\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

முனைவர்

Filed in கதை, வார வெளியீடு by on June 30, 2020 0 Comments

பழங்காநத்தம்  ஸ்டாப்பிங்கெல்லாம் இறங்கிக்கங்க !என்று நடத்துனர் அறிவித்ததும், வேகம் குறைந்து வந்து  நின்ற அந்த அரசுப்பேருந்திலிருந்து நிவேதிதா  வெகு ஜாக்கிரதையாகச் சாலையில் இறங்கிக்கொண்டாள்

அம்மா, நீங்க சொல்ற  இடம் , ரெயில்வே கேட்டைத்  தாண்டி போனா வரும்னு நினைக்கிறேன். விசாரிச்சுப்  போயிக்கங்கம்மா !” என்றார் நடத்துனர்.

 “ரொம்ப தேங்க்ஸ் சார்! ” என்றாள்  நிவேதிதா

‘இது தான் பழங்காநத்தத்துக்கு முந்தின ஸ்டாப்பிங். முதல்லயே கண்டக்டர் கிட்ட சொல்லி  வெச்சது  நல்லதாப்போச்சு’ என்று நினைத்துக்கொண்டாள்

மதுரை வெயில் சூடேறிக்கொண்டிருந்தது.

நீ ஒண்ணும் சிரமப்படவே  வேண்டாம்மா. பழங்காநத்தம் முத ஸ்டாப்பிங்குனு கண்டக்டர்கிட்ட கேளு. அவரே இறக்கி விட்டுடுவாரு. அங்க நிண்ணு பார்த்தா ஒரு ரெயில்வே க்ராஸிங் தெரியும். அதைத்தாண்டி நீ வந்தா, அங்க ரோட்டு மேலயேபேராசிரியர் காலனின்னு ஒரு போர்டு தெரியும். அங்க வந்து மூணாவது கிராஸ்ல வந்தா, அந்த தெருவிலேயே  என்  வீடு தான் கடைசி வீடு. ஒரு சத்தம் கூட இல்லாம ரொம்ப அமைதியா இருக்கும். அது தான் அதுக்கு அடையாளம்; என்று சொல்லி தனது வீட்டுக்கு  வரும் வழியைச் சொல்லியிருந்தார்  டேவிட் கலாதர்.

ப்ரொபசர்  வீட்டுக்குப்  போவது  இது தான் முத தடவைஎன்னோட பி. ஹெச். டி. வேலைக்காக  எல்லாவற்றையும் பல்கலைக்கழகத்திலேயே முடித்து விட்டேன். பெரும்பாலும் நூலகமே சார்ந்ததாக  என் வேலை அமைந்திருந்தது. ப்ரொபசரோட  வீட்டுக்குப்  போகணும்னு அவசியமே வரல

இவரை முத தடவையா பல்கலைக்கழகத்துல வெச்சுப்  பார்த்தேன்

பி. ஹெச். டி. பண்ணனும் சார்நீங்க தான் எனக்கு கைடா இருக்கணும்என்றேன்

என் கிட்ட யார் வரச்சொன்னது ?’ என்றார்.

மாணிக்க வேலு சார் தான் உங்க பேரைச் சொன்னாரு.’ 

 ‘ அவரா !’  

ஆமா  சார் ! அவர் கிட்ட பி. ஹெச். டி. பண்றவங்க நிறைய  இருக்காங்களாம். அதான் உங்கப்  பேரைச் சொன்னாரு. அதான் வந்தேன்என்றார்.

  ‘ என் கிட்ட ஏற்கனவே அஞ்சு பேரு பண்ணிக்கிட்டு இருக்காங்க. நீங்க  வந்ததுக்கு சந்தோசம். அப்ப, ஒண்ணு பண்ணுங்க. யூனிவெர்சிட்டியில  ரெஜிஸ்டர் பண்ணிட்டு என் கிட்ட  வாங்க. ‘  

சரி சார் !. ரொம்ப  தேங்க்ஸ்  சார் !’  

 அது தான் நான் டேவிட் கலாதரை முதன் முதலாய்ச் சந்தித்தது. எந்தப்  பேராசிரியரும் தன்னிடம் வரும் மாணவரை உடனே சேர்த்துக்கொள்ளுவதில்லைபி. ஹெச். டி. என்பது முழு நேர ஆய்வு. இரவு பகலாய், சிரத்தையுடன்  வாசிக்க வேண்டியிருக்கும். இரண்டரை ஆண்டுகளில் ஆய்வுக்கட்டுரையைத்  தயார் செய்து தர வேண்டும். கால நீட்டிப்பு உண்டு. எனக்கு ஆய்வகத்தில் வேலை இல்லை. ஆங்கில இலக்கியத்தில் ஒப்பீட்டு இலக்கியம் எனது  ஆய்வு. ‘பெண்ணிய இலக்கியப்பார்வையில் எரிக்கா ஜாங்கும், கமலா தாஸும்என்பது தான் என்னுடைய தலைப்பு. இந்த தலைப்பை நானே தேர்ந்தெடுத்து  ப்ரொபசர்  டேவிட் கலாதரிடம் கொண்டு போய் காட்டினேன்

சரிம்மா ! உன்னோட இஷ்டம். ஆனாஇது தான் உன்னோட தலைப்புன்னா, இதுக்காக  நானே  நிறைய  படிக்க  வேண்டியிருக்கே ! இது எனக்கு தெரியாத டாபிக் !’ என்றார் டேவிட்

 ‘சார், இது  சம்பந்தமா  நானே  எல்லாத்தையும் தேடி வெச்சுட்டேன் சார் !’ என்றேன் நான்.

முதலில் எரிக்கா ஜாங் என்ற அமெரிக்க எழுத்தாளரின் நாவல்கள், கவிதைகள் எல்லாவற்றையும் வாசித்து குறிப்பெடுத்துக்கொண்டேன். பிறகு, கேரளாவின் கமலா தாஸின் கவிதைகளை வாசித்தேன்குறிப்பெடுத்துக்கொண்டு, பிறகு இருவருக்கும் உள்ள  அணுகுமுறைகளில் உள்ள வித்தியாசங்களை பட்டியலிட்டேன். பிறகு, இவை எல்லாவற்றையும் கடந்து, அவை பெண்ணியம் என்ற பார்வையில் ஒரு நேர்கோட்டில் எவ்வாறு சந்திக்கின்றன என்ற ரீதியில் என்னுடைய ஆய்வுக்கட்டுரையை எழுதினேன். முதல் தடவை எழுதிய போதே, அது எவ்வாறு முடியப்போகிறது என்பது எனக்குத்தெரிந்து விட்டது. ஆய்வுக்கட்டுரைக்கு அளவு  250  பக்கங்கள். என்னுடைய ஆய்வு 350  பக்கங்களுக்கு மேலும்  நீடித்தது. எனது  முதல் உத்தேச  வரைவு  கட்டுரையை வாசித்த ப்ரொபசர்  டேவிட்

என்னம்மா, இவ்வளவு நீளமா இருக்கணுமா ? கொஞ்சம் சுருக்குங்க. இவ்வளவு பக்கங்கள் தேவையில்ல. ஆனா, இத  நல்லா எழுதியிருக்கீங்கம்மா.! முத தடவையே இப்படி கொண்டு வந்துட்டீங்க. ஒண்ணு செய்ங்க. இதை இப்படியே முடிச்சுடைப்பிங்குக்குக்  குடுத்துருங்க.’ என்றார்.

ஒரு ஆய்வாளரிடம் முதன் முதலாய்  நல்ல பேர் எடுத்த ஆய்வு மாணவி அநேகமாக நான் ஒருவள் தான்  என்று நினைக்கிறேன். என்னுடைய  ஆய்வுக்குறிப்பு  நூல்களின்  பட்டியலைப்  பிற்சேர்க்கையாக கட்டுரையின் இறுதியில் சேர்த்தேன்.   ஒவ்வொரு  நாளும் அதிக நேரம் உழைத்ததால்இரண்டரை ஆண்டுகளில் செய்ய வேண்டிய வேலையை, இரண்டு ஆண்டுகளிலேயே முடித்து விட்டேன். மொத்த ஆய்வுக்கட்டுரையின்  கையெழுத்துப்பிரதியையும், எனது ஊரில்,  கீழ ரத வீதியில் உள்ள டைப்பிஸ்ட்டிடம் தட்டச்சு செய்ய தந்தேன். பதினைந்து நாட்கள் எடுத்துக்கொண்டார்  அவர்

தட்டச்சு செய்யப்பட்ட  கட்டுரையை  திருமுருகன் அழகாக  பைண்டிங் செய்து தந்தார். ஏழு  நகல்கள் எடுத்துக்கொண்டுஅவைகளுடன் மதுரை பல்கலைக்கழகத்துக்கு பஸ் ஏறினேன். பேராசிரியர் டேவிட் கலாதரின் மேஜையின் மேல் அதைக்கொண்டு போய் வைத்தேன்.

 ‘வெரி குட் நிவேதிதா ! ரொம்ப பிரமாதம். நானே முதல்ல எதிர்பார்க்கலஇவ்வளவு வேகமா முடிச்சு கொண்டு வருவீங்கன்னு  நினைக்கல. குட் ! என்றார். ‘ 

தேங்க்ஸ் சார் ! உங்களோட ஆசீர்வாதம் தான் இதுக்கு காரணம்.

 ‘சரி, அவ்வளவு தான் !’ இனிமே இதை மூணு பேர் சரி பார்க்க அனுப்பணும். அதை நான் பார்த்துக்கறேன். அதுக்கப்புறம்  வைவாஅதுக்கு நீங்க தான்  தயாரா வரணும். அவ்வளவு தான். ‘

என்னுடைய  ஆய்வுக்கட்டுரையை மூன்று  பேருக்கு அனுப்பி, அவர்கள் அதை சரி பார்க்க   பதினோரு   மாதங்கள் ஆயினஅந்த மூன்று பேராசிரியர்கள் ஒப்புதல் தருவதற்குள்  இன்னொரு சிறிய ஆய்வுக்கட்டுரையைத்  தயார் செய்து விடலாமா என்று கூட எண்ணினேன்இனி மேல், வைவா ஒன்று தான் பாக்கி. அதுநான் என்னுடைய ஆய்வுக்கட்டுரையின் சாராம்சத்தை மூன்று பேராசிரியர்கள் முன்னிலையில் வாசித்து, அவர்கள் என்னிடம் அது  தொடர்பான சந்தேகங்களைக்கேட்டு, அதற்கு நான் விளக்கம் தர வேண்டும்.

 

மீண்டும்  பேராசிரியர் டேவிட்டை அவரது துறையில் சந்தித்தேன். ‘ ரொம்ப சரிம்மா ! உங்க கட்டுரையை வாசித்த மூணு பேருமே, அதுல ஒரு எடத்துல கூட கேள்விக்குறி  போடல. அதுவே ஒரு பெரிய விஷயம்.  ‘சரி’ன்னு அவங்க கையெழுத்து போட்டுட்டாங்க. இனிமே, வைவாவுக்கு நீங்க தயாராயிருங்க. ‘  

சரி  சார் ! ‘ 

உங்க  தீஸிஸை  நல்லா படிச்சு வெச்சுக்கோங்க. அவங்க எப்படி கேள்வி கேட்டாலும் நீங்க அதுக்கு ஏத்த மாதிரி பதில் சொல்லணும். அதுக்கு நீங்க தயாரான இருக்கணும்.’

 ‘ சரி சார் !’  

அப்புறமா  இன்னொண்ணு. என் கிட்ட  பி. ஹெச். டி. பண்ற பசங்க  பல பேரு சுமாரான பையங்க தான். அவங்களுக்காக  நானே தீஸிஸை  எழுதிருவேன். அதுக்கு அவங்க கிட்ட  நாலு லட்சம் வாங்கிருவேன். இது வரை யாருமே நான் கேட்டு இல்லன்னு சொன்னதில்ல. பணத்தை எடுத்து நோட்டு நோட்டா குடுத்துருக்காங்க. நாலு லட்சம் கேட்டா, அஞ்சு லட்சம் ரூபா குடுத்தவனெல்லாம் இருக்கான். சரின்னு வந்த வரவை விடுறதில்ல. பொண்ணுகளுக்கு இதை மாதிரியே எழுதித்தந்து  பணம்  வாங்கிக்கறேன். இப்ப யாரு சுத்தமான மெரிட்டுல படிச்சு வர்றாங்க, சொல்லுங்க நிவேதிதா. நான் ஒண்ணு  ஒங்க கிட்ட கேக்குறேன். நீங்கசரி’ன்னு சொல்லணும்.’  

பேராசிரியர் டேவிட் அக்கம் பக்கம் பார்த்து விட்டு, என்னிடம் தலை குனிந்து, மெதுவான குரலில் சொன்னார்.  ‘பல பொண்ணுங்க என் கிட்ட அனுசரிச்சுப்போறாங்க. நீங்களும் அதே மாதிரி, ஒரு நாள் மட்டும் தான். ஒரே ஒரு ஞாயித்துக்கிழமை. அவ்வளவு தான் அப்புறமா உங்க பி. ஹெச். டி. ரெடி. இது  யாருக்கும்  தெரியாது  எங்க  வீட்டுல  இருக்கறவங்களுக்கும்  தெரியாது .’

எரிகின்ற அக்கினி திராவகத்தை என் மீது வீசுகிறார் பேராசிரியர். என் முகம் பொசுங்கி, சிதைந்து, அடையாளமின்றிப்போய் , என் உடல் கருகி, மார்புகள் ரெண்டும் சிதைந்து, அக்கினி வழிந்து, என் தொப்புள் கொடி வழியாய், என் தொடைகளில் இறங்கி  என் உடலே  பற்றி எரிகிறது. நான் கூனிக்குறுகிப்போய்  என் பேராசிரியரின் முன்னே அமர்ந்து,  தலை குனிந்து, கண்களில்  நீர் வழிய  அமர்ந்திருக்கிறேன்

சார், நான் உங்களோட மக மாதிரிஉங்களுக்கு என்னோட அப்பாவோட  வயச விட  அதிக வயசுஇப்படி, நீங்க  என்கிட்ட பேசுறது சரியா ? இது மத்தவங்களுக்கு தெரிஞ்சா உங்களப்பத்தி என்ன நினைப்பாங்க ? நீங்க  இந்த டிபார்ட்மெண்டுல ஒரு சீனியர் ப்ரொபசர்நீங்க அடுத்து  இதே  டிபார்ட்மென்டுக்கு தலைவராகப்போறீங்க. நீங்க இப்படி என்கிட்டே கேக்கலாமா ? இது என்னைய   அவமானப்பட வெச்சுருச்சு சார் !‘  

அதப்பத்தியெல்லாம்  எனக்கு கவலை இல்ல  நிவேதிதா. என் கிட்ட பி. ஹெச். டி. பண்ண  வர்ற பெண்கள்கிட்ட நான் எதிர்பார்க்கிறது இது தான். இதுக்கு சம்மதிச்சா, அடுத்து அவங்களுக்கு  டிகிரி கிடைக்கும். டாக்டர்னு  பேருக்கு முன்னாடி போட்டுக்கலாம். இல்லாட்டி அவங்க எப்பவுமே  டாக்டராக முடியாது. உங்கள நான் வற்புறுத்தல. நல்லா, யோசிச்சு  பாத்துட்டு என் வீட்டுக்கு இந்த ஞாயித்துக்கிழமை நீங்க  வாங்க. நீங்க  என் வீட்டுக்கு வந்தா  பி. ஹெச். டி. உறுதிஇல்லாட்டி இல்ல.’

ப்ரொபசர்  டேவிட் கலாதர்  உறுதியாய் என்னை ஒரு பார்வை பார்த்தார்அந்த பார்வையே என்னை வீழ்த்துவதற்கான அஸ்திரம் போல இருந்ததுஎனக்கு  எதிராய் அமர்ந்திருந்த பேராசிரியரோடு  இது நான் நடத்தும் யுத்தமோ ? டேவிட் கலாதர்  ஒரு  பெருமூச்சை  வெளியே  விட்டார்.  

யோசிச்சுப்பார்த்துட்டு  வாங்க  நிவேதிதா !‘   

இதோ, ரயில்வே  கேட் தாண்டி,பேராசிரியர் காலனியைக்  கண்டுபிடித்து, மூன்றாவது குறுக்குத்  தெருவில், கடைசி வீட்டின் கதவின் முன் நின்று, அழைப்பு மணியை அழுத்தும் முன்பு, ஏதோ மனசுக்குள் ஒரு கேள்வி எழுந்தது. ஒரு பெண்ணாய் இருந்து கொண்டு, இவ்வளவு போராட்டம் போராடி, அதன் பின்பு, இப்படி என் ஆத்துமாவை இந்த கிழவனிடம் அடமானம் வைத்து விட்டு,களங்கப்பட்டு திரும்ப வேண்டுமா ? அப்படி ஒரு பட்டம் எனக்கு வேண்டுமா ? வேலை, பிழைப்பு, சம்பாத்தியம் ஆகியவற்றுக்காக இப்படி என் கன்னிமையை இந்த  துச்சாதனனிடம் விற்க வேண்டுமா ?…..

…’வாம்மா வா.! உனக்காகாகத்தான் இவ்வளவு நேரம் காத்துக்கிட்டு இருக்கேன். வீட்ல இருக்கற எல்ல்லாரும் வெளியூர் போயிட்டாங்கமேல் மாடிக்கு வா நிவேதிதா !‘  

இந்த இடம் ரொம்ப அமைதியான இடம்னு ஏற்கனவே சொன்னேன். இத மாதிரி அமைதியை வேற எங்கயும் நீ பாக்க முடியாது. ‘  

என் ஆன்மாவை வெறுப்போடு கழட்டி, கீழே உதறி விட்டுஇருள்  விரவியிருக்கும் அந்த அறையினுள்  நுழைகிறேன்  நான்.

ஸ்ரீவில்லிபுத்தூர்  எஸ்.  ரமேஷ் 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad