\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

ஆபரேஷன் வார்சிட்டி ப்ளு

கோடைக்காலம் வந்ததும் உயர் பதின்ம வயதில் பிள்ளைகளிருக்கும் குடும்பங்களில் கல்லூரி பற்றியதான ஒரு பதட்டம் தொற்றிக்கொள்ளும். பெரும்பாலும் இவர்களது கோடைக்கால விடுமுறை பயணங்களில் கல்லூரி விஜயங்கள் முதன்மை பெறும். அமெரிக்காவில் கல்லூரி படிப்புக்கான கட்டணங்களும், இதர செலவுகளும் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக  3 முதல் 5 சதவீதம் வரை உயர்ந்து கொண்டேயுள்ளது. இந்தக் கட்டண உயர்வுகளுக்கு பணவீக்கம் காரணமாகச் சொல்லப்பட்டாலும், கல்லூரிப் படிப்புகளுக்கான தேவையும் அதிகரித்து வருவதுதான் முக்கியக் காரணம். ஜார்ஜ்டவுன் பல்கலை நடத்திய ஒரு ஆய்வு, 2020 ஆம் ஆண்டு வாக்கில் நாட்டின் 65% வேலைகளுக்குக் கல்லூரிப் படிப்பு அத்தியாவசியத் தேவையாகக் கருதப்படும் என்கிறது. இன்றைய தேதியில் கல்லூரி முடித்து வெளிவரும் மாணவர் ஒவ்வொருவரும் சராசரியாக $37,000 கல்விக் கடன் சுமையுடன் வருகின்றனர். ‘எலைட்’ எனப்படும் உயரடுக்குக் கல்லூரிகளில் இந்தக் கடன் சுமை இரண்டரை மடங்கு உயர்கிறது. பொதுவாக இளங்கலைப் பட்டங்களுக்கு இந்த உயர்தட்டுக் கல்லூரிகளில் படிப்பது சிறப்பு அந்தஸ்து எதையும் பெற்றுத் தருவதில்லை. இருந்தாலும் சில மாணவர்களும் பெற்றோர்களும் எப்படியாவது இந்தக் கல்லூரிகளில் இடம் பிடித்துவிட வேண்டும் என முட்டி, மோதுகின்றனர். இக்கல்லூரிகளில் படிப்பதைத் தங்கள் கௌரவத்தின் அடையாளமாகக் கருதுகின்றனர்.

இந்த உயரடுக்குக் கல்லூரிகளில் அனுமதிக்கப்படுவது அவ்வளவு எளிதல்ல. சாட் (SAT), ஆக்ட் (ACT) போன்ற நுழைவுத் தேர்வு மதிப்பெண், உயர்நிலைப் பள்ளியில் பெற்ற தர மதிப்பீட்டுப் புள்ளிகள் (GPA), இதர கல்விசார் நடவடிக்கைகள், விளையாட்டுத் திறன், மாணவரின் தனிப்பட்ட குணாதிசயங்கள் எனப் பல அளவைகளில் மதிப்பிடப்பட்ட பின்னரே கல்லூரிச் சேர்க்கை நடைபெறும்.  விண்ணப்பிபவர்களில் சராசரியாக 5 சதவிகித மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி கிடைக்கிறது. மற்ற கல்லூரிகளைக் காட்டிலும், ‘ஐவி லீக்’ எனப்படும் கல்லூரிகளை உள்ளடக்கிய உயரடுக்குக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, பல தரப்பட்ட ஆராய்ச்சியாளர்களின் கட்டுரைகளைப் படிப்பதற்கு வாய்ப்புகள் கிட்டுகின்றன. இக்கல்லூரிகளின் தனிப்பட்ட கல்வி முறை, மாணவர் ஆசிரியர் விகிதாச்சாரம், வேலை வாய்ப்பில் சிறப்புரிமை எனப் பல அனுகூலங்கள் இருந்தாலும் அந்தஸ்திற்காகவும், குடும்பப் பெருமைக்காகவும் மட்டுமே தங்கள் பிள்ளைகளை இவ்வகைக் கல்லூரிகளில் சேர்க்கும் பெற்றோர்களும் உள்ளனர்.

நேர்வழித் தெரிவு முறையில் வாய்ப்புக் கிடைக்காது எனத் தெரிந்து பலர் குயுக்தியான வழிகளில் இக்கல்லூரிகளில் இடம்பிடிக்கும் முறைகேடுகளை அண்மையில் வெளிக்கொணர்ந்தது எஃப்.பி.ஐ. ‘ஆபரேஷன் வார்சிட்டி ப்ளூஸ்’ என்ற பெயரில் பல மாதங்கள் நடைபெற்ற இந்தப் புலனாய்வின் முடிவில், கடந்த  மார்ச் மாதம் பலரைக் கைது செய்துள்ளனர். 2011 ஆம் ஆண்டு முதல் இந்த ஊழல் முறைகேடுகள் நடந்திருக்கலாம் எனக் கணிக்கப்படுகிறது. ஐம்பதுக்கும் மேற்பட்டோர் இவ்வழக்குகளில் சிக்கியுள்ளனர். முப்பத்தி மூன்று பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளை இக்கல்லூரிகளில் சேர்க்கக் கடந்த ஏழெட்டு ஆண்டுகளில் $25 மில்லியனுக்கும் அதிகமாக லஞ்சம் அளித்துள்ளனர். இந்த ஊழல் திட்டத்தின் சூத்திரதாரி வில்லியம் ரிக் சிங்கர் என்பவர். கல்லூரிச் சேர்க்கை பற்றி ஆலோசனை (college counselling) வழங்கும் நிறுவனங்களை நடத்தி வந்த சிங்கர், பதினோரு கல்லூரிகளின் சேர்க்கை அதிகாரிகள் (Admission Officers),  தேர்வு மேற்பார்வையாளர்கள் (ACT / SAT test supervisors), மன உளவியலாளர்கள் (Psychologists) ஆகியோரது துணையுடன் இந்த ஊழலைச் செய்து வந்துள்ளார்.

சிங்கர் இரண்டு வழிகளில் இந்த மோசடிகளைச் செய்துள்ளார். சாட், ஆக்ட் தேர்வுகளில் மாணவர்களை அதிக மதிப்பெண் பெறச் செய்வது ஒரு முறை. இதற்காக இவர் மாணவர்கள் மனநலப் பாதிப்படைந்துள்ளதாகக் காட்டி, அதனால் அவர்களுக்குத் தேர்வெழுத அதிக நேரம், தனி அறை ஒதுக்கப்படவேண்டும் என்று போலிச் சான்றிதழ்களை மன உளவியலாளர்கள் மூலம் பெறுவார். இதற்கு அவர்களுக்கு $5௦௦௦ முதல் $10,௦௦௦ வரை லஞ்சம் தரப்பட்டுவிடும். தேர்வு மையங்களில் மேற்பார்வையாளர்கள் இந்த மாணவர்களின் விடைத்தாள்களைத் திருத்தியமைத்து உதவி செய்வார்கள். சில சமயங்களில் குடும்பத்தினரைத் தேர்வை ஒட்டிய காலங்களில்  ஏதோவொரு காரணத்தால் ஹூஸ்டன் அல்லது லாஸ் ஏஞ்சலிஸ் நகரங்களுக்குப் பயணிக்கச் செய்து, அந்தப் பயணத்தைக் காரணங்காட்டி தங்கள் பிள்ளைகளை ஹூஸ்டன், அல்லது லாஸ் ஏஞ்சலிஸ் நகரத்தில் தேர்வெழுத அனுமதிக்குமாறு விண்ணப்பிக்கச் செய்வார். தேர்வு நிறுவனங்கள் இதை அனுமதிக்கும் பட்சத்தில் மாணவர்களுக்கு பதிலாக சிங்கரின் ஆட்கள் தேர்வுகளை எழுதி அதிக மதிப்பெண்களைப் பெறுவார்கள். இந்தச் சதியில் ஈடுபட அதிபுத்திசாலியான ஆட்களைத் தயார்படுத்தி அவர்களுக்கு $10,௦௦௦ கூலியாகக் கொடுத்துள்ளார் சிங்கர். இவர்களில் ஒருவர், மார்க் ரிட்டல் எனும் ஹார்வர்டு பல்கலைக்கழக முன்னாள் மாணவர். ஏறத்தாழ 25 முறை, மற்ற மாணவர்களுக்காக சாட் / ஆக்ட் தேர்வுகளை எழுதியுள்ளாராம் இவர்.

இந்தத் தேர்வு மதிப்பெண் திருத்த முறை, உயர்நிலைப் பள்ளியில் ஓரளவுக்காவது சுமாரான மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு மட்டுமே உதவியது. பள்ளியிலும் சொதப்பி வந்த மாணவர்களுக்கு வேறொரு திட்டத்தைக் கையாண்டார் சிங்கர். பள்ளி விளையாட்டுப் பயிற்சியாளர்களைக் கொண்டு போலிச் சான்றிதழ்களைத் தயாரிக்கச் செய்துவிடுவார். பின்னர் கல்லூரிப் பயிற்சியாளர்கள், சான்றிதழின் அடிப்படையில் மாணவரைச் சோதித்ததாகவும், அவர் கல்லூரிக்குப் பெருமைகளைத் தேடித் தரக் கூடியவர் என்ற அடிப்படையில் சேர்க்கைக்குப் பரிந்துரைப்பர். இப்படியாக  ‘விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டின் ‘ கீழ் கல்லூரிச் சேர்க்கையை நடத்தியுள்ளார் சிங்கர். அமெரிக்கன் ஃபுட்பால், சாக்கர், பாஸ்கட்பால், டென்னிஸ் போன்ற பல விளையாட்டுப் பயிற்சியாளர்கள் இந்தச் சதிப்பின்னலில் ஈடுபட்டிருந்ததாகத் தெரிகிறது. இதற்காக இவர்கள் தலா ஒரு மாணவருக்கு $250,௦௦௦ முதல் $95௦,௦௦௦ வரை லஞ்சமாகப் பெற்றுள்ளனர். இதில் சாக்கர் வீராங்கனை என்ற அடிப்படையில் கல்லூரியில் இடம் பிடித்த பெண் எட்டு ஒன்பது வயதில், தொடக்க நிலைப் பள்ளியில் சாக்கர் விளையாடியதோடு சரி. படகுச் சவாரி வீராங்கனை என்ற பெயரில் சேர்க்கப்பட்ட இன்னொரு பெண் ஒரு முறை கூட போட்டிக்கான படகுகளில் ஏறியதில்லையாம். கல்லூரியில் சேர்ந்த பின்னர் மருத்துவக் காரணங்களால் தொடர்ந்து போட்டிகளில் கலந்து கொள்ள முடியாதென்ற மருத்துவச் சான்றிதழ்களையும் சிங்கரே பெற்றுத் தந்துவிடுவார். இப்படி, பல சதித் திட்டங்களைச் செய்து பல மில்லியன் டாலர்களைச் சம்பாதித்த சிங்கர் 65 ஆண்டுகாலச் சிறைத் தண்டனையை எதிர்நோக்கியுள்ளார். மார்க் ரிட்டல் கல்லூரி வாரியத்தின் (College Board) தேர்வு முறை ஓட்டைகளைப் பயன்படுத்தி ஏமாற்றியதற்காக 2௦ ஆண்டு சிறைத் தண்டனை பெறக்கூடும்.

இந்த மொத்த ஊழலும் வெளிவந்தது குறிப்பிடத்தக்க விஷயம். லாஸ் ஏஞ்சலிஸை சார்ந்த மோரி டோபின் என்பவரைப் பங்குச் சந்தை ஊழல் சம்பந்தமாக விசாரித்து வந்தது எஃப்.பி.ஐ. பங்கு நிறுவனமொன்றில் பணியாற்றிவந்த டோபின், பங்கு விலைகளைப் போலியாக ஏற்றி பல கோடி டாலர்கள் ஊழலுக்கு வழி வகுத்தவர். அது தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கில் அவருக்குப் பல ஆண்டு சிறைத் தண்டனையும், ஏழு இலக்கத்தில் அபராதமும் அளிக்கவிருந்த தருணத்தில் எஃப்.பி.ஐ யினரிடம் தனக்குத் தெரிந்த உண்மைகளைச் சொல்லி விடுவதாகவும் மாறாகத் தன்னை அந்த வழக்கிலிருந்து விடுவிக்குமாறும் பேரம் பேசி வந்தார் டோபின். இந்த விசாரணையின் பொழுது, ஏல் பல்கலையின் முன்னாள் மாணவரான அவர் தனது மகளை அதே பல்கலையில் சேர்க்க விரும்பியதாகவும் அதற்கு ஏல் பல்கலையின் சாக்கர் பயிற்சியாளர் லஞ்சமாக $450,000 கேட்டதாகவும் சொல்ல, அதிர்ந்த எஃப்.பி.ஐ, அவரை உளவாளியாக மாற்ற முடிவெடுத்தது. அதன்படி டோபினை ஏல் பல்கலையின் பயிற்சியாளர் ரூடி மேரிடித்துடன் உரையாடச் செய்து, இந்தச் சதி வலையின் பின்னால் வில்லியம் சிங்கர் இருப்பதைக் கண்டுபிடித்தது.  எஃப்.பி.ஐ, சிங்கரை நெருங்கியபோது நடந்த அனைத்தையும் ஒப்புக்கொண்டார் அவர். கூடவே இந்தப் பெரும் ஊழலில் தன்னுடன் ஈடுபட்டு ஒத்துழைத்த அனைவரையும் அடையாளங் காட்டினார். 33 பெற்றோர் உட்பட, ஏறத்தாழ 56 பேர் இந்த வழக்கில் சிக்கியுள்ளனர். தொலைக்காட்சி நடிகர்கள், தொழிலதிபர்கள், மருத்துவர்கள், பெருநிறுவன உயரதிகாரிகள் எனக் கோடிஸ்வரக் குடும்பங்கள் பலவும் சந்திக்கு வந்துவிட்டன. இவர்கள் அனைவருக்கும் இந்த ஊழலில் பங்கெடுத்து, துணை போனதற்காக பெரும் அபராதமும், சிறைத் தண்டனையும் காத்திருக்கிறது.

ஜார்ஜ் டவுன் பல்கலை, ஹார்வர்ட் பல்கலை, நார்த் வெஸ்டர்ன் பல்கலை, ஸ்டான்ஃபோர்ட் பல்கலை, கலிபோர்னியா (பெர்க்லி) பல்கலை, சாண்டியாகோ பல்கலை, கலிபோர்னியா (லாஸ் ஏஞ்சலிஸ்) பல்கலை. சதர்ன் கலிஃபோர்னியா பல்கலை, டெக்சாஸ் பல்கலை, ஏல் பல்கலை எனும் பெரும் பல்கலைக் கழகங்கள் இக்களங்கத்துக்கு உள்ளாகியுள்ளன. இவற்றின் சேர்க்கை அதிகாரிகள் (Admission officers) பலரும் வழக்கில் பிடிபட்டுள்ளனர்.  இந்நிலையில் இப்பல்கலைகளின் இந்நாள் மற்றும் முன்னாள் மாணவர்கள் தங்கள் தொழில்முறை வாழ்க்கை சிதைந்துள்ளதாகச் சங்கடப்படுகின்றனர். இக்கல்லூரிகள் பன்னெடுங்காலமாக அமெரிக்கக் கல்வித்துறையில் கோலோச்சி வரும் தனியார் பள்ளிகள். மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் இக்கல்லூரிகள் மீதிருந்த நம்பிக்கையும், மோகமும் சற்றே தளர்ந்துள்ளன. அமெரிக்காவில் பட்டப்படிப்புக்கான கட்டணங்கள் ஒருபுறம் அச்சுறுத்திக் கொண்டிருக்க, கல்லூரிகளின் தரம் கேள்விக்குரியதாகி வருவது மிகவும் வருத்தமளிக்கிறது.

இந்த வழக்கில் நிதானமாகப் பணியாற்றி, சம்பந்தப்பட்ட அனைவருக்கும் சட்டரீதியான தண்டனை பெற்றுத் தரும் நீதித்துறையும், எஃப்.பி.ஐ எனப்படும் தேசிய புலனாய்வு நிறுவனமும் பாராட்டுதலுக்குரியவை.  

     ரவிக்குமார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad