\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

மாயாஜால உலகம்

இருபது, முப்பது வருஷங்களுக்கு முன்பு வாழ்க்கை என்பது எப்படி இருந்தது? எழுவோம், தயாராவோம், பள்ளிக்கோ, கல்லூரிக்கோ, அலுவலகத்திற்கோ, கடைக்கோ செல்வோம், வீடு திரும்புவோம், இடையில் சாப்பிடுவோம், உறங்குவோம். கரண்ட் பில் கட்டுவதற்கு லைன், ரயில் டிக்கெட் எடுப்பதற்கு லைன், சினிமா டிக்கெட் எடுப்பதற்கு லைன். சாயங்கால வேளைகளில் தெருவில் ஆங்காங்கே நின்று பேசிக் கொண்டிருப்போம்.

இன்று?

வாழ்க்கை எவ்வளவு மாற்றம் கண்டுள்ளது? நிற்க. எப்படி இருந்த நாம் இப்படி ஆயிட்டோம் என்று புலம்பும் கட்டுரை அல்ல இது. டெக்னாலஜியின் பரிணாமங்கள் கண்ணெதிரே நிகழ்த்திக் கொண்டிருக்கும் மாற்றங்கள் குறித்தும், இன்னும் என்னென்ன மாயஜாலங்களை வருங்காலத்தில் காண நேரும் என்கிற சிறு பார்வையே இது.

ஃபோன் என்பது பணக்காரர்களது வீட்டில் இருக்கும் சாதனமாக அன்று இருந்தது. இன்று ஒரு வீட்டில் இருக்கும் ஒவ்வொருவர் கையில் ஒன்றோ, இரண்டோ ஃபோன்கள். உடனே 2ஜி டா, ராஜா டா என்று கிளம்பாதீர்கள். இது டெக்னாலஜி டா!!

முன்பு, ஃபோன் பேசுவதற்கு மட்டும் தான் பயன்பட்டது. இன்று, ஃபோனில் இருக்கும் பல வசதிகளில் பேசுவதும் ஒன்று. இப்படி ஒவ்வொரு சாதனமும் கடந்து வந்த வளர்ச்சி ஏராளம்.

முன்பு, லைனில் நின்று கரண்ட் பில் கட்டிக் கொண்டிந்தோம் அல்லவா? இன்று அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, வீட்டிலிருந்தபடி ஆன்லைனில் பில் கட்டுகிறோம். மாதாமாதம் கணக்கில் இருந்து எடுத்துக் கொள்ளும்படி ஷெட்யூல் செய்வது இன்னொரு வசதி. இன்று அதையெல்லாம் தாண்டி, வீட்டில் வேறு ஏதாவது வேலை செய்துக்கொண்டு ஒரு ஸ்பீக்கரில் கட்டளை இட முடிகிறது. அதாவது, நடந்து சென்று, நின்று கொண்டு, எழுதி, பேசி முடிக்க வேண்டிய வேலை, ஒரு வாய் மொழி கட்டளையால் முடிகிறது.

இனி இதன் அடுத்தக் கட்டமாக எப்படி வாயையும் பயன்படுத்தாமல் மூளையின் மூலமே தொழில்நுட்பச் சாதனங்களுடன் தகவல் பரிமாற்றம் செய்யலாம் என்பது குறித்த ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.

ஒரு பக்கம், நமது வேலைகளை ரோபோ செய்யத் தயாராகி வருவதைக் காண்கிறோம். இவை நமது வீடு வரை ஏற்கனவே வந்து விட்டன. வீட்டைப் பெருக்கி, சுத்தம் செய்யும் வேக்யூம் கிளீனரில், ரோபோ வகைக் கிளீனர்கள் பல மார்க்கெட்டில் கிடைக்கின்றன. நாம் தூங்கும் போதோ, வெளியில் சென்றிருக்கும் சமயமோ, அதுவே வீடு முழுவதும் சென்று சுத்தம் செய்து விடும். செய்து விட்டு, தானே தனது இடத்திற்குச் சென்று சார்ஜ் எடுத்துக் கொள்ளும். அதற்கு நமது துணை தேவையில்லை. நமக்குத் தான் அதன் துணை தேவைப்படும்.

இன்று வீட்டில் பாத்திரம் கழுவுவது, துணி துவைப்பது அனைத்தையும் ஏற்கனவே மெஷின்கள் தான் செய்கிறது. துணிகளை, பாத்திரங்களை எடுத்து மெஷினுள் போட்டு, எடுக்கும் வேலையைத் தான் சில காலமாய்ச் செய்து வருகிறோம். அயர்ன் செய்து, மடித்துக் கொடுக்கும் மெஷின்கள் தயாராகி வருகின்றன. வீட்டில் ஆங்காங்கே கிடக்கும் துணிகளைப் பொறுக்கி, துவைக்க எடுத்துச் செல்லும் ரோபோக்களும் கூடிய விரைவில் வரும். சமையல் அறையில் சமைத்துக் கொடுக்கும் ரோபோக்களை ஒரு லண்டன் நிறுவனம் தயாரித்து வருகிறது. அடுத்த வருடம் அதுவும் மார்க்கெட்டில் கிடைக்கும்.

இப்படி வீடெங்கும் ரோபோக்களின் ஆதிக்கம் பரவப்போகிறது. கணவனும் மனைவியும் பகிர்ந்துக்கொள்ளும் வேலைகள் குறைந்து, மிகச் சுருக்கமாகப் போகிறது. அதிலும் ரோபோக்கள் எவ்வளவு பங்கு போடப்போகிறது என்று தெரியவில்லை. எந்திரன் படத்தில் ஐஸ்வர்யா ராயிற்கும் சிட்டி என்ற ரோபோவுக்கும் இடையில் டூயட் இருந்தது. 2.0 படத்தில் ‘எந்திரலோகத்து சுந்தரியே’ என்று ரோபோவுக்கும் ரோபோவுக்கும் டூயட் வைத்து இருக்கிறார்கள். ரோபோவுக்கும் மனிதர்களுக்கும் இடையேயான உணர்ச்சி பெருக்கெடுக்கும் திரைக்காவியங்கள் வருங்காலத்தில் வந்து குவிவது நிச்சயம்.

வீட்டிற்குள் மட்டும் இல்லாமல் வெளியேயும் கார் ஓட்டுவது, ட்ரக் ஓட்டுவது என அதிலும் இயந்திரமயமாக்கம் இல்லாமல் இல்லை. டெஸ்லா நிறுவனம் சென்ற வாரம் தானியங்கி ட்ரக் பற்றிய அறிமுகத் தகவல்களை வெளியிட்டு உள்ளது. மிக அதிக வேலை பளு கொண்ட ஒரு ட்ரக் ட்ரைவரின் வேலையை வெகுவாக குறைக்கும் திறன் கொண்டதாக இந்த ட்ரக் அமையவிருக்கிறது. இந்த உற்பத்தி அடுத்த வருடத்தில் இருந்து துவங்க இருக்கிறது. ஏற்கனவே கார்களில் தானியங்கும் தன்மை உயர்ந்துக்கொண்டே வருகிறது. டெஸ்லா, கூகிள் வேமோ, ஆடி, ஃபோர்ட், வோல்க்ஸ்வேகன் எனப் பல நிறுவனங்கள் இவ்வகைக் கார்களைச் சாலைக்குக் கொண்டு வர கடந்த சில வருடங்களாக உழைத்துக்கொண்டிருக்கின்றனர்.

இன்னொரு புறம், மூளையைக் கம்ப்யூட்டருடன் இணைத்து, அதன் மூலம் கணினிக்கு எப்படிக் கட்டளைகளை அனுப்பலாம் என்ற ஆராய்ச்சியில் கூகிள், ஃபேஸ்புக், கெர்னல் போன்ற நிறுவனங்கள் தொடர்ந்து முயன்று வருகிறார்கள். இதன் மூலம் எதையும் தொடாமல், பேசாமல், டெலிபதி என்று சொல்வோமே, அது போல் கணினியைக் கையாள முடியும். நாம் ஒன்றை நினைப்பது மூலம், ஒருவகைச் சிக்னலை உருவாக்கி அதைக் கொண்டு கணினியில் ஒரு வேலை செய்ய வைப்பதாகும் இது. உதாரணத்திற்கு, ஒரு எழுத்தாளர் ஒருவகை ஸ்பெஷல் தொப்பிப் போட்டுக்கொண்டு ஒரு கதையைச் சிந்திக்க, சிந்திக்க, அது அவரது கணினியில் கதையாக எழுதப்பட்டு வரும்.

இப்படி நாம் கற்பனை செய்திராத, சயின்ஸ் ஃபிக்ஷன் கதைகளில், படங்களில் பார்த்த விஷயங்களைத் தனிப்பட்ட ஆராய்ச்சியாளர்களும், பெரும் நிறுவனங்களும் முயன்று வருகிறார்கள். முப்பது வருடங்களுக்கு முன்பு நாம் வாழ்ந்த வாழ்க்கைக்கும் இப்போதைய வாழ்க்கைக்கும் இருக்கும் வித்தியாசங்களை விட, அடுத்தப் பத்து வருடத்தில் நாம் காணப்போகும் வித்தியாசங்கள் பெரிதாக இருக்கப் போகிறது.

  • சரவணகுமரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad