\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

அழகிய ஐரோப்பா – 11

(அழகிய ஐரோப்பா – 6/ஃபெரி)

நடுச் சாமம்

நாங்கள் மறு கரையை வந்தடைந்த போது ஃபிரான்சில் மணி இரவு ஒன்பது ஆகியிருந்தது. இரவு நேரம் என்பதால் பெரியளவில் கூட்டம் இருக்கவில்லை. ஃபெரி நிற்பதற்கு முன்னராக எல்லோரும் கீழ் தளத்துக்குப் போய் எங்கள் வேனில் ஏறி வெளியில் போவதற்குத் தயாராக இருந்தோம்.

இங்கிருந்து பாரிஸ் போவதற்கு மூன்று தொடக்கம் நான்கு மணித்தியாலங்கள் ஆகும் என்கிறார் சித்தப்பா. ஒன்றன் பின் ஒன்றாக வரிசையில் நின்று வெளியில் வந்தோம். இருட்டில் எனக்கு திசை எதுவுமே புரியவில்லை.

சித்தப்பாவுக்குப் பழக்கப்பட்ட பாதை என்பதால் எந்தச் சலனமும் இல்லாமல் வேனை ஓட்டத் தொடங்கினார். நான் வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்தேன். பின் சீட்டில் இருந்து குறட்டை சத்தம் வரத் தொடங்கியது…

அகலப் பாதை, ஒடுக்கப் பாதை, நெடும்பாதை என போகும் வழியெங்கும் ரவுண்டப் சந்திப்புகள் ஏராளமாக இருந்தன. பாதை எங்கும் மரங்களும் புதர்களுமாக பெரும் காட்டினைக் கடந்து வரும்போது ஒருவிதமான பய உணர்வு படர்ந்தது. பல மைல்கள் இடைவெளியில் ஊர்கள் அமைந்து காணப்பட்டன.

எனக்கு நித்திரை கண்ணைக் கட்டியது. ட்ரைவர் பக்கத்தில் இருப்பவர் நித்திரை கொள்வது நல்லதல்ல என்பதால் இருந்த தண்ணீரைக் கொண்டு முகத்தை கழுவிக் கொண்டேன்.

ஒரு இரண்டு இரண்டரை மணிநேர பயணத்துக்குப் பிறகு இடி மின்னலுடன் பேய் மழை கொட்டத் தொடங்கியது. காரிருள் மத்தியில் கண்ணுக்கெட்டிய தூரம் எங்கணும் வயல் வெளியும் காடும் மட்டுமே கண்ணில் பட்டது.

“சீ இந்த சனியன் பிடிச்ச மழை இந்த நேரத்தில வந்திருக்கு பார்…” என்றார் சித்தப்பா

“ஒண்டும் தெரியேல்லை… ஒரே புகாராய் இருக்கு” என்றேன் நான்.

“எதுக்கும் ஸ்லோவாய் போவோம்” என்றவர் வேனின் வேகத்தைக் கொஞ்சம் குறைத்தபோது… நூற்றுஇருபது  கிலோமீற்றர் வேகத்தில் வந்த வேன் சட்டென ஒரு மூக்கு முக்கி “சர்ர்ர்ர்ர்…” என்ற பெரும் சத்தத்துடன் மூர்ச்சையாகி அப்படியே நின்றது.

எல்லாம் ஒரு விநாடிப் பொழுதில் நடந்து முடிந்து விட்டது. எங்களுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.

இதற்கிடையில் பின் சீட்டில் தூங்கிய எல்லோரும் சீட்டின் நுனிக்கு உந்தப்பட்டு விழி பிதுங்கினர்.

நானும் சித்தப்பாவும் மொபைல் ஃபோனில் லைட் அடிச்சு என்ன நடந்தது என ஆராய்ச்சி பண்ணினோம்… கீழே இறங்கி மழையில் நனைந்தபடி சுற்றிப் பார்த்தோம்…  எதுவும் பிடிபடவில்லை. மணி வேறு சாமம் பன்னிரெண்டு ஆகியிருந்தது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை உதவிக்கு யாரும் இல்லை…

பயணம் தொடரும்…

-தியா-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad