பாவேந்தர்
தோற்றம்: 04/29/1891
மறைவு: 04/21/1964
தந்தை: கனகசபை முதலியார்
தாயார்: இலக்குமி அம்மையார்
மனைவி: பழனியம்மாள்
“பயிலுறும் அண்ணன் தம்பி – அக்கம்
பக்கத்துறவின் முறையார்
தயைமிக உடையாள் அன்னை – என்னைச்
சந்ததம் மறவாத் தந்தை
குயில்போல் பேசிடும் மனையாள் – அன்பைக்
கொட்டி வளர்க்கும் பிள்ளை
அயலவராகும் வண்ணம் – தமிழென்
அறிவினில் உறைதல் கண்டீர்!”
அன்பைக் கொட்டி வளர்க்கும் அன்னை தந்தையர், பாசத்தைப் பொழியும் அண்ணன் தம்பிமார், காதலிற் களிப்புற்று கருத்துடன் கவனித்துக் கொள்ளும் மனைவி, வாஞ்சையோடு வளர்க்கும் பிள்ளைமார் மற்றும் அனைத்து உறவுகளும் நெருக்கமானவர்கள் என்றாலும், தமிழுடன் தனக்கு இருக்கும் நெருக்கத்துடன் ஒப்பிடுகையில் இவர்கள் அனைவரும் அன்னியமாகின்றனர் என்று கூறுவதன் மூலம் தன் இதயத்தின் அடியிலிருந்து பிரவாகமாய் ஊற்றெடுக்கும் தமிழ்ப் பற்றினை உணர்ச்சி பூர்வமாக விளக்கும் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களே ”மாதத்தின் மாமனிதர்” வரிசையில் நாம் போற்றும் தமிழறிஞர்.
கனகசுப்புரத்தினம் என்ற இயற்பெயர் கொண்ட பாரதிதாசன், 1891 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29ஆம் திகதியன்று, புதுச்சேரியில், கனகசபை முதலியாருக்கும் இலக்குமி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். தந்தை செல்வந்த வணிகர். இளம் வயதிலேயே பாடல் புனையும் ஆற்றல் பெற்ற கனக சுப்புரத்தினத்தின் தொடக்கப் பள்ளிக் கல்வி 1895 ஆம் ஆண்டு ஆசிரியர் திருப்புள்ளி சாமி அவர்களிடமிருந்து தொடங்கியது. 1908 ஆம் ஆண்டு தொடங்கி முதுபெரும் புலவர் பு.அ. பெரியசாமியிடமும் பின்னர் புலவர் பங்காரு பத்தரிடமும் தமிழ் இலக்கண இலக்கியங்களையும், சித்தாந்த வேதாந்தப் பாடல்களையும் கற்று, புதுச்சேரி மாநிலத்திலேயே முதல் மாணவராகத் தேர்வானார்.
இந்தியாவின் பெரும்பாலான பகுதிகள் ஆங்கிலேயாரால் ஆக்கிரமிக்கப்பட்டு அவர்களால் ஆளப்பட்டுக் கொண்டிருந்த காலமது. பாண்டிச்சேரி உட்பட ஒருசில சிறு பகுதிகள் மட்டும் ஃபிரஞ்சுக் காரர்கள் பிடியில் இருந்தது. இந்திய சுதந்திரப் போராட்டம் ஆங்கிலேயர்களுக்கு எதிராக தீவிரமாக நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில், ஆங்கிலேயர்களின் பிடியிலிருந்து தப்ப பெரும்பாலானவர்கள் ஃபிரஞ்ச் ஆளும் பாண்டிச்சேரிப் பகுதிக்குள் பதுங்கி வாழ்வதென்பது வழக்கமாக இருந்து வந்தது. அப்படி வாழ்வதன் மூலம் ஆங்கிலேயர்களைத் தொடர்ந்து எதிர்த்துப் போராட இயலுமென்பதால் தமிழ் நாட்டிலிருந்த பல சுதந்திரப் போராட்ட வீரர்கள் பாண்டிச்சேரியில் தங்கியிருந்தனர். அவற்றுள் முதன்மையானவர் மகாகவி சுப்பிரமணிய பாரதியார்.
வேணு முதலியார் அவர்களின் இல்லத் திருமண விழாவில், பாரதியாரைச் சந்திக்கும் வாய்ப்புக் கனக சுப்புரத்தினத்திற்குக் கிடைத்தது. இருவரும் மற்றவரின் தமிழ்ப் பற்றையும், தமிழ்ப் புலமையையும் அறிந்து கொள்ள ஒரு தொடக்க வாய்ப்பாக இந்தச் சம்பவம் அமைந்தது. இருவரும் பாடல் எழுதுவதுடன் இசையமைப்பதிலும் தேர்ந்தவர்களாக இருந்தனர். முதல் சந்திப்பில், பாரதிதாசன் பாரதியார் இயற்றிய ”வீர சுதந்திரம் வேண்டி நின்றார் வேறொன்று கொள்வாரோ” என்ற பாடலைப் பாடிக் கொண்டிருக்கும்பொழுதுதான் பாரதியார் அவரை முதலில் பார்த்தாராம். அதன் பின்னர் படிப்படியாக அவர்களின் நட்பு வளர்ந்து, கனக சுப்புரத்தினம் பாரதியின் தமிழுக்கும், தாய்நாட்டுப் பற்றுக்கும் மிகப் பெரிய ரசிகனாக மாறினார். அவர் மேல்கொண்ட பக்தியினால் தனது பெயரையும் பாரதிதாசன் என்று மாற்றிக் கொண்டார். கே.சு.ஆர், கண்டெழுதுவோன், கிறுக்கன், கிண்டல்காரன் என்று பல புனைப் பெயர்களில் எழுதியிருந்தாலும் பாரதிதாசன் என்ற பெயரே அவருக்கு நிலைத்தது.
பாரதிதாசன் காரைக்கால் பகுதியில் ஆசிரியர் பொறுப்பேற்றபோது பாரதியார், வ.உ.சிதம்பரம் பிள்ளை, வரதாஜுலு முதலியார் மற்றும் அரவிந்தர் ஆகியோருடன் தொடர்பு ஏற்பட்டது. அவர்களின் இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு தன்னாலான உதவிகளைச் செய்யத் தொடங்கினார் பாரதிதாசன். பெற்றோருக்குத் தெரியாமல் இவர்களுக்குச் சாப்பாடு வழங்குதல், செலவுக்குப் பணம் தருதல், காவல் காரர்களிடமிருந்து தப்புவதற்கு உதவுதல், பாரதியாரின் “இந்தியா” ஏட்டைப் பதிப்பிப்பதில் உதவி எனப் பலமுறைகளிலும் சுதந்திரப் போராட்டத்திற்கு உதவியளித்தார் பாரதிதாசனார். கலெக்டர் ஆஷ் துரையைக் கொல்ல வாஞ்சிநாதன் பயன் படுத்திய துப்பாக்கியை வாங்கி அனுப்பி வைத்தது பாரதிதாசன் அவர்களின் பணிகளில் குறிப்பிடத்தக்க ஒன்று.
1919 ஆம் ஆண்டு, திருபுவனை நகரில் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த வேளையில், ஃபிரெஞ்ச் அரசுக்கு எதிராகப் பணிபுரிந்தார் எனத் தவறாகக் குற்றம் சாட்டப்பட்டு, ஒன்றரை ஆண்டு கால சிறைவாசம் தண்டனையாக வழங்கப்பட்டது. சில மாதங்களுக்குப் பிறகு, ஃபிரஞ்ச் அரசு அது தவறான முடிவு என்பதை உணர்ந்து அவரை விடுதலை செய்தது. அதனால் வேலை நீக்கம் செய்யப்பட்டிருந்த பாரதிதாசனார் பின்னர் வழக்கில் வென்று வேலையையும் திரும்பப் பெற்றார்.
அதனைத் தொடர்ந்து, இந்திய விடுதலை அறப் போராட்டத்தில் நேரடியாக ஈடுபடத் தொடங்கினார். அதே வேளையில், 1920 ஆம் ஆண்டு, புவனகிரி பெருமாத்தூர் பரதேசியார் மகள் பழனியம்மையை திருமணம் செய்து கொண்டு, சரஸ்வதி (1921), வசந்தா (1931) மற்றும் இரமணி (1933) என்று மூன்று மகள்களை ஈன்றெடுத்தார்.
பாரதிக்கும் பாரதிதாசனுக்கும் இருந்த உறவு வெறும் வார்த்தைகளால் விவரிக்க இயலாத ஒரு புனிதமான நட்பு. இனிப்பைச் சுற்றும் எறும்புகள்போல பாரதியைச் சுற்றி எப்பொழுதும் இருக்குமொரு இளைஞர் கூட்டம். அந்தக் கூட்டத்திலொரு முக்கியமான இளைஞர் பாரதிதாசன். பாரதி எழுதும் அத்தனை பாடல்களையும் இந்த இளைஞர் கூட்டத்திற்கு ராகத்துடன் மெட்டமைத்துப் பாடிக்காட்டிக் கருத்துக் கேட்பாராம். அதேபோல் தனது பல கவிதைகளையும் எழுதி முடித்து முதன்முதலாக பாரதியாருக்கு வாசித்துக் காண்பிப்பதென்பது பாரதிதாசன் தனக்குக் கிடைத்த ஒரு பெரிய பேறு என எண்ணிக் கொள்வதுண்டு.
ஆரம்ப காலத்தில் பாரதிதாசன் எண்ணற்ற பக்திப் பாடல்கள் எழுதியவர். வினாயகர் காப்பு, ஸ்ரீ ஷண்முகன் வண்ணப்பாட்டு, ஸ்ரீ சிவசண்முகக் கடவுள் பஞ்சரத்நம் மற்றும் சுப்பிரமணியர் துதியமது எனப் பல பக்திப் பாடல்களை எழுதியவர். காலப் போக்கில் பகுத்தறிவுக் கருத்துக்களால் கவரப் பட்ட பாரதிதாசன் கடவுளைப் பற்றி எழுதுவதை நிறுத்தி, பகுத்தறிவுக் கருத்துக்களை முழு மூச்சாக எழுதத் தொடங்கினார். கண்மூடித்தனமாக மதத்தின் பெயரால், கடவுளின் பெயரால் நடக்கும் மூட நம்பிக்கைகள் அனைத்தையும் தெளிவுடன், துணிவுடன் தனது பாடல்களினால் சாடத் தொடங்கிய பாரதிதாசனைப் பாவேந்தனென்றும், புரட்சிக் கவியென்றும் தமிழ் பேசும் சமுதாயம் புகழத் தொடங்கியது.
பாரதிதாசன் எழுதியது கடவுள் இல்லையென்ற கண்மூடித்தனமான நாத்திகமன்று என்பது மிகவும் குறிப்பாகக் கவனிக்கப்பட வேண்டியது, கடவுள் என்று ஒன்று உள்ளதா இல்லையா என்பதை ஆராயும், பகுத்தறிவுக் கருத்துக்கள் தெறிக்கும் சிந்தனைகள். அவரின் பல கவிதைகள் தமிழெனும் மொழியே அவரின் கடவுள் என்று கூறுவது போன்ற துரிய நிலைக் கவிதைகள். இவற்றைக் கடந்து சமுதாயத்தில் மண்டிக் கிடந்த பல மூட நம்பிக்கைகளைத் தன் எழுத்தின் மூலம் சாடி விழிப்புணர்வை ஏற்படுத்தியது பாரதிதாசனின் பெருமையான பணிகளில் ஒன்று.
“கோரிக்கை யற்றுக் கிடக்குதண்ணே
வேரில் பழுத்த பலா..”
என்று விதவை மறுமணத்தின் அவசியத்தை மிகவும் அழுத்தமாகவும், நளினமாகவும் விளக்குவதில் தொடங்கி,
“இருட்டறையில் உள்ளதடா உலகம்
சாதி இருக்கின்றதென்பானும் இருக்கின்றானே,
மருட்டுகின்ற மதத்தலைவர் வாழ்கின்றாரே
வாயடியும் கையடியும் மறைவதென்னாள்
சுருட்டுகின்றார் தம்கையில் கிடைத்தவற்றை
சொத்தெல்லாம் தமக்கென்று சொல்வார்தம்மை
வெருட்டுவது பகுத்தறிவே இல்லையாயின்
விடுதலையும் கெடுதலையும் ஒன்றேயாகும்!!!”
என்று பகுத்தறிவின் அருமை பெருமைகளை மிகவும் அழகாகவும், தெளிவாகவும் விளக்குவது வரை பாரதிதாசனின் கவித்திறன் தொடாத எல்லையேயில்லை.
பாரதிதாசனின் நூற்றுக் கணக்கான படைப்புகளில் பெரும்புகழ் பெற்று காலத்தாலழியாத படைப்புகளாகத் திகழ்பவை குடும்ப விளக்கு, இருண்ட வீடு, அழகின் சிரிப்பு, பாண்டியன் பரிசு, எதிர்பாராத முத்தம், சஞ்சீவி பர்வதத்தின் சாரல், புரட்சிக் கவி மற்றும் வீரத்தாய் போன்ற படைப்புக்கள்.
கவிதைகள் மற்றும் கட்டுரைகளைத் தொடர்ந்து பல திரைப்படங்களுக்கும் பாரதிதாசனின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாக இருந்தது. கவிகாளமேகம், ராமானுஜர், பாக்தாத் திருடன், அபூர்வ சிந்தாமணி, சுபத்ரா, சுலோச்சனா, பொன்முடி மற்றும் வளையாபதி போன்ற படங்களில் அவரின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. 1952 ஆம் ஆண்டு வெளிவந்த வளையாபதி திரைப்படத்தில் இவரின் வசனம் சிறிது மாற்றப்பட்டதால், நாற்பதாயிரம் ரூபாய்ப் பணத்தையும், மேலும் நான்கு படங்களுக்கான ஒப்பந்தங்களையும் தூக்கி எறிந்து விட்டு, மாடர்ன் தியேட்டர்ஸை விட்டு வெளியேறினாராம் பாரதிதாசன்.
பின்னர் 1954 ஆம் ஆண்டு குளித்தலையில் ஆட்சி மொழிக் குழுவுக்குத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து 1955 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட, புதுச்சேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் பாரதிதாசனார். இந்த வெற்றியின் மூலம் அவைத் தலைவர் பொறுப்பும் கிடைக்கப் பெற்றார் பாரதிதாசன்.
இவையனைத்திலும் பெரிதாக நிறைவடையாத பாரதிதாசனின் நெடுநாள் கனவு பாரதியாரின் வாழ்க்கை வரலாற்றை ஒரு திரைப்படமாக வெளியிட வேண்டுமென்பது. இதற்காக இரண்டு வருடங்களுக்கு மேல் பல முயற்சிகளை மேற்கொண்டார். இதற்கான முழுக் கதை வசனத்தையும் எழுதி முடித்து விட்டார். ஆனால் அதனைத் திரைப்படமாக எடுப்பதற்கு முன்னர், 1964 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி, சென்னையில் அரசு மருத்துவ மனையில், தனது நிலவுலகு வாழ்வை நீத்தார் பாவேந்தர் பாரதிதாசன்.
“தாய்நிகர் தமிழினை
தமிழர்தம் கவிதைதன்னை
ஆயிரம் மொழியிற்காண
இப்புவி அவாவிற்றென்ற
தோயுரும் மதுவினாறு
தொடர்ந்தெந்தன் செவியில்வந்து
பாயுநாள் எந்த நாளோ!!”
என்று ஆசையிலும் கனவிலும் எதிர்பார்த்திருந்த பாவேந்தரின் கனவை நனவாக்குவதற்கான முயற்சியில் ஈடுபடுவதே நாம் அவருக்குச் செய்யும் நன்றிக் கடனாகும்!!
– மது வெங்கடராஜன்