எதிர்பாராதது…!? (பாகம் 4)
உறக்கமின்றிப் புரண்டு கொண்டிருந்தான் பிரேம்குமார். திரும்பத் திரும்ப அவன் கை, அடிபட்ட அந்தக் கன்னத்தை நோக்கியே சென்று, தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தது. தடம் தெரிகிறதா என்று எழுந்து சென்று கண்ணாடியின் முன் அமர்ந்து கூர்மையாகப் பார்த்தான். பளிச்சென்று தெரிந்தது.. நான்கு விரல்கள் அப்படியே பதிந்திருந்தன. மேக்கப் கலைத்த பின்பு தெரியாது என்றுதான் நினைத்தான். அந்த அளவுக்கு ஆழமான, அழுத்தமான அடி. மனதுக்குள் ரணம் புகுந்திருந்தது வேதனைப்படுத்திக் கொண்டிருந்தது. எரிச்சல் அதிகமாகி, வெறியைக் கிளப்பிக் கொண்டிருந்தது. படுக்கையின் மேல் ஓங்கிக் குத்தினான்.. புகையைப் போல் உள்ளே பதுங்கியிருந்த காற்று குபீரென்று வெளிக் கிளம்பியது. நாசியைத் தூசி நெருடியது. …
ச்சே…!! என்ன ஒரு அவமானம்…? தடம் பதிந்த விரல்கள். தன்னைத் தழுவ வேண்டிய விரல்கள். அத்தனை வீர்யத்திலும் உணர்ந்த அந்தக் கட்டுறுதி.. அவள் கையை அப்படியே பிடித்து அழுத்தி, விடுபடவிடாமல் கண்களை மூடி….அந்தப் மென்மையை உணர்ந்திருக்க வேண்டும். தனியே அது வாய்க்கவில்லை. பொது இடமாகிப் போன அவலம். பலர் கண்களும் இவர்களை நோக்கி….எல்லோரும் பார்க்க நடந்து முடிந்த கேவலம்.
“ஸாரி… ஸாரி… எதோ தெரியாம நடந்து போச்சு ….மனசு சரியில்லை ….ப்ளீஸ் மறந்திடு”…- மனம் ஒப்பித்தான் சொன்னாளா அல்லது நாடகமா?
காரின் ஆக்ரோஷமான உறுமலில் அவள் வார்த்தைகள் காதில் விழுந்து காணாமல் போயின. பின்னாலேயே சற்று தூரம் ஓடி வந்தது போல்தான் இருந்தது. அதெல்லாம் கற்பனை… அவளாவது, ஓடி வருவதாவது? அவள் ஸ்டேட்டஸ் என்னாவது? உண்மையா அல்லது அதுவும் பிரமையா? அவள் தன் பின்னால் வர வேண்டும் என்பதுதானே அவன் விருப்பம்? யூனிட்டே பதறி நின்றதைப் பார்க்க முடிந்தது.
அவளின் டச் அப் பார்கவி… கவனித்து விட்டாள். காட்டிக் கொள்ளவில்லை. அந்த நாசூக்கு அவளுக்கு இருக்கிறது. என்ன இருந்தாலும் முதலாளி. வேலை போய்விடும் என்கிற பயம்.
கூட்டத்தோடு கூட்டமாய் ஆடிக் கொண்டிருந்தவளுக்கு நான் கொடுத்த வாழ்வு. அவளின் அழகை அடையாளம் கண்டு கொண்டதற்கான பலன். திறமையை அறுதியிட்டதற்கான பரிசு. முதல் படத்திற்குப் பிறகு இப்பொழுதுதான் அவளோடு கூட்டு சேர்கிறான். சில படங்களை வெளியில் செய்து விட்ட மமதையா? அந்தச் சிலதில் சில உச்சத்திற்குப் போனதால் இவளும் எட்டா உயரத்திற்குப் போய்விட்ட கர்வமா?
“நீங்க பண்ணினது பெரிய தப்பு சார் ….எப்போ உங்களோட சேர்ந்து முதல் படம் வெற்றியாச்சோ, அப்பவே அந்த நந்தினியைக் குறைஞ்சது அஞ்சு வருஷத்துக்காவது எங்கூட நடிக்கணும்னு சொல்லியிருக்கணும்…சினிமா உலகம் அவளுக்கு நல்லாப் புரியறதுக்கு முன்னாடி ஒரு சரியான ஆளை வச்சு அவளைக் கோழி அமுக்கிறமாதிரி அமுக்கியிருக்கணும். சின்னக் கையெழுத்துதான்னு ஒரு கான்ட்ராக்டைப் போட்டிருக்கணும். …உங்க பின்னாடியே நாய் மாதிரிச் சுத்தினாள். இன்னைக்கு இப்டியா?” – ஏற்றி விட்டான் மானேஜர் ராஜரத்னம்.
“நடிகைகளை அறிமுகப்படுத்தினா, டைரக்டர்கள் கான்ட்ராக்ட் போடுறதில்லையா? அதுபோலத்தான். வேறே எந்தக் கம்பெனியிலும் ஒப்புக்கக் கூடாதுன்னு…! உங்க பேர்ல அம்புட்டு மரியாதையா இருந்த பொண்ணு… விட்டுட்டீங்க….. இப்போ இந்தப் படம் உங்களோடதான…. மாட்டேன்னா சொல்லிச்சு….? நீங்க சொன்னா மறுக்கவா போகுது…? அவங்க நினைப்பு உயரத்துக்குப் போறதுக்கு முன்னால உங்க அன்பால நிறுத்தியிருக்கணும்… முதல் படம் முடிஞ்சவுடனே அடுத்தடுத்து இதுன்னு ஒரு அடையாள ஒப்பந்தம் பண்ணியிருக்கணும்… யாரும் செய்ததில்லைன்னுட்டீங்க… புதுசா செய்தா என்ன? மாட்டேன்னு சொல்லியிருக்குமா? வழியில்லாமத்தானே உங்ககிட்டே வந்திச்சு? அன்னைக்குத் தேதிக்கு அதுக்குச் சம்பளம் கூட அதிகமில்லை…விட்டுட்டீங்களே? உங்க பேர்ல எவ்வளவு மரியாதை இருந்திச்சு….நம்ம வீட்லயே பழியா கிடந்திச்சுல்ல….?”
மரியாதை என்கிறான். இன்று நடந்தது எப்படி அதன் அடையாளம் ஆகும். அவளுக்குள் வேறு எண்ணங்கள் நுழைந்திருக்கிறது. தனியாக வெல்ல வேண்டும் என்கிற வெறி புகுந்திருக்கிறது. ஒரே நாயகனுடன் நடிப்பதில் பலனில்லை என்று நினைக்கிறாளோ? வேறு நாயகன் ஆசை வந்து விட்டதோ? ரெட்டை நாயகன் கதை தேர்வு செய்கிறாளோ? பலமான யோசனை வந்தது பிரேமுக்கு.
ராஜரத்னம் சொல்வது சரிதான். அவன் வெறும் பி.ஏ., மட்டுமல்ல. அவ்வப்போது தனக்கு வேண்டிய தேவையான ஆலோசனைகளைச் சொல்பவன். என்ன இருந்தாலும் தூரத்து உறவினன். அந்தப் பாசம் விட்டுப் போகுமா? சார்…சார்…என்றுதான் இன்றுவரை அழைப்பான். அண்ணே… என்று சொல்ல வராது.. பங்களாவில் இருக்கும்போது கூடச் சரி….அவன் வார்த்தைகள் வரம்பு தாண்டியதில்லை. தனிமையிலேயே இப்படி என்றால், பொது இடத்தில், படப்பிடிப்பு நடக்கும் இடங்களில் கேட்க வேண்டுமா? கழுத்தில் தொங்கும் துண்டைக் கூட கையில் பணிவாக எடுத்து வைத்துக் கொண்டு பத்தடி தள்ளித்தான் நிற்பான் ராஜரத்னம்.
பாரு, என்று கண்ணைக் காண்பிப்பான் பிரேம். அந்த பாஷை அவனுக்கு மட்டும்தான் புரியும்.
“கவனிச்சியா ?”
“ம்ம்ம்….”
“.அத்தனை கூட்டத்துலயும் துல்லியமாத் தெரியுறா பாரு…..”
“பேசாமக் கலியாணம் பண்ணிக்குங்க சார்….” சொல்லியே விட்டான் ஒரு நாள். ரத்னமா சொன்னது இதை? பிரேமுக்கே ஆச்சரியம். என் மீதுதான் அவனுக்கு எவ்வளவு பிரியம்.
“அதத்தான் நான் சொல்லிட்டேயிருக்கேன்…நீங்க கேட்க மாட்டேங்குறீங்க….ஒரு ஒப்பந்தத்த ஏத்தீங்கன்னா…. கூடவே இருத்திக்கிற வேண்டாமா?”
“கமிட் ஆயிருச்சேப்பா…..இந்த டைரக்டரே புக் பண்ணியிருக்கானே….ரெண்டு படத்துக்கு…? “
“இருக்கட்டும்….ஒரு வருஷத்துல முடிச்சிற மாட்டாரா? ராப்பகலா ப்ளான் பண்ணுவாரே…? பிறகு? என்னோட செய்யணும்னு சொல்லிக் கூப்பிடுங்க…..“
“வருவாளா? “
“வராம என்ன? நீங்க அறிமுகப்படுத்தலேன்னா யார் சீந்தப் போறா? “
“அது அறிமுகப்படுத்தினபோது இருந்த நிலைமை. இன்னைக்கு அப்படியா? அவள் சொன்னாத்தான் என்னையே போடுவாங்க போலிருக்கு…“
“நீங்களா ஏன் சார் குறைச்சு நினைச்சிக்கிறீங்க? இன்னைக்கும் உங்களுக்குன்னு ஒரு பேரு இருக்கத்தானே செய்யுது…ஹீரோ எங்க பிரேம்தான் வேணும்னு ரசிகர்கள் விரும்புறதை எழுதறாங்கல்ல….
சினிமாவுல எங்கயாச்சும் ஒரு ஹீரோயினை கதாநாயகன் அறிமுகப்படுத்தின நிகழ்ச்சி நடந்திருக்கா? மாமாங்கமாக் கூட இல்லை…அதுக்கெல்லாம் பெரிய மனசு வேணும்… நீங்க செஞ்சீங்க… அத வெளில எவனாவது சொல்றானா பார்த்தீங்களா? கிசு கிசு வந்திச்சு… அத்தோட சரி… எத்தனை பேர் புரிஞ்சிக்கிட்டிருப்பாங்க…இன்னைக்கு நந்தினியே சொல்லாதே…! ஒரு பேட்டிலயாவது சொல்லியிருக்கா உங்க பெயரை? அதோட தம்பிக்காரன் ஒருத்தன் இருக்கான்ல…அப்பப்போ தலையைக் காட்டுறானே… அவனப் பிடிங்க…..“
“அவனையெல்லாம் கூப்டுப் பேசணும்ங்கிறியா? அவனெல்லாம் ஒரு ஆளாப்பா? நான்பார்க்க உள்ளே நுழைஞ்சவன் அவன். நான் அறிமுகப்படுத்தினவ அவ… அவகிட்டப் பேசறதுக்கு எனக்கு சிபாரிசா? “
“நீங்கன்னா நீங்களா? உங்க பேரைச் சொல்லிக் கூப்பிட்டு விடுறேன்….நான் பேசறேன்…எப்டி மடக்கணுமோ அப்டி….“
ஒப்புதலாய்த் தலையாட்டினான் பிரேம்குமார். எப்படியாவது அவளைப் படிய வைக்க வேண்டும் என்ற வெறி வந்தது அவனுக்கு.
– உஷாதீபன்