காவியக் காதல் – பகுதி 2
சோஃபாவில் அயர்ந்து உட்கார்ந்திருந்தான் சித்தார்த். மயங்கி விழுந்த அவனைக் கைத்தாங்கலாக அழைத்து வந்து ஹாலில் உட்கார்த்தி வைத்திருந்தாள். ஒரு டம்ளரில் தண்ணீர் எடுத்துவந்து குடிக்கச் செய்து, ஆசுவாசப்படுத்தினாள். “ஏன்னா, என்ன ஆச்சு? என்ன பண்றது? தல சுத்தறதா? ஜூஸ் பண்ணித் தரவா?….” பதறிப் போய்விட்டாள் அமுதா..
“நேக்கு ஒண்ணுமில்லடி… ஒரு பெரிய கனவு… எப்டிச் சொல்றதுன்னுகூடப் புரியல… அப்டியே தத்ரூபமா இருந்துதுடி… அந்தக் கனவுல நானே இருந்தேன்… நீ காமிச்சியே அந்த ஆன்க்ளெட் அத……. “ என்று சொல்லி, தனது கனவை முழுவதும் விவரித்தான். அவன் சொல்வது முழுவதும் வாயைப் பிளந்து கேட்டுக் கொண்டிருந்த அமுதா என்ன சொல்வதென்று புரியாமல் திகைத்துப் போய்விட்டாள். ”எங்க, அந்த ஆங்க்ளெட்டக் கொண்டு வா” எனக் கேட்டான். “வேணான்னா, நேக்கு பயமா இருக்கு… திரும்பவும் மயக்கமாயிடுவேளோன்னு….” அவள் மறுத்ததிலும் நியாயமிருப்பதாக உணர்ந்து அமைதியானான்.
சற்று மனதை மாற்றலாமென்ற எண்ணத்தில் டி.வி. பார்ப்பது என்று முடிவு செய்தனர். டி.வி. கம்ப்யூட்டர் என இரண்டு மணி நேரங்களை ஓட்டி விட்டு, ஏதோ ப்ரன்ச் சாப்பிட்டுவிட்டு மீண்டும் சோஃபாவில் உட்கார, தன்னையுமறியாமல் கண்ணுறங்க ஆரம்பித்தான் சித்தார்த். சன்னமான குறட்டையுடன் உட்கார்ந்து கொண்டே உறங்கும் கணவனை, காதலும் பரிதாபமும் கூடிய பார்வை பார்த்துக் கொண்டே, தலையைக் கோதிவிட்டாள். பின்னர், எழுந்து லஞ்ச் சமைக்கச் சென்றாள் அமுதா.
——————————————————————————————————————————-
யாரும் எதிர்பார்த்திராத வகையில், மின்னலென உள்ளே பாய்ந்து, காவலாளியின் கத்தி பிடித்த கரம் பிடித்து வளைத்து ஒரே நொடியில் அவனைக் கீழே சாய்த்தாள் தேன்மொழி. கடந்த பகுதியில், மன்னரின் ஆணையை நிறைவேற்றுவதற்காக சித்தேஸ்வரனைச் சிரச்சேதம் செய்ய காவலாளி வாளை உயர்த்தியது நினைவிருக்கிறதா? அதன் தொடர்ச்சி இப்பொழுது நடைபெறுகிறது.
”கொற்றவரே, எந்தன் சுற்றமென வரித்தவரைக் குற்றவாளியாக்கியதில் சற்றும் நியாயமில்லை. நாட்டையாளும் பொறுப்பிலிருப்பவருக்கு நாட்டு மக்கள் அனைவரும் சமமே. தங்களின் புதல்வி என்பதால் தரம் பார்க்கத் துணிந்தீரோ? இட்டாரே பெரியோரென்றும், இடாதோர் இழி குலத்தாரென்றும் கூறப்பட்ட இலக்கணப்படி இவருக்கு இணையான பெரியோர் இவ்வுலகிலுண்டோ?” பொறிந்து தள்ளினாள் தேன்மொழியாள்.
தான் இட்ட ஆணையை நிறைவேற்றுவதைத் தடுத்ததோடல்லாமல், தன்னை நோக்கியே எதிர்வாதம் செய்யும் மகளைக் கண்டு கடுங்கோபம் கொண்ட அரசன், “பெண்ணே, நாடாளும் அரசனின் கட்டளைக்கு அடிபணிவதே நன்மக்களுக்கழகு. மமதையுறும் சிங்கங்களும் மருண்டோடும் மான்களும் ஒரு நாளும் ஒன்றாக மாட்டா.” என்று கூறி முடிக்குமுன், தேன்மொழியாள் தொடர்ந்தாள். “மறத்தமிழர்கள் என்று மார் தட்டுபவர்களின் மரண ஓலத்தைக் கேட்க வேண்டுமாயின், எந்தன் மனம் கவர்ந்த இவரிடம் வாள் வீசச் சொல்லுங்கள். இடையிருக்கும் வாள் இதயம் பிளந்து, இமை துடித்து அடங்குமுன் இடை வந்து சேரும்”. பெண் புலியின் சீற்றம் குறைந்ததாகத் தெரியவில்லை.
மன்னரின் கோபம் மேலும் அதிகரிக்க, தளபதியை நோக்கி ஆணையிட்டார். “இது மன்னனின் குடும்பப் பிரச்சனையன்று. இந்த நாட்டு நியதிகளுக்குப் புறம்பான செயல் செய்த ஒரு ஆணும், அரச கட்டளையை ஏற்க மறுக்கும் ஒரு பெண்ணும் குறித்த வழக்கு இது. இவர்கள் இருவரையும், உடனடியாகக் கைது செய்யுங்கள். நாடு முழுவதும் பார்த்திருக்க, கழு மரம் ஏற்றிக் கொலை செய்யுமாறு உத்தரவிடுகிறேன். இவர்களிருவரின் முடிவு, நாட்டின் இறையாண்மையை அனைவருக்கும் உணர்த்தியதாக இருக்கட்டும்”. கோபக் கொந்தளிப்பில், குமுறி முடித்தான் காவலன்.
இந்தக் களேபரங்களுக்கு மத்தியில், மூர்ச்சையுற்றிருந்த திரிகால நிமித்தகர் விழித்தெழுந்திட்டார். நடந்ததை அறிந்து, தன் உயிரினும் மேலான மகன் இன்னும் உயிருடன் இருக்கிறான் என்பதுணர்ந்து பெருமளவு நிம்மதி அடைந்திட்டார். ஆனாலும், அரசனின் கோபத்தையும், கொலை செய்யச் சொல்லிய அவன் ஆணையையும் கேட்டு, கடுந்துயர் கொண்டு மன்னனை நோக்கிப் பேசத் தொடங்கினார். “உற்றவர் போற்றும் கொற்றவ! இந்நாடு செய்த நற்றவத்தால் உருவான செங்கோல் காக்கும் வேந்த! ஒரு தந்தையாய் உங்களின் எண்ண ஓட்டம் எனக்கு நன்றாகவே விளங்குகிறது. என் மகன், சோதிடர் வகுப்பிலே பிறந்திருந்தாலும், அரச குமாரர்களுக்கான எல்லாவித வித்தைகளிலும் கை தேர்ந்தவன். வில் வித்தை, வாள் வித்தை, குதிரையேற்றம் போன்ற வீரம் சார்ந்த கலைகளிலும், அரசாட்சி, ராஜ தந்திரங்கள், தலைமைத்துவம், குடி பேணுதல், இறையாண்மை என அரசனாக வேண்டிய தகுதிகளிலும், வான சாஸ்திரம், சோதிட சாஸ்திரம், கணிதம், இலக்கியம் என அறிவு சார்ந்த துறைகளிலும், ஓவியம், கவிதை போன்ற கலை வடிவங்களிலும் ஒப்பாரில்லாதவன். நீங்கள் வேண்டுமானால் அவை எல்லாவற்றிலும் அவனைச் சோதித்துப் பார்க்கலாம்” என்கிறார்.
“சோதிடரே, என்ன உரைக்கின்றீர்? அதுபோலத் திறமைகளெல்லாம் மிகுந்திருந்தால் அரசனோடு சம்பந்தம் வைக்கும் தகுதி தானாகவே வந்து விடுமோ? உயரப் பறந்தாலும், ஊர்க் குருவி பருந்தாகாதென்று அறியீரோ? கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி சிறகு விரித்ததால் தானும் மயிலாகிடுமோ?” என்றான்.
மன்னா, என்றழைத்து வேறெதும் சொல்ல எத்தனிக்குமுன்னர், தனது கரம் கொண்டு அவரை அமைதியாய் இருக்கும்படிச் சைகை செய்தான் மன்னன். மீண்டும் சபை முழுவதும் ஒருமுறை கண் விழித்துப் பார்த்து, “குடிப் பிறப்பென்பதே, மண உறவை நிர்ணயிக்கும். ஆளப் பிறந்தோர், அண்டிப் பிழைப்பவர்களை மணம் கொள்வதோ? கோயிலில் கும்பிடத்தகு கலசங்களுக்கும், பலர் காலால் மிதிபடும் படிக்கற்களுக்கும் உறவென்பது சாத்தியமோ?” என்று பலவிதமாய் சாதிப் பாகுபாடு பேசிவிட்டு, தளபதியை நோக்கி, “ம்ம்… ஆகட்டும், என் ஆணையை நிறைவேற்றுங்கள்” என்று முடித்தான். இந்த முறை அவனது குரலில் இருந்தது அரசனென்ற ஆளுமையன்று, அதிகார ஆணவம். அவனது தீர்ப்பில் நியாயமில்லை என்று கருதுபவர்கள் பலர் அங்கிருப்பினும், தலைமைச் சோதிடரையே கரம் காட்டி அடக்கிய மன்னனை எதிர்த்துப் பேசுவது எப்படியென்று அனைவரும் வாய்மூடி மௌனிகளாய் அமர்ந்திருந்தனர்.
பேய் அரசாண்டால், பிணந்தின்னும் சாத்திரங்கள் என்பதற்கிணங்க, தமிழக மண்ணில் முதல் கௌரவக் கொலை நடைபெற இருக்கிறது. சுற்றியிருக்கும், கற்றறிந்தோரும், அறம் செறிந்தோரும் ஏதும் செய்யவியலாது வாளாவிருந்தனர். அந்த நேரத்தில், தமிழகம் செய்த புண்ணியத்தால் அங்கே தோன்றினார் தரணி போற்றும் தமிழ்ப் புலவர் தவ சீலர் பள்ளூர்க் கிழார். நினைத்த மாத்திரத்தில் தமிழிலும், சமஸ்கிருதத்திலும் கவியெழுதும் ஆற்றல் நிரம்பப் பெற்ற அவர், முற்றும் துறந்த ஞானியும்கூட. மற்றவர்களின் நலனொன்றே பெரிதெனக் கருதி வாழும் அவர்மேல் அளவு கடந்த மரியாதை கொண்டிருந்தனர் அனைவரும், மன்னன் உட்பட.. புலவர் உள்ளே வருவதைப் பார்த்து, எழுந்து நின்று வணங்கினான் மன்னவன்.
“வந்தனங்கள் வேந்தே! செல்வச் செழிப்பாய், செந்நெல்லின் விளைவிடமாய், செந்தமிழின் உறைவிடமாய், சிறப்புற நாடு காக்கும் செங்கோலே!! பார் புகழப் பாராளும் பரமனொத்த பண்பாளனே! வணக்கம்! சபையினில் ஏதோ முக்கியமான விசாரணை போலும்! அடியேனுக்கும் என்னவென்று அறிந்து கொள்ள ஆவலாய் உள்ளது” என்றார் பள்ளூர்க் கிழார். ”இக்குடி கேடன், அரசின் கொம்பென்று அறிந்திருந்தும், எந்தன் குலக் கொழுந்தை வம்பாய் வரித்திருக்கிறான். பன்றியுடன் சேர்ந்த பசுவும் பெருமையில்லாச் செயல் புரிவதுபோல், அவனைப் பர்த்தாவாய் நினைக்கத் துணிந்திட்டாள் தேன்மொழி. விசாரணை செய்து வழங்கியிருக்கிறேன் தீர்ப்பு… ஊர் முழுதும் பார்த்திருக்க, இருவரையும் கூர் கழுமரம் ஏற்றிக் கொல்ல வேண்டுமென…. “ நடந்து முடிந்த கதையை முழுவதுமாய்ச் சொல்லி முடித்தான்.
கேட்ட பள்ளூர்க் கிழாருக்கு அவர் காதுகளையே அவரால் நம்ப முடியவில்லை. நீதி நியாயங்களில் கரை கண்டவர், நேர்மையாய், உண்மையாய் வாழ்வு நடத்துபவர் என்ற காரணங்களால் மன்னருக்கே அறிவுரை வழங்கும் உயரிய இடத்தில் இருந்தவர் மட்டுமல்ல, பல வருடங்களாய் மன்னரின் அரண்மனைக்கு வந்து சென்றதால், இளவரசி தேன்மொழியாளைச் சிறு வயதிலிருந்தே பார்த்துப் பழகியவர். அவளின் குழந்தையழகில் தொடங்கி, குறுகுறுப்பான புத்திக் கூர்மையில் தொடர்ந்து, வேல் வாள் வீசும் அவளின் வீரத்தில் விழுந்து அவள்மீது மிகுந்த அன்பும் பாசமும் வைத்திருந்தார். தனது சொந்த மகளிடம் காட்டும் பரிவு இவள்மீதும் காட்டுவது அவரின் வழக்கமாயிருந்தது. மன்னன் தன் சொந்த மகளுக்கே மரணத்தைத் தீர்ப்பாய் அளித்ததைக் கேட்டு மருண்டு போயிருந்தார் புலவர். ஆயிரங்களான நீதி அவையுணர்ந்த அவருக்கு, அரசனின் தீர்ப்பில் அணுவளவும் நியாயமில்லையெனப் புரிந்தது. ஆனால், எதனைச் சொல்லி இந்த வேதனை நிகழாதவாறு தடுப்பது என யோசிக்கலானார். தமிழின் மீது மிகுந்த நாட்டம் கொண்ட மன்னனுக்கு, தனது தமிழ்ப் புலமையையே போதையாக்கி, நடக்கவிருக்கும் கேட்டிலிருந்து விலக்க வேண்டுமென முடிவெடுத்துப் பேசத் தொடங்கினார்;
வாடிய முல்லைக் கொடி வசதியாய்ப் படர்ந்திட
ஓடிய தேரையேக் காலாய்த் தந்தவனைப்
பாடிய தமிழிது….
ஆடிய இளவரசன் அறியாமல் மகவைக் கொல்ல,
நாடிய பசுவின் நியாயத்தால் மகனையே கொன்றவனைப்
பாடிய தமிழிது…..
கூடிய கார்மேகம் குவிந்துவந்து மாரிபொழிய
வாடிய மயிலின் குளிர்தீர்க்கப் போர்வை தந்தவனைப்
பாடிய தமிழிது…..
தேடிய திசைகளெல்லாம் தர்மமே நலமென்று ஆண்டு
கூடியே வாழ்ந்திருந்து, சகலரும் சமமென்ற வரிசையிலே
சாடிய சொல் சரியென்னும் வகை பிழைத்திட்டனையே!!
என்றுரைத்து, மேலும் தொடர்ந்தார். அறம் பாடி அரசைப் போற்றும் எந்தன் தமிழும், அரம் பாடி ஆணவம் போக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டதே என்று அங்கலாய்க்கலானார். மாதம் மும்மாரிப் பொழிகிறதா என மந்திரியைக் கேட்டு அறிந்து கொள்ளும் மன்னர்களின் மத்தியிலே, மக்களோடு மக்களாய் வாழ்ந்து, மண்ணிலனைவரும் சமமென்ற மதியுற்ற, மாண்புடை வேந்தன் என்ற எண்ணத்தை, மண்ணோடு மண்ணாக்கிப் புதைத்தனையே! என்று பலவாறாகத் தன் தமிழால் மன்னனின் ஏற்றத்தாழ்வு பார்க்கும் மனப்பாங்கைச் சாடினார் பள்ளூர்க் கிழார்.
புலவரிடமிருந்து புறப்பட்டு புரவி போல் பறந்து வந்து, புதிது புதிதாய்க் கக்கும் தீப்பிளம்புத் தமிழை எதிர்நோக்க முடியவில்லை மன்னனால். மற்றவர்கள் கூறும்பொழுது உணராத தன் தவறை, தமிழ் மதிநிறையப் புகட்டியதாய் உணர்கிறான். தர்ம தேவதையே கிழாரின் உருவில் வந்து, தன்னைத் திருத்தியதாக நினைக்கிறான். புலம்புகிறான், பேசுகிறான். முடிவில், தேன்மொழியை நோக்கிப் பேசுகிறான். “என் உயிரின் பிம்பமாய் உலகில் தோன்றிய குல விளக்கே! எந்த நிலையிலும் உன் முகம் மனதில் வர, இளகிப் போகும் என் மனது உன்னையே கொலை செய்யத் துணியும் அளவுக்கு சாதிப் பிசாசு என்னை ஆக்கிரமித்திருந்ததே…. இந்தச் சாதி எனும் எண்ணத்தை வேரோடும், வேரடி மண்ணோடும் அழிப்பதே இனி என் வாழ்நாளின் குறிக்கோள்” என்று சூளுரைத்து, அவர்களிருவரின் திருமணத்திற்குச் சம்மதிக்கிறான்.
அளவில்லா இன்பமடைந்த தேன்மொழியும், சித்தேஸ்வரனும் மன்னனுக்கு வணக்கம் தெரிவிக்க, சோதிடர் புலவருக்கு தன் உளங்கனிந்த நன்றியை எடுத்துரைக்க, கூடியிருந்த அனைவரும் ஏதோவொரு கொடுஞ்செயல் தடுக்கப்பட்டதென மகிழ்ச்சியாய் விடைபெற, சபை மெதுவாய்க் கலையத் தொடங்கியது. சித்தேஸ்வரனும், தன் கூரிய விழிகளால் கோதையவளை விழுங்கிக் கொண்டே அரண்மனை வாசல்வரை சென்றான். அந்த நிலையில், ஒடிந்து விழ எத்தனிக்கும் அவளின் இடையும், அந்த இடைபற்றி, இப்பொழுதோ இன்னும் சிறிது வினாடியோ விழுந்து விடப்போவது போல் ஒட்டிக் கொண்டிருக்கும் உடையும் அவன் கவனத்திலிருந்து தப்பவில்லை.
கோட்டை மதிற்சுவர்விட்டு வெளிவர, அவரவர்கள் அவரவர் பக்கம் கலைந்து செல்ல, தனியாக நடந்து சென்று தனது குதிரையிருக்கும் திசை நோக்கிச் சென்றான் சித்தேஸ்வரன். எங்கிருந்தோ வாயு வேகத்தில் குதிரையில் பறந்து வந்த ஒருவன், யாரும் எதிர்பாரா வண்ணம், தன் இடைவாளை எடுத்து, நடந்து செல்லும் சித்தேஸ்வரனின் கழுத்தைக் குறிபார்த்து வீசினான்….
—————————————————————————————————————————
திடுக்கிட்டு மதியக் குட்டித்தூக்கத்தலிருந்து எழுந்தான் சித்தார்த். சோஃபாவில் ஃபேனுக்கடியில் உறங்கிக் கொண்டிருந்தவனுக்கு, கழுத்தெல்லாம் ஒரே வியர்வை. இந்த முறை, கனவு என்று புரிந்தாலும், “ஐயோ” என அலறியே விட்டான். அவனது அலறலைக் கேட்டுச் சமயலறையில் மும்முரமாய் வேலை செய்து கொண்டிருந்த அமுதா, பதட்டத்துடன் ஹால் நோக்கி ஓடி வந்தாள். “ஏன்னா, திரும்பவும் அதே கனவா?” … எனக் கேட்க, “இல்லடி, அந்தக் கனவோட கண்டின்யூவேஷன்… என்னடி நடக்கறது இங்க… நேத்து ராத்திரி வந்த அதே கனவு திரும்ப தூக்கத்துல வருமா, அதுவும் அந்தக் கதையோட தொடர்ச்சியா வருமா… அப்டியே தத்ரூபமாத் தெரியர்தேடி….” எனப் பதட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் பேசிக் கொண்டிருந்தான்.
“நேக்கு ரொம்ப பயமா இருக்குன்னா…. நாம டாக்டரைப் போய்ப் பாத்துடலாம்… “ என்றாள். அவள் வெளிப்படையாகச் சொல்லாமல், ஆனால் மனதுக்குள் நினைத்துக் கொண்டது, மனநல மருத்துவரை……..
(தொடரும்)
வெ. மதுசூதனன்.