\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

பனிக்காலச் சுகங்கள்

 மீண்டும் மினசோட்டாவில் பனிக்காலம் வந்துவிட்டது. இந்த வருடம் பனி பிந்தினாலும், எம்மை குளிரும்,  இருளும் சூழ்ந்து வருகின்றன. இந்தக் குளிர் நாட்களில் சூரியன் பிந்தி உதித்து, முந்தி அத்தமிப்பது வழக்கம். எனவே முகில் கூடிய மந்தமான வானம், மங்கும் ஒளி இவ்விடத்தின் இயல்பான இயற்கை நிலையாகிப்போனது. இது சலிப்பான சூழலாக இருக்கும் என்று நாம் சிந்திக்கவும் செய்யலாம்

 அதன் ஒரு காரணம் பூமியின் மத்திய கோட்டுக்கு அருகாமையில் வெயில் வெளிச்சத்துடன் வெப்ப வலயத்தில் (Tropics) இருந்து வந்த எமக்கு இது சற்று வித்தியாசமானது தான். ஆம் மினசோட்டா, கனடாவில் வாழும் எம் மக்கள், குளிர் நாட்டுத் தமிழர்கள் ஆகிவிட்டனர். இது எம்மில் பலருக்கு ஒரு புதிய அனுபவம் தான். ஆயினும் படிப்படியாக இவ்விடத்துச்  சூழலுக்கு ஏற்ப மாறிக் கொள்வதும் எமது சுபாவமாகிவிடுகிறது. வெள்ளை வெளிர் என்ற வெளிச்சத்தில் இருந்து விலகி மங்கு மஞ்சள் ஒளி மலர்வு காணப்படும் காலம் பனிக்காலம்.

இயல்பாக இருள் என்றவுடன் பிரகாச ஒளி வேண்டும் என்ற நினைப்புத்தான் உடன் வரும். ஆயினும் அதற்கு மாறாக, ஒரு பனிக் காலத்தில் டென்மார்க் நாடு சென்ற போது தான் அவ்விடம் மக்கள் எவ்வாறு அதிக மெழுகு திரிகளையும் மங்கு மின்னொளியையும் தான் விரும்புவார்கள் என்று அறிந்து கொண்டேன். இது பொதுவாக அமெரிக்க நகர் வாழ்வுக்கு இரவைப் பகலாக்கும் வெளிச்சத்துக்கு மாறாகத் தெரிந்தது .

மங்கிய ஒளி பருவ காலத்தில் ஏன் பிரகாச ஒளியைத் தேடுகிறோம் என்று பார்ப்போம். அது வெறும் பிரகாசம் மாத்திரம் இல்லை, கோடை காலம் போன்ற நிலையைப் பனிக்காலத்தில் எதிர்பார்க்கிறோம் என்பதே உண்மை. இது செயற்கையான பருவக் காலத்துடன் ஒத்துப் போகாத விஷயம். 

எனவே பருவக் காலத்தைப் பொறுத்து எமது நடைமுறை வாழ்வினை மாற்றிக் கொள்ளுதல், மனமும் உடலும் ஒன்றாக  மகிழ்ந்திட உதவும். பனிக்காலத்தில். மினசோட்டாவில் வெப்பம் 35 F இருந்து -40 F வரை தணியலாம். எனவே நாம் உள் வீட்டில் அமர்ந்து வெளியே வாழ்க்கையின் இயந்திரத் தன்மையை, சதா ஓடிக் கொண்டிருக்கும் வழக்கத்தை சற்று விலக்கி, இளைப்பாறி பனிக்காலச் சுகங்களை ஏற்றுக்கொள்வது இருள் குளிர் மிகு பருவ காலத்தை நன்கு அனுபவித்து உணர உதவும்.

இதற்கு சில சாதாரண வாழ்வு உதாரணங்களுடன் எடுத்துப் பார்ப்போம். காப்பி, தேனீர் குடித்து வளர்ந்தவர்களுக்கு ஊரில் மாரிகாலம் சிறிய போர்வை, மரக்கட்டில், கதிரைபில் சுருண்டு இருந்து புத்தகம் வாசித்தல், தொலைக்காட்சி பார்த்தல் போன்றவை இனம்புரியாத  அனுபவங்களைத் தந்திருக்கலாம். 

அதை போன்று குளிர் நாட்டில்

 மிருதுவான மெத்தை உள்ள இளைப்பாறும் sofa கதிரையில், காலில் Sox, கம்பளிப் போர்வை உடன், இதமான சூட்டில் கமகமக்கும் தடித்த பால் கூடிய, சிறிதளவு சோக்லேட் சீவல்கள் சேர்ந்த, வெள்ளை சிறு முகில்கள் போன்று மிதக்கும் மார்ஷ்மெலோ கட்டிகள் என கோப்பையில் மணக்கும் ஹாட் சாக்கலேட் பானத்தை உறிஞ்சினால் கிடைக்கும் இன்பமே அலாதிதான்.

 மேலும் வீடு முழுவதும் நறுமணம் வீச கறுவா, ஏலம், வனிலா, பைன் மர வாசனைத்  திரவியங்கள் தூவிய அலங்கார மெழுகுதிரிகள் எரிந்த வண்ணமிருக்க அகலடுப்பு சிற்றுண்டிகள் செய்ய வழிவகுக்கும் காலம் இது. பிரஞ்சு சில்க், ஆப்பிள், பூசணி என்று விதவிதமான பை எனப்படும் இனிப்பு அப்பம், மற்றும் பற்பல ரக நத்தார் குக்கீஸ் வகைகள் போன்றவற்றை நோர்வே, டெனிஷ் மக்களின் ஹுக (hygge) எனப்படும் பனிக்காலச் சுகங்களை சூழ்ந்து அமைகிறது எனலாம்.

இந்த பனிக்காலச் சுக உணர்வுகள் எளிமையான முறையில்  சௌகரியமான நல்வாழ்வை இலகுவாக அனுபவிப்பதை அடிப்படையாக வைத்தே அமைகிறது. சந்தோஷமாக சௌகரியமாக, சலிப்பின்றி இளைப்பாறிக் கொள்ளலே பனிக்கால சுகங்களின் பொதுநோக்கு எனலாம்.

வடக்கு பூகோளத்தின் பனிக்காலம் ஆறு தொடக்கம்  எட்டு மாதங்கள் படரும். இப்பேர்பட்ட பிரதேசத்தில் அமைந்த இடமே மினசோட்டா மாநிலம். எழில் மிகு இயற்கை, ஏரி, குளம், குட்டை, ஆறுகள் காடுகள் கொண்ட இடம் எமது மினசோட்டா. இயற்கையை எடுத்துப் பார்த்தால் சில ரகசியங்கள் தெரியவரும் இவ்விடத்தில் வாழும் பல உயிரினங்கள், ஏன் தாவரங்கள் கூட பனி காலத்தில் தமது உடல் சக்தியை, வெப்பத்தை பேண குளிர்கால நீளுறக்கத்திற்கு (Hibernation) சென்று விடும். மீண்டும் இலை துளிர் காலத்தில் யாவும் துயில் எழும். இந்த வாழ்வு முறை இப் பிரதேச மனிதரையும் பல வகையில் ஆட்கொள்கின்றது.

இவ்விட மனிதரும் பனிக்காலத்தில் துரு துரு என தொழிற்படுவதில்லை. எனவே இந்த இருண்ட மிகு காலத்தை இன்பமாக போக்கிக் கொள்ள சிற்சில வாழ்வு முறைகளை கடைபிடிக்க வேண்டியுள்ளது. இது உணவிலும், உடுத்தலிலும், ஒருமித்து இளைப்பாறலிலும் கண்டு கொள்ளலாம். இப்பேர்பட்ட விரைவற்ற வாழ்வை அடிப்படையாகக் கொண்ட அமைகிறது ஹுக பனிக்கால சுகபோகம்.

 வெளியில் பனி பொழியும் ஒரு நாளில், இல்லை மழை பெய்யும் தருணத்தில் வீட்டில் சுகமாக அமர்ந்து சூடான ஒரு பானத்துடன் விருப்பமான புத்தகத்தை விரித்து பார்த்தீர்களேயானால் அது நீங்களும் உங்கள் ஹுக உணர்வுகளை அனுபவிக்கலாம். இந்த உணர்வு டெனிஷ் மக்களின் வாழ்வில் மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்படும் உணர்வாகும். இதுவே அந்நாட்டு மக்கள் உலகிலேயே சந்தோஷமான வாழ்வு உடையவர்கள் என்று கணிக்கப்படுவதற்கு ஒரு காரணமாகும்.

 

பனிக்காலத்தில் டேனிஷ் மக்கள் பெரும் ஒளிவிளக்குகள் தவிர்த்து மெல்லிய ஒளி மெழுகுதிரிகள் விரும்புவர். இது பனிகாலத்தில் மிருதுவான மனச்சாரந்தமான உணர்வுகளை உருவாக்கும் என்பது அவர்கள் நிலைப்பாடு. மேலும் வீட்டின் வெப்பம் தரும் அடுப்புக்கள் (Fireplaces), அதன் அயலில் உள்ள நத்தார், மற்ற பனிகால கொண்டாட்ட அலங்காரங்கள் அமைதிக்கான உள்மன நிலையைத் தரும்.

 மேலும் வெளியில் உள்ள குளிரைப் போக்கிக் கொள்ள மிருதுவான பெருங்கம்பளிப்போர்வைகள், சூடாக்கி கொள்ளக் கூடிய தலையணிகள், பெரிய தடித்த கம்பளி காலணிகள் போன்ற சௌகர்யத்தை தரும் தன்மை வாய்ந்தவை. இவை ஹுகா பனிகால சௌகரியங்கள் உதாரணங்கள் ஆகும்.

இது மட்டுமல்ல சுகமாகச் சாப்பிட்டுக் கொள்ள உங்களுக்குப் பிடித்த சாக்லேட் கேக் மற்றும் இதர  சிற்றுண்டிகள், சூடான பானங்கள் போன்றவையும் பனிக்காலச் சுகங்களைத் தூண்டுபவை ஆகும். இவையாவும் வெளியில் வெப்பநிலை குறைந்து இருள் மிகு காலத்தை இன்பமாக போக்க உதவும் வழிமுறைகளாகும்.

மேலும் பனிக்காலத்தில் குடும்பத்துடன், நண்பர்களுடன் கூடி படம் பார்த்தல், பாட்டு இசைத்தல், விளையாடி குலவுதல் போன்ற விடயங்களும் வரவேற்கப்படும் ஹுக நடைமுறைகள். 

ஹுக (HYGGE) வாழ்வு முறையை தடைசெய்யக் கூடியவை

இந்த வாழ்வு முறை எளிமையாக இலகுவான சுகங்களை நாடும் வாழ்வு. தற்கால செயற்கை வாழ்வு இடையூறு செயல்களில் ஈடுபடுதல், பொதுவாக கைத்தொலை பேசியை நாள் பூராவும் பார்த்தவாறு இருத்தல், மின் வலய உபகரணங்கள் கொண்டு அயலில் உள்ளவரை அலட்சியம் செய்தல், ஆடம்பரப் பொருட்கள் கரிசனை செலுத்துதல், தேவையற்ற பணம் செலவழித்து அந்தஸ்து கருதி உணவு, உடை, விலை கூடிய மதுபானம் அருந்தி கொள்ளுதல் போன்றவை பனிக்காலச் சௌகரியங்கள் அல்ல. பனிக்கால சுகங்களுக்கு இடையூறான இவற்றைத் தவிர்ப்பது நலம்.

 மகிழ்வு தரும் மாநில ஐரோப்பியத் தொடர்புகள்

 மினசோட்டாவில் ஐரோப்பிய சமூகம் ஏறத்தாழ 400 வருடங்களாக, வெவ்வேறு வருகைகள் மூலம் வந்து குடியேறினர். இதில் மினசோட்டாவில் நோர்வே மக்கள் 1850களில் வந்து குடியேற ஆரம்பித்தனர். மினசோட்டா மாநிலம் இன்று நான்கில் ஒரு பகுதி மக்கள் நோர்வே சந்ததியைச் சேர்ந்தவர்கள் ஆகும். இதைவிட சுவீடிஷ், டென்மார்க், பின்லாந்து மக்களும் வந்து குடியேறினர்.

 ஹுக என்ற சொல், வாழ்வு முறை டென்மார்க்கில் இருந்து வந்ததேயாகும். நோர்வே மக்கள் இதைப் பின்பற்றுவர். ஒரு காலத்தில் டென்மார்க்கும் நோர்வேயும் ஒரே அரசனால் ஆளப்பட்டன. ஆனால் இந்த அயல்நாட்டு மக்கள் வாழ்வு, பேச்சு முறைகளிலும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. இது 19ஆம் ஆண்டு கடைசி, 20ம் நூற்றாண்டில் டெனிஷ் சமூகத்தில் வந்த வாழ்வு முறை என்றும் கருதப்படுகிறது.

 இன்றைய மினசோட்டாவில் பணம் பொருள் என்றில்லாமல் பலர் எளிமையையும், இயற்கையையும் நாடிய சுகங்களையும் தரும் வட ஐரோப்பிய வாழ்வு முறைகளைத் தொடர்ந்து கடைப்பிடிப்பது காணலாம். இதுவே பனி பொழியும் மினசோட்டா மாநிலம், அமெரிக்க நாட்டின் சந்தோஷமான பிரசைகள் பட்டியலில் பல வருடங்களாக உயர் நிலையில் உள்ளதற்கு ஒரு காரணியாகும்.  

உள்ளூர் நிகழ்வுகள் ….

மினசோட்டாவில் ஹுக சாரந்த நிகழ்வுகள் அமெரிக்க நோர்வே வீட்டில் (Norway House) வருடா வருடம் பண்டிகைகால நவம்பரிலிருந்து டிசம்பர் மாதம்  வரை வைப்பார்கள். Gingerbread Wonderland நோர்வே மக்களது பாரிய பண்டிகை கால கேளிக்கை. அப்போது விதவிதமான இஞ்சி உரோட்டிவீடுகளை அகலடுப்பில் சமைத்து அலங்காரம் செய்து, போட்டிகளும் வைப்பார்கள்.

இதை மக்கள் நேரடியாகவோ இல்லை மின்வலயம் மூலமாகவும் பார்த்து மகிழலாம்.

மேலதிக விபரங்களுக்கு www.norwayhouse.org/gbw2020 என்ற இணையதளத்தை அணுகுங்கள்.

எனவே மினசோட்டா மக்களாகிய நாம் பனிக்காலச் சௌகரியங்கள் பின்பற்றி வாழ்வில் பயன் பெறுவோம்.

ஊர்குருவி

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad