இது குற்றமில்லை! வெறும் பருவமாற்றம்!
பட்டமரங்கள் துளிர்த்திடக் கண்டேன்!
கலி முற்றிட வில்லை!
காய்ந்த புல்வெளி பிழைத்திடக் கண்டேன்!
இது அதிசய மில்லை!
வெண்ணிறச் சாலைகளவை கறுத்திடக் கண்டேன்!
விழிகளில் பிழையு மில்லை!
சொக்காய் அணியா காளையர் கண்டேன்!
அவர் பிச்சையர் இல்லை!
காலில்லா உடையனிந்த கன்னியர் கண்டேன்!
அவர் கற்பிலேதும் குற்றமில்லை!
தேடித்தேடி என்னுள் விடையைக் கண்டேன்
இது குற்றமில்லை! வெறும் பருவமாற்றம்!
ஆம் மினசோட்டாவின் வசந்தகாலப் பருவமாற்றம்!
-சத்யா-
பிச்சைக்காரர்கள் எல்லாம் சொக்காய் போட்டிருக்க மாட்டார்களா?
காலில்லா உடையனிந்த கன்னியர் கண்டேன்!
அவர் கற்பிலேதும் குற்றமில்லை!
உடையனிந்த = உடையணிந்த
கற்புக்கும் உடைக்கும் சம்பந்தம் இருக்கிறது என்று அமெரிக்காவில் வாழ்பவர்கள் நினைக்கிறார்களா என்ன?
கற்பு என்பது பற்றிய அபிப்பிராயமே இபோது திருத்தி எழுதப்பட்டுவிட்டதே?
ஏதோ உதைக்கிறது.
தம்பி லக்ஷ்மணா, கூர்மைப் பார்வைக்கு நன்றி. ”உடையணிந்த” தட்டச்சுப்பிழைக்கு வருந்துகிறோம். கவிதையின் பொருள் பற்றிய கருத்துப் பற்றி எழுதிய கவிஞர் விடையளிப்பதென்பதே பொருத்தமானது. பத்திரிகையின் ஆசிரியர் என்ற முறையிலும், கவிதையை ரசித்தவன் என்ற முறையிலும் என் கருத்தைப் பகிர்ந்து கொள்ள எண்ணினேன்.
கற்பிற்கும் உடைக்கும் நேரடித் தொடர்பு உள்ளதா என்பதைவிட ஆடைக்குறைப்பின் நோக்கத்திற்கும் கற்பிற்கும் தொடர்புள்ளது என்பது பொருத்தமான கருத்தாக இருக்குமென நினைக்கிறேன். அந்தக் கோணத்தில் பார்க்கையில், கவிதையின் பொருள் சரியெனத் தோன்றுகிறதென்பது எனது சொந்தக் கருத்து. மேலும், இந்தப் படைப்புகளனைத்துமே, படைப்பாளியின் கருத்துக்கள் மட்டுமேயன்றி, அமெரிக்காவில் வாழும் அனைவரின் கருத்தாகவோ, தமிழினம் முழுவதின் பிரதிநிதித்துவமாக எடுத்துக் கொள்ள வேண்டாமென்றும் தெளிவு படுத்தலாமென நினைத்தேன். மறுபடியும், கருத்துக்களுக்கு நன்றி. ஆரோக்கியமான விவாதங்களுக்கு இந்த இணைய தளத்தில் என்றும் இடம் உண்டு. எனவே, அபிப்பிராயங்களைத் தொடர்ந்து பகிர்ந்து கொள்ளவும். நன்றி பல.