\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

காய்கறித் தோட்டம்

Filed in இலக்கியம், கதை by on May 24, 2013 1 Comment

kaaikarithi-thoottam_300x300

பக்கத்தில் படுத்திருந்த, முன்தூங்கி பின் எழும் பத்தினி இடுப்பில் குத்தினாள்.

“ஏண்டி உயிர வாங்கற.. கொஞ்ச நேரம் தூங்க விடு …”

“இன்னைக்கு என்ன நாள் தெரியுமா? ஹோம் டிப்போவில கார்டனிங் வொர்க் ஷாப் .. மறந்துட்டேளா?” என்றவாறு வசதியாகத் திரும்பிப் படுத்து கொண்டாள்.

ஓ… அந்த நாள் வந்து விட்டதா? மினசோட்டாவில் ஏன் பன்னிரண்டு மாதங்களும் பனிக்காலமாகவே இருக்கக் கூடாது என்று தோன்றியது எனக்கு.

“காப்பின்னு ஏதோ ஒண்ணு குடுப்பியே, அதையாவது கலந்து குடேண்டி”

“ஏன்? முந்தாநாள் காலையிலே என் காப்பியக் குடிச்சிட்டு, கழனித் தண்ணீ மாதிரி இருக்கு, இதக் குடிக்கிறத விட குடிக்காமலே இருக்கலாம்னு சொன்னேளோ இல்லியோ .. இப்ப குடிக்காமலே இருக்கிறது?”

‘என் பொண்ணு ஸ்யாமளா, ஞாபக சக்தியிலே யானை மாதிரி ..’ பெண் பார்க்கப் போன போது என் மாமனார் சொன்னது மெய்தான் எனப் பட்டது. என்ன, அது கொஞ்சம் ஓவராகி உடல் பலத்திலும் (உடம்பிலும் கூட) தெரிந்தது.

“நீங்க ரெடியாகி வாங்கோ .. ஒரு ஃபைவ் மினிட்ஸ்லே எழுந்து கலந்து வைக்கிறேன்”

அவள் காப்பி கலக்கும் நேரத்தில் சொர்க்கத்துக்குப் போய் ‘ஹலோ’ சொல்லி விட்டு வரலாம் என நினைத்தது பஸ்பமாகிப் போனது.

மூன்று வாரங்களுக்கு முன்பு காரில் போகும் போது, எப்போ வருவேன். எப்படி வருவேன்னு சொல்லாம, வர வேண்டிய நேரத்துக்குக் கரெக்டா ரேடியோ விளம்பர வடிவில் வந்து சேர்ந்தது விதி. ‘ஹோம் டிப்போ கார்டனிங் வொர்க் ஷாப்’ விளம்பரம். கிட்டத்தட்ட, ஞானசூனியமாக உள்ளே சென்றால் வெளியே வரும் போது இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் போல வெளியே வரலாம் என்ற அளவுக்குப் பேசினார்கள். ஞானசூனியம் என்ற சொல்லைக் கேட்டதும் சட்டென என்னை நோக்கினாள் சகதர்மிணி. அவள் எதேச்சையாகத் திரும்பி என்னைப் பார்த்ததாகச் சொன்னாலும், எனக்கு மட்டும் ‘என்னப் பாத்து ஏண்டா அந்தக் கேள்விய கேட்ட?’ கவுண்டமணி அளவுக்குக் கோபம் வந்தது. ஆனால். எல்லா ஆண்களைப் போல, வந்த கோபத்தை அடக்கிக் கொண்டேன்.

“போன தடவை தான் சாக்கு போக்கு சொல்லிச் சொதப்பினேள் .. இந்தத் தடவையாவது உருப்படியா கத்துண்டு செய்யுங்கோ”

எனக்கு ஏதோ கார்டனிங் செய்வது நேர்த்திக் கடன் போலத் தவறாமல் நிறைவேற்ற வேண்டும் என்கிற தொனியில் பேசினாள்.

சரியாக அந்தச் சமயத்தில் ‘ஸ்டாப் சைன்’ வர இரண்டு புறமும் பார்ப்பதற்காக இடம், வலமாகத் தலையைத் திருப்பினேன். அவள் சொன்னதுக்குத் தான் நான் முடியாது எனச் சொல்கிறேன் என நினைத்து ‘செல்லமாகத்’ தொடையில் கிள்ளிவிட்டாள்.

வீடு வரும் வழியில் ‘மினிட் கிளினிக்’ போய் வரும் அளவுக்கு ஆகி விட்டது. கார் கதவை மூடும் போது சதை சிக்கிக் கொண்டது என்று சத்தியம் செய்யாத குறையாகச் சொன்னாலும், டாக்டருக்கு மட்டும் அது என்னவோ ஒரு ‘டைனாசர்’ ஏற்படுத்திய காயம் போலவே தோன்ற, செப்டிக் ஆகாமலிருக்க டெட்டனஸ் போட்டு, மூன்று மாத்திரை வகைகளைக் கொடுத்து ‘ஷார்ட் டெர்ம் டிஸ்எபிலிட்டி’ கடிதமும் கொடுத்து அனுப்பினார்.

“மறந்துடாம வெண்டக்காய் செடியும், கத்தரிக்காய் செடியும் நல்லா வளர என்ன செய்யணும்னு கேட்டுண்டு வந்துடுங்கோ, ஆமா..”. சினிமாவில் சயின்ஸ் லேப் சீனில், குடுவைகளில் இருந்து வரும் புகையைப் போல, புகை வந்து கொண்டிருந்த காப்பிக் கப்பை நீட்டினாள். குடுவையும் கப்பும் தான் வேறுவேறு. உள்ளே இருப்பது இரண்டிலும் ஒன்று தான். இருந்தாலும் அதைக் குடித்து விட்டால் அந்த நாளில் வேறு எந்த விஷத்தைச் சாப்பிட்டாலும் வயிறு ஏற்றுக் கொண்டு விடும்.

“ஏண்டி… நம்மாத்துல மணி பிளான்ட் கூடச் சரியா வளர மாட்டேங்கரது. இதுல எங்கடி கத்தரிக்காயும், கொத்தரங்க்காயும் வளக்கரது?”

“பர்ஸ்லே மணி இருந்தா, தொட்டியிலேயும் தானா வளரும். அதான் இருக்கிறதை எல்லாம் சூதாடியாட்டமா ஸ்டாக் மார்க்கெட்லே விட்டுடறேளே. ஒழுங்கா சமத்தா வாயை மூடிண்டு நான் சொல்றத மட்டும் கேட்டுண்டு வாங்கோ.”

கேஸ் டிஸ்மிஸ் ஆன வக்கீலைப் போல அவள் எழுதித் தந்த கேள்விகளை எடுத்துக் கொண்டு எழுந்தேன்.

“விவரமா கேட்டுண்டு வாங்கோ.”

ஹோம் டிப்போ போன போது, என்னைப் போல வீட்டிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட இந்தியக் கணவர்கள் மூன்று பேரும், அமெரிக்கக் கணவர்கள் இருவரும் இருந்தனர். அக்ஸப்டன்ஸ் ஃபார்ம் என்று ஒன்று கொடுத்துப் பெயர், முகவரி, தொலைபேசி, ஒருவேளை விதை நடும்போது நான் இறக்க நேர்ந்தால் யாரிடம் (உடலை ஒப்படைத்த பின்) செடிகளை விற்பது போன்ற விவரங்களைக் கேட்டிருந்தார்கள். எல்லாவற்றையும் ஃபில் செய்தேன். கடைசியாக ‘எங்களைப் பற்றி எப்படி அறிந்தீர்கள்’ என்ற கேள்விக்கு மட்டும் தமிழில் ‘விதிடா.. விதி’ என எழுதி வைத்தேன்.

சற்று நேரத்தில் காது, மூக்கு இத்யாதி பகுதிகளில் வளையம் மாட்டிய ஒரு பெண்மணி வந்து “ஆர் யூ ஆல் எக்சைட்டட்?” என்றாள்.

அவளின் கால்சட்டை அளவை பார்த்ததும் இரண்டு மூன்று பேர் சட்டைப் பையிலிருந்து கூலர்ஸ் எடுத்து அணிந்து கொண்டார்கள்.

“ஐ ஆம் மேண்டி அண்ட் ஐ ஆம் கோயிங் டு ஷேர் சம் சீக்ரெட்ஸ் ஆஃப் வெஜிடபிள் கார்டனிங் வித் யூ. திஸ் இஸ் ஜீன் அண்ட் ஷி வில் ஹெல்ப் அஸ் டுடே” பொய்யான சிரிப்புக்கு நடுவே கொஞ்சம் பேசினாள்.

எனக்கு மட்டும் அவள் மனதில் “வந்துட்டானுங்க காலங்காத்தால ..” என நினைப்பது தெரிந்தது.

மேலும் இருவர் வந்து சேர்ந்த பின் வொர்க் ஷாப் தொடங்கியது. முதலில் கையுறைகள் இருந்த ஒரு பகுதிக்குக் கூட்டிச் சென்று நீங்கள் விரும்பும் கையுறைகளை எடுத்துக் கொள்ளுங்கள் என்றாள் ஜீன். இருப்பதிலேயே அதிக விலையுள்ள கையுறைகளை எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்த இந்திய நண்பர்கள், ‘யூ கேன் பே ஃபார் தட் ஆஃப்டர் த வொர்க் ஷாப்” என்று அவள் சொன்னதும் அதை அப்படியே ஸ்டாண்டில் மாட்டிவிட்டு நைசாக மலிவு விலை கையுறைகள் பக்கம் நகர்ந்தார்கள்.

“யூ ஷுட் நோ யுவர் சாயில் பிஃபோர் யு பிளான்ட் எனிதிங்” என அடுத்த அஸ்திரத்தை வீசினாள் மேண்டி. மண் வளத்தைத் தெரிந்து கொள்ள அவர்களிடம் பலவகைப் பொருட்கள் இருப்பதாகவும், அவற்றை வாங்கிச் சென்று சோதனை செய்து எடுத்து வந்தால், மண்ணை வளம் பெற வேண்டிய உரங்கள், மருந்துகள் பரிந்துரைப்பதாகவும் சொன்னாள். ஒரு காலத்தில் தூர்தர்ஷனில் “வயலும் வாழ்வும்” நிகழ்ச்சி வரும்பொழுது அவசர அவசரமாகத் தொலைக்காட்சியை அணைத்த செய்கை ஒரு பளிச்சிடும் வினாடி மனதுக்குள் வந்து போனது.

அடுத்தது தேவையான நடவு உபகரணங்கள். எனக்குத் தெரிந்து எங்கள் ஊரில் இருந்த விவசாயிகளின் ஒரே சொத்து மண்வெட்டி. ஏக்கர் கணக்கில் நிலம் இருந்தாலும் சரி குழி அளவில் இருந்தாலும் சரி மண்வெட்டி மட்டும் தான். ஆனால் மேண்டி சொல்லிய உபகரணங்களை வாங்கினால் அவற்றை வீட்டுக்கு எடுத்துச் செல்ல “ஹோம் டிப்போ” ட்ரக்கை வாடகைக்கு எடுக்க வேண்டும். அதற்கான வாடகைப் பணத்தில் பத்து டாலர் குறையும் என்று மேண்டி மனமுவந்து சொன்னாள்.

இரண்டரை மணி நேரம் இதை வாங்கு, அதை வாங்கு என்று சொல்லிய பின் பத்து அங்குலப் பிளாஸ்டிக் தொட்டியில் நான்கு அங்குலத்திற்குக் குழி தோண்டி செடியை வைத்து மண்ணைப் போட்டு மூடச் சொன்னாள். கண்ணாடி அணிந்த நண்பர் ஒருவர், “அவ்வளவுதானா? இவ்வளவு சீக்கிரம் முடிந்து விட்டதா?” என்ற தொனியில் கேட்டார்.

Kaikari_thottam_cartoon_620x796ஒருவழியாக நூற்று முப்பது டாலருக்கு உபகரணங்கள், உரங்கள், மருந்துகள், விதைகள், செடிகள் எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தேன். அந்த வார இறுதியின் இரண்டு நாட்களும் வயலே வாழ்வாகிப் போனது எனக்கு.

திங்கட்கிழமை மாலை வீடு செல்லும் போது லேசாக இடுப்பு வலிப்பது போலிருந்தது. “மத்தியானம் லஞ்சுக்கு உருளைக் கிழங்கு சிப்ஸ் ஏதாவது சாப்பிட்டிருப்பேள்..வாயுவாயிருக்கும்” என்ற விசாரிப்புடன் முடிந்து போனது ஸ்யாமுவின் அனுசரணை.

இரவு கிட்டத்தட்ட அரை பாட்டில் மருந்து காலியான பின்பு தான் தூங்க முடிந்தது. மறுநாள் காலை ஆபீஸுக்குக் கிளம்பி நானே செய்த இரசாயனக் கலவையைக் குடித்துக் கொண்டிருந்த போது இறங்கி வந்தாள் மு.தூ.பி.எ. பத்தினி. (புரியவில்லை என்றால் திரும்பத் தொடக்கத்திலிருந்து படியுங்கள்). வந்தவள் ஜன்னல் வழியாகப் பின் தோட்டத்தைப் பார்த்து “ஐய்ய் … செடி துளிர் விட்டிருக்குன்னா.. ..” எனக் கத்தி கொண்டே டெக்கின் கதவைத் திறந்து வெளியில் ஓடினாள்… பக்கத்து வீட்டில் தேமே என்று படுத்து கிடந்த நாய், கழுத்து முதல் பாதம் வரை ஒரே அளவுள்ள நைட்டி எனும் அங்கியை அணிந்திருந்த ஸ்யாமு ஆர்ப்பரிப்பதைப் பார்த்து வேற்றுக் கிரகப் பெண்மணியைப் பார்த்ததுபோன்ற பயத்தில் குரைக்கத் தொடங்கியது.

“நெஜமாவே துளிர் விட்டிருக்குன்னா.. ..” கீழே இறங்கி ஓடினாள்.

“சரிடி … மேல வா..“

“செடிகள் கூடப் பேசினா அதுகளுக்கு புத்துணர்வு கிடைக்கும்னு ஹோம் அண்ட் கார்டன் சேனல்ல சொன்னதக் கேட்டுட்டு… நேத்து முழுக்க அங்கயே நின்னு பேசிண்டேயிருந்தேன்… அதான் சீக்கிரமே முளைச்சிடுத்து”

“சரிடி நான் கிளம்பறேன்… மேல வா”

“சித்த இருங்கோன்னா… சாயந்தரம் வரச்சே பூஜா க்ராசரிலே ஒரு  தேங்காய், ரெண்டு வாழப்பழம், கொஞ்சம் வெத்தல பாக்கு, ஒரு பொக்கே பூ வாங்கிண்டு வந்துடுங்கோ ..  பகவானுக்கு நைவேத்யம் பண்ணி, பூஜ பண்ணி சேவிச்சுக்கலாம்.. வேண்டிண்டேன்”

இரண்டொரு வாரங்களில் மேலும் சில செடிகள் துளிர் விட்டன. வீடு முழுவதும் மாவிலைத் தோரணம் கட்டி சீரியல் செட் போடாத குறை தான். மறுநாள் வால்மார்ட்டில் இருந்து பத்துப் பெரிய கண்ணாடி ஜாடிகள் வந்து இறங்கின.

“இவ்வளவு ஜாடிகள தூக்கிண்டு வர்றேனே . சித்த வாங்கி வைக்கப் படாதா..?”

“என்னடி இதெல்லாம்?”

“தக்காளி ஊறுகாய்  போட்டு ஸ்டோர் பண்ணி வெக்கத்தான் .. பாத்து வையுங்கோ . ஒடஞ்சுட கிடஞ்சுடப் போறது.”

“உனக்கு ஊறுகாயெல்லாம் போடத் தெரியுமாடி?”

“ரேவதி சங்கரன் தான் சொன்னாளே… ஜெயா டீ.வி.ல . நோட்ஸ் எடுத்து வெச்சிருக்கேன்.”

“ஏண்டி … அதுக்காகப் புதுசா பாட்டிலெல்லாம் வாங்கிண்டு … பழய காப்பி பொடி பாட்டில் ஆகாதா?”

“ஏன்? நீங்க வாங்கற பாட்டிலுக்கெல்லாம் எவ்வளவு செலவு செய்யறேள்?” பொடி வைத்துப் பேசத் துவங்கினாள்.

இனித் தாங்காது என்பதால் வாயை மூடி கொண்டேன்.

தினமும் என் திருப்பள்ளியெழுச்சிக்குப் பின் எழுந்திருக்கும் ஸ்யாமு, சில நாட்களாகவே விடிவதற்கு முன்னரே எழத் துவங்கினாள். ஒரு நாள் காலையில் நான் கிளம்புவதற்குத் தயாராக, ஷூ மாட்டிக் கொண்டிருந்த போது தோட்டத்திலிருந்து உள்ளே வந்தாள்.

“எங்க காலங்கார்த்தால கெளம்பியாறது?”

“இல்ல.. ஃப்ரெண்ட்ஸெல்லாம் கால்ஃப் விளையாடப் போறா.. நானும் போலான்னு..”

“எது இந்தப் பந்த ஒரு எடத்தில நிக்க வெச்சிண்டு நடந்துண்டே இருப்பாளே அந்த ஆட்டமா.. ஒண்ணும் வேண்டாம் … பெரிய டைகர் பட்டோடின்னு நெனப்பு மனசிலே .. கால்ஃப் விளயாடப் போறாராம்.. கால்ஃப்.”

“மகா புத்திசாலிடி நீ … அது டைகர் பட்டோடி இல்ல.. டைகர் வுட்ஸ்..”

“வுட்டோ … ப்ளாஸ்டிக்கோ .. போய்ப் பொட்டாசியம் காம்போஸ்ட் வாங்கிண்டு வாங்கோ… இடது கோடில மூணாவது செடி லேசா வளத்தி கொறச்சலா இருக்காப்பலத் தோண்றது..”

“என்னிக்கோ ஒரு நாள் விளையாடப் போறேன்.. அதையும் வேண்டான்னா எப்படிடீ?”

“நீங்க ஆடற ஆட்டம் தெரியாதா? லொட்டு லொட்டுனு பத்தடிக்கு ஒரு தடவத் தட்டிண்டு.. பக்கத்தாத்து வாண்டு எமிலி, கையாலேயே நீங்க அடிக்கிறத விடத் தூரமா எறிவா.. நீங்க அதுக்கு நீளமா ஒரு மோர் மத்த தூக்கிண்டு அலைவேள் .. வெயில் ஏற்றதுக்குள்ள காம்போஸ்ட் வாங்கிண்டு வந்து வேலையை முடிங்கோ ..”

இன்னொரு நாள், ஆபிஸில் லஞ்ச் ரூமில் உட்கார்ந்து காப்பி சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் ஸ்யாமு கூப்பிட்டாள்.

“என்னடி வேணும்? நான் ஒரு முக்கியமான மீட்டிங்கில இருக்கேன்”

“உடனே லீவ் போட்டுட்டு ஆத்துக்கு வாங்கோ..”

“ஏண்டி? என்னாச்சு? ஒடம்புக்கு என்ன? என்ன விட்டுட்டு போயிடாதடி ஸ்யாமு … ஆம்புலன்சுக்கு ஃபோன் பண்ணிட்டியா?”

“அடச்சே .. நேக்கு ஒண்ணுமில்ல.. நன்னா குத்துக் கல்லாட்டமா இருக்கேன்.. நம்மாத்து தோட்டத்தில திடுதுப்புனு ஒரு முயல் வந்து ஒக்காந்துண்ட்ருக்கு.. கோட்டானாட்டமா இருக்கு பாக்கறதுக்கு.. சனியன்…. செடி எல்லாத்தையும் கடிச்சு போட்டுடப்போடறதுன்னு நெஞ்சு கடந்து அடிச்சுக்குறது.. அதுக்குள்ள ஏதாவது பண்ணியாகணும். ஒடனே பொறப்புட்டு ஓடி வாங்கோ.”

அடுத்த முப்பது நிமிடங்களுக்குள் ஏழு ஃபோன் மிரட்டல் வர, ஏதோ ஒரு நம்ப இயலாத காரணத்தைச் சொல்லி லீவு எடுத்துக் கொண்டு வீட்டுக்குப் புறப்பட்டேன்.

“சாவுக்கு வரச் சொன்னா, பத்துக்கு வர்றாப்பல வர்றேளே. இந்தாங்கோ இதெல்லாம் போய் வாங்கிண்டு வந்துடுங்கோ .. நாளேலேர்ந்து காரை ஆத்தில விட்டுட்டு போயிடுங்கோ, சொல்லிட்டேன்.. . .ஒரு ஆத்திர அவசரம்னா கூட வெளி வாசல் போறத்துக்கு வழியில்ல உங்களயே எதிர்பாக்கவேண்டிருக்கு.. கார் இருந்தா இத்தன்னாழி நானே போய் சட்டுன்னு வேணுங்கறத வாங்கிண்டு வந்திருப்பேன்.. சீக்கிரமா போங்கோ, மசமசன்னு நிக்காதேள்.. ..”

சொல்லி விட்டு ஒரு துண்டுச் சீட்டை நீட்டினாள். வேண்டா வெறுப்பாய் சீட்டை ஒரு நோட்டம் விட்டேன்.

“இவளே, என்னடி இது? வெட்டின முடியா? என்னடி ஆச்சு நோக்கு..”

“நான் எல்லாத்தையும் இண்டர்நெட்ல பாத்து வெச்சுட்டேன்… வெட்டின முடி வாசனைக்கு முயல் மானெல்லாம் வராதாம் ..”

“அதுக்கு நான் எங்கடி போவேன்”

“போய் எந்தச் சலூன்லேயாவது கேட்டுப் பாருங்கோ .. குப்பையில தானே போடப் போறா.. கேட்டா தருவா”

“என்னால முடியவே முடியாது”

“சலூனுக்குப் போய்க் கேட்கச் செளரியப் படலேன்னா சொல்லுங்கோ.. துண்டைக் கட்டிண்டு பாத்ரூமில போய் உக்காருங்கோ.. உங்க தலையில நெறய இல்லனாலும் ரெண்டு பக்கத்திலேர்ந்து வழிச்சி வழிச்சி வாரிப்பேளே..அதை வெட்டிப் போட்டா மூலையிலே இருக்கிற ஒரு செடியையாவது காப்பாத்திடலாம்..”

“மீதிப் பாதிக்கு உன் தலையிலே இருக்கிறத போடுவியா?”

“பொம்மனாட்டி முடி ஆகாதாம்.. இப்ப போய் வாங்கிண்டு வரப்போறேளா, இல்ல பாத்ரூம் போறேளா?.. சீக்கிரமா போய் வாங்கிண்டு வாங்கோ”

சலூனில் போய்க் கேட்ட போது அங்கு வேலை செய்து கொண்டிருந்த பார்பரா (தொழிற்பெயரா இயற்பெயரா எனச் சந்தேகம் வந்தது எனக்கு ) “யு வாண்ட் வாட்?” என்று அதிர்ச்சி விலகாமல் கேட்டாள். விளக்கிச் சொன்ன பின்பு என் நிலைமைக்கு இறங்கித் தன் கம்பெனி பாலிசியெல்லாவற்றையும் உடைத்து, இரண்டு ப்ளாஸ்டிக் பை நிறைய வெட்டின முடித்துண்டுகளை கொடுத்தாள். வாங்கிக் கொண்டு, எதையோ சாதித்த உணர்வுடன் வீடு வந்து சேர்ந்தேன். சேர்ந்ததும் முதல் வேலையாகச் செடிகளைச் சுற்றி ஏதோவொரு உள்ளூர் மனிதத் தலையின் இழந்த ரோமங்களைப் பரப்பி வைத்தேன்.

பாழாய்ப் போன முயல் முடி வாசத்தையெல்லாம் சட்டை செய்யவில்லை. ஸ்யாமுவுக்கு அடுத்ததாகச் செடிகளை அடிக்கடி வந்து பார்த்துச் சென்றது.

“ஐரிஷ் ஸ்ப்ரிங் சோப்பு வாசனைக்கு முயல் வராதாம். சாயந்தரம் வரும் போது ஒரு டஜன் ஐரிஷ் ஸ்ப்ரிங் சோப்பு வாங்கிண்டு வந்துடுங்கோ …”

நாலு ஜோடி சாக்ஸ்களில் தலா ஒரு புத்தம் புது ஐரிஷ் ஸ்ப்ரிங் சோப்புகளை வைத்து நாலு மூலையிலும் கட்டி வைத்தாள்.

டைனிங் ஹாலில் ஜன்னலோரத்தில் ஒரு நாற்காலி போட்டு உட்கார்ந்து “ஆலோலம் சோ ..” பாடாத குறையாகக் கண்காணிக்கத் துவங்கினாள்.

நிஜமாகவே முயல் வருவது நின்று விட்டது. மாறாகப் பக்கத்து வீட்டுச் சாஸி நாய் தனது இயற்கை உபாதையைத் தீர்க்கும் இடமாக எங்கள் தோட்டத்தைப் பயன்படுத்தத் துவங்கி விட்டது.

“கர்மம்.. நாய் வளக்கத் தெரிஞ்சவாளுக்கு அதுக்கு ஒரு சங்கிலி வாங்கத் தெரியர்தா பாருங்கோ .. ஹோம் டிப்போல சித்த உயரமா வேலிக் கம்பி விக்கறாளாம். வாங்கிண்டு வந்துடுங்கோ” அடுத்த பிரச்சனைக்கு விடை தேடினாள்.

கிட்டத்தட்ட நான்கு வாரங்களுக்குப் பின் போன்ஸாய் அளவுக்கு வளர்ந்திருந்த செடியில் தத்தனூண்டு தக்காளி காய் போன்ற ஏதோவொன்று முளைத்திருந்தது. கும்பகோணத்திலிருக்கும் ஒன்று விட்ட அத்தை உட்பட அனைவருக்கும் ஃபோன் செய்து பீற்றிக் கொண்டாள் ஸ்யாமு. அதற்குள் மினசோட்டாவின் வானிலை பல்லை இளிக்கத் துவங்கி விட்டிருந்தது. மரங்களிலிருந்த இலைகள் உதிரத் துவங்கி விட்டிருந்தன.

தேடித் தேடிப் பறித்ததில் ஏழு பச்சைத் தக்காளிக் காய்களும், இரண்டு குடைமிளகாயும் தேறின. மோர் மிளகாய் சைஸில் ஒரு நான்கு பச்சை மிளகாய் கிடைத்தது. வெந்தயக் கீரை என்று கண்ணில் பட்டதையெல்லாம் பறித்ததில் ஒரு ஜிப்லாக் பேக்கில் பாதி வரை பச்சிலைகள் நிரம்பியது.

ஒரு ஞாயிற்றுக்கிழமை தக்காளி சாம்பார் என்ற பெயரில் ஏதோ ஒரு கலவையை உண்டாக்கி, ”இதை விமலா ஆத்தில குடுத்திட்டு வந்துடுங்கோ.. பாவம், பாக்கும் போதெல்லாம் காணாததக் கண்டாப்ல கேட்டுண்டேயிருப்பா” என்றாள்.

நாங்கள் சாப்பிடும் போது “என்னதான் இருந்தாலும் நம்மாத்து தோட்டத்துல ஃப்ரெஷ்ஷா விளஞ்ச கறி காயைச்  சாப்புடறது ஒரு அலாதி ருசி, சுகம்” என்ற சப்பை கட்டு கட்டி கொண்டாள்.

”உன்னோட இந்தத் தோட்டத்துக்கு, க்ளவுஸ், மண்ணு, உரம், காம்போஸ்ட், சோப், வேலின்னு நானூத்து சொச்ச ரூபாய் செலவாயிருக்கு. இந்த காசுக்கு காய்கறி வாங்கியிருந்தா வருஷம் ஃபுல்லா சாம்பார் ரசம்னு கொடி கட்டிப் பறந்துருக்கலாம்.. ம்…!” என்றேன் நான்.

“உங்களுக்கு எதுக்கெடுத்தாலும் கணக்குத் தான் … அப்படியே உங்கம்மாவை கொண்டிருக்கேள் .. நேக்குன்னு வந்து வாச்சுருக்கு.. ஒரு பொம்மனாட்டி கஷ்டப்பட்டு ட்ரை பண்ணாளேன்னு பாராட்டத் தோண்றதா? அதுக்கெல்லாம் கொடுத்து வெச்சிருக்கணும். நேக்கு இந்த ஜென்மத்தில அந்தக் குடுப்பினை இல்லை, நான் வாங்கிண்டு வந்த வரம் அப்படி..” எனப் பச்சாதாப உணர்வு காட்டி எனது பணம் போன சோகத்தைத் திசை திருப்பினாள். விட்டால் போதும் என்று எழுந்து ஓடினேன்.

அடுத்த வாரத்தில் ஒரு நாள், “ஏன்னா, ஃபாக்ஸ் 9 சேனலில காட்டினா.. ஃபால் சீசன் தான் பல்ப் ப்ளாண்ட்ஸ் நட சரியான சமயமாம். லின்டர்ஸ்ல இந்தச் சனிக்கிழமை ஃபால் ப்ளாண்டிங் வொர்க் ஷாப் இருக்காம். சனிக்கிழமை இங்க போகணும் அங்கப் போகணும், கால்ஃப் கத்திரி்க்கான்னு சொல்லாம வொர்க் ஷாப் போயிட்டு வாங்கோ … அடுத்த வருஷம் நம்ப ப்ளாக்கிலேயே நம்மாத்து தோட்டம் தான் கலர் ஃபுல்லா இருக்கணும், இப்பவே சொல்லிட்டேன் ஆமா..” என்றாள்.

அவள் ஏதேதோ பேசிக் கொண்டே இருந்தாள்.. கண்கள் இருட்டிக் கொண்டு, தலை சுற்றுவது போல் தோன்ற ‘டமாரென’ சத்தத்துடன் தரையில் சாய்ந்தேன் நான்.

“ஐயோ பகவானே, என்னாச்சு இந்த மனுஷனுக்கு.. இவ்வளவு நேரம் நன்னாத்தானே இருந்தார்.. கடவுளே… இதுக்காத்தான் அப்பவே தலையால அடிச்சுண்டேன்…. இப்ப தோட்டத்துல ஒரு எலுமிச்சை செடி இருந்தா, இந்தச் சமயத்துல எவ்வளவு சௌரியமா இருக்கும் .. அவசரத்துக்கு நான் எங்க போவேன் இப்போ? ஏன்னா எழுந்திருங்கோ …”

– மர்மயோகி.

Comments (1)

Trackback URL | Comments RSS Feed

  1. மது வெங்கடராஜன் says:

    நேத்துத்தான் ஹோம் டிப்போக்கு போயிருந்தேன், ஒரு வேலயா.. தற்செயலா திரும்பிப் பாத்தா, நம்ம மாமா. ஏதோ ஃபாரத்தை ஃபில்லப் பண்ணிண்ட்ருந்தார்.. பக்கத்துல ஒரு எட்டுப் போய் என்ன கேட்டுண்டு வரலான்னு போனேன்.. எலுமிச்சத் தோட்டம் போடறது எப்படின்னு க்ளாரா க்ளாஸ் எடுக்கராளாம், மாமி டிவியில பாத்து ஆன்லைன்ல ஸைனப் பண்ணி மாமாவை அனுப்ச்சி வச்சுருக்கா, மாமாவும் காலங்காத்துல ஹிண்டு ஆன்லைன் படிக்றத தியாகம் பண்ணிட்டு ஒரு அரை நிஜாரைப் போட்டுண்டு வந்து நிக்கறார்.. பாவம்.. நம்மாத்துல அவள மாமியண்ட அண்ட விடாமப் பாத்துக்கணும்… அவ்ளவுதான் நம்ம கவலையெல்லாம்… ஆண்டவா.. காப்பாதுடாப்பா…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad