அட்லாண்டாவில் உலகத் தமிழ்க் கவிஞர்கள் நாள்
அட்லாண்டா உலகத் தமிழ்க் கவிஞர்கள் பேரமைப்பு சார்பில், திருவள்ளுவர் தினமான தை இரண்டாம் நாள், உலகத் தமிழ்க் கவிஞர்கள் நாளாகச் சிறப்புடனும் எழுச்சியுடனும் கொண்டாடப்பட்டது.
சனவரி 19, 2020, ஞாயிறன்று அட்லாண்டாவில் உலகத் தமிழ்க் கவிஞர்கள் பேரமைப்பின் தொடக்க நிகழ்வும் உலகத்தமிழ்க் கவிஞர்கள் நாளும் ஒருசேர நடைபெற்றது.
ஒருங்கிணைப்பாளர் ராஜி ராமச்சந்திரனின் வரவேற்புரைக்குப் பிறகு உறுப்பினர் பிரதீபா பிரேம் வரவேற்புக் கவிதை வாசிக்க, நிகழ்வு களைகட்டியது.
மூத்த தமிழ் அறிஞரும், கவிஞருமான ந. குமரேசன் தமது சிறப்புரையில் பயனுள்ள செய்திகளைப் பகிர்ந்து கொண்டார். தம் செறிவான கவிதைகளையும் வாசித்தார்.
கவிஞர்கள் ஆதி, சங்கர், ஜெயா, பிரதீபா, கிரேஸ், சக்திவேல், ஜெகா, லாரன்ஸ், அண்ணாதுரை, ராம், சஜ்ஜெயன் ஆகியோர் தமிழ் மொழி, பண்பாடு, விவசாயம், சமூகச் சிந்தனை போன்றவற்றை வெளிப்படுத்தும் வகையிலும், மொழியுணர்வு மற்றும் எழுச்சியைத் தூண்டும் வகையிலும் தமது கவிதை, குறுங்கவிதைகளை வாசித்தனர். நிகழ்ச்சிக்கு நேரில் வர இயலாதோர் தங்கள் கவிதைகளின் ஒலிப்பதிவுகளை அனுப்பி வைத்திருந்தனர்.
அமெரிக்கா வாழ் தமிழர்களுக்கான தமிழ்ச் சேவையில் ஈடுபட்டு வரும் முனைவர் அமிர்தகணேசன் இந்தியாவிலிருந்து தமது கவிதை ஒலிப்பதிவை அனுப்பியிருந்தார். அவரது கவிதை விழாவுக்கு வந்திருந்த விருந்தினர்கள் சித்ரா மற்றும் ஹேமாவால் வாசிக்கப்பட்டது. மற்றொரு விருந்தினர் கற்பகமும் தன் குறுங்கவிதைகளை வாசித்தார்.
தொடர்ந்து பிரதீபா எழுதிய நாட்டுப்புறக் கவிதை ஒன்றினைக் கூடியிருந்த மகளிர் அனைவரும் சந்தத்தோடு பாடி, சபையோரை மகிழ்வித்தனர்.
எழுத்தாற்றல் மற்றும் தமிழ் மொழி பற்றிய கருத்துகளைப் பரிமாறிக் கொண்ட உறுப்பினர்களும் விருந்தினர்களும், இவ்வரிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த உலகத் தமிழ்க் கவிஞர்கள் பேரமைப்பின் மையக்குழுவைப் பாராட்டி, நன்றிக்கவிதையோடு நிகழ்வை நிறைவு செய்தனர்.
– ராஜி ராமச்சந்திரன், அட்லாண்டா
அருமை பாராட்டுகள்