நாட்குறிப்பிடம் தோற்றுப்போனவன்
ஏதோ ஒரு நிறுவனத்தின்
இலவசப் பரிசாக அவனிடம்
ஆண்டின் ஆரம்பத்திலேயே
வந்து சேர்ந்த நாட்குறிப்பு நான் !
புதிதாய்ப் பரவசத்துடன் என்னைக்
கையிலெடுத்தப்போது என்னுள் அவன்
உதிர்த்த உறுதிமொழிகளை அடிக்கடி
நினைவூட்டியபடிதான் இருக்கிறேன் !
எழுதப்பட்டிருந்த வரிகளில்
அவனது கடந்த காலத்தை
காட்டிக் கொண்டிருக்கிறேன் என்றே
என்னைப்பற்றி அவன் எண்ணுவதுண்டு !
ஏனோ அவனுக்கு
வருவாயை வங்கியிலும்
வாழ்க்கையை எனக்குள்ளும்
சேமிக்கத் தெரியவேயில்லை !
அன்றாடமில்லை என்றாலும்
என்றோ சில நாட்களில்
எழுத்துப் பூக்களால்
அலங்கரிக்கப்பட்டிருந்தேன் நான் !
சில நாட்கள் அப்பூக்களில்
திருச்சன்னதியின்
கற்பூர வாசம் திகழ்ந்தன !
சில நாட்களில் அதே பூக்கள்
இறுதிப் பயணத் தேரிலிருந்து
வீசிய பூக்களாய் வாடின !
தன்னை நிறைகுடமாய்
தளும்பாமல் காட்டிட
ஏதோ சில நாட்களில்
என் பக்கங்களில் நிரம்பியவன்
தன் அலட்சியத்தாலும்
அக்கறை இன்மையாலும்
எப்போதும்போல் என்னை மட்டும்
குறைகுடமாகவே இருக்கவிட்டான் !
என்வழியே தன் செயல்களை
பெருமையாய் பதிவுசெய்ய விரும்பியவன்
ஏனோ தன் குணங்களை மட்டும்
மறைத்துவிட்டான் என்னிடம் !
இருந்தாலும் உங்களால்
இயலாவிட்டாலும்
நன்றாய் நானறிவேன்
அவன் யாரென்பதை !
வெளியில் எப்படியோ
வெற்றிபெற்றதாய் நினைத்தாலும்
நாட்குறிப்பான என்னிடம் நாளும்
தோற்றுத்தான் போகிறான் !
– ருக்மணி.
realy super mam. natkurippu pennaka ninaikkiren