காற்றில் உலவும் கீதங்கள் – டாப் 5 சாங்ஸ் (ஜூன் 2018)
ஏப்ரலில் சினிமா ஸ்ட்ரைக் முடிய, காத்திருந்த படங்கள் எல்லாம் கடந்த இரு மாதங்களாக வர தொடங்கியது. அதனால், ஏற்கனவே வெளிவந்து ஹிட்டாகி இருந்த பாடல்களை, திரையில் காண ரசிகர்களுக்கு வாய்ப்பு அமைந்தது.
இரும்புத்திரை – முதல் முறை
விஷாலுக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு அமைந்த ஹிட் திரைப்படம். டிஜிட்டல் இந்தியாவில் இருக்கும் பிரச்சினைகளைப் பேசிய திரைப்படம். யுவன் பாடல்களை விட, படத்தின் பின்னணி இசையில் கலக்கியிருந்தார். இந்த ‘முதல் முறை’ அவருடைய டிபிக்கல் சாங் என்றாலும், நல்ல விஷுவல்கள் அமைந்த பாடல். மன அழுத்தத்தைக் குறைக்க நாயகி சமந்தா, விஷாலை சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பார். அப்போது வரும் பாடல் இது. அழகான இடங்கள், கலகலப்பான காட்சியமைப்புகள் என நமக்கும் குளிர்ச்சியை ஏற்படுத்தும் பாடல்.
காளி – அரும்பே
கிருத்திகா உதயநிதியின் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த காளி பெரிதாக எடுபடவில்லை. படத்தில் வரும் ஒவ்வொரு ப்ளாஷ்பேக்கிலும் விஜய் ஆண்டனியே முக்கியக் கதாபாத்திரத்தில் வருவதைப் புதுமையான திரைக்கதை என இயக்குனர் நினைத்து எடுத்திருப்பார் போலும். படத்திற்கு அது பெரிதாக உதவவில்லை, இந்த அரும்பே பாடல் அளவிற்கு. “ஏய், உன் பேரு என்ன?”, “என் புருஷனைக் கேட்டு தெரிஞ்சுக்கோ” என ஒரு அதிர்வான உரையாடலுடன் தொடங்கும் பாடல். அருமையான மெலடியாக அமைந்த பாடல்.
செம – சண்டாளி
காளியைப் போல் இது இன்னொரு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்குமார் கதாநாயகனாக நடித்த படம். அதே போல், படத்தின் கதை கைவிட, இப்பாடல் மட்டும் படத்தைப் பற்றிப் பேச கொஞ்சம் உதவியது. வேல்முருகன் குரலில் இப்பாடல் வெளிவந்த உடனே வானொலி நிலையங்களில் நல்ல இடத்தைப் பிடித்தது. இன்றைய கிராமத்துப் பின்னணியில் படமாக்கப்பட்ட பாடல். பாடலை எழுதியவர் யுகபாரதி. இசையும், படமாக்கமும் நன்றாக வந்த பாடல்.
காலா – கண்ணம்மா
ரஜினிக்கு சந்தோஷ் நாராயணின் இரண்டாவது படம். கபாலி அளவுக்கு இல்லை என்பது பொதுவான கருத்து, படத்தின் மீதும், பாடலின் மீதும். ரஜினி படம் என்பதற்காக எந்தக் காம்ப்ரமைஸும் இல்லாமல் அவரவர் பாணியில் பங்களித்திருக்கிறார்கள், இரஞ்சித்தும், சந்தோஷும். அதற்கு இப்பாடல் ஒரு உதாரணம். அறுபத்து எட்டு வயதில் வயதை கடந்த ரொமன்ஸ்ஸை காட்ட முடியுமா? இந்தப் பாடலில் ரஜினியில் முகபாவங்களைக் கவனிக்கவும்.
டிக் டிக் டிக் – குறும்பா
இந்த மாதிரி வார்த்தைகளைக் கேட்டாலே, மதன் கார்க்கி எழுதியிருக்கிறார் என்று புரிந்துக்கொள்ளும் அளவுக்கு இது அவருடைய டெம்ளேட் ஆகிவிட்டது. இன்றைய தமிழ் சினிமாவின் முக்கியமான இசையமைப்பாளராகிய டி. இமானின் நூறாவது படம் இது. இந்த நூறு படங்களில் நிறைய ஹிட் பாடல்கள் கொடுத்திருக்கிறார். அதனால் தான் நூறு படங்கள் சாத்தியமாகியிருக்கிறது. தந்தை – மகன் உறவை பாடும் பாடல், சித் ஸ்ரீராமின் குரலில் மேலும் அழகாகி இருக்கிறது.
இவை தவிர, கோலி சோடா 2, பாஸ்கர் ஒரு ராஸ்கல், ஒரு குப்பைக் கதை போன்ற படங்களிலும் குறிப்பிடத்தகுந்த பாடல்கள் வெளிவந்துள்ளன. யோகி பாபு, நயன்தாரா காம்பினேஷனில் அனிருத் இசையில் வெளிவந்த “கல்யாண வயசு” பாடல், யூ-ட்யூப்பில் சக்கைப்போடு போட்டுக்கொண்டு இருக்கிறது. வருடத்தின் மத்தியில் நிறைய நல்ல பாடல்களின் நடுவே இருக்கிறோம். வருடத்தின் மீதி பாதி என்னவித பாடல்களைக் கொடுக்கிறது என்று பார்ப்போம்.
- சரவணகுமரன்