இரையைத் தேடி
விமானம் சிகாகோ ஓஹேர் எர்ப்போர்ட்டில் இறங்கிய போது மணி சரியாக 6.20 ஆகியிருந்தது. சிறிய, டி.சி. 9 வகை விமானம் என்பதால் பயணிகள் அதிகமில்லை. கிட்டத்தட்ட பத்து நிமிடங்களில் விமானத்தை விட்டு வெளியில் வந்தான் ராகவ். துபாய்க்குச் செல்லும் விமானம் இரவு பத்து பத்துக்குத் தான். நிறைய நேரமிருக்கிறது.
லேசாகப் பசிப்பது போல் உணர்ந்தான் ராகவ். மினியாபொலிஸில் விமானத்தைப் பிடிக்க ஓடி வர வேண்டியதாகிவிட்டது. சாப்பிடக் கூட நேரமில்லை. அவசர அவசரமாகத் துணிகளை அள்ளிப் போட்டுக் கொண்டு கிளம்ப நேர்ந்தது. சித்ராவுக்கு, ராகவ் இது போல திடீர் திடீரென, வெளியூர்களுக்கு கிளம்பிச் செல்வது சுத்தமாகப் பிடிக்காது. இன்று காலையும் அப்படித்தான் நேற்றிரவு ஸ்காட் போன் செய்த போது சித்ரா தூங்கி விட்டிருந்தாள். அதனால் அவள் காலையில் எழுந்தப் பின் தான் அவளிடம் துபாய் செல்வதைப் பற்றி சொல்ல முடிந்தது.
‘எங்க போறதா சொன்னிங்க?’
‘துபாய்க்கு …’
‘துபாய்ல உங்க ஆபிஸ் இருக்கா என்ன?’
‘இல்ல இது ஒரு சேல்ஸ் விஷயம்.’
‘என்ன சேல்ஸ்?’
‘ஆங் .. தங்க பிஸ்கட் விக்க போறேன் .. என்னடி கேள்வி? சாஃப்ட்வேர் தான் ..’
‘அப்படி என்ன திடீர்னு?’
‘வேற ஒருத்தர் போறதா இருந்தது … அவர் பிள்ளைக்கு உடம்பு முடியாததால நான் போற மாதிரி ஆயிடுச்சி’
‘கூட யார் வர்றா?’
‘நான் மட்டுந்தான் .. நீ பாட்டுக்கு அவன் இவனுக்கெல்லாம் போன் பண்ணி கேட்டுக்கிட்டு இருக்க வேண்டாம் … நான் இந்த சேல்ஸ்க்குப் போறது ஆபீஸ்லே யாருக்கும் தெரியாது … எல்லாரும் வி.பி. தான் போறதா நினைச்சிக் கிட்டுருப்பாங்க .. அவர் குடும்ப நிலவரம் காரணமா இவ்வளவு பெரிய சேல்ஸ் மீட்டிங்க்குப் போகலன்றது, ஆபிஸ்ல மத்தவங்களுக்கு தெரிஞ்சா ரொம்ப அசிங்கம் .. இன்னும் ஆறு மாசத்தில ரிடையர் ஆகப் போறார்.. போறப்ப நல்ல பேரோட போகட்டும்னு ப்ரெசிடன்ட் நினைக்கிறார்,.அதனால் இத ரகசியமா வெச்சிருக்கணும்னு எனக்கு ஆர்டர் ..’
‘வி.பி க்கு பதிலா உங்கள ஏன் அனுப்பனும் … நீங்க ஒன்னும் அவ்வளவு பெரிய ஆள் இல்லையே?’
‘இப்ப என்ன சொல்ல வர்ற நீ … நான் பஞ்சதந்திரம் படத்தில வர்ற மாதிரி பொய் சொல்லிட்டு ஃபிரெண்ட்ஸோட ஊருக்குப் போறேன்னு நினைக்கிறியா?’
‘யாருக்கும் தெரியும் மெய் சொல்றீங்களா பொய் சொல்றீங்களான்னுட்டு..
எக்கேடோ கெட்டுப் போங்க.. என்னைக்குத் திரும்ப வருவீங்கன்னாவது தெரிஞ்சிக்கலாமா?’
சித்ரா சந்தேகப்பட்டதில் தவறில்லை. ஆபிஸ் வேலை என்று பொய் சொல்லிவிட்டு தான் வந்திருக்கிறான் ராகவ்.
பெட்டியை இழுத்துக் கொண்டு, எங்கு சாப்பிடலாம் எனத் தேடிக் கொண்டு நடந்தான் ராகவ். காலையில் சண்டையின் நடுவே சித்ரா செய்து கொடுத்த தோசையைச் சாப்பிட்டது தான். அதன் பின் துபாயில் சிலருடன் பேசுவது தங்குவதற்கான வேண்டிய ஏற்பாடுகளைச் செய்வது, வேண்டிய தகவல்களைச் சேகரிப்பது என அப்படி இப்படி என நேரம் ஓடி விட்டது. நடுவே ஆபிசுக்கு ஃப்ன் செய்து ஒரு வாரம் லீவுக்கும் சொல்லி விட்டான். எல்லாம் முடித்து நிமிர்ந்த போது மணி இரண்டாகி விட்டிருந்தது. உடனே கிளம்பி வந்ததில் சாப்பிட நேரமில்லை. பரிச்சயமான உணவகத்தில் சாப்பிடுவதே நல்லதென நினைத்து பர்கர் கிங்கில் சான்ட்விச் வாங்கிக் கொண்டு காலியாக இருந்த இருக்கை ஒன்றில் அமர்ந்தான்.
ஏர்ப்போர்ட்டில் சிறியவர், பெரியவர் என அனைத்து மனிதர்களும் மிகவும் சுறுசுறுப்பாக ஓடிக் கொண்டிருந்தார்கள். உணவுப் பொருள் எதுவும் கிடைக்காத சில கடைகளில் மட்டும் கூட்டம் கம்மியாக இருந்தது விமான நிலைய ஊழியர்கள் இங்கும் அங்கும் நடந்து கொண்டிருந்தனர். ஒரு ஓரத்தில் தாடி வைத்த நபர் ப்யானோ வாசித்துக் கொண்டிருந்தார். கட்டுமஸ்தானமான ஒருவர் காலணிகளுக்குப் பாலிஷ் செய்து கொண்டிருந்தார். இந்தியப் பெரியவர் தரையைப் பெருக்கி கொண்டிருந்தார். பணி ஓய்வுக்குப் பின் தானும் இது போல், விமான நிலையத்தில், அழுத்தம் ஏதுமில்லாத வேலை செய்ய வேண்டுமெனத் தோன்றியது, ராகவிற்கு.
அருகேயிருந்த தொலைக்காட்சியில் ஒபாமா பேசிக் கொண்டிருந்தார். இன்னும் இரண்டு தினங்களில் இந்த சேனல்கள் அனைத்தும் தான் செய்யப் போய்க்கொண்டிருக்கும் காரியத்தைப் பற்றி பேசும். ஆம் இந்த முறை இவனுக்கு அளிக்கப்பட்ட டார்கெட் ஒரு அரசியல் பிரமுகர். ‘ஷுட் தெம் டுகெதர்’ – இது தான் ஸ்காட்டின் கட்டளை.
ஸ்காட்டை எப்போது சந்தித்தோம் என ராகவுக்கு சரியாக நினைவில்லை. ராகவுக்கு இயற்கையாக அமைந்த திறமையை, உள்ளூர் துப்பாக்கி சுடும் போட்டி, மற்றும் சில போட்டிகளில் கண்ட ஸ்காட் தனது தொழிலுக்கு உதவ முடியுமா என அணுகிய போது, ராகவ் ஆடிப் போனான். தான் பொழுது போக்காகப் பயன்படுத்தும் திறனைத் தவறான காரியங்களுக்குப் பயன்படுத்த அவன் மனம் ஒப்பவில்லை. அந்த சமயத்தில் ஸ்காட்டும் அவனை வற்புறுத்தவில்லை.
பின்னர் ஒரு தடவை ராகவின் பூர்வீகம் உட்பட, இந்தியாவிலிருந்த பெற்றோரின் பணத் தேவைகள், ஆசைகள் ஆகிய அனைத்து விவரங்களையும் சேகரித்துக் கொண்டு வந்து பேசிய போது தான் ஸ்காட்டுக்கு பின்னால் ஒரு பெரிய நெட்வொர்க் இயங்குவது தெரிய வந்தது. பயந்து விட்டான். மறுத்தால் என்னென்ன செய்வானோ? ஆனால் ஸ்காட் பயமளிக்கும் விதத்தில் ஒருபோதும் பேசியதில்லை. ராகவின் திறமையைப் பயன்படுத்திக் கொள்வதில் மட்டுமே ஆர்வம் காட்டினான். இதில் கிடைக்கும் பெரும் பணத்தைக் குறிப்பிட்டான். எந்தச் சிக்கலிலும் ராகவ் மாட்டிக் கொள்ள நேராது என்பதற்கு நிறைய உத்திரவாதமளித்தான். நட்சத்திர ஓட்டல்களுக்கு அழைத்துச் சென்று மேலும் ஓரிருவரை அறிமுகம் செய்து வைத்தான். அனைவரும், ராகவின் அமைதியான தோற்றம், உடல் நிறம், பிறப்பிடம் இவைகள் மற்றவர்களுக்கு எந்தவித சந்தேகமுமளிக்காது என்று நம்பினர். ராகவின் சாஃப்ட்வேர் வேலைக்கும் தடங்கல் இருக்காதென உறுதி அளித்தனர். முக்கியமாக காரியத்தை முடித்தவுடன் தொகையைப் பணமாகவோ வேறு விதமாகவோ, தமிழகத்திலோ அல்லது இந்தியாவில் அவன் குறிப்பிடும் வேறெந்த இடத்திலோ சேர்த்து விடுவதாகக் குறிப்பிட்டனர். இவ்வாறு பல விதங்களில் மூளைச்சலவை செய்து அவனைத் தங்கள் தொழிலுக்கு இணங்க வைத்தனர்.
மூன்று மாதங்களுக்குப் பிறகு அவனுக்கு லாஸ் வேகாஸ் நகரில் முதல் பணியைக் கொடுத்தனர். அந்தக் காரியத்துக்கு அவனுக்கு தேவைப்பட்ட பொருட்கள் யாவையும் அங்கங்கே ஏற்பாடு செய்து, எங்கே யாரைச் சந்தித்து அவைகளைப் பெற வேண்டும் போன்ற துருப்புகளை மட்டும் இவனுக்கு அனுப்பி வைத்தனர். அனைத்துப் பொருட்களும் இவன் அதற்கு முன் பயன்படுத்தியிராத சக்தி வாய்ந்த கருவிகள். அவற்றைப் பற்றி அறிந்து கொள்ளத் தேவையான உதவிகளும் அளிக்கப்பட்டன. அவனது முதல் இலக்கு வளர்ந்து வந்த ஒரு பாப்பிசைப் பாடகி. காரியத்தை முடித்தவுடன், தமிழகத்தில் திருப்போரூரருகே ஏழு இலட்ச ரூபாய் மதிப்பிலான நிலத்தை ராகவின் தந்தை பெயரில் பதிவு செய்து தந்தனர். அது பழி நிரம்பியதென அறியாமல் ராகவின் பாசப் பரிசாக எண்ணிச் சிலிர்த்தார் ராகவின் தந்தை.
விமானப் புறப்பாடு அறிவிக்கப்பட்டு,. பயணிகள் விமானத்தில் ஏறத் துவங்கினர். ராகவ் மெதுவாக எழுந்து நடக்கலானான். தன் இருக்கையைத் தேடி அமர்ந்த போது மிகவும் சோர்வாக இருந்தான்.விமானம் பறக்கத் துவங்கும் முன்னரே தூங்கி விடுவான் போலிருந்தது. இந்தச் சந்தர்ப்பத்தில் அவனுக்கு நல்ல தூக்கம் அவசியம். போகும் இடத்தில் எப்படி இருக்குமோ தெரியாது. சில நேரம் ஏழெட்டு மணி நேரம் மறைவாக காத்திருக்க நேர்ந்துள்ளது. முடிவில் வேலை என்னவோ முப்பது வினாடிகளுக்குள் முடிந்து விடும், ஆனால் அந்தக் காத்திருப்பில் ஒவ்வொரு வினாடியும் ஒரு யுகமாய்த் தோன்றும். பழைய கட்டிடங்களின் ஜன்னல், மாடி, மரக்கிளைகள், இருண்ட தெருச் சந்துகள் என பல விதமான பதுங்கிடங்கள். சொல்லப் போனால் அது போன்ற காத்திருத்தலுக்குத் தான் பணம். இப்படியான காத்திருப்புகள் சில ஏமாற்றமளித்ததும் உண்டு. கலிஃபோர்னியாவில் ஆறு மணி நேரம் புதர்களின் பின்னே மறைந்திருந்த பிறகு அன்றைய இலக்கு வேறு வழியாகச் சென்று விட்டார்கள் எனத் தெரிந்து மிகவும் ஏமாந்து போனான். ஸ்காட்டின் கணிப்புகளில் அவ்வளவாகத் தவறுகள் நேராது. ஆனால் யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல அவனது கணிப்புகளும் ஓரிரு சமயங்களில் பொய்த்ததுண்டு. அப்போதெல்லாம் தன்னுடைய கவனக்குறைவால் ஏற்பட்ட பிழையாகவே கருதுவான் ஸ்காட். ஒரு போதும் தன் மேலிடத்தையோ அல்லது அவனது தகவலாளிகளையோ குற்றம் சொல்ல மாட்டான். அவனுக்கு நாலைந்து குரூப்களுடன் தொடர்பிருந்தது. ஆனால் ராகவுக்கும் சரி, இதில் ஈடுபடும் மற்றவர்களுக்கும் சரி, யாருக்காக இந்தச் செயலைச் செய்கிறோம் என்பது தெரியாது. குடும்பத்துடன் இருப்பதாலும், அலுவலகப் பணியில் இருப்பதாலும் அடிக்கடி ராகவைத் தொந்தரவு செய்யமாட்டான் ஸ்காட். ஹை ப்ரோஃபைல் இலக்குகள் மட்டுமே இவனுக்கு அளிக்கப்படும். அநேகமாக அவர்கள் குறிப்பிடும் இலக்குகள் அமெரிக்க, மெக்சிகோ எல்லைக்குள்ளேயே இருக்கும். மிக அரிதாக இதைத் தாண்டிச் செல்வதும் உண்டு. அந்தச் சந்தர்ப்பங்களில் சித்ராவிடம் பொய் சொல்லி விட்டு போவது மிகவும் வருத்தமளிக்கும். ராகவின் பாவச் செயல்கள் தெரிந்தால் சித்ரா தற்கொலை செய்துக் கொள்வாள். அடிக்கடி ராகவின் உள் மனது இதைத் தெரிவித்தாலும், தனது இலக்குகளில் ஒருவரும் உத்தமரில்லை என்று நினைத்து சமாதானம் கொள்வான்.
லண்டனில் விமானம் மாற்றி, ஒருவழியாக துபாய் ஏர்போர்ட்டில் இறங்கிய போது மணி விடியற்காலை மூன்றாகி விட்டிருந்தது. முதல் வேலையாக செல் ஃபோனுக்கு தற்காலிக சிம் கார்டை வாங்கிப் போட்டுக் கொண்டான். அமெரிக்கப் பிரஜை என்பதால் விசா சடங்குகளை ஏதும் பிரச்சனை இல்லாமல் முடிந்தது. வெளியில் வந்து வாடகைக் காரில் அமர்ந்து ‘ஜூமைரா கான்டினென்டல்’ என்றான். பாகிஸ்தானி டிரைவர், ‘இண்டியா?’ எனக் கேட்டு இந்தியும்/ உருதும் கலந்து பேசி வந்தான். ஓட்டலுக்கு வந்து ‘சயிது மஸ்தூம்’ பெயரைச் சொன்னதும் அறைச் சாவியை தந்தார்கள். அறைக்குச் சென்று தூங்கிப் போனான் ராகவ்.
காலையில் எழுந்ததும் முதல் வேலையாக ஸ்காட் கொடுத்த எண்களைத் தொடர்பு கொண்டான். அனைத்துப் பொருட்களும் தயாராக இருப்பதாகத் தெரிவித்தனர். எல்லாவற்றையும் ஒருமுறை அசெம்பிள் செய்து பார்த்து விட வேண்டும். கடைசி நேரத்தில் ஏதாவது சொதப்பி விட்டால் அத்தனையும் கெட்டு விடும்.அவனுக்கு நிர்ணயிக்கப்பட்ட தினம் அடுத்த நாள் தான். இருப்பினும் முன்னரே சம்பவ இடங்களுக்குப் போய் சுற்றும் முற்றும் பார்த்துப் பரிச்சயப்படுத்திக் கொள்வது அவன் வழக்கம். ஒன்று, அப்படிச் செய்வது பதட்டமில்லாமல் காரியத்தை முடிக்க உதவும். இரண்டாவது ஏதாவது தவறாக நடந்து மாட்டிக் கொண்டால் ஓடித் தப்பிக்க வழிகளைத் தெரிந்துக் கொள்ள உதவும். அவனது இலக்குகள் பலர் பாடிகார்டு எனப்படும் பாதுகாப்பு வளையத்தோடு தான் வருவார்கள். சில சமயங்களில் அவர்களின் கண்ணிலிருந்து தப்பிப்பது பெருங்கடினம்.
ராகவ் ‘அட்லாண்டிஸ் ஓட்டலுக்கு’ சென்ற போது, ஃபரூக் – அந்த ஓட்டலின் மெயிண்டனஸ் பிரிவில் மேலாளன் – அங்கில்லை. ஃபரூக் எங்கோ எப்படியோ அறிமுகமாகி ஸ்காட்டின் நெட்வொர்க்கில் இருப்பவன். ராகவ் சுற்றுலாப் பயணியைப் போல் அனுமதிச் சீட்டு வாங்கி உள்ளே சென்றான். இருப்பினும் அவனால் ஓட்டல் விருந்தினர் தங்கும் பகுதிக்குச் செல்ல இயலவில்லை. சுற்றுலாப் பயணிகளுக்கான கேளிக்கை விளையாட்டுகள் நிறைந்த இடத்தையும், ஓட்டல் விருந்தினர்களுக்கான பகுதியையும் ஒரு மிகப் பெரிய சுவர் ஒன்று பிரித்தது. ராகவால் இடத்தைச் சரியாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. இருந்தாலும் உள்ளூர்த் தகவலாளி தெரிவித்தபடி ராகவின் இலக்கு நேற்று நண்பகல் வாக்கில் நீச்சல் குளத்துக்கு வந்ததாகவும், மறுநாளும் வருவதாக அருகிலிருந்த ‘மசாஜ்’ பார்லரில் சொல்லிச் சென்றதாகவும் தெரிந்தது.
அதனால் ராகவுக்கு இரண்டு வாய்ப்புகள் இருப்பதாகத் தோன்றியது. ஒன்று – இலக்கு நீச்சல் குளத்துக்கு வரும் போது இரண்டாவது – ஓட்டலை விட்டு வெளியே செல்லும் போது. இதில் முதலாம் வாய்ப்பே சிறந்ததென பட்டது. வெளியே செல்லும் போது பாடிகார்டுகள் தொந்தரவு இருக்கும். ஃபரூக்கிற்கு ஃபோன் செய்து நீச்சல் குளத்தைப் பார்த்தவாறு இருக்கும் ஓரிடத்தை மறைவிடமாகக் கேட்டான். பலவித மொழி மற்றும் திர்ஹம் மாற்றங்களுக்குப் பிறகு ஃபரூக் ஒப்புக் கொண்டான்.
மறுநாள் ராகவ் பொருட்கள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு அதிகாலையிலேயே கிளம்பி விட்டான். ஃபரூக் அவனை முகைரா அபார்ட்மேண்டுக்கு வரச் சொல்லியிருந்தான். அங்கே போனபோது இந்தியர், பாகிஸ்தானியர் என ஏழெட்டுப் பேர் கூடியிருந்தனர். ஃபரூக் ராகவ்வை அவர்களுடன் சேர்த்து வேனில் ஏற்றினான். அவன் சொன்னதிலிருந்து அவர்கள் அனைவரும் ஓட்டல் லாண்டரியில் வேலை செய்பவர்கள் என்றும், ராகவ்வும் சலவைக்காரராக ஓட்டலுக்குள் அழைத்துச் செல்லப்படுகிறான் என்றும் புரிந்தது. அவர்களில் ஓரிருவர் ராகவ்வை வினோதமாகப் பார்த்தனர். ராகவ்வின் பையைச் சலவைச் செய்யப்பட்ட துணிகளிருந்த பையில், துணிகளுக்கு நடுவில் வைக்கச் சொன்னான் ஃபரூக். மிகவும் பத்திரமாக அவ்வாறே செய்தான் ராகவ்.
வேன் பின் பக்க வழியாக ஓட்டலுக்குள் நுழைந்தது. சலவைத் தொழிலாளர்கள் அனைவரும் இறங்கி ஓட்டல் லாண்டரிக்குள் சென்று வேலை செய்யத் துவங்கினர். ராகவ் உள்ளே சென்று சலவைத் துணி மூட்டையிலிருந்து தனது பையை எடுத்துக் கொண்டு நகர்ந்தான். ஃபரூக் அவனைப் பக்கத்திலிருந்த ஏர் கண்டிஷனர் அறைக்குள் அழைத்துச் சென்று காட்டினான். அங்கிருந்து பார்க்கும் போது நீச்சல் குளம் முழுதும் நன்றாகத் தெரிந்தது. ராகவ் அங்கிருந்த ஜன்னல் ஒன்றைத் திறந்து வெளியில் சுற்று முற்றும் பார்த்தான். அவனுக்கு நம்பிக்கை வந்தது. ஆடம் மார்க்கஸின் கதை இன்றோடு முடிந்தது என நினைத்துக் கொண்டான்.
ஆடம் மார்க்கஸ், அமெரிக்க இராணுவத்தின் உயர்மட்ட அதிகாரிகளில் ஒருவர். பல தரப்பினரிடமிருந்தும் நல்ல பெயர் சம்பாதித்தவர். ஆஃப்கன் போரில் சில உறுதியான முடிவுகளை எடுத்து அதிகப் புகழும், அதேயளவு கண்டனங்களும் ஒரு சேரப் பெற்றவர். ஆனால் சமீப காலங்களில் அவரைப் பற்றி பாதுகாப்புச் சட்டங்களை மீறிய செயல்களில் ஈடுபடுவதாக அரசல் புரசலாக செய்தி பரவத் துவங்கி இருந்தது. அதனால் தான் அவருக்குக் குறி வைக்கப்பட்டிருக்கிறது என்று தோன்றியது ராகவுக்கு.
அதிலெல்லாம் ராகவுக்கு ஆர்வமில்லை. இந்தக் காரியத்தைச் செய்து முடித்தால் கிடைக்கும் பணம். அது மட்டும் தான் முக்கியம். ஆனால் மாட்டிக் கொண்டால்? அப்படியெல்லாம் எதுவும் நடக்காது. ஃபரூக் சொன்ன மாதிரி, காரியம் முடித்தவுடன் சட்டெனப் பொருட்களை அழுக்கு துணிக்கூடையில் வைத்து வேனில் ஏற்றி விடலாம். வேண்டுமெனில் சலவைத் தொழிலாளர்களுடன் கலந்து சிறிது நேரம் வேலை செய்து கொண்டிருந்து மதிய உணவு இடைவேளைக்கு அவர்கள் வெளியில் செல்லும் போது அவர்களுடன் வெளியேறி விடலாம் என தன்னைத் தானே சமாதானம் செய்து கொண்டான். இருந்தாலும் லேசாக வியர்க்கத் துவங்கியிருந்தது அவனுக்கு.
பொருட்களை ஒவ்வொன்றாகப் பையிலிருந்து எடுத்து அசெம்பிள் செய்யத் துவங்கினான். இந்த டெலஸ்கோப்பிக் லென்ஸ் தான் எல்லாமே. அது இல்லாமல், வெறும் கண்களால் இங்கிருந்து இலக்கைப் பார்க்க கூட முடியாது. லென்ஸைப் பொருத்திப் பார்த்த போது, நீச்சல் குளத்தில் மிதந்து கொண்டிருந்த பந்தின் காற்று நிரப்புவதற்கான துளை கூடத் துல்லியமாகத் தெரிந்தது. ‘க்ராஸ் ஹேர்’ எனும் கூட்டல் குறியைப் பந்தின் துளை நோக்கி நிறுத்திய போது கை லேசாக நடுங்குவதாக உணர்ந்தான்.
‘பதட்டமடையாதே, பதட்டமடையாதே’ என உள் மனதுக்கு கேட்குமாறு சொல்லிக் கொண்டான். உள்ளங்கை சற்றே வியர்த்திருந்தது. ஏர்கண்டிஷனர் சாதனங்கள் ஓடிக் கொண்டிருந்ததால் அறை மிகவும் வெப்பமாக இருந்தது. சத்தம் வேறு. ஆனால் அதுவும் நல்லதுக்கு தான். ஷூட் செய்யும் சத்தம் வெளியே கேட்காது. லேப்டாப்பில் ஸ்காட் அனுப்பியிருந்த இலக்குகளின் படங்களைத் திறந்து வைத்துக் கொண்டான். மார்க்கஸின் முகம் பரிச்சயமானது என்றாலும் இதில் ஐயமின்றி தெளிவாக இருக்க வேண்டும். பேண்ட் பையிலிருந்து சூயிங்கம் ஒன்றை வாயில் போட்டுக் கொண்டான். பெப்பர்மின்ட் வாசம் சற்றே புத்துணர்ச்சி அளிப்பது போலிருந்தது. கருவிகளைத் தயார் நிலையில் வைத்து விட்டு, ஜன்னலுக்கு அருகே இருந்த பெரிய இரும்புக் குழாயில் சாய்ந்து நின்றான். முதுகு வலித்தது. ஊருக்குப் போனதும் ஒழுங்காக ஜிம்மிற்கு போக வேண்டுமென தோன்றியது. காத்திருக்கத் துவங்கினான்,
நீச்சல் குளப் பகுதி அதிக கூட்டமில்லாமல் இருந்தது. அவ்வப்போது சில சலசலப்புகள் தோன்றும். அப்போதெல்லாம் கருவியைக் கையில் எடுத்துக் கொண்டு கண்களைப் பொருத்திப் பார்ப்பான். யார் யாரோ வந்து போனார்கள். அரேபியப் பெண்கள், ஆண்கள், சில சமயங்களில் குடும்பத்தினருடன் குழந்தைகள் எனப் பலதரப்பட்ட மனிதர்களும் வந்து சென்றனர். சுற்றுலாப் பயணிகள் பக்கமும் அவ்வளவு கூட்டமில்லை. வார நாள் என்பதால் இருக்கலாம்.
இரண்டரை மணி நேரம் ஓடி இருக்கும். சூரியக் கதிர்கள் நீச்சல் குளத்தில் நேராகப் பட்டுக் கண்ணைப் பறிப்பது போல் தகதகத்துக் கொண்டிருந்தது. ஓட்டல் சிப்பந்தி ஒருவன் குளத்தை ஒட்டி இருந்த நாற்காலிகளை சரிச் செய்து விட்டுப் போனான். இரண்டு பணிப்பெண்கள் கோப்பைகள் அடுக்கிய தட்டுகளை எடுத்து வர இள நீல நிற நீச்சல் மேலங்கியில் ஒருவர் வந்தார், அவசர அவசரமாக ராகவ் லென்ஸ் வழியே பார்த்தான். ஆடமே தான் .. அவர் பெரிய குளிர்க் கண்ணாடி அணிந்திருந்தது அடையாளம் காண விடாமல் ராகவை சற்றே குழப்பியது. இன்னும் சற்றுப் பின்னால் நடந்து வந்தது … நாடியா. ஒல்லியான, உயரமான ரஷ்யப் பெண். மீண்டும் ஆடமுக்கு குறி வைத்து கூட்டல் குறியை அவர் முகத்துக்கு நேராக வரும்படிச் சரி செய்தான். நாடியாவைப் பார்த்த அவர் தனது குளிர் கண்ணாடியைக் கழற்றினார். அது ஆடம் தான் என்பது இப்போது உறுதியானது. நாடியா அவருக்கு மிக அருகில் வந்திருந்தாள் .. சந்தர்ப்பத்தை நழுவ விடக் கூடாது.. விசையை அழுத்த ராகவ் விரலை நகர்த்திய போது … தனது நீச்சல் மேலங்கியைக் கழற்றிய நாடியா குனிந்து ஆடமின் உதட்டில் முத்தமிட்டாள் .. அதே தருணத்தில் விசையை அழுத்தி விட்டிருந்தான் ராகவ்.
அடுத்த முப்பது வினாடிகளில் வேலையை முடித்து அங்கிருந்து அவசரமாக வெளியேறினான் ராகவ். ஓட்டலுக்கு வெளியே வந்ததும் சடுதியில் வாடகை வண்டி பிடித்து ஓட்டலுக்கு விரைந்தான். மிகவும் வியர்த்திருந்தது. கடைசி நேரத்தில் இப்படி நிகழும் என்று எதிர்ப்பார்க்கவில்லை. நாடியா குனிந்து முத்தமிடுவாள் என யாருக்கு தெரியும்? அதுவும் சரியாக அந்த நொடியில் விசையை அழுத்துவோம் என்பது ராகவே எதிர்பார்க்காதது.
மனம் துள்ளிக் குதித்தது. இது போன்ற படங்களுக்குத் தான் ஒவ்வொரு பாப்பராட்சிக் கலைஞனும் காத்திருப்பான். ராகவின் அதிர்ஷ்டம் என்று தான் சொல்ல வேண்டும். படங்கள் ஒவ்வொன்றும் அருமையாக வந்திருந்தன. ஓட்டலுக்குச் சென்றதும் எல்லாப் படங்களையும் ஸ்காட்டுக்கு அனுப்பி வைத்தான் … நாடியா ஆடமுக்கு முத்தமிடும் படத்தை தவிர. அதற்கு தனியாக விலை பேச வேண்டும்.
பொதுவாக இது போன்ற படங்களை வைத்துப் பலரிடம் விலை பேசி, சமயம் பார்த்து, படிந்து வரும் பத்திரிக்கைக்கோ / சேனலுக்கோ விற்கும் ஸ்காட்டின் தலைமை. அதற்குள் நேரடியாகச் சென்று அந்த முத்தமிடும் படத்துக்கு பெரிய தொகை ஒன்றை வாங்க வேண்டும்.
ஓட்டல் அறையைப் பூட்டி, சாவியை வரவேற்பில் கொடுத்து விட்டு விமான நிலையம் செல்ல டாக்சியை வரவழைத்தான். பெட்டியை எடுத்து வைத்த ஓட்டல் பணியாளனுக்கு அதிகமாகவே பணம் கொடுத்து டாக்சியில் அமர்ந்தான். கிடைக்கும் விமானத்தைப் பிடித்து மினியாபொலிஸ் போய்விட வேண்டும். முதல் வகுப்பென்றாலும் கவலையில்லை. உடனடியாக ஸ்காட்டுக்கு தொடர்பு கொண்டான். நீண்ட நேரத்துக்குப் பிறகு ஸ்காட்டின் குரல் கேட்டது … ‘வேலை முடிந்தது ஃபைலை அனுப்பி விட்டேன்’ என்று சொன்னான் … பதிலுக்கு ஸ்காட் பேசியது சரியாக கேட்கவில்லை. சாலையில் சென்ற ஆம்புலன்ஸ்கள் சத்தம் வேறு …இரண்டு மூன்று முறை ‘ஹலோ’ சொல்வதற்குள் தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது.
லண்டனில் சிகாகோ விமானம் செல்லும் கேட்டைக் கண்டுபிடித்து வந்தான். ஒரு காபி சாப்பிட்டால் நன்றாக இருக்குமெனத் தோன்றியது. பக்கத்தில் இருந்த காபி கடைக்கு சென்று காபி ஆர்டர் செய்தான்.. அப்போது தான் அங்கிருந்த தொலைக்காட்சியில் சி.என்.என். சேனலில் ஒடிக் கொண்டிருந்ததைக் கவனித்தான்…..
யாரோ ஒரு பெண் பேசிக் கொண்டிருந்தாள். அதிகச் சத்தமில்லாமல் வைத்திருந்ததால் அவள் பேசுவது எதுவும் கேட்கவில்லை. அந்தப் பெண்ணின் கண்களில் ஏதோ பெரிய செய்தியைச் சொல்வது போல தெரிந்தது. சட்டென்று ஆடம் மார்க்கஸின் இளமைக்காலப் புகைப்படத்தைக் காட்டினார்கள். அட, ஸ்காட் அதற்குள் படங்களை விற்று விட்டானா, அது செய்தியாக வரத் துவங்கி விட்டதா.. என்று நினைத்துக் கொண்டே கூர்ந்து கவனிக்கலானான்.
படங்களுக்குக் கீழே.. ‘Breaking News : Adam Marcus was shot dead in a hotel swimming pool in Dubai’ என்ற வரிகள் ஊர்ந்து கொண்டிருந்தன.
– மர்மயோகி
Very well written story. It was nice that hero’s role as Photographer was carried over with suspense till the end. Good work.
Well narrated. Good thriller.