ஜனவரி 2021 – தமிழ்ப் பாரம்பரிய மாதம்
தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக தமிழர் திருநாளாம் பொங்கல் விழா நடைபெறும் ஜனவரி மாதத்தை ‘தமிழ் மொழி மற்றும் பாரம்பரிய மாதமாகப்’ பிரகடனப்படுத்தி தமிழ் மொழியின் தொன்மை, செழுமை, கலாச்சாரத்தைப் பெருமைப்படுத்தியுள்ளது மினசோட்டா மாநில அரசாங்கம்.
இதைப் பிரகடனப்படுத்தி, அறிவித்த ஆளுநர் திரு. டிம் வால்ட்ஸ் அவர்களுக்கு தமிழ்ச் சமூகம் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறது பனிப்பூக்கள்.
ஆளுநரது அறிவிப்பின் தமிழாக்கம் கீழே தரப்பட்டுள்ளது.
உலகில் 2600 ஆண்டுகளை விஞ்சியிருக்கும் வரலாற்றைக் கொண்டிருக்கும் தொன்மையான செம்மொழியாகத் தமிழ் உள்ளது.
மினசோட்டாவின் தமிழ்ச் சமூகம், மினசோட்டாவை, அமெரிக்காவிலேயே தமிழ் மொழிக்கான இருமொழி முத்திரையை வழங்கும் முதல் மாநிலமாக உருவாக்கியுள்ளது.
மினசோட்டா தமிழர்கள் அமெரிக்காவில் தமிழ்க் கல்விக்கான தரநிலைகளை உருவாக்கி, தமிழ் பயிலும் மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை வழங்கி வருகின்றனர்.’
தமிழ் மொழி, கலை, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை மேம்படுத்துவதன் மூலம் இங்கிருக்கும் தமிழர்கள், மினசோட்டாவை இணைத்திருக்கும் சமூக, பொருளாதார மற்றும் கலாச்சாரக் கட்டமைப்புக்கு வலு சேர்த்துள்ளனர்.
உலகெங்கிலும் உள்ள தமிழ்ச் சமூகம் ஒவ்வொரு ஆண்டும், தமிழ் மாதமான தை முதல் தினத்தில் தொடங்கி, நான்கு நாட்கள் நீடித்த பொங்கல் விழாவைக் கொண்டாடுகிறது.
ஜனவரி மாதத்தை, தமிழ்ப் பாரம்பரிய மாதமாகக் கொண்டாடுவதன் மூலம் மினசோட்டா தமிழர்கள் தங்கள் கலாச்சாரம், வளமிக்க மரபுகள் மற்றும் வரலாற்றுச் சிறப்புகளை மினசோட்டா மாநில மக்களுடன் பகிர்ந்து கொள்வதில் உறுதியாக உள்ளனர். மேலும், அனைத்து மினசோட்டா மக்களையும் இந்த மாதத்தில் தமிழ்ப் பாரம்பரியம் மற்றும் மரபுகளைப் பற்றியறிய வரவேற்கின்றனர்.
மினசோட்டாவின் ஆளுநரான டிம் வால்ட்ஸ் எனப்படும் நான், 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தை தமிழ் மொழி மற்றும் பாரம்பரிய மாதமாக அறிவிக்கிறேன்.
இதற்கு முன்னெடுத்த மினசோட்டாத் தமிழ்ச் சங்கத்தினருக்குப் பனிப்பூக்களின் வாழ்த்துகள்.
-ரவி