\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

நியூ இயர் ரெஸொல்யூஷன்

Filed in கதை, வார வெளியீடு by on December 31, 2017 1 Comment

ன்னா… அடுத்த வாரம் வருஷப் பொறப்பு… என்ன ரெஸொல்யூஷன் எடுக்கறதா இருக்கேள்?..”

ஏதோ பொடி வைத்துக் கேட்கிறாள் என்பதாக உணர்ந்த கணேஷ், உஷாரா இருக்கணும் என்ற உள் மனக் குரலுக்கு மதிப்பளித்து, “ஏன்.. ஏன் கேக்குற?” என்று பொதுப்படையாகக் கேட்டு வைத்தான். ”இல்லன்னா.. எல்லாரும் ஏதேதோ ரெஸொல்யூஷன் எடுத்துக்கறாளே.. அது போல நீங்களும் ஏதாவது கெட்ட பழக்கத்த விடப்போறேன்னு சொல்லுவேளோன்னு பாத்தேன்” என்றாள் லக்‌ஷ்மி.

”ஏண்டி, நோக்கு ஏன் இந்த வம்பு? நான் பாட்டுக்கு தேமேனு டி.வி. பாத்துண்டு இருக்கேன்.. என்ன ஏண்டி உன் வம்புக்கு இழுக்குறே?”

“இல்லன்னா… நியூ இயர்னு பேரச் சொல்லிண்டு ஏதாவது நல்லது பண்ணலாமேனுட்டு… சொல்லுங்கோ, ஏதாவது மனசுல வச்சுண்ட்ருக்கேளா?”..

”ஏய்.. படுத்தாதடி.. ஒண்ணா, ரெண்டா கெட்ட பழக்கம்… எதனு விடுறது! தவிர, விடுறதுனு ஆரம்பிச்சாலும் வருஷம் முழுக்க அந்த டிடர்மினேஷனும் இருக்குறது இல்ல… அதுனால “

“கமான் னா…” என்று இழுத்த லக்‌ஷ்மி, அதனைத் தொடர்ந்து ஒரு எகத்தாளக் குரலில், “அது சரி, நான் சொன்னா கேப்பேளா? அதுக்கெல்லாம் ஒரு இது வேணும்….” என்று முடித்தாள்.

இவள் எதை மனதில் வைத்துச் சொல்கிறாள் என்று அறிந்து தானிருந்தான் கணேஷ். பெரிய காந்தி மகாத்மா என்று நினைத்துக் கொண்டு ஏதோவொரு மூடில், தன் பழைய காதலைப் பற்றியும், இருபத்தி ஐந்து வருடங்களுக்கு முன்னர் ஒரு ஆங்கில வருடப் பிறப்பில் நடைபெற்ற நிகழ்வுகளையும் இவளிடம் கூறியதன் விளைவே இது. சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுதெல்லாம் ஜாடை மாடையாகப் பேசுவதற்குத் தவறுவதில்லை.

”அதுக்கெல்லாம் ஒரு இது வேணும்” என்ற மனைவியின் கடைசி வார்த்தைகளே காதில் ரீங்காரமிட, லிவிங்க் ரூமிலிருந்து எழுந்து சென்று பாத் ரூமில் அமர்ந்து கொண்டான் கணேஷ். யாரும் தொந்தரவு செய்ய முடியாத இடம் என்ற தைரியத்தில், தனது ஃபோனையும் எடுத்துக் கொண்டு உள்ளே சென்று அமர்ந்தான். மெதுவாக, ஃபோனில் இருந்த பழைய ஃபோட்டோஸை ஃப்ளிப் செய்து பார்த்துக் கொண்டே இருந்த கணேஷிற்கு, சில வருடங்களுக்கு முன்னர் க்ளாசட்டைச் சுத்தம் செய்கையில் கிடைத்த ஃபோட்டோவை ஃபோனில் க்ளிக் செய்து நினைவாக வைத்திருந்த அந்தப் படம், திடீரெனப் பளிச்சென்று உதித்தது.

கோவைப்பழ இதழ்களைச் சற்றே விரித்து, முத்துப் போன்ற பற்களைச் சிறிதாகக் காட்டி மெச்சூரான சிரிப்பில் அந்த ஃபோட்டோவில் இருந்த அவள் ஒரு காலத்தில் கணேஷின் மொத்த உலகம். காலையில் எழுந்ததிலிருந்து இரவு படுக்கைக்குப் போகும்வரை அவளிடம் பேசாத, அவளைப் பற்றி நினைக்காத ஒரு வினாடியும் இருந்ததில்லை கணேஷிற்கு. பாரதி என்ற அவளது பெயருக்காக மட்டுமே அவளுடன் அறிமுகப்படுத்திக் கொண்டான் மகாகவியின் மீது மிகவும் ஈடுபாடு கொண்டிருந்த கணேஷ். அந்த அறிமுகம், நட்பாகத் தொடர, தமிழுக்கு அவ்வளவாக அறிமுகமில்லாத பாரதியை, அந்தப் பெயர் மீது கொண்ட ஈர்ப்பாலேயே தொடர ஆரம்பித்தான் கணேஷ். அவர்களது நட்பு மிக விரைவிலேயே காதலாக மலர்ந்தது. அவனிடம் அவள் தமிழ் கற்க ஆரம்பித்தாள்; அவளிடம் அவன் ஆங்கிலப் புலமை பயில ஆரம்பித்தான். தனியாகச் சந்திக்கையில் படிப்பையும், படித்த விஷயங்களையும் பேசுவதுகூட காதல் என்பது அவர்களைப் பார்த்த பின்புதான் உலகத்திற்கே விளங்கியிருக்கும்.

“கணேஷ், நோக்கு இவ்வளவு தமிழ் நாலெட்ஜ்… கேக்குறதுக்கே எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா… ஃபர்ஸ்ட் டைம் ஐ ஃபீல் ஃபார் நாட் பீயிங்க் வெல் வெர்ஸ்ட் வித் டமில்…” பாரதியின் ஏக்கத்தில் உண்மையும், காதலும் ததும்பியது. “கமான் பாரதி; ட்வெல்த் வரைக்கும் தமிழ் மீடியம்… இங்கிளீஷையே தமிழ்ல படிச்சவன் நான்… என்னையே இவ்வளவு சரளமா இங்க்ளீஷ் பேச வச்சது; அதைவிட இம்பார்ட்டண்ட்டா இங்க்ளீஷ்ல பேசற கான்ஃபிடன்ஸ் கொடுத்தது எல்லாமே நீதான்… பொதுவா ஆம்பளேள் பொம்மனாட்டி தன்னைவிட புத்திசாலியா இருக்குறத ஏத்துக்கமாட்டானு நெனச்சுண்டு இருந்தேன்… பட் ஐ ஃபீல் சோ ஹேப்பி தட் ஐ காட் அ கம்பேனியன் லைக் யூ…. அதர்வைஸ் ஐ வுட் ஹேவ் நெவர் பீன் ஏபிள் டு கெட் க்ரேட் அட் தட் லாங்க்வேஜ்…” ஆத்மார்த்தமான காதலுடன், உண்மையான நன்றியுணர்வும் பொங்கியது அந்தப் பரிமாற்றத்தில்.

ஹே கணேஷ்… டு யூ நோ வாட் ஐம் ப்ளான்னிங்க் ஃபார் த கமிங்க் நியூ இயர்?..” கிறிஸ்துமஸ் வாழ்த்துச் சொல்ல ஃபோன் செய்த பொழுது பாரதி கணேஷிடம் கேட்ட கேள்வி. ”என்ன, சொல்லு பாரதி” என்ற கணேஷிடம், “ஐ ஹேவ் மேட் அ ரெஸொல்யூஷன் மைசெல்ஃப்” என்றாள் பாரதி. ”ஓ… ஓ.கே. என்ன அது, சொல்லு…” என்ற காதலனிடம், “ஐ வாண்ட் டு சே திஸ் இன் பர்சன் ஒன்லி… நேராப் பாத்துதான் சொல்லணும், என்னோட ரெஸொல்யூஷனச் சொல்றச்ச உன்னோட ரியாக்‌ஷன நான் பாக்கணும்.. அதோட, உன்கிட்டயும் ஒரு ரெஸொல்யூஷன் செய்யச் சொல்லிக் கேக்கணும்… ஓ.கே.வா? நாளைக்கு காலேஜ் ரீஒப்பன் ஆறதில்லையா… காலேஜ் முடிஞ்சதுக்கப்புறம் லெட்ஸ் மீட் அட் த ரெகுலர் ப்ளேஸ்…” என்று ஃபோனை வைத்து விட்டாள் பாரதி. கல்லூரியிலிருந்து ஒன்றரைக் கிலோ மீட்டர் நடந்து சென்று அனைவரும் ரயில் ஏறுவது வழக்கம். அந்த வழியில், ஒரு காட்டன் மில்ஸ் தொழிற்சாலை உண்டு. அந்தத் தொழிற்சாலைக் கட்டிடத்தின் பின் பகுதியில் அமைந்திருந்த ஐயனார் கோயிலுக்குப் பின்புறம் உள்ள மறைவான இடமே அவர்கள் வழக்கமாகச் சந்திக்கும் இடம்.

வழக்கம் போல் கல்லூரி விடுவதற்கு ஒரு ஐந்து நிமிடங்களுக்கு முன்னரே கிளம்பி, நண்பனின் சைக்கிளில் பின் தொற்றிக் கொண்டு, அந்த இடத்தை முன்னமேயே அடைந்து விட்டான் கணேஷ். தனக்கு மிகவும் நெருக்கமான, இந்தப் போக்குவரத்தை முழுவதுமாய் அறிந்த தோழி ஒருத்தியை மட்டும் துணைக்கு அழைத்துக் கொண்டு ஐயனார் கோயில் வந்தாள் பாரதி. தோழி கோயிலுக்குள் காத்திருக்க, இவள் கோயிலுக்குப் பின் சென்று, காதலனைச் சந்தித்தாள்.

“பாரதி, சொல்லு என்ன ரெஸொல்யூஷன், என்னால சஸ்பென்ஸ் தாங்கவே முடியல தெரியுமா… சீக்கிரம் சொல்லேன்” எனத் துரிதப்படுத்த, ”சொல்றேன், சொல்றேன்… மொதல்ல இந்த விபூதி எடுத்துக்கோ, எங்காத்துக்கு எதுர்ல இருக்குற சிவன் கோயில்ல இன்னிக்கு ஸ்பெஷல் பூஜை… அப்பா பண்ணிண்டு வந்திருந்தா… ஆத்துல இருந்தவாளுக்கெல்லாம் கொடுத்தாச்சு… நீ என் ஆம்படையானா வரப்போறவனாச்சே… குடும்பத்துல ஒருத்தன் தானேன்னு சேவ் பண்ணி வச்சு எடுத்துண்டு வந்தேன்”, சொல்லிக் கொண்டே நெற்றியில் இட்டு விட்டாள். அதன் பின்னர், நெற்றியில் எஞ்சியிருந்த விபூதியை ஊதிச் சரி செய்வதற்காக, நளினமாய் உள்ளங்கையை அவன் மூக்கின்மேல் மேலிருந்து கீழாகக் குவித்து வைத்து, கண்ணில் பட்டுவிடா வண்ணம் காத்தாள். ஊதுவதற்காக முகத்திலிருந்து மூன்று இஞ்ச் மட்டுமே இடைவெளி விட்டு, மிக நெருக்கத்தில் இருந்த அந்தக் கோவைப்பழ அதரங்களைப் பார்த்த கணேஷ், சொர்க்கபுரிப் பிரவேசத்திலிருந்தான் என்றுதான் சொல்ல வேண்டும். இளமை வேகத்தில், நெருங்கிய அதரங்களைத் தன் அதரங்களால் கற்பனையிலேயே கவ்வினான். நிஜத்தில் அதுபோன்ற செயல்களைச் செய்தால் பாரதி கொலையும் செய்யத் தயங்க மாட்டாள் என்ற பயமே அவனைக் கற்பனை செய்வதோடு நிறுத்திக் கொள்ள வைத்தது.

”சரி, இப்பவாவது சொல்லு, என்ன ரெஸொல்யூஷன் அது” என்று துரிதப்படுத்தினான் கணேஷ். “சொன்னா, நீ ரொம்ப ஆச்சரியப்படுவ… அசந்து போவன்னு நெனக்கிறேன்” பீடிகை அதிகரித்துக் கொண்டே செல்ல, தனக்குச் சாதகமாக ஏதேனும் முடிவெடுத்திருப்பாளோ என்ற ஆவலுடன் காத்திருந்தான் கணேஷ். “இந்த 1991ல தமிழ் லெட்டர்ஸ் மாத்திரமில்ல, கவிதைகளைக்கூடப் படிக்கக் கத்துண்டு முழுசா உன்னோட ரைட்டிங்க்ஸையெல்லாம் நானே படிச்சுப் புரிஞ்சுக்கணும்… இதுதான் என்னோட கோல், ரெஸொல்யூஷன் எல்லாமே!” ஒரு நிமிடம் ஆடிப்போய்விட்டான் கணேஷ். இது போன்ற எந்த எதிர்பார்ப்பும் கொண்டிருக்கவில்லையெனினும், தன் ஆத்மார்த்தக் காதலி தானாகவே இது போன்ற ஒரு ஆசை கொண்டுள்ளாளென அறிகையில் அவனடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை.

“சரி சொல்லு, நான் என்ன ரெஸொல்யூஷன் எடுத்துக்கணும்னு…” என்று தனக்கு என்ன வைத்திருப்பாளோ என்ற பதைபதைப்புடன் கேட்டான் கணேஷ். “நோக்கு கோபம் கொஞ்சம் ஜாஸ்தி… கோபம் உள்ள இடத்துலதான் குணம் இருக்கும்னு பெரியவா சொல்லுவா… ஆனா நேக்கு அந்தக் குணம் மட்டுந்தான் வேணும்.. கோபம் வேண்டாம்… ஏன்னா கோபம் குடி கெடுக்கும்னு பெரியவாதான் சொல்லுவா.. என் குடியெல்லாம் நீதான்… நேக்கு எதுவும் கெடக்கூடாது… உன் கோபத்தையெல்லாம் இந்த ஜனவரி ஒண்ணுல இருந்து எனக்காக விட்டுடுவேன்னு ப்ராமிஸ் பண்ணுவியா?…” கேட்டு முடித்த பாரதியின் குரல் தழுதழுத்திருந்தது.. கண்கள் லேசாகப் பனித்திருந்தன. பதில் ஏதும் சொல்ல முடியாமல் அவளைச் சற்றுப் பாசத்துடன் அணைத்து, அவளது உச்சந்தலையில் மெதுவாக ஒரு முத்தமிட்டான் கணேஷ்…

ன்னா… எத்தன நாழி பாத்ரூம்ல…. உள்ள போனா வரவே மாட்டேளா?… என்ன திரும்பவும் ஒரு ஃப்ளாஷ் பேக்கா?..” என்ற லக்‌ஷ்மியின் குரல் கேட்ட கணேஷிற்கு வந்த கோபத்திற்கு எல்லையே இல்லை. “ஏண்டி, பாத்ரூம்ல கூட மனுஷன் நிம்மதியா இருக்க முடியாதா?” என்று ஆரம்பித்து, உச்சஸ்தாயில் கத்த ஆரம்பித்திருந்தான்.

1991 ஜனவரியில் செய்யப்பட்ட ரெஸொல்யூஷன் 2018 வரை நடைமுறைக்கு வரவில்லையென்பதால், இனி ரெஸொல்யூஷன் எடுப்பதே இல்லை என்பதே அவனது ரெஸொல்யூஷனாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

–    வெ. மதுசூதனன்.

 

Tags: , ,

Comments (1)

Trackback URL | Comments RSS Feed

  1. Jayasathya says:

    Couldn’t control my laugh … like the climax sitting and dreaming in washroom …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad