மூளைவளர்ச்சியும் மொழி கற்றலும்
காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்கிறது நம் முதுமொழி. இது மூளை வளர்ச்சியிலும் மொழிகற்றலிலும் தகுமான அறிவுரை என்பது தற்போதைய மொழியியல் கல்வி ஆராய்ச்சிகளில் இருந்து தெரிய வருகிறது. மொழி தெரிந்து கொள்ளல் மனித இனத்தின் பிரதான குணாதிசயங்களில் ஒன்று. மொழி கற்றல் மூளை வளர்ச்சியில் பிரதான மாற்றங்களை உண்டு பண்ணுகிறது என தற்பொழுது பரீட்சார்த்த ஆராய்ச்சி மூளைப் படங்கள் மூலம் தெளிவாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
இந்த ஆராய்ச்சியின் பிரதான அவதானிப்பு என்ன வென்றால், மனித மூளை வளர்ச்சியில் 13 வயது ஒரு திடகாத்திரமான வாழ்க்கை வரம்பு என்ற அறியப்பட்டமையே. சிறுவர்கள் பெரியவராக மாறும் பருவ வளர்ச்சியில் சில உடல் மாற்றங்கள் ஏற்படும் அதே சமயம் மூளையில் மொழி கற்றலின் இலகு தன்மையும் குறைகின்றது என அவதானிக்கப் பட்டுள்ளது.
முளை வளர்ச்சியானது குழந்தை தாயின் வயிற்றில் சூழலை உணரும் ஆற்றலைப் பெற்றதில் இருந்து காணப்படுகிறது. இந்த மூளை வளர்ச்சியானது பிரவேசத்தின் பிறகு குறுகிய காலப்பகுதியில் அதிக வளர்ச்சிக்கு உள்ளாகிறது. குழந்தைகள் பிறப்பதற்கு முன்னரே மொழிப் பிரயோகத்தில் பங்குபெறுகின்றனர். அவர்கள் 2 வயதில் ஏறத்தாழ 1000 மணித்தியாலங்கள் / மணித்துளிகள் பேச்சு மொழியைக் கேட்டுள்ளனர்.
பாலகர்கள் பேச்சு மொழியை அவதானிக்கக் கூடியதாகவும் வெவ்வேறு மொழிகளை பகுத்து அறிந்து கொள்ளக்கூடியவர்களாக இருப்பினும், பேச்சு மொழியை நிர்ணயிப்பதும் எழுத்து மொழியை அவதானிப்பதும் மூளையைப் பொறுத்தளவில் வித்தியாசமான வரையறைகள்.
குழந்தைகள் மொழி கற்கும் விதம் முதியவர்களிலும் சற்று வித்தியாசமானது.
சிறுவர்கள் ஒரே சொல்மூலத்தைப் பல்வேறு கேட்டல், பார்வை, கை,தொடல்,
தசை இயக்கப் பிம்பம், எழுத்து மூலம் என பல்வேறு வகைகளில் நிர்ணயித்துக் கொள்ளுவர். இது வளரும் மூளையின் அம்சம். இதன் காரணமாக பருவம் அடையாத குழந்தையின் மூளை பல்வேறு தகவல்களை, உதாரணமாக இரண்டாவது மொழியைத் தனியான இடத்தில் சேகரித்து மீளச் சரியான பாவனையில் உபயோகிக்க அதிக வாய்ப்புக்கள் உண்டு.
முதியவர்களோ தமது மூளையின் வயதின் காரணமாக கற்பவை யாவற்றையும் தமக்கு ஏற்கனவே தெரிந்த தகவல்களுடன் சேர்த்துச் சேகரிப்பதும், ஏற்கனவே தெரிந்த முறையில் பகுத்து வைப்பதும் இயற்கை. மேலும் தகவல்களை உடன் அளந்து பார்த்து, இணைக்கக்கூடிய தகவல்களை இணைத்து முடிவு எடுப்பர்.
புதிய மொழிகற்றாலும் இதை வேறுபாடு இன்றி பழைய இடத்தில், தெரிந்த பிரதான மொழி ஞாபகத்துடன் இணைக்கப் பார்ப்பர். இதனால் இரணாடாவது மொழியைப் படிப்பின் அவர்கள் மீள் பாவனை முறைகள் குழந்தைகளைப் போல் இருப்பதும் இல்லை. குறிப்பாக பேச்சு மொழியும், வாசிக்கக் கற்றலும் மிகவும் வேறுபட்ட அணுகுமுறைகளாகக் கருதப்படுகிறது. இந்த வெவ்வேறு அணுகுமுறைகள் காரணமாக இளயவயதில் அணுகினால் பன்மொழி புலமைத்துவத்தையும் அதன் பயன்களையும் கற்போர் முழுதாக அடையலாம் எனக் கருதப் படுகிறது. மொழி படிக்கும் போது குறிப்பிட்ட வயதினில் மூளை மொழிப் பிரயோகத்தை மாத்திரமல்லாமல் இலக்கண மரபுகளையும் நிரந்திரமாகப் பதிந்து கொள்ளுகிறது என அறியப்பட்டுள்ளது.
மொழியியல் வல்லுனர்கள் (linguists), மொழிகற்றலின் பிரதான நோக்கம் மொழிபாவனை, பேசுதல், அறிகுறி தருதல், மற்றும் புரிந்துக் கொள்ளுதல்.இரண்டாவதாகத்தான் வாசித்தல் எழுதுதல் என்பார்கள்.
எனவே உரியகாலத்தில் இல்லை பருவகாலத்திற்கு முன்னர் மொழிமரபு சார்ந்த உச்சரிப்பு, சொற்பொருள். மற்றும் இலக்கணங்களைக் கற்காவிட்டால் பிரதான மொழி எதுவோ அந்த முதல்மொழியின் உச்சரிப்பு ஒலியியல் மற்றும் இலக்கண வரம்புகள் இரண்டாவது மொழிகற்பதைப் பாதிக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
– யோகி அருமைநாயகம்-