எதிர்பாராதது…!? (பாகம் 6)
( * பாகம் 5 * )
இன்று பிரேம்குமாருக்குப் படப்பிடிப்பு எதுவுமில்லை. நாளை காலையில் ஊட்டியில் இருக்க வேண்டும். ஃப்ளைட் பிடித்து கோவை சென்று, அங்கிருந்து காரில் உதகமண்டலம் சென்று விடலாம். அதுதான் அவன் பிளான். ஆனால் நந்தினியையும் அழைத்துச் செல்ல வேண்டும் என்பதுதான் அவன் எண்ணமாயிருந்தது முதலில். இப்போது அது மாறிவிட்டது. அவளாகத்தான் அதைக் கெடுத்துக்கொண்டாள்.
இப்போதுதான் சூடு பிடிக்கிறது விஷயம். மனசு ஏன் இப்படிப் பறக்கிறது? . திருமணத்தை முடித்துக் கொண்டு செட்டிலாகக் காத்திருக்கும் மனசு. பெண்ணுக்குத்தான் அந்த அவசரம் இருக்க வேண்டும். தனக்கு ஏன்? நந்தினி கிடைக்காமல் போய் விடுவாளோ? அந்தப் புதியவன் வசீகரனோடு நிறைய நடிக்கிறாள் போலிருக்கிறதே…! காற்று திசை மாறி அடிப்பதுபோல்தான் இருக்கிறது. என்னை நாடியவர்கள் கூட இப்போது அங்கே…! என்னை விட அப்படி என்ன பெரிய திறமை அவனிடம்? ஆள் கொஞ்சம் அழகு…! பெண்மை கலந்த அழகுதான் அது. ஆண்மையில்லையே…! அதனால் என்ன, மேக்கப் போட்டுச் சரி செய்து கொள்கிறார்கள்…ஆளைக் கறுப்பு முரடனாய்க் காட்ட எவ்வளவு நேரம் ஆகும்?
பிரேம் சிகரெட்டை அனுபவித்து இழுத்துக் கொண்டிருந்தான். சுற்றிலும் பரவியிருந்த புகை அவன் பலத்த யோசனையிலிருப்பதை உணர்த்தியது.
“பேக் அப் பண்ணிட்டுக் கிளம்பிட்டாங்க….இந்தப் பொண்ணு ரொம்ப நேரத்துக்கு அழுதிட்டிருந்திச்சாம்….” டிரைவர் முத்துசாமி சொன்னான்.
சலனமின்றி பார்த்தான் பிரேம்குமார்.
“எனக்கு இந்தப் படம் வேண்டாம்னுட்டுக் கிளம்பிடுச்சாம்…சொன்னாங்க…”
“என்னய்யா சொல்ற…? பாதிப்படம் முடிஞ்சி போச்சி….இப்பப்போயி….? என்ன உளர்றியா? ”
“நான் உளறலீங்க….கொடுத்த அட்வான்சுக்குச் சரியாப் போச்சுன்னு போயிடுச்சுங்கிறாங்க….தெரிஞ்சிட்டு வந்துதான சொல்றேன்…..”
“நீ எங்கூட வந்த ஆளு….உனக்கெப்படிய்யா அதுக்குள்ளே செய்தி வந்திச்சு?”
“அதெல்லாம் வந்திடுமுங்க…நான் உங்க நிழல் மாதிரி….உங்களுக்கு அப்பப்போ எது வேணுமோ அதைச் செய்றதுக்கும் சொல்றதுக்கும் கடமைப்பட்டவன்….. ”
“முத்து….நீ நல்முத்துன்னு எனக்குத் தெரியும்…இத யாரு உனக்குச் சொன்னா?”
“நம்ப லைட்பாய் பஷீர் தாங்க… ”
“அப்டியா…ஃபோனைப் போடு….போடு சொல்றேன்……”
“அட நீங்க என்னங்க….அது கிட்டப் போய்ப் பேசிக்கிட்டு…?அசிங்கமில்லே….”
“அட நீ ஒரு ஆளய்யா…? டைரக்டர்க்குப் போடுய்யான்னா….அவகிட்ட என்ன நான் பேசுறது?” – சொல்லிவிட்டுப் புகையை வேகமாய் விட்டான் பிரேம்குமார். கோபத்தோடு வெளியேறியது அது.
“அதானே பார்த்தேன்….” என்றவாறே எண்களை இணுக்கினார் முத்துச்சாமி. அதே சமயம் வாசலில் யாரோ நுழைவது பார்வையில் பட்டது.
“வந்திட்டேன்…அங்கதான் வந்திட்டிருக்கேன்…வாசல்ல பாருங்க… ” என்றவாறே நுழைந்தார் விவேகானந்தன்.
“சார்…..டைரக்டரே வந்துட்டாரு….உங்களத் தேடி வந்திருக்காரு….கீழ இறங்காமப் பேசுங்க….” – சத்தமின்றிச் சொல்லிவிட்டு அங்கிருந்து விலகினான் முத்துச்சாமி.
“வாங்க…வாங்க…என்னாச்சு…இத்தனை டென்ஷன்…?” – பதட்டமாய் இருப்பதுபோல் கேட்டான் பிரேம்.
“டென்ஷன்தான் சார்…பின்னே? நீங்க கிளம்பி வந்திட்டீங்க…அந்தப் பொண்ணு கோவிச்சுட்டுப் போயிடுச்சி….என்பாடு திண்டாட்டமாயிடுச்சு…”
“உங்களுக்கென்ன…? அடுத்த ஷெட்யூல்ல சேர்த்து எடுத்துக்க வேண்டியதுதான்…? ”
“என்னசார் இவ்வளவு சாதாரணமா சொல்லிட்டீங்க…? இன்னைக்கு ஷெட்யூல் சாயங்காலம் ஆறு வரைக்கும் சார்…உங்களுக்குத் தெரியாததா?”
“அதுக்கு நான் என்னங்க பண்றது…? அந்தப் பொண்ணு கோவிச்சிட்டுப் போச்சின்னா….? நடிப்பை நடிப்பா எடுத்துக்காம…..?”
“ஏன்சார்… நீங்களும் அடக்கி வாசிச்சிருக்கணும்ல….அவ்வளவு கூட்டத்துல போயி…. நல்லாவா சார் இருக்கு…?” – சொல்லத் தயங்கி மென்று முழுங்கினார் விவேகம்.
“அவ நான் கட்டிக்கப் போறவங்க….எங்க தடவினா என்ன? என் உரிமையை நான் அப்புறம் எப்டிக் காட்டுறது? எந்த நேரத்திலும், எந்த எடத்திலும் நீ என் அடிமை…அவ்வளவுதான். அத அந்தப் பொண்ணு மறந்திடக் கூடாது…அவளுக்கு அந்த வசீகரன்ட்ட நோங்குது போலிருக்கு…அவளைச் சென்னைக்கு வரவழைச்சதே நாந்தான். இப்ப அவ பெரிய ஸ்டார். எவனோ கொத்திட்டுப் போக விட்ருவேனா? ”
பாவி…என்ன பேச்சுப் பேசுகிறான்? பதறியது இவருக்கு.
“அது உங்க சொந்த விவகாரம் சார்…. யூனிட்டையே பாதிக்கக் கூடாதுல்ல….-”
“யூனிட்டையே நான் என்ன சார் செய்தேன்? நீங்கதான் அந்தப் பொண்ணைப் போக விட்டீங்க….அதை இருத்திட்டு என்னை ஃபோன்ல கூப்பிட்டிருக்க வேண்டியதுதானே? ஓடி வந்திருப்பேன்ல….”
“இன்னைக்குத் தேதிக்கு உங்களைக் கூட இருத்திப்புடலாம் சார்…அதை நிறுத்தத்தான் எங்களால முடியாது. விட்டா எந்த ஊர்ல, எந்த நாட்டுல, எந்த ஷூட்டிங்ல இருக்கும்னு யாராலயும் சொல்ல முடியாது. புதுசு புதுசா புக் பண்ண ஆளுக வந்திட்டேயிருக்காங்க….பல சமயங்கள்ல செல்லை அணைச்சே வச்சிருக்கு….அந்தப் பார்கவியிருக்கே அது பத்து ஆம்பளைக்குச் சமம். இன்னும் கொஞ்ச நாள்ல அடியாள் கூட்டத்தையே சுத்தி வர ஏற்பாடு பண்ணிரும்போல….. அந்தம்மா முழுசா நம்புது அதை…இப்போதைக்கு அதுதான் அந்தம்மாவுக்குப் பாதுகாப்பு. அந்த வளையத்தைத் தாண்டி எவனும் உள்ளபுக முடியாது…..”
மனசு கோபத்தில் அனலாகியது பிரேமுக்கு. நந்தினி நடித்த சமீபத்திய படங்கள் அவளுக்குப் பெரும் பேரையும் புகழையும் ஈட்டிக் கொடுத்திருக்கின்றன. வசீகரனோடு நடித்த படமும் ஓடுகிறது. தானே நாயகனாய், நாயகியாய் கட்டிக்காத்த படமும் பிய்த்துக்கொண்டு போகிறது. என்ன ஒரு அதிர்ஷ்டம் அவளுக்கு. மாமா கூட அந்தப் பக்கம் சாய்வதுபோல்தான் தெரிகிறது. பணவேட்டையில் இடமா கணக்கு? தன்னை விட்டு அவளிடம் பணம் பண்ண முடியுமானால் போகத்தான் செய்வார். அவர் வெறும் வியாபாரிதானே…!
“சரி…விடுங்க…நாளைக்கு ஊட்டி ஷூட்டிங்கை முடிச்சிட்டு, இன்னைக்கு விட்டதை அதுக்கப்புறம் ஒரு நாள் ஃபிக்ஸ் பண்ணுங்க…முடிச்சிக் கொடுத்திருவோம்….அடுத்தாப்ல எனக்கு பெங்களூர் போகணும்…அதுக்கு எந்த டிஸ்டர்பன்சும் இருக்கக் கூடாது….பார்த்துக்குங்க…”
“எந்தத் தேதின்னு நீங்களே சொல்லிடுங்க சார்….”
“அது எதுக்கு சார்…நான் ஒரு தேதி சொல்லப் போக, அந்தப் பொண்ணு வீம்புக்கு அதை மாத்துவா…அதுகிட்டயே தேதி குறிச்சு வாங்கிட்டு வாங்க…. அதுக்கேத்தாப்போல நான் மாத்திக்கிடுறேன்…”
விவேகம் விவேகமாய்ப் புன்னகைத்ததுபோலிருந்தது.
“சரி சார்…..நான் இப்போ மெர்க்கென்டைல் ஸ்டுடியோ போறேன். அங்க அந்தம்மா இருக்குது….டேட் ஃபிக்ஸ் பண்ணிட்டு உங்களுக்குத் தகவல் சொல்றேன்….ஓ.கே.யா…? கணக்கை முடிச்ச மாதிரிக் கௌம்பிப் போச்சு…திரும்ப வருமா…? போனாத்தான் தெரியும்….” புலம்பிக்கொண்டே கிளம்பினார் விவேகானந்தன்.
மாடியை நோக்கிப் போனான் பிரேம். அவளுக்கேற்றாற்போல் தன் ஷெட்யூல்களை மாற்றிக் கொள்ள வேண்டிய நிலைமை வந்து விட்டதே என்ற பொறாமை அவன் மனதுக்குள் கனன்றது. டைரக்டர் விவேகானந்தன் சற்றே கேலியாய்ச் சிரித்தது அவன் மனதில் மேலும் தீயை வளர்த்தது. நான் பார்க்க ஊரிலிருந்து வலியக் கூட்டி வந்த நாய். இல்லையென்றால் வெறுமே தையல் வேலைக்குப் போய்க் கொண்டிருக்க நேர்ந்தவள். அரை வயிற்றுக்கும் கால் வயிற்றுக்கும் அல்லாடியவள். இன்று தன்னையே பதம் பார்க்கிறாள். அதிர்ஷ்டம் யாரை எங்கெல்லாம் கொண்டு வைக்கிறது? தானே பெரும் அதிர்ஷ்டக்காரன் என்று நினைத்தால், அவள் அதிர்ஷ்டம் விண்ணைப் பிளக்கிறதே…!
ஆந்திராவிலும் அவள் படம் சக்கைபோடு போடுகிறதாமே? பொம்பளை, போலீசாய் நடித்தால் அதற்குத்தான் எத்தனை வருஷம் ஆனாலும் என்ன ஒரு மதிப்பு? கலர் கலராய் டிரஸ் போட்டு ஆட்களை மயக்கி விடுகிறார்கள். அவர்களுக்குத்தான் காஸ்ட்யூம் அமைகிறது. அதிகபட்சம் ஆண் நடிகருக்கு கோட், சூட் தவிர அவன் கம்பீரத்தை வெளிப்படுத்த வேறு என்ன டிரஸ்? அதையே எத்தனை நாளுக்குப் பார்ப்பார்கள்?உருண்டு, திரண்ட பேரழகியாய் வேறு ஆகிவிட்டாள். நினைத்தால் படத்துக்குப் படம் உடம்பைப் குறைக்கவும், கூட்டவும் செய்கிறாளாமே? என்ன மருந்து சாப்பிடுகிறாளோ? எங்கே அரிசி வாங்குவாளோ? வெண்ணைக் கட்டியாய் நிற்கும் அவள் போஸ்டர்களை ரசிகர்கள் வாயிலிருந்து நீர் வழிவது கூடத் தெரியாமல் அல்லவா பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்? ஒரு வாரம் முன்பு ஏதோ விபத்து கூட நேர்ந்ததாய்ச் சொன்னார்களே? வண்டியை மறந்து, அவளை நினைத்து கிண்டியாய்ப் பறந்தவன், நேரே வானத்தை நோக்கிப் போய்விட்டானோ என்னவோ?
என்னோடு வந்திருக்க வேண்டிய படங்களெல்லாம் இன்று அவள் தனியளாய். தோசையை அப்படியே புரட்டிப் போட்டு விடுங்களேன் என்று நாயகன் கதையை நாயகியாய் மாற்றி விடுகிறாளாமே? வசீகரனோடு மட்டும்தான் இப்போது அவள் படங்கள். அல்லது தனியாய். என்னோடு? இந்த ஒரு படம்தான் கடைசியா? என்னையே ஒதுக்குகிறாளா? எனக்கே உலை வைக்கிறாளா? பொறாமைத் தீ திசை தெரியாமல் பரவியது அவனுள்ளே…! கண்டமேனிக்கு வியாபித்துப் படலாய் எரிய ஆரம்பித்து, கொழுந்துவிட்டு வியாபித்தது.
மாடிப்படி தடுமாறியது.
“சார்…பார்த்து….பார்த்து…” அக்கறையாய் எழுந்த முத்துச்சாமியின் குரலை அவன் மனம் பொருட்படுத்தவில்லை.
நந்தினி மனதுக்குள் குமுறியவாறே அமர்ந்திருந்தாள். இன்னும் அவளுக்குக் கோபம் அடங்கியபாடில்லை. அதற்குள் டைரக்டர் விவேகானந்தன் வந்துவிட்டார். இப்படி அவர் தேடி வருவார் என்று தெரியும் இவளுக்கு. தான் மெர்க்கென்டைலில் இருப்பதைக் கண்டு பிடித்து அவர் வந்துவிட்டதுதான் ஆச்சரியம். யாருக்கும் சொல்லவில்லை. பார்கவி மூச்சு விடமாட்டாள்தான்.
“தயவுசெய்து நான் சொல்றதைக் கொஞ்சம் யோசிச்சுப் பாருங்கம்மா….உங்க சண்டையுனால தயாரிப்பாளர் பாதிக்கப்படக் கூடாதுல்ல….ரொம்ப வருத்தப் படுறார்ம்மா….வேணுங்கிற அளவுக்குப் பணம் கொடுத்து, எல்லா வசதிகளும் செய்து கொடுத்தும் ஷூட்டிங் நடத்த மாட்டேங்கிறீங்கன்னா உங்களை வச்சு எப்படிய்யா தொழில் பண்றதுன்னு சலிச்சிக்கிறாரும்மா…”
“அவர் தொழில் பண்றதுக்காகவா நான் நடிக்கிறேன்….சொல்லுங்க டைரக்டர் சார்….இது இல்லாட்டி இன்னொண்ணு…அதுக்காக ஒரு மட்டு மரியாதை இல்லையா….? எதுக்கும் ஒரு அளவு இருக்கில்ல…?”
“யம்மா, உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல இருக்கிற பாலிடிக்ஸ் எனக்குத் தெரியாது….எனக்குத் தேவை படம்…அது இந்த மாசத்துக்குள்ள முடியணும்….அடுத்த மாசம் முதல் வாரம் வெள்ளிக்கிழமை ரிலீஸ் பண்ணியாகணும்….அதுக்கு இந்த மாசக் கடைசி வாரத்துல சென்சாருக்கு அனுப்பிச்சுப் படம் திரும்பி வந்தாகணும்….முடியுமான்னு பயம்மா இருக்குது…இந்த இக்கட்டுல நீங்க இப்டி முறுக்கிக்கிட்டீங்கன்னா நான் என்னதான் செய்றது? எம்பேரு கெட்டுப் போகும் தாயி….அடுத்தாப்ல எவனும் எனக்குப் படம் தர மாட்டான்….பொழப்பு நாறிப் போகும்…இப்பத்தான் பத்துப் படம் தாண்டியிருக்கேன்… இன்னும் உங்கள வச்சு தனியா ஹீரோ இல்லாம. ஒரு கதை யோசிச்சு வச்சிருக்கேன்…. அதிரடியா அது வந்திச்சின்னா நீங்க எங்கயோ போயிடுவீங்க… – ” பேச்சோடு பேச்சாகக் கோர்த்து விட்டார் விவேகம். சமீபத்தில்தான் இதெல்லாம் பழகியிருந்தார். இந்த ஃபீல்டில் உண்மையாயிருப்பதுபோல், நன்றாய் பேசவும் வேண்டும் என்று தெரிந்திருந்தது அவருக்கு. அவர் நினைத்தது போலவே குறிப்பிட்ட அதே இடத்தில்தான் அசைந்தாள் நந்தினி.
“என்ன கதை அது? ஒரு லைன் சொல்லுங்களேன் பார்ப்போம். ”
“கதையை ஒரு லைன்ல சொல்லிப்புடலாம்மா…காட்சிகளை அமைக்கிறதுலதான் சாமர்த்தியம்….ஒரு வரிக் கதை உங்களுக்கு ஸ்வாரஸ்யப்படாது. ப்பூ…இ்ம்புட்டுத்தானான்னுடுவீங்க…..ஒரு காட்சிக்கும் மறு காட்சிக்கும் கனெக்ஷன் கொடுத்திட்டே நகர்றது இருக்கு பாருங்க…அங்கதான் டைரக்டர் தெரிவாரு….அப்படி யோசிச்சிருக்கேன்…ஒரு காட்சியில கடைசி சீன் இருக்குது பாருங்க…அதுக்கும் அடுத்த காட்சிக்கும் ஏதோவொரு தொடர்பு இருக்கும்…இப்டியெல்லாம் யாரும் மெனக்கெட மாட்டாங்க….இதுக்காக உங்களை மனசுல வச்சு, ரொம்ப ரொம்ப மெனக்கெட்டிருக்கேம்மா…உங்க இமேஜை உயரே கொண்டு போகிற மாதிரி இருக்கும் ஒவ்வொரு சீனும்…
என்னைப் பத்தி உங்களுக்குத் தெரியும்ல…ஸ்பாட்ல போயி ஷூட் பண்ணிக்கலாம்னு எப்பவும் கிளம்ப மாட்டேன். என்னைப் பொறுத்தவரைக்கும் லொகேஷனை மனசுல வச்சே காட்சிகளையும், கதை வசனத்தையும் தயார் பண்ணியிருப்பேன். மொத்த ஸ்கிரிப்டும் ரெடி பண்ணிக்கிட்டுத்தான் ஸ்பாட்டுக்குப் போறதே என் வழக்கம். ஏனோ தானோ, எடுத்தேன் கவிழ்த்தேன் கதையெல்லாம் என்னைக்கும் என்கிட்டே கிடையாது… லைட் எங்கயிருக்கணும், காமிரா எங்கிருக்கணும்…ஆளுங்க எங்க எங்க நிக்கணும்…வசனம் பேசறது, திரும்புறது, கையசைக்கிறது, சிரிக்கிறது முதற்கொண்டு ஒவ்வொரு ஆர்டிஸ்ட்டுக்கும் ஸ்கிரிப்ட்ல குறிப்பு இருக்கு… வசனங்களோட அர்த்தத்துக்கும் நடிப்புக்கும் சென்ட் பர்சன்ட் பர்ஃபெக்ட்னஸ் இருக்கணும் எனக்கு…சும்மா ஒப்பிச்சிட்டுப் போறதில்லை…..உழைப்பும்மா…எல்லாம் உழைப்பு… கொஞ்சம் எங்களையும் நீங்க மதிக்கக் கத்துக்கணும்….எப்பவும் புது டைரக்டர்ட்ட வேலை செய்றமாதிரியே நினைச்சிக்கக் கூடாது….அனுபவப்படுறதுக்கு முன்னாடி உளறினதெல்லாம் மனசல வச்சுப் பேசப்படாது….” – என்னென்னவோ சொல்லிக் கொண்டேயிருந்தார் விவேகம்.
சிரித்துக் கொண்டாள் நந்தினி. “சரி…சரி…ரொம்ப வருத்தப்படாதீங்க…. நாளைக்குக் காலைல எத்தனை மணிக்கு ஷூட்டிங் ஊட்டில? ”
“பொழுது அங்க விடியுறபோது ஆரம்பிச்சிடுறோம்மா….லேசா வெயில் ஆரம்பிக்கிற, விழுற எடமா சூஸ் பண்ணச் சொல்லியிருக்கேன்….யூனிட் ஆளுக போயாச்சு ரெண்டு நாள் முன்னாடியே…நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து இருக்கிற சீன்கள் நிறைய…..மறக்காம காலைல வந்து சேர்ந்திடுங்கம்மா….”
“ஓ.கே….ஓ.கே….”– அருகில் டைரியை எடுத்துக் குறித்துக் கொண்டாள் நந்தினி. இதுநாள்வரை இந்தப் பி.ஆர்.ஓ. வேலைக்கு ஒரு ஆள் நியமனம் செய்யவில்லை அவள். பார்கவிக்கு இந்தப் பணி பொருந்தாது என்பது அவள் எண்ணம். சொந்தம்தான். அதற்காக தனக்கு மானேஜர் போஸ்ட்டுக்கு அவள் தகுதியில்லை. ஒரு நல்ல ஆம்பளை வேண்டும். தனக்குப் பாதுகாப்பாக வேறு இருக்க வேண்டும். ஆண்தான் பி.ஆர்.ஓ. போஸ்ட்டுக்கு லாயக்கு. அது சற்று வயசான ஆளாய் இருந்தால் கூடப் பரவாயில்லை. ஒரு இளைஞனை வைத்துக் கொண்டால் அவன் தன் பிசினஸில் விளையாட வாய்ப்பு உண்டு. சற்று வயசான ஆசாமி என்றால், தந்தையைப் போல் இருப்பார். மற்றவர்களும் நெருங்கப் பயப்படுவார்கள். நம்பிக்கையான ஒருத்தரை எப்படித் தேடுவது?
விவேகாநந்தன் போய்கொண்டிருந்தபோது பாஷ்யம் நுழைந்தார். கூடவே இன்னொருவரும்….அப்போதுதான் அவளுக்கே நினைவு வந்தது, தான் அவரிடம் தனக்கான பி.ஆர்.ஓ. வைப் பற்றிச் சொல்லியிருந்தது.
ஷூட்டிங் வந்த இடத்தில் இதென்ன இன்று இப்படி வந்து அலைமோதுகிறார்கள். தன் வேலை எந்தவிதத்திலும் பாதிக்கப்படக் கூடாது அவளுக்கு. தவிர்க்க முடியாமல் விவேகத்தை இருத்தி, அனுப்பியாயிற்று. இப்பொழுது இன்னொருவரா?
பார்கவியிடம் குசுகுசுவென்று ஒன்றைச் சொல்லிவிட்டு, மேக்கப்பை சற்று சரி செய்துகொண்டு உள்ளே ஷெட்டுக்குள் நுழைந்துவிட்டாள்.
பார்த்துக்கொண்டேதான் விசுக் விசுக்கென வந்து கொண்டிருந்தார் பாஷ்யம். நந்தினி பார்த்தாளா, பார்க்கவில்லையா? கவனிக்கவில்லை.
“அடடா….உள்ளே போயிடுச்சா….?” என்று அவர் வாய் அவரையறியாமல் முனகியது.
“அய்யா…வாங்க…வாங்க….ஷூட்டிங் ஆரம்பிச்சிடுச்சி….க்ளைமாக்ஸ் எடுத்திட்டிருக்காங்க….இன்னும் ஒரு மணி நேரத்துக்கும் மேலேதான் ஆகும்…நீங்க பேசாம ராத்திரி வீட்லயே பார்த்திடலாம்…..’ என்றாள் பார்கவி.
வந்த ஆவேசத்திற்கு, அப்படியே தலையில் கை வைத்துக் கொண்டு உட்கார்ந்து விட்டார் ரங்கபாஷ்யம்.
“போய்யா….உனக்கு ஆரம்பமே சரியில்லை….” என்றார் கூட வந்தவரைப் பார்த்து.
“இதிலென்ன இருக்கு….நாம கொஞ்சம் லேட்டா வந்திட்டோம்… அவ்வளவுதானே… இதுக்கு எதுக்கு நம்ம நேரத்தைக் குறைஞ்சுக்கணும்… இதெல்லாம் சகஜம்….அடுத்தாப்ல பார்த்துட்டாப் போச்சு…” என்ற அவரை உற்றுப் பார்த்தாள் டச் அப் பார்கவி. அந்த நிதானமும், யதார்த்தமும் அவரின் காரியத்தின் கருத்தை உணர வைத்தது அவளுக்கு.
“ஆனாலும் உனக்கு பொறுமை ஜாஸ்திதான்யா….இத்தனை நாள் என்கூடவே இருந்திட்டியே…? நந்தினியைப் பிடிக்கிறதா பெரிசு…? – கவலையை விடு…நானிருக்கேன்….” என்றார்.
அவர்களின் திட்டம் என்னவாக இருக்கும் என்பதாக யோசித்துக் கொண்டே ஷூட்டிங் ஹாலுக்குள் நுழைந்தாள் பார்கவி.
பிரேம்குமாரை ரங்கபாஷ்யம் மூலம் தன் மகள் கல்பனாவுக்குப் பிடித்துப் போட வேண்டும் என்ற திட்டத்துடனே சென்னை வந்திருந்த பஞ்சாபகேசனின் மனதில் இப்போது வெவ்வேறு எண்ணங்கள் உதித்துக் கிளைகள் பரவிக் கொண்டிருந்தன. பொருத்தமான கனவு என்று நிரூபிக்க வேண்டும். நினைப்பதைப் பெரிதாய் நினைக்க வேண்டும். செய்வதைப் பிரம்மாண்டமாய்ச் செய்ய வேண்டும். ஊரே அதிசயிக்க வேண்டும்.
குறிப்பாக அந்தத் தாமோதரன் மயங்கிச் சாய வேண்டும். என்னை வெறும் சவடால் என்று சொல்வானில்லையா? நான் வெறும் ஓட்டை வாயில்லடா… சொல்றதைச்செய்து காட்டறவன்…. செய்துகாட்டுறதுக்காகத்தான் சொல்றவன்….. வெத்து வெட்டுன்னு நினைச்சியா…! என் கனவு ரொம்பப் பெரிசு…அது மாயக்கனவுன்னு மத்தவங்களுக்குத் தோணும்…ஆனா அதுதான் எனக்கு நிஜம். கனவு மெய்யாகும்….அப்டி நினைச்சு இறங்கினா நிச்சயம் நடக்கும்…நடத்திக் காட்டுவேன்….
“உன்னைப் பார்த்தவுடனேயே என் மனசுல ஒண்ணு தோணிடுச்சிய்யா…அதுக்கு நீ ஒத்துக்கிடுவியா….? ஆனா ஒண்ணு…உன் குடும்பத்தை இங்க கொண்டு வந்திடணும்…அப்பத்தான் சரியா வரும்….நீ ஒத்த ஆளா இருக்கிறதானாலும் இருக்கலாம். அதுக்கு ஒப்புதல் வாங்க வேண்டிர்க்கும்….உனக்குப் பெரிய அதிர்ஷ்டம்தான்யா….. “– என்று சொல்லி ஆளைச் சரிப்படுத்தி இழுத்து வந்திருந்தார்.
தனக்கு நடிகையின் பி.ஏ. பதவியா? – நினைக்கவே கிளுகிளுப்பாய் இருந்தது பஞ்சாபகேசனுக்கு. தான் நினைத்து ரயிலேறியதுபோலவே எல்லாமும் நடக்க ஆரம்பித்திருக்கிறதா? படிப்படியாகக் கடவுள் வழி காண்பிக்கிறாரோ? பவானி ஒத்துக்கொள்வாளா? காசும் பணமும் சேரும்போது ஒத்துக்கொள்வதற்கென்ன? எப்படியாவது பெண்ணைக் கட்டிக் கொடுத்தால் சரி அவளுக்கு, அவ்வளவுதானே? – ஒப்புக்கொண்டு பிறகு போய்ச் சொல்லுவோம். வேறு வழியில்லாமலேனும் சம்மதித்துத்தானே ஆக வேண்டும். ஆனால் ஒன்று. ரங்கபாஷ்யம் சொல்வதுபோல் குடும்பத்தை உடனே சென்னைக்கு மாற்றுவது என்பது ஆகாது. கொஞ்ச நாளைக்கு அங்கேயே இருக்கட்டும். பணம் மட்டும் அனுப்புவோம். நந்தினியின் பங்களாவிலேயே டேராப் போட்டுவிட வேண்டியதுதான். அவளின் தந்தையைப் போல் இருந்து அவளைப் பாதுகாத்தால், படிந்துதானே போயாக வேண்டும்? அந்த ஸ்தானம் இந்த வயதில் தனக்கும் பொருத்தம்தானே?’யம்மாடி….என் பொண்ணே…என் செல்வமே…’என்று குழைந்தால் எந்தப் பெண்தான் மசிய மாட்டாள். ‘அப்பா…..!!!’ என்று அவளைச் சொல்ல வைக்கிறேன்….அவளைப் பிடித்து, அவள் மூலமாய் அந்த பிரேம்குமாரைப் பிடித்து, என் பெண்ணை அவன் தலையில் கட்டுகிறேன். என் கனவு பெருங்கனவு. மாயக் கனவு. ஆனால் நிஜம். இது சத்தியம். மனதில் கல்வெட்டுப் போல் பதித்துக் கொண்டார் பஞ்சாபகேசன்.
‘இங்க ஒரு பொண்ணு கல்யாணத்துக்கு நெல்லுக்குதிரு கணக்கா நின்னுக்கிட்டிருக்கு….அங்க நடிகையைப் பாதுகாக்கப் போயிட்டீங்களாக்கும்…உருப்பட்டாப்லதான்….. ‘– அசரீரியாய் பவானி கத்துவது போல் காதில் அவ்வப்போது ஒலிக்கத்தான் செய்தது. அவள் குரல் கேட்கையில் மெலிதாய் உடம்பு நடுங்கவும்தான் செய்கிறது. நினைப்பை அறவே புறந்தள்ளினார் பஞ்சு.
“வாருமைய்யா புறப்படுவோம்…வீட்டுல பார்த்துக்கிடலாம்…” என்று பஞ்சுவை எழுப்பினார் பாஷ்யம். இருவரும் திரும்பிப் பார்க்காமல் நடந்தார்கள். உள்ளே பார்கவி நந்தினியிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.
“யம்மா…நீங்க ரொம்ப அதிர்ஷ்டம் செய்தவங்கம்மா…உங்க அப்பா மாதிரி ஒருத்தரை நீங்க விரும்பினபடியே உங்களுக்குப் பி.ஏ.வா இருக்கிறதுக்குக் கூட்டி வந்திருக்காரு தயாரிப்பாளர் ஐயா….வெளியே உக்கார வச்சிட்டு வந்திருக்கேன்…”- அவள் சொல்லி முடித்தாளோ இல்லையோ,
“அப்டியா…? என்று அதிசயித்தவாறே, சார்… ஒரு நிமிஷம்…” என்று டைரக்டரிடம் சொல்லிவிட்டு ஆர்வத்துடன் ஷூட்டிங் ஸ்பாட்டை விட்டு விறு விறுவென்று நந்தினி வெளியே வந்தபோது, ரங்கபாஷ்யத்தின் கார் வேகமாகக் காம்பவுன்டைக் கடந்து சாலைக்குள் பிரவேசித்துக் கொண்டிருந்தது.
— உஷா தீபன்