\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

ஓய்வுக்காலத்திற்கு ரெடியா? 401(K) ஒரு பார்வை

அமெரிக்காவுக்குப் புதிதாக வேலைக்கு வந்தவர் என்றால், இந்த 401(K) என்கிற பதத்தைக் கேள்விப்பட்டு, அது என்ன, ஏது என்று ஒரு குழப்பம் ஏற்பட்டு, குழப்பத்தைத் தவிர்க்க அதைப் பற்றிக் கொள்ளாமலே சிலர் விட்டிருப்பர். அறிந்துக்கொள்ள ஆர்வம் கொண்டோருக்கும், அது குறித்து முழுமையாக அறிந்துக்கொள்ள முடியாமல் போயிருக்கலாம். 401(K) குறித்த தகவல்களைத் தமிழில் அளிக்கலாம் என்பதே இக்கட்டுரையின் நோக்கம்.

வேலை பார்ப்பவரோ, தொழில் புரிபவரோ, ஒரு வயது வரை மட்டுமே உழைப்பதற்கு உடலில் பலமோ, மனதில் திடமோ இருக்கும். அந்த வயது ஆளாளுக்கு வேறுபட்டாலும், ஒவ்வொரு நாட்டின் அரசும் அந்நாட்டுக் குடிமகன்களுக்குப் பணியில் இருந்து ஓய்வு பெறுவதற்கான வயதை நிர்ணயித்துள்ளது. பெரும்பாலும், இது 60இல் இருந்து 67 வயது வரை என்று ஒவ்வொரு நாட்டிற்கும் வேறுபடும். இந்தியாவில் தற்போதைய ஓய்வு பெறும் வயது 60 என்றால், அமெரிக்காவில் ஓய்வு பெறும் வயது 62 இல் இருந்து 66 வரை இருக்கிறது.

இவ்வாறு பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, வாழும் வாழ்விற்கான செலவினைக் கையாள, பணியில் இருக்கும் போதே திட்டமிட வேண்டும். 1980 வரை பாரம்பரிய ஓய்வூதியத் திட்டங்கள் (Traditional Pension Plan) பெரும்பாலான நிறுவனங்களில் நடைமுறையில் இருந்தன. இந்தத் திட்டத்தின் மூலம் ஒரு நிறுவனமானது, அதன் ஊழியர்களுக்கு அவர்களது ஓய்வு காலத்தில் எவ்வளவு ஊதியம் கொடுக்கப்பட வேண்டும் என்று நிர்ணயித்து இருக்கும். இதற்காக ஊழியர்கள் எதுவும் திட்டமிட வேண்டியதில்லை. நிறுவனம் அதற்கான திட்டமிடலில் ஈடுபட்டு, ஓய்வுக்காலத்தில் ஓய்வூதியத்திற்கான பணத்தைக் கொடுத்து, நிறுவனத்தின் வருமானத்தில் இச்செலவைக் கழித்துக்கொள்ளும். ஓய்வுப் பெற்ற ஊழியர்கள் இவ்வாறு ஓய்வூதியத்தைப் பெற்றுக்கொண்டு பெரிய கவலைகள் இன்றி வாழ்ந்து வந்தனர். 1980களுக்குப் பிறகு பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் நடைமுறையை மாற்றிக்கொண்டனர்.

இந்தப் பாரம்பரிய ஓய்வூதியத் திட்டங்கள், நிறுவனங்களுக்குப் பெரும் செலவாக, சுமையாக இருந்ததால், அவற்றை ஊழியர்களின் தலையில் கட்டியது. அதன் பிறகு, ஊழியர்களின் ஓய்வு நிதியை ஊழியர்களே திட்டமிட்டுக்கொள்ள வேண்டி வந்தது. ஊழியர்கள் தங்களுக்கான ஓய்வூதியத்தைத் தாங்களே திட்டமிட்டு, அதற்கான சேமிப்பைத் தங்கள் பணிக்காலத்தில் இருந்தே ஆரம்பிக்க வேண்டிய நிலை வந்தது. இந்த மாற்றத்திற்கு அடிக்கோலிட்டது 1978இல் அமெரிக்கக் காங்கிரஸ் கொண்டு வந்த செக்சன் 401(K) என்ற சட்டத்திட்டம் தான்.

401(K) என்ற இந்தச் சட்டத்திட்டமானது, ஊழியர்கள் சேமிக்கும் பணத்தின் மீதான வரியை நீக்கியது. இந்தச் சட்டத்தை ஆராய்ந்த டெட் பென்னா (Ted Benna) என்ற நிதி ஆலோசகர், இந்தச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு 401(K) எனும் ஓய்வூதிய சேமிப்புத் திட்டத்தைப் பரிந்துரைத்தார். இந்தத் திட்டத்தில் சேமிக்கப்படும் பணத்தின் மீது வரி விதிக்கப்பட மாட்டாது. இந்தத் திட்டத்தில் ஊழியர் சேமிக்கும் பணத்திற்கு ஈடாக நிறுவனமும் அதன் பங்கிற்குப் பணத்தினை அளிக்கும். ஆரம்பத்தில் நிறுவனங்கள் இதில் ஆர்வம் காட்டாவிட்டாலும், 1981 இல் அரசு கொண்டுவந்த விதிகள் மூலம், ஊழியர்கள் தங்கள் மாத சம்பளத்தில் இருந்து நேரடியாக இத்திட்டத்தின் சேமிப்புக் கணக்கில் பணத்தைச் செலுத்த வழிமுறைகள் ஏற்படுத்தியதால், இவ்வகைச் சேமிப்புத் திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் பெரும் நிறுவனங்களில் பாதிக்கு மேல் இவ்வகைச் சேமிப்பை ஊக்குவித்தது. இதற்கான ஆரம்பக்கால ஆய்வுகளில் ஈடுபட்டு, அதற்கான விதிமுறைகளைத் தங்களது நிறுவனத்திற்குள் புகுத்தியதில் ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் முதன்மையான ஒன்றாகும்.

நம் அனைவருக்குமே சேமிப்பின் அவசியம் குறித்துத் தெரிந்திருக்கும். பணி புரியும் காலத்தில் எந்தப் பொருளையும் வாங்க, எந்தச் சேவையையும் பெற வருமானம் கையிருப்பில் இருக்கும். இக்காலக்கட்டத்தில் பணம் கையில் இல்லாவிட்டாலும், கடனட்டை, கடன் ஆகியவற்றின் மூலம் வேண்டுமென்பதைப் பெற்றுக்கொள்ள முடியும். ஆனால், பணியில் இருந்து ஓய்வுப் பெற்றப்பிறகு, எதை வாங்க வேண்டுமென்றாலும் அதற்குச் சேமிப்பு தேவை. கிரடிட் கார்ட், லோன் போன்றவை கைக்கொடுக்காது. அப்படிக் கிடைத்தாலும், அவை இந்தச் சேமிப்பைச் சார்ந்தே இருக்கும். அதனால் சேமிப்பு என்பது இன்றியமையாதது ஆகும்.

பணிக்காலத்தில் பலவகைகளில் சேமிக்க வழியிருப்பினும், அதில் முக்கியமான சேமிப்பு முறை இந்த 401(K) ஓய்வூதியக் கணக்காகும். இவ்வகைச் சேமிப்புக் கணக்குகளைப் பராமரிக்கப் பல நிதி நிறுவனங்கள் உள்ளன. அப்படி ஒரு நிறுவனத்துடன், நீங்கள் பணிபுரியும் நிறுவனம் இணைந்து, இந்த ஓய்வூதியத்திற்கான கணக்கைச் செயல்படுத்தும். இவ்வகைக் கணக்குகளைச் செயல்படுத்த, அரசு ஏற்படுத்திக்கொடுத்திருக்கும் விதிமுறைகளைக் கடைப்பிடிக்கும்.

ஒரு பணியாளர் இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியத்திற்குத் திட்டமிடும் போது, அவர் பணிபுரியும் நிறுவனமானது, அவருடைய சம்பளத்தில் இருந்து பணியாளர் குறிப்பிட்ட சதவிகிதத்திற்குப் பணத்தை எடுத்து அவருடைய ஓய்வூதியக் கணக்கில் சேர்க்கும். சம்பளத்தில் வரியைப் பிடிக்கும் போது, இந்தப் பணத்திற்கு வரி பிடிக்காது. அதனால், பணியாளர் அரசாங்கத்திற்குச் செலுத்த வேண்டிய வரி குறையும். உதாரணமாக, பணியாளர் மாத சம்பளம் $5000 டாலர்கள் என்றால், அதில் 5% ஓய்வூதியத்திற்கு ஒதுக்கிறார் என்றால், அவருடைய சம்பளத்தில் இருந்து $250 எடுக்கப்பட்டு, இந்த ஓய்வூதியக் கணக்கில் போடப்படும். வழக்கமாக ஆண்டு வருமானம் $60000 என்றால், அதற்கு வரியாக 20% போடுகிறார்கள் என்றால், அப்போது $12000 வரிக்குப் போய்விடும். இப்போது 401(K) சேமிப்பின் மூலம் $60000 இல் $3000 போக, மீதி பணத்திற்கே வரி விதிக்கப்படும்.

இது ஒரு முக்கியப் பலன் என்றால், அடுத்தது பணியாளர் சம்பளத்தில் எடுத்த சதவிகிதத்திற்கு இணையாக நிறுவனமும் அவருடைய கணக்கில் பணம் செலுத்தும். இதை நிறுவனம் பணியாளருக்கு அளிக்கும் கூடுதல் சம்பளம் என்று எடுத்துக்கொள்ளலாம். அதாவது 5% என்றால் $250 நிறுவனம் அதன் பங்கிற்குக் கொடுக்கும். ஆக மொத்தம், ஒரு மாதத்திற்கு $500 என ஒரு ஆண்டிற்கு மொத்தம் $6000 சேர்க்கப்படும். கவனிக்க வேண்டியது என்னவென்றால், அனைத்து நிறுவனங்களும் இது போல் அதன் பங்கை அளிக்காது. பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் பங்கை அளிப்பார்கள். அவர்கள் அளிக்கும் பங்கின் சதவிகிதமும் நிறுவனத்திற்கு நிறுவனம் மாறுபடும். இது குறித்து நிறுவனத்தின் 401(K) பற்றிய குறிப்பேட்டைப் படித்துப் பார்த்துத் தெரிந்துக் கொள்ளலாம்.

இதில் போடப்படும் பணம், பங்குச்சந்தை, கடன் பத்திரம் எனப் பல வகைகளில் முதலீடு செய்யப்படும். எதில் எவ்வளவு முதலீடு செய்யப்படும் என்பதை ஒவ்வொருவரும் அவரவர் இடர் தாங்கும் நிலைக்கேற்ப (Risk Profile) ஓரளவிற்குக் தேர்ந்தெடுக்கலாம்.

அதே போல், ஓய்வூதியக் கணக்கில் பணியாளர் அதிகப்பட்சம் எவ்வளவு சேர்க்கலாம் என்று அரசாங்கம் ஒரு உச்சப்பட்ச அளவை நிர்ணயிக்கும். 2020 ஆண்டிற்கு இது $19,500 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது பணியாளர் பங்கிற்கான அதிகப்பட்சம் மட்டுமே. பணியாளருடன் இணைந்து நிறுவனம் வழங்கும் பங்கையும் சேர்த்தால், அதன் மொத்த அதிகப்பட்ச வரம்பு $57,000 ஆகும்.

என்ன தான் எதிர்காலத்திற்கான சேமிப்பு இதுவென்றாலும், இது மற்ற சேமிப்புக் கண்க்குகள் போன்றது அல்ல. பணம் தேவைப்படும் வேளை எல்லாம், இதில் இருந்து பணத்தை எடுத்துக்கொள்ள முடியாது. ஓய்வூதியம் என்பதால் பணியில் இருந்து ஓய்வு பெற்றப்பிறகு தான், இந்தக் கணக்கில் இருந்து பணத்தை எடுக்க முடியும். அதற்கு முன்பே எடுத்தோமானால், அதற்கு 10% அபராதம் கட்ட வேண்டும். அது தவிர, வரியும் கட்ட வேண்டும். சமயங்களில் இதையெல்லாம் கட்டியும், உங்களுக்கு லாபமாக அமையலாம். நீங்கள் எவ்வளவு பணம் செலுத்துகிறீர்கள், நிறுவனம் எவ்வளவு பணம் செலுத்துகிறது என்பதைப் பொறுத்து உங்களுக்கு லாபமா, நட்டமா என்பது தெரியும்.

ஒரு நிறுவனத்தை விட்டு மற்றொரு நிறுவனத்திற்கு மாறும் நிலை பணியாளருக்கு ஏற்படலாம். அந்நேரங்களில் வரி கட்டி பணத்தை வெளியே எடுக்க வேண்டும் தான் என்றில்லை. முந்தைய நிறுவனத்தில் இருந்து புது நிறுவனத்தின் 401(K) கணக்கிற்குப் பணத்தைப் பரிமாற்றம் செய்யலாம். புது நிறுவனத்தில் 401(K) வசதி இல்லையென்றால், Individual Retirement Account (IRA) என்னும் தனிப்பட்ட ஓய்வூதியத் திட்டத்திற்கு அந்தப் பணத்தை மாற்றிக்கொள்ளலாம்.

இந்தத் தனிப்பட்ட ஓய்வூதியக் கணக்கு என்பது 401(K) போன்றது தான். ஆனால், பணிபுரியும் நிறுவனத்தால் நிர்வகிக்கப்படுவது அல்ல. சந்தையில் இருக்கும் பல நிதி நிறுவனங்களால், இவ்வகைக் கணக்குகள் நிர்வகிக்கப்படுகின்றன. 401(K) போல் இந்தக் கணக்கில் நிறுவனம் அதன் பங்கை செலுத்தாது. மற்றபடி, வருமான வரி விலக்கு, உச்சவரம்பு, அபராதம் போன்றவை இதிலும் சிறு சிறு மாற்றங்களுடன் உண்டு. உங்கள் சேமிப்பு எவ்வகையில் முதலீடு செய்யப்பட வேண்டும் என்பதை இந்தத் திட்டத்தில் நீங்கள் உள்ளே இறங்கி முழுமையாக முடிவெடுக்கலாம். 401(K) இல் அந்தளவு தேர்வு வாய்ப்புகள் இருக்காது.

இவை தவிர, Roth 401(K) மற்றும் Roth IRA என்று இன்னும் சில வகை ஓய்வூதியத் திட்டங்கள் உள்ளன. இந்தத் திட்டங்களில் சேமிக்கப்படும் பணமானது, பணியாளரின் சம்பளத்தில் வரி பிடித்தப்பிறகு எடுக்கப்படும். அதனால், சேமிக்கப்படும் காலத்தில் இதன் மூலம் வரி விலக்கு கிடைக்காது. ஆனால், பணத்தை இந்தக் கணக்கில் இருந்து எடுக்கும் போது, அச்சமயம் எந்த வரியும் போடப்படாது. ஆகவே, நமது தேவைக்கேற்ப இதில் ஒரு திட்டத்தைத் தேர்ந்தெடுத்து நமது சேமிப்பை முதலீடு செய்யலாம்.

இந்தியர்கள் ஒரு காலக்கட்டத்திற்குப் பிறகு, இந்தியாவிற்குத் திரும்பினால், இந்த ஓய்வூதியக் கணக்கில் போடப்பட்ட பணம் என்னவாகும் என்று பார்க்கலாம். முன்பே சொன்னதுப்போல், ஓய்வுப்பெறும் வயதிற்கு முன்பு பணத்தை எடுக்கும் போது, அபராத பணம் மற்றும் வரி செலுத்தி சேமித்த பணத்தை எடுக்கலாம். அதாவது நீங்கள் முன்பு மிச்சப்படுத்திய வரியை, இப்பொழுது கட்டுகிறீர்கள். சரி, பணத்தை வெளியே எடுக்க வேண்டாம். கணக்கிலேயே இருக்கட்டும் என்று நினைத்தால், அதையும் செய்யலாம். பிறகு, 60 வயதிற்கு மேல் எந்த அபராதமும் இன்றி எடுக்கலாம். கணக்கு அமெரிக்காவில் இருப்பதால், அதில் இருந்து வரும் வருமானத்திற்கு அமெரிக்காவில் வரி வேண்டியிருக்கும். அமெரிக்காவில் வரி கட்டியதால், மீண்டும் இந்தியாவில் கட்ட தேவையிருக்காது. அதற்குத் தகுந்த சான்றுகளைக் காட்டி, இந்தியாவில் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்.

401(K) கணக்கில் இருந்து ஓய்வு பெறும் முன்பு பணத்தை எடுக்க முடியாது என்றாலும், அந்தக் கணக்கில் இருந்து கடன் பெறலாம். அவ்வாறு கடன் பெறுவதைத் தவிர்க்க வேண்டும் என்றாலும், முக்கியமான செலவு என்றால் குறைந்த செலவில் விரைவாக இந்தக் கணக்கில் இருந்து கடன் பெறலாம். இதைக் கடன் என்று கூறினாலும், நீங்கள் சேர்த்து வைத்த பணத்தில் இருந்து 50% என்பது போல் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தைத் தான் எடுக்கிறீர்கள். அதற்கு வட்டி என்று வசூலிக்கப்படும் பணம் எல்லாம் உங்கள் கணக்கிற்குத் தான் செல்லும். அதனால் ஒருவகையில் இது போன்ற சிறந்த கடன் வேறு எதுவும் இல்லை எனலாம்.

இதுவரை, 401(K ) மற்றும் பிற ஓய்வூதியத் திட்டங்களை ஓர் அறிமுகமாகப் பார்த்தோம். மேலும் தகவல்களை அறிந்துக்கொள்ள, சம்பந்தப்பட்ட திட்டங்களைக் குறித்து நீங்கள் பணிப்புரியும் நிறுவனத்தின் இணையத்தளத்திலும், நிறுவனம் குறிப்பிடும் நிதி நிறுவனத்தின் இணையத்தளத்திலும் பார்த்துத் தெரிந்துக்கொள்ளலாம். குழப்பங்கள் இருப்பின் ஒரு நிதி ஆலோசகரைச் சந்திந்து நிவர்த்திப் பெறவும். மற்றபடி, சேமிப்பு என்பது மிகவும் முக்கியமானது என்பதும், அதற்கு இத்தகைய ஓய்வூதியத் திட்டங்கள் பெருமளவு உதவி புரிகின்றன என்பதும் யாரும் மறுக்கமுடியாத உண்மைகள். உங்களுடைய நிலையைப் பொறுத்து, தகுந்த ஆய்வுகள் புரிந்து, சரியான திட்டத்தில் முதலீடு செய்யுங்கள். மகிழ்வாக ஓய்வுக்காலத்தைச் செலவிடுங்கள்.

  • சரவணகுமரன்

உசாத்துணை

https://www.investopedia.com/terms/1/401kplan.asp

https://www.sofi.com/learn/content/different-retirement-plan-types/

https://timesofindia.indiatimes.com/nri/other-news/NRI-back-in-India-Heres-what-to-do-with-your-401k/articleshow/11633158.cms

Tags: , ,

Comments (1)

Trackback URL | Comments RSS Feed

  1. Palani says:

    Useful information

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad