துணுக்குத் தொகுப்பு
ஒரே சமயத்தில் இரண்டு அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட பணிகளைச் செய்யும் திறனை ஆங்கிலத்தில் ‘மல்டி டாஸ்கிங்’ (Multitasking) என்பர். இத்திறனுக்கான தமிழ்க் கலைச்சொல் ‘பல்பணியாக்கம்’.
ஒரே நேரத்தில் பல பணிகளைச் செய்வதாக நாம் நினைத்தாலும், ஒரு பணியிலிருந்து மற்றொரு பணிக்கு மிக வேகமாக முன்னும் பின்னும் தாவுகிறோம் என்பதே உண்மை. காரோட்டிக் கொண்டே, ஃபோனில் பேசுவது, டி.வி. பார்த்துக் கொண்டே சாப்பிடுவது போன்றவை நம்மில் பலர் அதிகபட்சமாகச் செய்யக் கூடிய ‘பல்பணியாக்கம்’. கூர்ந்து கவனித்தால் இவற்றில் ஒரு செயல் மூளையின் கட்டளைக்காக காத்திருப்பதில்லை. அதாவது, நாம் மீண்டும் மீண்டும் செய்து பழகிய பணியாக, தன்னியக்கச் செயலாக இருக்கும். உதாரணமாக டிவி பார்த்துக் கொண்டு சாப்பிடும்போது உணவின் சுவையிலோ, அளவிலோ மூளை கவனம் செலுத்துவதில்லை. அதனால் அதிகமாகவோ, குறைவாகவோ சாப்பிடுவோம். காரோட்டிக் கொண்டே ஃபோன் பேசுவது கவனச்சிதறலுக்குக் காரணமாகிறது. அண்மைக்கால ஆய்வுகள், பல்பணியாக்கம் ஞாபகத்திறனையும், கவனத்தையும் முன்னும் பின்னும் போகச்செய்வதால் மூளை வேகமாக களைப்படைந்து விடுவதாகச் சொல்கின்றன. இது மன அழுத்தத்தை அதிகரித்து, அந்த வேலைகளைத் தனித்தனியாகச் செய்வதை விட அதிக நேரமெடுப்பதாகச் சொல்கிறார்கள்.
நமக்கு இரண்டு வேலைகளை ஒரே சமயத்தில் செய்வதே கடினமாகயிருக்கையில், வெகு சிலர் தங்களது அதீத நினைவாற்றல் சக்தியால், தங்களைச் சுற்றி நிகழும் பல விஷயங்களைக் கவனத்தில் வைத்திருந்து அவற்றை மீண்டும் ஞாபகப்படுத்திச் சொல்கின்றனர். புதிய சொல்லாக்கப்படி இவர்களை கவனகர் (அ) கவனகக் கலைஞர் என்கிறார்கள். நம் முன்னோர்கள் இவர்களை ‘அவதானிகள்’ என்று அழைத்தனர். வடமொழியில் ‘அவதானம்’ என்ற சொல்லுக்கு ‘கவனித்தல்’ , ‘கிரகித்தல்’ என்று பல பொருளுண்டு. ஒருவரால் ஒரே சமயத்தில் எத்தனை செயல்களில் கவனம் செலுத்தமுடிகிறதோ அதனைப் பொறுத்து அவர்களுக்குச் சிறப்புப்பெயரும் அளிக்கப்பட்டது.
அப்படி வழங்கப்பட்டு வந்த கவனகப் பெயர்கள்.
ஒரே நேரத்தில் 4 வகையான ஆற்றல் புரிபவர் – சதுரவதானி
ஒரே நேரத்தில் 8 வகையான ஆற்றல் புரிபவர் – அஷ்டாவதானி
ஒரே நேரத்தில் 10 வகையான ஆற்றல் புரிபவர் – தசாவதானி
ஒரே நேரத்தில் 16 வகையான ஆற்றல் புரிபவர் – சோடசவதானி
ஒரே நேரத்தில் 32 வகையான ஆற்றல் புரிபவர் – துவாத்ரீம் தசாவதானி
ஒரே நேரத்தில் 100 வகையான ஆற்றல் புரிபவர் – சதாவதானி
நாகைக் கோவை, அழகப்பக் கோவை, நீதி வெண்பா போன்ற செய்யுள் நூல்களையும், நபிகள் நாயகத்தின் ஜீவிய சரித்திரம், சீறாப்புராணப் பொழிப்புரை போன்ற உரை நூல்களையும் இயற்றிய செய்குத் தம்பிப் பாவலர் ஒரே சமயத்தில் நூறு செயல்களில் கவனம் செலுத்தக்கூடிய சதாவதானியாகத் திகழ்ந்தார்.
– தொகுத்தவர் – சாந்தா சம்பத்