\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

பக்ரீத்

ஏக இறைவனின் திருப்பெயரால், முஸ்லீம்கள் உலகளவில் ஆண்டுதோறும் இரண்டு பண்டிகைகளைக் கோலாகலமாகக் கொண்டாடுகின்றனர். ஒன்று, இறை வேதமாகிய திருக்குரான் மனிதர்களுக்கு  அருளப்பட்டதைக் கொண்டாடும்  ஈகைத் திருநாளான  “ரமலான்”. மற்றொன்று தியாகத் திருநாளான “பக்ரீத்” பண்டிகை. இந்தக் கட்டுரையில் பக்ரீத் பண்டிகையைப் பற்றிச் சுருக்கமாகப் பார்ப்போம்.

பக்ரீத் பண்டிகை பன்னிரண்டாவது இஸ்லாமிய மாதமான “துல்-ஹிஜ்ஜாஹ்”வின் பத்தாவது நாள் ஆண்டுதோறும் முஸ்லிம்களால் கொண்டாடப்படுகின்றது. இந்த நாளை “ஹஜ்” பெருநாள் என்றும் கூறுவார்கள். “ஈத் உல் அத்ஹா” என்று அரபி மொழியிலும் கூறுவார்கள். இது வருகிற ஜூலை 31ஆம் நாள் இறைவன் நாடினால் முஸ்லிம்களால் கொண்டாடப்படும். “துல்-ஹிஜ்ஜாஹ்”  மாதம், முஸ்லிம்கள் மக்கா நகருக்குச் செல்லும் புனிதப் பயணமான ஹஜ்  மேற்கொள்ளும் மாதமும் ஆகும்.

இப்ராஹிம் (அவர் மீது இறைவனின் சாந்தி உண்டாகட்டும்) என்னும் இறை தூதர், முஸ்லிம்கள் மட்டும் அல்லாமல், யூதர்கள் மற்றும் கிறித்துவர்களால் போற்றப்படும் இறைத்தூதர் ஆவார். அவர் ஓரிறைக் கோட்பாட்டைத் தன் மக்களுக்கும் சந்ததியினருக்கும் எல்லா எதிர்ப்புகளையும் தாண்டிப் போதித்தவர். இறைவேதமான திருக்குரானில், இறைவன் இறைத்தூதர் இப்ராஹிமை  “இறைவனின்  நண்பர்” என்று அழைத்துச் சிறப்பித்துள்ளான். இப்ராஹிம் அவர்களின் வாழ்க்கையில் இறைவன் நடத்திய ஒரு சோதனையை நினைவுப்படுத்தவே பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகின்றது. 

இப்ராஹிம் அவர்களுக்கு நீண்ட காலத்திற்குப் பிறகு  இறைவனின் கிருபையால் இஸ்மாயில் (இறை தூதர்) என்ற மகன் பிறந்தான். இறையச்சம் மிகுந்த இஸ்மாயில்  பாலைவன நகரமான  மக்கா நகரத்தில்  அவர் தாயுடன் வாழ்ந்து வந்தார். ஒரு நாள்  இப்ராஹிம், இஸ்மாயில் அவர்களை இறைவன் பலி இடுமாறு கட்டளையிட்டதாய்க் கனவு  கண்டார்கள். இறைவனின் கட்டளையைப் பற்றி இப்ராஹிம் அவருடைய மகன் இஸ்மாயிலிடம் கூறினார்கள். அதைக் கேட்ட இஸ்மாயில் “என்னருமைத் தந்தையே! நீங்கள் ஏவப்பட்டபடியே செய்யுங்கள்.” என்று கூற, அவர்கள் இறைவனின் கட்டளையை ஏற்றார்கள். பலியை நிறைவேற்றப்போகும் தருணத்தில், இறைவன் இப்ராஹிம்  அவர்களை அழைத்து,  “நீங்கள் இறைவன் தந்த சோதனையில் வெற்றி பெற்று விட்டீர்” என்று அறிவித்தான். பின்னர் ஒரு கடாவைப் பலியிடுமாறு கட்டளையிட்டான்.

இப்ராஹிம் அவர்களுடையை தியாகத்தை நினைவு கூர்ந்து,முஸ்லிம்கள் பக்ரீத் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர். இந்தப் பண்டிகையில், முஸ்லிம்கள் புது ஆடை உடுத்தி, குடும்பத்துடனும், மக்களுடனும் சேர்ந்து இறைவனைத் தொழுது நன்றி செலுத்துகின்றனர். தொழுகைக்குப் பின், ஆடு,மாடு அல்லது ஒட்டகத்தை இறைவனின் பெயரால் பலியிட்டு, அதன் இறைச்சியை ஏழைகளுடன் பகிர்ந்து உண்டு இந்த திருநாளைக் கொண்டாடுகின்றனர்.

“நீங்கள் பலியிட்ட விலங்கின்  இறைச்சியோ, ரத்தமோ என்னை ஒரு போதும் அடைவதில்லை, மாறாக உங்கள் இறையச்சம் மட்டுமே என்னை வந்தடையும்” என்று இறைவன் திருக்குரானில் கூறுகின்றான். ஆகவே,இந்தத் தியாகத் திருநாளில் நம்முள் இருக்கும்  பேராசை,பெருமை, பொறாமை, ஆடம்பரம்,சுய நலம், வெறுப்பு ஆகியவற்றைத் தியாகம் செய்து, இறைவனின் அருளால், மகிழ்ச்சியான ஒரு சமுதாயத்தை உருவாக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்.

எல்லாப் புகழும் இறைவனுக்கே,

இம்ரான்

Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad