\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

அமெரிக்க படிப்புக் கடன் ஒரு மாயக் குமிழ்?

மாணவர் படிப்புக் கடன் மீளச் செலுத்துதல் அமெரிக்காவில் மிகவும் கவலைக்குரிய பொருளாதார நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இன்று வரை அமெரிக்கத் தற்போதைய மாணவர் ,பழைய மாணவர்கள் படிப்பிற்காக $1.5 டிரில்லியன் டொலர்களைக் கடனாகப் பெற்றுள்ளனர். இந்த மேல் படிப்பு நல்வாழ்வு என்ற அவாவினால் அவஸ்தைப் படுபவர் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது.

__

இன்று அமெரிக்கப் பொருளாதாரத்தில் பல விடயங்கள் பட்டப்பகலில் பலகாரக் கொறிப்புப் போன்று பேசியவாறு அரசியல்வாதிகள் தமது சுயநலத்திற்காக பொதுமக்களை ஏமாற்றி வருகின்றனர். கடன் வழங்குவர்களுக்குச் சாதகமாக சட்டங்களின் பின் ஒழிந்து, காசு கறப்பவர்கள் கையில் வசுலிப்பு உரிமையைக் கொடுத்துள்ளனர். இதன் பரிவிளைவு நாட்டின் எதிர்காலத்திற்கு உதவுவதாக இல்லை.

தற்போதைய பொருளாதார ரீதியில் பார்த்தால் சில விடயங்கள் அம்பலமாகும். குறிப்பாக குடிமக்கள் சனத்தொகையில் அதிக வளர்தலை எதிர்பார்க்கும் மிலேனியல் சந்ததியை எடுத்துப் பார்த்தால் பரிதாபத்திற்கு உள்ளாகியுள்ளனர் எனலாம். இந்தத் தலைமுறை அவர்கள் முன்னோர் போல் அல்லாது பலவற்றில் பொருளாதார ரீதியாக ஞாயமற்ற சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். மாணவக் கடன்கள், வேலை வாய்ப்பு, வருமானம் போன்றவற்றினால் மிலேனியல்களின் திருமணம், வதிவிடம் வாங்குதல், தமது முதுமைக் காலத்திற்கான சேமித்தல் போன்றவற்றைப் பின் தள்ள வேண்டி வந்துள்ளனர். படிப்புக் கடன்கள் பற்றி பொருளாதாரவியலாளர்களும், மாணவக் கடன் கல்வி  மற்றும் வர்த்தக நிபுணர்களும் தொடர்ந்து விவாதித்தவாறு உள்ளனரே ஒழிய பாதிப்புற்றுள்ள மக்கள் நிலைமை இதுவரை சாதகமான மாற்றத்திற்கு உள்ளானதாகத் தெரியவில்லை.

தரவுத் தகவல்கள் மலிந்து இருக்கும் இன்றைய தறுவாயில் இதைப் பற்றி வாதாடும் ஒவ்வொரு கட்சியும், தமது விவாதக் கொள்கை வெற்றிக்கான தரவுச் சான்றுகளை மாத்திரம் உபயோகித்து வாதாடுகின்றனர்.  உதாரணமாக அமெரிக்கப் பட்டதாரிப் படிப்பு என்று கூறினாலே இது பலவகையாகும். தரமான அரசுப் பல்கலைக் கழகங்களில் இருந்து தனியார் பல்கலைக் கழகங்கள், தபால், மின்னிணையப் பட்டதாரிக் கல்வித் தாபனங்கள் என பல்வகைப் பட்டவையாகவும் உள்ளன. இவையனைத்தும் பிரதானமாக, மாணவர் கல்விக்கான கடன்களை வருமானமாகக் கொண்டு இயங்குகின்றன.

அமெரிக்காவில் ஏறத்தாழ 4000 க்கும் மேற்பட்ட உயர் கல்வித்தாபனங்கள் உள்ளன:

கல்வித்தாபனம் எண்ணிக்கை
பொதுசன 4 வருடக் கல்வி 629
பொதுசன 2 வருடக் கல்வி 1070
தனியார் 4 வருடக் கல்வி 1845
தனியார் 2 வருடக் கல்வி 596

இவற்றில் நாம்  அமெரிக்கப் பொதுசனப் பல்கலைக் கழகப் பட்டதாரிகளை எடுத்துப் பார்த்தால் கடன் அடைப்பு எண்ணிக்கை 89 சதவீதமாகவுள்ளது. அதாவது, கடன் அடைக்க முடியாதவர் தொகை 11 சதவீதம். ஆயினும் கடன் அடைக்க முடியாதவர் தொகை வருடா வருடம் அதிகரித்தவாறே உள்ளது. ஆனால், ஆதாய நோக்கோடு இயங்கும் கல்வி வர்த்தகர்களை எடுத்துக் கொண்டால் அவர்கள் இரண்டு தசாப்தங்களிற்கு முன்தைய விளம்பர விவாதத்தை இன்றும் கூறுவர். அதாவது இவர்கள் கண்மூடி விளம்பரங்களின் படி பட்டதாரிப் படிப்பு கை நிறையக் காசு உழைக்க வழி செய்யும். தற்போது இதற்கான சான்றுகள் பல இல்லை.

இன்று கவலைக்குரிய விடயம் என்னவெனில்  அமெரிக்காவில் பல்கலைக்கழகப் படிப்பை நாடும் 80 சதவீதமான மாணவர்கள் கடனாளிகள்.

எனவே தமக்குச் சாதகமான தகவல்களை வைத்து வாதாடுபவர்களை விடுத்து, உரிய அளவு ஒட்டுமொத்த அமெரிக்க கல்வித் திணைக்சுளத் தகவல் திரட்டல்களை வைத்துப் பார்ப்பதே இவ்விடம் தகுந்த கைமுறையாகும். இன்று படிப்புக் கடன் செலுத்த முடியாதவர்கள் தொகையையும், படித்து முடித்து பட்டதாரி ஆகி அதன் மூலம் வேலை பெற்றும், தமது வருமானத்திற்கு ஏற்ப வாங்கிய கடனின் முதலில் சிறிதேனும் கட்டிக் கொள்ள முடியாது தத்தளிப்பவர் பலர். இவர்கள் பொறுப்பு உள்ளவர்களாக இருப்பினும், அவர்களின் வருமான நிலையை நோக்குகையில் தமது கடனைக் கட்டி முடிப்பார்களா என்பது கேள்விக்குறியே.

மேற்படிப்புக்குக் கடன் கொடுத்து ஆதாயம் பெறும் தனியார் கல்விக் கூடங்கள் பொதுமக்களுக்குப் பெருமளவு தெரியாது இயங்குவது நலம் என்று நினைத்தாலும் பொருளியலாளர் நடை நிலை உண்மைகளை வெளிக்கொண்டு வந்துள்ளனர். பொருளியலாளர் நமது பல்லாண்டு கடன் அடைப்பு ஆதாரங்களை வைத்து, அமெரிக்க மாணவக் கடன்கள்  பெரிய அளவில் பலூனாக வளர்ந்து 2023 இல் ஏறத்தாழ 40 சதவீதமானோர் கடன் அடைக்க முடியாது கைவிடுவதற்கு வாய்ப்பு உண்டு என்கின்றனர். இது நிச்சயம் இந்த உயர் கல்விக்கு உச்ச விலை என்ற அப்பிராயப் பொருளாதாரக் குமிழியைத் (Speculative bubble) தகர்க்கலாம்.

இதைச் சமாளிக்க அமெரிக்க மக்கள் விழிப்புணர்வு தேவை. இன்றும் அமெரிக்கப் பொதுமக்களின் பொது அபிப்பிராயம் ஏறத்தாழ 20-30 வருடங்கள் பின் தங்கியதாகவே உள்ளது எனலாம் அதாவது உயர் கல்வி அவசியம், அதை எப்படியாவது அணுக வேண்டும், அதன் பின்னர் வாழ்க்கை மாறும் என்ற அசையாத நம்பிக்கை வசதியில்லா அமெரிக்க நடுத்தர மக்களையும் பல அவலங்களுக்குத் தள்ளுவதையும் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. இதனால் பயன் பெறுபவர் சுத்துமாத்து ஆதாயம் பெறும் கல்விக் கம்பெனிகளே.

– தொகுப்பு யோகி

உச்சாந்துணை

  1. Despite the economic recovery student debtors , monster in the closet has worsond – https://www.cnbc.com/2018/09/21/the-student-loan-bubble.html
  2. More than 1 million people default on their student loans each year
    https://www.cnbc.com/2018/08/13/twenty-two-percent-of-student-loan-borrowers-fall-into-default.html
  3. Student debt- National Center for Education Statistics
    https://nces.ed.gov/fastfacts/display.asp?id=900

Tags: , , , ,

Comments (2)

Trackback URL | Comments RSS Feed

  1. SENTHIL says:

    Very Nice article Yogi. Thank you!!

  2. யோகி says:

    மிக்க நன்றி செந்தில் – யோகி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad