\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

பக்த விஜயம்

ஒவ்வொரு யுகங்களுக்கும் ஒவ்வொரு பக்தி முறை உண்டென்பது சாஸ்திரம் வகுத்த விதிமுறை. அந்த வழியே கலியுகத்தில் இறைவனை உணர நாம சங்கீர்த்தனம் மட்டுமே போதுமானது. கலியின் ப்ரவாகத்தில் கரை சேர வழி உண்டென்றால் அது நாம சங்கீர்த்தனம் என்ற கயிறே.

“சங்கீத ஞானமு பக்தி வினா” என்று த்யாகப்ரஹ்மமும், “காயன பாடிதவா ஹரி மூர்த்தி நோடிதவா ” என்ற புரந்தர தாஸரின் பாடல் வரிகளும்  மனதில் வந்து போயின.

‘க்ளோபல் ஆர்கனைசேஷன் ஆஃப் டிவினிட்டி மினசோட்டா’ (Global Organization of Divinity Minnesota) எனும் நிறுவனம்  ஒருங்கிணைத்திருந்த “பக்த விஜயம்” நிகழ்ச்சியில், குருநாதர் ஸ்ரீ ஸ்ரீ முரளிதர சுவாமிஜியின் பிரதான சீடரான ஸ்ரீ பூர்ணிமா ஜி அவர்களின் உபன்யாச கச்சேரி நாலு நாட்கள் பக்தி மார்க்கத்தினையும்  நாம சங்கீர்த்தனத்தையும்  கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தியது.

முதல் நாள் மீரா பாயின்  சரித்திரக்  கதையோடு தொடங்கியது. மீராவின் பஜனைகளோடு அவரின் பிரேம பாவமே உருவான வாழ்க்கை சரித்திரம் கேட்ட பொழுது, என்ன ப்ரேமம் ? என்ன பக்தி ? எப்படி கிருஷ்ணரையே தன் உயிராக கொண்டு கண் முன் ஒருவர் வாழ்ந்து இருக்கிறார்? என்று எண்ணி எண்ணி உருகாமல் இருக்க முடியவில்லை. பூர்ணிமா ஜீ உணர்ச்சியான குரலோடு கதையைக் கூறும் பொழுது  பல இடங்களில் அவரே மீராவாக மாறிப்  போனார்.

மீராவின் கிருஷ்ண பக்தியில்  மனம் உழன்று சுற்றியபடியே இருந்தபொழுது, மறு நாள் தியாகப்ரஹ்மத்தின் சரித்திரம். ராம பக்தியில் திளைத்து உருகிய த்யாகய்யரின் அந்தப் பக்தி ரசம் நமக்குள்ளும் ஊற்றெடுக்கத் தொடங்கி விட்டது.

மூன்றாவது நாள் ஜெயதேவர் அவர்களின் சரித்திரம் . ஜெயதேவரின் அஷ்டபதிகளை அழகாக பாடிய குழந்தைகளோடு நாமும் அவரின் குடிலில் அவர் பாடலைக் கேட்டு, பத்மாவதியின் நடனங்களை ரசித்தோம். முகாரியில் “ப்ரிய சாரு ஷீலே ” என்ற பாடலுக்கு நம்மையும் அறியாமல்  கண்களில் கண்ணீர் புரண்டது . பக்தி மார்க்கத்தின் சுவையையும்,  பேரானந்தமும் அனுபவப்பூர்வமாக உணர்ந்தோம்.

இந்தப் பக்தி மார்க்கத்தின் கோலாகல கொண்டாட்டத்தை நிறைவு செய்யும் விதமாக நான்காம் நாள்  மதுர கீதங்களோடும், அஷ்டபதிகளோடும், சம்பிரதாய பஜனைகளோடும், ஸ்வாமி புறப்பாடு, என ராதா கல்யாண மஹோத்சவம் நடைபெற்றது.

பக்தி பாவம் வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. அது மனதிற்கு மட்டுமே புரியும் ஒன்று.  நான்கு நாட்களும் அந்த உபன்யாசக் கச்சேரியில் கலந்து கொண்டு ரசித்த அனைவரும் அதையே உணர்ந்திருப்பர் .

நிகழ்ச்சியை  ஒருங்கிணைத்த நல்லுள்ளங்களுக்கும், உணவு தயாரித்த தன்னார்வலர்களுக்கும், பாட்டுடன் இசை கூட்டிய கலைஞர்களுக்கும், இறைவனைக் கண் முன் நிறுத்திய பூர்ணிமா ஜி அவர்களுக்கும் குருநாதரின் அருள் நிச்சயம் உண்டு என்று பணிவுடன் சொல்லி, மீண்டும் அடுத்த வருடம் இதே போன்றதொரு  கச்சேரிக்குக் காத்திருப்போம்.

-லக்ஷ்மி சுப்பு

Tags: , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad