனசுக்குள்ள ஒரு உருவத்தக் கொண்டு வந்தாச்சு, இனிமே அந்தச் சில தேவையில்ல… அதாவது, உன்ன நான் ஒரு ஜூ’வுக்குக் கூட்டிண்டு போய் சிங்கத்தக் காட்டினேன்னு வச்சுக்கோ அதுக்கப்புறம் சிங்கத்தோட ஃபோட்டோ வேணுமோ? அது போலத்தான்….”

ல வருடங்களுக்கு முன்னர் அப்பா தந்த எளிமையான, ஆனால் சக்தி மிகுந்த தத்துவார்த்த விளக்கம் நினைவுக்கு வந்தது கணேஷுக்கு. மகளைப் பார்த்து, “இட்ஸ் ஜஸ்ட் டு க்ரியேட் என் இமேஜ் இன் யுவர் மைண்ட்” என்று பொத்தாம் பொதுவாய்ச் சொல்லி முடித்தான்.

லக்‌ஷ்மியைப் பார்த்து, “தேங்க் யூ டி… இந்தப் பூஜையில என்ன நல்லது இருக்கோ இல்லையோ… நேக்கு அப்பா ஞாபகம் வந்துதுடி… தேங்க் யூ அகெய்ன்…” சொல்லிக் கொண்டே சாமர்த்தியமாய் மேல் துண்டின் நுனியில் கண்களின் ஓரம் கசிந்த நீரைத் துடைத்துக் கொண்டு பூஜையறை விட்டு அகன்றான் கணேஷ் ….

   வெ. மதுசூதனன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad