\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

திகைப்பூட்டும் திரைப்படப் பாடல்கள்

மனிதர்கள் முதன் முதலில் புரிந்து கொள்ளத் தொடங்கிய முதல் மொழி காதல்தான் எனலாம்.  காதல் என்ற சொல்லுக்கு அன்பு, இச்சை, வேட்கை, பக்தி, நேசம் எனப் பேரகராதிக் குறிப்புகள்  பல பொருள் தந்தாலும், அதில் ஆட்படும் ஒவ்வொருவருக்கும் புதுவிதமான உணர்வு தரும் அபாரச் சக்தி காதல்.

‘யாயும் ஞாயும் யாரா கியரோ’ எனும் குறுந்தொகைப் பாடல் தொடங்கி தலைவன் தலைவியின் அகவாழ்வு – காதல் – குறித்து எழுதப்பட்ட பாடல்கள் பல கோடி. எழுத்திலக்கியங்கள் குறைந்து, திரைப்படங்கள் பெருகிய பின்பும் காதல் பிரத்யேக இடத்தைப் பிடித்துள்ளது.

இன்றும், ஓவ்வொரு ஜீவனுக்குள்ளும் துளிர்க்கும் காதல் செடிகளின் வேர்களுக்குப் பன்னீர் தெளித்து, வருடித் தந்து, தழைக்கச் செய்வது காதல் பாடல்கள். சோகமில்லாத தனிமை இனிமையானது. மோகமில்லாத மோனம் சுகமானது.

பல ஆயிரம் கவிஞர்கள் பல பரிமாணங்களில் காதலைப் பாடியுள்ளார்கள். காதல் மனங்களின்  இதயத்தை இளக்கி, கண்ணில் நீர் சுரக்கச் செய்யும் பாடல்கள், காதலியை உச்சி முதல் அடி வரை வருணிக்கும் கேசாதிபாதப் பாடல்கள், ஏக்கமிகு ஒருதலைப் பாடல்கள் எனப் பட்டியல் நீண்டு கொண்டே போகும். இவ்வகைப் பாடல்களில் ஏதாவதொரு குறிப்பிட்ட வரி அல்லது சொல் காதலர்களுக்கு மிக நெருக்கமாக அமைந்து விடுவதுண்டு.

‘மந்திரம்போல் வேண்டுமடா சொல்லின்பம்’ என்று பாரதி வேண்டியது கண்ணதாசனுக்கும் வழங்கப்பட்டதோ என்று எண்ணத் தோன்றும் பாடல் ஒன்றை இப்பதிவில் காணலாம்.

நிச்சயதாம்பூலம் – 1962 ஆம் ஆண்டு ஃபிப்ரவரி மாதம், B.S. ரங்கா இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம். ஷேக்ஸ்பியர் எழுதிய  ஒத்தெல்லோ நாடகத்தின் ஒற்றை வரிக் கருவில், சிவாஜி கணேசன், ஜமுனா, ரங்காராவ், நம்பியார், நாகையா. கண்ணாம்பா, ராஜஸ்ரீ என சாதனையாளர்கள் பலரது நடிப்பில் உருவாகியிருந்த படம்.

வசதி நிறைந்த குடும்பத்துப் பிள்ளையான சிவாஜி கணேசன், ஏழைப் பெண்ணான ஜமுனாவைக் காதலித்து மணம் முடிப்பார். திருமணத்துக்குப் பிறகு நடக்கும் சூழ்நிலை மாற்றங்கள் சிவாஜிக்கு ஜமுனா மீது சந்தேகம் ஏற்படுத்த, அவரைப் பிரிந்து விடுவார். போதாக்குறைக்கு அவர் மீது கொலைப் பழியொன்றும் சேர்ந்து கொள்ளும். இந்தக் குழப்பங்கள் விலகி, மீண்டும் குடும்பம் ஒன்று சேர்வதுதான் படத்தின் கதை.

கல்லூரியில் தினம் தினம் பார்த்து, காதலித்து, மணமுடித்த பின்னர், முதலிரவில், நாயகியிடம் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களைக் கண்டு வியந்து, கேலி கலந்து அதே சமயம் தனது காதலையும் அழுந்தப் பதியச் செய்ய நாயகன் பாடுவதாய் ஒரு பாடல்.

பாவாடை தாவணியில் பார்த்த உருவமா?

இது பூவாடை வீசி வர பூத்த பருவமா?

பாவாடை தாவணியில் பார்த்த உருவமா?

பாலாடை போன்ற முகம் மாறியதேனோ?

பனி போல நாணம் அதை மூடியதேனோ?

பாவாடை தாவணியில் பார்த்த உருவமா?

வாவென்று கூறாமல் வருவதில்லையா?

காதல் தாவென்று கேளாமல் தருவதில்லையா?  

சொல்லென்று சொல்லாமல் சொல்வதில்லையா?

இன்பம் சுவையாக சுவையாக வளர்வதில்லையா?

தத்தித் தத்தி நடப்பதற்கே சொல்ல வேண்டுமா?

நீ முத்து முத்தாய் சிரிப்பதற்கே பாடம் வேண்டுமா?

முத்தமிழே முக்கனியே மோக வண்ணமே!

முப்பொழுதும் எப்பொழுதும் எனது சொந்தமே!

எங்கே என் காலமெல்லாம் கடந்து விட்டாலும்

ஓர் இரவினிலே முதுமையை நான் அடைந்து விட்டாலும்

மங்கை உன்னைத் தொட்ட உடன் மறைந்து விட்டாலும்

நான் மறுபடியும் பிறந்து வந்து மாலை சூடுவேன்!!

நிலவொளியின் பின்னணியில் ஒரு தோட்டம்; அடர்ந்திருக்கும் செடி கொடிகள்; தொங்கும் தென்னங் கீற்றுகள் ; சிறிய நீர் நிலைக் குளம்; இவை தான் காட்சி உடைமைகள். மலர் சூடிய நீண்ட சடை, பளபளக்கும் உடை, கண்களில் மருட்சியுடன் மணப்பெண் ஜமுனா; பட்டு வேட்டிச் சட்டை, புத்தம் புது கைக் கடிகாரம்; இளமை ததும்பும், கம்பீரம் பொங்கும் மணமகன் சிவாஜி கணேசன்.

மாண்டலின், கிட்டார், வீணை, சைலபோன் என மிக மென்மையான முன்னிசை. லேசான புன்முறுவலுடன் சிவாஜி பாடுகிறார் – அதாவது கவியரசரின் வரிகளை, டி.எம்.எஸ் பாடுகிறார்.

பூ மணம் தரும் சுகந்தத்தைப் போல இளமைப் பருவம் பொங்க, பாலாடை போன்ற மாசற்ற குழந்தை முகத்தில் மெல்லிய பனி போல் நாணம் படர்ந்து விட்டதன் அதிசயத்தை வியப்பதாய் பல்லவி.

தன்னையுமறியாமல் மனதில் படர்ந்து, பரவும் காதல் இயற்கையானது – இதற்காக மருளாதே. எந்தவித அச்சமும் தயக்கமுமில்லாமல் நீ இயல்பாக இருக்க நான் துணையிருப்பேன் எனும் கருத்தை முதலிரண்டு சரணங்களையும் நாயகன் நிலையிலிருந்து தெரிவிக்கும் கவிஞர் மூன்றாவது சரணத்தில் முத்திரையைப் பதிக்கிறார்.

பொதுவாக இன்பம் துளிர்த்து, மனமெங்கும் நிரம்பி கொப்பளிக்கும் நேரத்தில், இந்த இன்பநிலை சற்றும் குறையுமுன்பு, இந்த நொடியோடு வாழ்க்கை முடிந்துவிட்டால் நன்றாக இருக்குமே என்று நினைக்கத் தோன்றும். அது போன்றதொரு நிலையில், ஒரு வேளை நான் மறைய நேர்ந்தாலும், மீண்டும் பிறந்து வந்து உன்னை மணமுடிப்பேன் எனும் இல்லறத் தத்துவத்தை மிக அழகாக வடித்திருக்கிறார் கவிஞர். ஏழேழு பிறவியிலும் இணை பிரியாதிருப்போம் எனும் வாக்குறுதியை விளக்கும் மிக எளிய வரிகள்.

முதலிரவுக் காட்சி என்பதால் குறைவான இசைக்கருவிகள் – காதல் பொங்கும் ஹிந்துஸ்தானி பெஹக்கின் சாயல்; மாண்டலின் வீணை குழலின் இடையிசை; பாடகரின் குரலோடு வருடித் தவழும் மெல்லிய வயலின். எம்.எஸ்.வி., டி.கே.ஆர் இணையின் முத்திரைகள் இப்பாடலைத் தனி உயரத்துக்கு கொண்டு சென்று விடும். இவர்களுடன் டி.எம்.எஸ். இணைந்து செய்திருக்கும் ஜாலத்தை இன்பம் சுவையாக சுவையாக வரியில் ‘சுவையாக’ என்று இரண்டாவது முறை அழுத்திச் சொல்வதில்  காணலாம். இந்த ஒரு சொல்லின் உச்சரிப்புக்குப் பின்னால் தெரியும் உணர்வு இப்பாடலை இன்றுவரை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.

நளினத்தோடு நடந்து, நாணத்தோடு புன்முறுவலிக்கும் பாத்திரம் ஜமுனாவுக்கு. பொருத்தமாகச் செய்திருப்பார்.

ஸ்டைல் எனும் சொல்லுக்குப் பொருள் சிவாஜி கணேசன் என்று சொல்லிவிடலாம். இந்தப்பாடலின் துவக்கத்திலேயே அப்படி ஒரு வெளிப்பாடு அவரிடமிருந்து. முழங்கை வரையில் மடக்கி விடப்பட்டு, மேல் பட்டன் போடாத பட்டுச் சட்டை, தரையைத் தொட தவழும் வேட்டி, பெரிய டயல் கொண்ட கைக்கடிகாரம், முகத்தில் பரவசம், குறும்பு என மாறி மாறித் தெறிக்கும் பாவம். பாடலின் துவக்கத்தில் அறையிலிருந்து வெளியே வந்து, பாடிக்கொண்டே  நடந்து, இடது கையால் வேட்டியைத் தூக்கிவிட்டு, ஒரு கல்லின் மீது காலை வைத்து, கைகளை முட்டியில் பதித்து, லேசாகக் குனிந்து, காதல் துடிப்போடு நாயகியைப் பார்க்கும் அந்த ஐம்பது வினாடிகளில் ‘ஸ்டைல்’ என்பதற்கு வரைவிலக்கணம் எழுதிவிடுகிறார்.

முன்னும் பின்னும் கைகளைக் கோர்த்தவாறு பாடல் முழுதும் இவர் நடக்கும் பாணி அலாதியானது. ‘கூறாமல் வருவதில்லையா?’, ‘கேளாமல் தருவதில்லையா?’ என்று கேள்வி கேட்கும் இடங்களில் இவரது புருவத்துக்குத் தனியாக விருதுகள் கொடுக்கலாம் என்று தோன்றும். மேலே சொன்ன ‘இன்பம் சுவையாக சுவையாக’ வரியில் இரண்டாவது முறை ‘சுவையாக’ சொல்லுமிடத்தைப் பாருங்கள். சிலிர்த்துவிடும்.

அடிப்படையில் ஒளிப்பதிவாளரான B.S. ரங்கா, நீரில் பிம்பம் விழுவது, தோட்டத்திலிருக்கும் உணர்வை வெளிப்படுத்தத் தென்னை ஓலைகளின் அசைவுகள் எனக் கோணங்கள் அமைத்துப் பாடலை மேலும் பிரமாதப்படுத்தியிருப்பார்.

இந்தப் படத்தில் இடம்பெற்ற ’படைத்தானே, படைத்தானே’ சிவாஜி கணேசனின் பாணியும்,  ரங்காவின் ஒளிப்பதிவும் சேர்ந்த மற்றொரு அற்புதம். பின்னொரு பதிவில் அதைப் பார்ப்போம்.

ரவிக்குமார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad