உண்மையான அன்பின் வல்லமை
இந்த உலகம் அன்பால் இணைக்கப்பட்டது. அதில் உள்ள அனைத்து உயிர்களும் அன்புக்காக ஏங்குகின்றன. அன்பின் அடிப்படையில் உருவாகுவதுதான் திருமணம். அந்த திருமணம் வெற்றிபெற முதன்மையான காரணம் கடவுளின் அன்பும், மற்றும் கணவன் மனைவியிடையே உள்ள அன்பு கலந்த உறவும்தான்.
எந்த ஒரு நபரும் கடவுளின் விருப்பப்படி நடப்பதன் மூலமாகவே கடவுளின் அன்பைப் பெறுகிறார். அதேபோல குடும்பத்தில் தம்பதியர்கள் கடவுளை முழுமனதோடு நேசிக்கும்போது, அவர்கள் மிகவும் ஆசிர்வதிக்கப்படுவார்கள். அவர்களின் திருமணபந்தத்தில், அவர்கள் கடவுளின் மேல் கொண்டுள்ள அன்பினாலும், பக்தியினாலும் தான், அவர்கள் இடையே உள்ள நெருக்கம் உறுதி செய்யப்படுகிறது.
திருமண வாழ்வின் வெற்றிக்கு முக்கிய காரணம் தம்பதியர்கள் ஒருவர்மேல் ஒருவர் கொண்டுள்ள தன்னலமற்ற அன்பின் வலிமைதான். நம் வாழ்க்கைத் துணையை அன்புசெய்யும் போதும், அவர்களை மதிக்கும் போதும், நமக்குள் இன்பம் பிறக்கிறது.
தம்பதியர்கள், தங்களுடைய வாழ்க்கை துணையை அன்புசெய்யும் போது, அது வாழ்வில் ஒரு முழுமையான மகிழ்வைத் தரும். கடவுளின் அன்பானது, வாழ்வு என்ற மரத்திற்கு, அடிப்படை வேராகும். அவ்வாறு பெற்ற வாழ்வில் நம்முடைய வாழ்க்கைத் துணையை அன்பு செய்வது அந்த மரம் தரும் இனிமையான பழமாகும்.
இயேசு மனிதகுலத்தைப் பாவ வாழ்க்கையிலிருந்து மீட்க உலகத்திற்கு வந்தார். அவர் தன்னுடைய செயல்மூலம் மனிதகுலத்தின் மேல் அவரது அன்பை வெளிப்படுத்தினார். அந்த அன்பின் வெளிப்பாடாக, மனிதகுலத்திற்காகச் சிலுவையில் துன்பம் அனுபவித்து, அதே சிலுவையில் கொடூரமான மரணத்தையும் ஏற்றுக்கொண்டார்.
அன்பின் வெளிப்பாடு:
ஒருநாள், பீட்டருடைய பெற்றோரும் லிண்டாவின் பெற்றோரும் தங்களுடைய பிள்ளைகளுக்குத் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். பீட்டரும் லிண்டாவும் அந்த நகரத்தின் முக்கிய நிறுவனங்களில் உயர்ந்த பதவிகளில் இருந்தனர்.
ஒரு நல்ல நாளில், பீட்டர் மற்றும் லிண்டாவினுடைய திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அவர்களும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர். அப்போது ஒருநாள் பீட்டர் தனது காரை ஓட்டி சென்றபோது, வழியில் விபத்துக்குள்ளானார். பலத்த காயங்களோடு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார்.
அதை அறிந்த லிண்டா, கண்ணீருடன் மருத்துவமனைக்கு விரைந்து வந்தார். அங்கு பீட்டர் சுயநினைவிழந்து படுக்கையில் கிடப்பதைக் கண்டார். அங்கு பீட்டருடைய பெற்றோரையும், மருத்துவர்களையும் பார்த்தார். அப்போது லின்டாவிடம் மருத்துவர்கள், பீட்டரின் மூளை பாதிக்கப்பட்டதால், பேச முடியாது என்றும், விபத்தில் கால்கள் உடைந்து விட்டதால் அவரால் நடக்க முடியாது என்றும் கூறினார்கள்.
லிண்டா மிகவும் மனமுடைந்து கதறினாள். பீட்டருடைய பெற்றோர் அவளுக்கு ஆறுதல் கூறினார்கள். அப்போது அவர்கள் லிண்டாவிடம், பீட்டருக்காகக் கடவளிடம் உருகி மன்றாடுமாறு கேட்டுக்கொண்டார்கள்.
அதேபோல லிண்டா, ஒவ்வொரு நாளும் தன்னுடைய அலுவலக வேலை முடிந்து, மருத்துவமனைக்கு வந்து, பீட்டர் படுக்கைக்கு அருகில் உட்கார்ந்து, கடவுளிடம் மன்றாடினார்.
அவ்வாறு ஒருநாள், அவர் கடவுளிடம் மன்றாடும் போது, பீட்டரின் வலது கையின் ஆள்காட்டி விரல் அசைவதைக் கண்டார். லிண்டாவிற்கு எல்லையற்ற மகிழ்ச்சி. லிண்டா அவரது ஜெபங்களுக்குப் பதிலளிக்கப்பட்டதை உணர்ந்தார்.
அடுத்த நாள், லிண்டா தன் வேலையை ராஜினாமா செய்துவிட்டு, மருத்துவமனைக்கு வந்து, அங்கேயே தங்கி, எல்லா நேரத்திலும் ஜெபம் செய்தார். மூன்று மாதங்களுக்குப் பிறகு, பீட்டர் தனது கண்களைத் திறந்து தன் அருகில் இருந்த லிண்டாவைப் பார்த்து மெலிதாகப் புன்னகை புரிந்தார். மேலும், பேசவும் முயற்சி செய்தார். மருத்துவர்களுக்கோ மிகப்பெரிய ஆச்சரியம். அன்பின் வெளிப்பாடாக லிண்டாவின் இடைவிடாத ஜெபத்தின் பலனாக, அந்த அற்புதம் நடந்தது என்பதை அனைவரும் உணர்ந்தார்கள்.
சில நாட்களுக்குப் பிறகு பீட்டர் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு அனுப்பப்பட்டார். காயங்களும் குணமாகி இரண்டு வருடங்களில் அவரால் நன்றாக நடக்க முடிந்தது. லிண்டா தொடர்ந்து பீட்டருக்காக ஜெபம் செய்தார். பீட்டர் முழுமையாகக் குணமாகி, லிண்டாவையே திருமணம் செய்துகொண்டார். ஒரு வருடம் கழித்து கடவுள் ஒரு அழகான பெண் குழந்தையைக் கொடுத்து அவர்களை ஆசீர்வதித்தார்.
அந்த இளம் வயதில் கூட லிண்டா, தன் வாழ்க்கையைத் தியாகம் செய்து பீட்டர்மேல் அவருடைய உண்மையான அன்பை வெளிப்படுத்தினார்.
அன்னை தெரசாவின் அன்பு:
ஒருநாள், அன்னை தெரசாவிடம் ஒரு வயதான நோயாளியைக் கொண்டு வந்தனர். அங்கிருந்த மருத்துவரின் உதவியுடன், அன்னை தெரசா அந்த வயதான மனிதனின் நிலையைப் பரிசோதித்தார். வயதான மனிதன் ஒரு சில மணிநேரங்கள் மட்டுமே உயிரோடு இருக்க முடியும் என மருத்துவர் கூறினார்.
அன்னை தெரேசாவோ, கவலையோடு எப்படியாவது அந்த வயதான முதியவரை காப்பாற்ற விரும்பினார். மருத்துவரிடம் எப்படியாவது அந்த வயதான முதியவரை காப்பாற்ற என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார். மருத்துவரோ ரூ. 100 / -க்கான ஒரு ஊசி மருந்தை உடனடியாக கொடுத்தால் காப்பாற்ற முடியும் என்றார். அந்த நாட்களில், ரூ. 100 / – என்பது அதிகமானத் தொகையாக இருந்தது.
அன்னை தெரசா, உண்மையிலேயே வயதான நோயாளிகளை நேசித்தார். எனவே, செலவைத் தவிர்த்து ஊசி போட மருத்துவரைக் கெஞ்சிகேட்டுக் கொண்டார். மருத்துவரிடம் அன்னை தெரேசா கெஞ்சிகேட்பதை, பாதி மயக்கத்திலிருந்த அந்த வயதான முதியவர் கேட்டார். உடனே அன்னை தெரசாவின் கையைப் பிடித்து, “கடவுளைப் பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். இப்போது, நான் அந்தக் கடவுளின் அன்பை உங்கள் மூலமாக உணர்கிறேன்.” என்றார். நித்திய ஜீவனைப் பற்றிய உண்மையான அன்பு ஆதரவற்றோர்களுக்கு உணர்த்தப்படும்.
சுவாமி விவேகானந்தருடைய தந்தையின் அன்பு:
சுவாமி விவேகானந்தர் தனது இளையவயதில் ஒருமுறை, தனது அம்மா இரவு உணவாக தனது தகப்பனுக்கு கருகிய ரொட்டியைப் பரிமாறுவதை பார்த்தார். அவரது தந்தையோ ரொட்டியைப் பற்றி எந்த கருத்தையும் தெரிவிக்காமல், மௌனமாக ரொட்டியைச் சாப்பிட்டார்.
பின்னர் விவேகானந்தர் தனது தந்தையிடம், “நீங்கள் ஏன் இந்த கருகிய ரொட்டியை சாப்பிடுகிறீர்கள்? நீங்கள் ஏன் அம்மாவை இதைப் பற்றி கேட்கவில்லை?” என்று கேட்டார்.
அதற்கு அவருடைய தந்தை “உன் தாயார் காலையிலிருந்து கடினமாக உழைக்கிறார். நமக்காக நல்ல உணவை தயார் செய்வதற்கு நிறைய முயற்சிகளை அவர் எடுத்துக் கொள்கிறார். ரொட்டி கருகியது தற்செயலாக நடந்த ஒன்று. அதைப்பற்றி கேட்டு அம்மாவை நான் காயப்படுத்த விரும்பவில்லை” என்று சொல்லி, தனது துணைவியாரின் மேல் உள்ள அன்பையும் பாசத்தையும் வெளிப்படுத்தினார்.
எளியோர் மீதான பெரும்தலைவர் காமராஜரின் அன்பு:
ஒருமுறை, முதலமைச்சராக இருந்த பெருந்தலைவர் கருமவீரர் காமராஜர் காரில் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது சாலையில், ஒரு வயதான முதியவர் அதிக பாரத்தைக் கொண்ட வண்டியைச் சரிவான பாதையில் மேல்நோக்கி இழுத்துக் கொண்டிருப்பதைக் கண்டார். வண்டியோ மேல்நோக்கி நகராமல் கீழ்நோக்கி நகரத் தொடங்கியது.
காமராஜர், ஓட்டுநரிடம் காரை நிறுத்தச் சொன்னார். காரைவிட்டு இறங்கிய காமராஜர் ஓடிச் சென்று அந்த முதியவருடைய வண்டியைப் பின்னாலிருந்து தள்ளி அந்த முதியவருக்கு உதவினார். அந்த வண்டி சமதளப் பாதையை அடையும்வரை பொறுமையாக அந்த எளிய வயதான முதியவருக்கு உதவிசெய்தார்.
சமதளத்தை அடைந்தவுடன் அந்த வயதான பெரியவர், காமராஜரைத் திரும்பிப் பார்த்து மெல்லிய புன்னகையுடன் நன்றி தெரிவித்தார். பிறகு காமராஜரும் மகிழ்ச்சியுடன் காருக்குத் திரும்பினார்.
இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த கார் ஓட்டுநர் “ஐயா ஏன் அப்படி செய்தீர்கள்” என்று காமராஜரிடம் கேட்டார். அதற்கு காமராஜர், “இந்த மாதிரியான எளிய, வறிய மக்களுக்கு உதவுவதன் மூலம்தான் மக்கள் மேலுள்ள நம் அன்பைக் காட்ட முடியும்.” சரியான நேரத்தில் செய்யப்படும் ஒரு சிறிய உதவி அவர்களுக்குப் பெரும் நன்மைகளைத் தருகிறது.
அவ்வாறே, “நம் எல்லோரையும் காக்கும் இறைவன் அன்பானவர். அன்பில் நிலைத்திருக்கிறவனும் இறைவனில் நிலைத்திருக்கிறான், இறைவன் அவனில் நிலைத்திருக்கிறார்.” (1 யோவான் 4: 16).
மகாத்மா காந்தி, “அன்பு எங்கே இருக்கிறதோ, அங்குதான் வாழ்க்கை இருக்கிறது.” என்று சரியாகச் சொன்னார்
அதை, லிண்டாவும் மற்றும் பீட்டரும் அவர்களது திருமண வாழ்க்கையில் நன்றாக நிரூபித்துக் காட்டினார்கள்.
சுவாமி விவேகானந்தர் அதைத் தனது தந்தையின் அமைதியான நடத்தைகளில் கவனித்தார்.
காமராஜர் அதை எளியவர்களுக்குச் சரியான நேரத்தில் உதவி செய்வதன் மூலம் வெளிப்படுத்தினார்.
- Dr. அந்தோனி தாமஸ்