\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

திகைப்பூட்டும் திரைப்படப்பாடல்கள்

ஐந்தாறு தசாப்தங்கள் கடந்துவிட்ட பின்பும், அபரிமிதமாகத் தொழில்நுட்பம் வளர்ந்து நிற்கும் இன்றைய நவீன யுகத்திலும் நம் மனதை விட்டு அகலாத, ஏதோவொரு வகையில் நம்மில் பிரமிப்பை ஏற்படுத்தி நிற்கும் திரைப்படப் பாடல்கள் சிலவற்றை இக்கட்டுரையில் பார்த்து வருகிறோம். அதிலும் குறிப்பாக வரிகளில் வினாக்களை தொடுத்து, நேர்மறையாகவோ மறைமுகமாகவோ விடையளிக்கும் பாடல்களைக் கடந்த பகுதிகளில் கண்டோம். எடுக்க எடுக்க குறையாத அமுதசுரபி போல பொக்கிஷங்களைத் தந்துவிட்டு சென்ற படைப்பாளிகளின் மேலும் சில படைப்புகளைத் தொடர்ந்து பார்ப்போம்.

திரைத்துறைக்குள் நுழைந்த குறுகிய காலத்தில் ஆல விருட்சமாய் வளர்ந்து படர்ந்து விட்ட கண்ணதாசனின் நிழலில், பல சிறந்த படைப்புகள் போதிய வெளிச்சம் பெறாமல் போய்விட்டன. அவ்வகையான சில படைப்புகள் கண்ணதாசனின் பெயரிலேயே வரவு வைக்கப்பட்ட நிகழ்ச்சிகளுமுண்டு.  அப்படிப்பட்ட ஒரு பாடல் தான் ‘சித்திரப் பூவிழி வாசலிலே’.

மரபிலக்கிய சந்த நடைகள் திரைப்படப் பாடல்களுக்குச் சரிப்பட்டு வராது, சூழ்நிலைக்கேற்ற வாறு, கட்டுக்கடங்காது ஓடும் நதி போல இருக்கவேண்டும் என்ற கருத்துகளை முறியடித்தவர் மாயவநாதன். கண்ணதாசனுக்கு மாற்று தேடிய பலர் இவரை அணுகிய போதும் \தனக்கு உடன்பாடில்லாத சூழ்நிலைகளில் பணிபுரிய மறுத்தவர். சித்தர்கள் பலருடன் நட்பாகயிருந்த காரணத்தால் சினிமா சித்தர் என்ற பெயரும் இவருக்குண்டு. திரைப்படங்களில்  வெகு குறைவான பாடல்களே இயற்றியிருந்தாலும் ஒவ்வொன்றும் தனித்தன்மை வாய்ந்தவை. சரி பாடலைக் கேட்போம்.

தோழி : சித்திரப்பூவிழி வாசலிலே வந்து யார் நின்றவரோ

இந்தக்  கட்டுக்கரும்பினை தொட்டுக்குழைந்திட யார் வந்தவரோ

யார் நின்றவரோ யார் வந்தவரோ

நாயகி : தென்றல் அழைத்து வர தங்கத்தேரினில் வந்தாரே

புன்னகை மின்னிட வந்து அருகினில் நின்றவர் என்னவரே

இடம் தந்த என் மன்னவரே

நாயகி : சித்திரப்பூவிழி  வாசலிலே அவர்தான் நின்றவரே

இந்தக்  கட்டுக்கரும்பினை தொட்டுக்குழைந்தவர் தான் என்னவரே

யார் நின்றவரோ அவர் தான் என்னவரே

தோழி  : கட்டழகில் கவி கம்பன் மகனுடன் ஓட்டி இருந்தவரோ

இந்தப் பட்டு உடலினைத் தொட்டணைக்கும்

கலை கற்றுத்  தெளிந்தவரோ

உன்னை மட்டும் அருகினில் வைத்து

தினம் தினம் சுற்றி வருபவரோ

நீ கற்றுக்  கொடுத்ததை ஒத்திகை பார்த்திடும்

முத்தமிழ் வித்தகரோ

கலை முற்றும் அறிந்தவரோ

காதல் மட்டும் தெரிந்தவரோ

நாயகி : வண்ணக் கருவிழி தன்னில் ஒரு விழி

என்று அழைப்பதுவோ

பசும் பொன்னிற் புதியதை கண்ணன் எனப்

பெயர் சொல்லித்  துதிப்பதுவோ

ஒளி மின்னி வரும் இரு கண்ணசைவில்

கவி மன்னவன் என்பதுவோ இல்லை

தன்னைக் கொடுத்தென்னைத் தன்னில் மறைத்தவர்

வண்ணப் புது மலரே

அவர் நெஞ்சம் மலரணையே

மனம் எங்கும் நிறைந்தவரே

நாயகி : சித்திர பூவிழி வாசலிலே அவர்தான் நின்றவரே

இந்தக்  கட்டுக்கரும்பினை தொட்டுக்குழைந்தவர் தான் என்னவரே

யார் நின்றவரோ அவர் தான் என்னவரே

காதல் வயப்பட்ட நாயகியிடம் அவளது காதலனைப் பற்றி, தொழியொருவள் கேலியுடன் கேட்கிறாள். அதற்கு நாயகி நாணத்துடன் நாயகனைப் பற்றி சொல்வதாகப் பாடல். 1963 ஆம் ஆண்டு, முக்தா ஸ்ரீனிவாசனின் இயக்கத்தில் வெளிவந்த ‘இதயத்தில் நீ’ படத்தில் இடம்பெற்றது.

‘கண்ணில் பட்டவுடன் மனதைப் பறிகொடுத்தேன்’ எனும் காதல் வசனங்களைக் கேட்டிருக்கிறோம். அந்தக் கண்ணை  ‘சித்திரப் பூ விழி’ என்று சொல்வது தான் எவ்வளவு அழகு. அதுவும் கண்ணில் படவில்லை, விழவில்லை – பட்டோ, விழுந்தோ அகன்று விடவில்லை. ‘விழி வாசலில் நின்று விட்டவர் யார்’ என்பது கற்பனையின் உச்சம். நின்றதோடல்லாமல் கரும்பு போன்ற இனிமை தரும் கட்டுடல் கொண்ட நாயகியின் அழகில்  குழைந்து போய்விட வந்தவர் யாரென தோழி கேட்கிறாள்.

இயற்கையாக அமைந்த உறவை, ‘தங்கத் தேரினில் வந்தவரை தென்றல் என்னிடம் அழைத்து வந்தது’ என்று சொல்லியிருப்பது நேர்த்தி. வரலாற்று காதல் சின்னமான அம்பிகாபதியுடன் சேர்ந்திருந்தவனோ, கலைகள் அத்தனையும் கற்றவனோ அல்லது காதல் மட்டும் தெரிந்தவனோ என்று தோழி கேட்டிட. ‘காதல் மட்டும் தெரிந்தவனோ’ என்ற இடத்தில் நாயகி ஆமாம் என்பது போல் தலையசைப்பது குறும்பு.

இரு கண்களில் ஒன்றானான், நான் துதிக்கும் உருவானான், கண்ணசைவில் கவிபாடும் வித்தை புரிகிறான் என்று சொல்லும் நாயகி தன்னைக் கொடுத்து என்னை எடுத்துக் கொண்டான் என்று சொல்லுமிடத்துச் சொற்கள் ரசமானவை.

தன்னை கொடுத்தென்னை தன்னில் மறைத்தவர்

வண்ணப் புது மலரே

ஒவ்வொரு அடியிலும் சுவையான சந்தநயம் தெறித்து நின்றாலும், எளிதாக மெட்டுக்குள் அடக்கிவிட முடியாத சற்றே கரடு முரடான சொற்கள். இது மெட்டுக்காக இயற்றப்பட்டதா அல்லது இயற்றப்பட்டு மெட்டமைக்கப்பட்டதா தெரியவில்லை. மாயவநாதனும் விஸ்வநாதனும் (எம்.எஸ்.வி) சேர்ந்தமைத்த ஜாலம் என்று சொல்லலாம். இவ்வளவு சிக்கலான கட்டுக்களுடைய பாடலை தெலுங்கைப் பூர்வீகமொழியாகக் கொண்ட புலபக்கா சுசிலாவும் (P. சுசிலா), அப்பொழுது தான் திரைப்பாடல்களுக்கு அறிமுகமாகியிருந்த லூர்து மேரி ராஜேஸ்வரியும் (L.R. ஈஸ்வரி) மிகத் தெளிவான உச்சரிப்புடன், உணர்வுபூர்வமாகப் பாடியிருப்பது அற்புதம். இடரின்றி வசனநடையில் வரிகளைப் படிப்பதே கடினமெனும் சொற்கள் இவை! பல்லவியில் ‘யார் நின்றவரோ? யார் வந்தவரோ?’ என்று பாடியதில் தனது தனித்தன்மையான கவர்ச்சிக் குரலை அப்பொழுதே பதிவு செய்திருக்கிறார் ஈஸ்வரி. தமிழ்த்  திரையுலகம், குறிப்பாக இசையுலகம் பாராட்டத் தவறிய கலைஞர்களில் L.R. ஈஸ்வரியும் ஒருவர். ‘தென்றல் அழைத்து வர’ என்று துவங்குமிடத்தில் சுசிலாவின் குரலில் மிளிரும் பண்பட்ட முதிர்ச்சி, ‘புன்னகை மின்னிட மின்னிட வந்து அருகினில் நின்றவர் என்னவரே’ என்று குழைவது இனிமையோ இனிமை.

புல்லாங்குழல், சரோட், தபேலா, கிட்டார் என எளிமையான பின்னணி இசையில் ஜாலம் படைத்திருக்கிறார்கள் மெல்லிசை மன்னர்கள். மாயவநாதனின் சொற்களுக்கு இவர் கூட்டியிருக்கும் சங்கதிகளின் சுவை அலாதியானது.

இப்பாடல் காட்சியில் நாயகியாக தேவிகாவும், தோழியாக லக்ஷ்மி ராஜமும் நடித்திருப்பார்கள். பெண்களின் குணங்களாக கருதப்பட்ட அச்ச‍ம், மடம், நாண‌ம் மற்றும் பயிற்பு ஆகிய அத்தனையையும் கண்களில் வெளிப்படுத்தக் கூடியவர் தேவிகா. இந்தப் பாடலில் நாணப்படும் ‘க்ளோஸ்-அப்’ காட்சிகளில் அவ்வளவு அழகான முகபாவத்தைக் காட்டியிருப்பார் தேவிகா.

ஐம்பதுக்கும் குறைவான பாடல்களே எழுதியிருந்தாலும் மாயவநாதனின் ஒவ்வொரு பாடலும் சந்தச்சுவை நிரம்பியவை. இன்னும் சொல்லப் போனால் இவர் திரைப்படத்துக்கு எழுதிய முதற் பாடலான ‘தண்ணிலவு தேனிறைக்க’ எனும் பாடல் தமிழ்த் திரைப்படப்பாடல்களில் மின்னிடுமொரு வைரம். அப்பாடலைப் பின்னொரு பதிவில் காணலாம்.

  • ரவிக்குமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad