\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

கோடை மழை

Filed in கதை, வார வெளியீடு by on December 10, 2017 0 Comments

மூணு மணிக்கெல்லாம் இருட்டிட்டு வந்தது. இன்னும் செத்த நேரத்துக்கெல்லாம் மழை புடி புடினு புடிக்கப்போவுது. கல்லு வீட்டு மாடியில் காயவைத்திருந்த சோத்து வத்தலை அதைப் பிழிந்து வைத்திருந்த புடவையோடு சுருட்டிக் கொண்டு ஓடி வந்து வீட்டில் ஒரு அறையின் மூலையில் வைத்துவிட்டு திரும்புகையில் மின்சாரம் போனது.

“புடுங்கிட்டான் கரண்டை.. இனி எப்ப வருமோ..?” -அம்மா

“இடியும் மின்னலுமா இருக்குன்னு நிறுத்தி இருப்பான்.. மழை விட்டொடனே குடுத்திடுவான்”.- அப்பா.

“தோட்டத்துல கிடக்குற அந்த காஞ்ச செராவை (சிறியதாக பிளக்கபட்ட மர துண்டுகள்) ஆளுக்கு நாலு கையா எடுத்து வந்து அடுப்படியில் போடுங்கப்பா. மழையில நனைஞ்சிட்டா அடுப்பெரிக்க ஒண்ணும் இல்ல. ஓடுங்க.. ஓடுங்க..” என அம்மா சொல்லிக்கொண்டிருந்தாள்.

“ஏன் ஸ்டவ் என்னாச்சு? என்றார் அப்பா. இந்த மாசம் எங்க மண்ணெண்ணெய் போட்டான்..? இவனோட எழவு பெரிய எழவால்ல  இருக்கு” என சலித்துக்கொண்டாள் அம்மா.

திடீரென்று ஞாபகம் வந்து அப்பா சொன்னார், “பாத்தியா.. இந்த கிழக்கால செவுத்துக்குக் கீத்து கட்டணும் வாடான்னு சொன்னேன்.. இந்தா வரேன்.. அந்தா வரேன் னு… கம்னாட்டி இன்னும் வரல.. சரி விடு..  இந்த  கோடை மழைக்கு ஒண்ணும் ஆகாது.. மழை காலம் வரதுக்குள்ள கீத்து கட்டிடணும்” என அப்பா அதற்கு சமாதானமும்  சொல்லி கொண்டிருக்கும் போதே மடார்..!! மடார் ..!! என இடி இடிக்க தொடங்கியது.

“நல்லா இடி இடிக்குது, பெரியவன வெளில போக வேணான்னு சொல்லுங்க-“ எச்சரித்தாள் அம்மா.

“டேய் .. டேய்.. அந்த ஆண்டெனா ஒயரை புடிங்கி விடு.. இடி மின்னல் அடிச்சா டிவி அடி வாங்கிடும்.” என்றார் அப்பா.

மின்சாரம் இல்லாத குறை வெளிச்சத்தில் குத்து மதிப்பாக கையை விட்டு ஆண்டெனா ஒயரை பிடுங்கி விடும்போதே சட.. சட.. வென பெரும் தூத்தலோடு மழை ஆரம்பித்திருந்தது..மிக குறுகலாகவும் இல்லாமல் அகலமாகவும் இல்லாமலிருந்த சாலையின் இருபுறமும் நெருக்கமாக  வீடுகள் கொண்ட  எங்கள் கிராமத்தில் மனிதர்களின் சத்தத்தைக் குறைத்து, மழை பேசத் தொடங்கியிருந்தது..

வீட்டின் கூரை நன்றாக முன் பக்கமாக நீண்டு, சற்று தாழ்வாக கட்டப்பட்டிருந்ததால் சாரல் தெறிக்க வாய்ப்பில்லாத எங்கள் வீட்டின் திண்ணையில் மழையைப் பார்த்த படி அமர்ந்து கொண்டேன். வீட்டை அடையும் முன்பே மழை வலுக்கத் தொடங்கி இருந்ததால், எங்கள் திண்ணையில் ஒதுங்கி இருந்தனர் இருவர். பழுப்பு நிறத்தில், காதின் அடியில் உண்ணிகள் இருக்கும் என் நாய் டாமி அருகில் இருந்த சணல் சாக்கில் படுத்துக்கொண்டது. மழை வலுத்துப் பெய்துக் கொண்டிருந்தது. யாரும் யாரையும் பார்க்கவோ பேசவோ இல்லை.. மழையையே பார்த்துக் கொண்டிருந்தோம். எங்கள் வீட்டின் எதிர் சாரியில் இருந்த வீடுகளிலும் மனிதர்கள் எங்களைப் போலவே மழை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.. இத்தனைப் பார்வையாளர்களைப் பேச்சிழக்க வைத்த மழை, ஆடியது ஒரு பெரும் நடனம், இயற்றியது ஒரு மயக்கும் கவிதை, நடத்தியது  பல பக்கச்  சொற்பொழிவு, பாடியது  ஆக்ரோஷமான ஒரு பாடல்.. இன்னும்  எது எதுவோ..

ழை இரைந்து கொண்டிருந்தது. மனம் அமைதியாகிவிட்டிருந்தது. சிறிய ஒன்றைப் பெரியது அழித்து விடுகிறது அல்லது இன்னும் சிறுமைபடுத்தி அதைக் காணாமல் செய்துவிடுகிறது. இப்படியான மனதில் ஏதுமற்ற அபூர்வமான கணங்களை மழை  மட்டுமே நமக்குப் பரிசளிக்கிறது. மேகம் நிரந்தரமாக இருந்தது. குறைந்தது இன்னும் ஒரு மணி நேரமாவது மழை பெய்யக்கூடும். பூமியின் சூடு தணிந்து லேசாகக் குளிரத் தொடங்கியிருந்தது. இந்த நேரத்தில் ஒரு டீயும் மிளகாய் பஜ்ஜியும் சாப்பிடலாம் என்றெல்லாம் எனக்குத் தோன்றாததுக்கு காரணங்கள் இருந்தன. ஒன்று, டீ போட வேண்டும் என்றால், பால் வாங்க பத்து வீடு தள்ளியுள்ள போஸ்ட் மாஸ்டர் வீட்டுக்குச் செல்ல வேண்டும். அவர்கள் வீட்டு பசு மேய்ச்சல் முடிந்து திரும்பியிருக்காது. மழையில் எங்காவது ஒதுங்கி இருக்கும், அப்படியே வந்திருந்தாலும், இப்போது எப்படி பால் கறப்பார்கள். இன்னொரு காரணம், மிளகாயில் பஜ்ஜி போடுவார்கள் என்ற விஷயமே எனக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை. தவிர இதையெல்லாம் யோசிக்க மழை விடவில்லை.  

நின்று, நிதானமாக பெய்து கொண்டிருந்த மழையால் தெருவெங்கும் தண்ணீர் ஓடியது. இப்போதும் நான், மழைக்கு ஒதுங்கிய இருவர், டாமி எல்லோரும் மழையையே பார்த்து கொண்டிருந்தோம். ஓடும் தண்ணீரில் ‘கமல்’ என்று எழுதப்பட்ட, சற்றே மொத்தமான காகிதத்தில் செய்யப்பட்ட கப்பல் மிதந்து வருகிறது. அது கமல் என்பவன் விட்ட கப்பலாக இருக்கலாம். கமல் என்பவனுக்கு விடப்பட்ட கப்பலாக இருக்கலாம் அல்லது கமல்ஹாசன்  ரசிகன் விட்ட கப்பலாகவும் இருக்கலாம். இது ஒரு காதலுக்கான விண்ணப்பமோ, காதல் ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கான சமிக்ஞையோ, அன்பின் அடைக்கலம் தேடி அலையும் ஒரு எளிய நெஞ்சமோ.. யாருக்குத் தெரியும்? இந்த கப்பல் நீரின் ஓட்டத்தில் கடைசி வரை செல்லலாம், வழியில் எதிர்ப்படும் ஒரு மரத்தின் வேரில் சிக்கிக்கொள்ளலாம், யாரும் இல்லாத ஒரு பாழடைந்த வீட்டின் முன் யாருக்கவோ காத்திருக்க தொடங்கலாம், சற்றே பலமாக பெய்யும் இந்த மழை, இந்த நம்பிக்கையின் கப்பலைச்  சிதைத்து மீண்டும் வெறும் தாளாக  மாற்றி விடலாம்.    எது எப்படியோ,  அந்தக் கப்பல் இப்போது என் வீட்டைக் கடந்து போய்விட்டது.

ழை இப்போது விடத் தொடங்கியிருந்தது. எங்கள் திண்ணையில் ஒதுங்கியிருந்த இருவர் வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.. பளிச்சென எல்லா வீடுகளிலும் விளக்கு எரியத் தொடங்கியது, மழையின் சங்கீதம் நின்று இப்போது மனிதரின் இரைச்சல் கேட்கத்  தொடங்கியது.. முழுவதும் மழை விட்டிருந்த தெருவில் பால் வாளியை எடுத்து கொண்டு போஸ்ட் மாஸ்டர் வீடு நோக்கி நடக்கத் தொடங்கினேன்.

 

-மனோ அழகன்

Tags: ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad