\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

அதிகாலையில் பூமியில் ஒரு சொர்க்கம்….

 

அதிகாலையில்  நடைப்பயிற்சிக்காக சென்ற போது ஏற்பட்ட ஒரு ஆனந்தமான அனுபவம்.

நடக்க ஆரம்பித்ததும், காற்று இதமாய்த் தழுவி உற்சாகப்படுத்தியது. அவ்வளவாக மனித நடமாட்டமோ, வண்டிகளின் சத்தமோ இல்லாததால், சின்னஞ்சிறிய உயிர்களின் ஓசைகளைக் கூட கேட்க முடிந்தது. விதவிதமான பறவைகளின் வித்தியாசமான ஒலிகள் ஆச்சரியப்படுத்தியது. உற்றுக் கவனித்ததில் அவைகளுக்குள் ஏதோ தகவல் பரிமாற்றம் நடப்பது போல் தோன்றியது. தலையிலும், வாலிலும் மட்டும் சிவப்பு நிறத்தைக் கொண்ட ஒரு கருங்குருவியின் கூவலுக்கு, சில விநாடிகள் கழித்து, அதே போன்று சத்தம் சற்றுத் தொலைவிலிருந்து வந்தது அதிசயமாக இருந்தது.

எந்தவித பயமுமின்றி பறவைகள், சாலைகளிலும், நடைபாதைகளிலும் நடந்து கொண்டிருந்ததும், தாழப் பறந்ததும் வியப்பை ஏற்படுத்தியது. கால்களும், மூக்கும் இளஞ்சிவப்பிலும், இறகுகள் பழுப்பு நிறத்திலும் இருந்த பறவை ஒன்று கிட்டத்தட்ட ஒரு 20 அடிகள் வரையிலும் எனக்கு சற்றுத்தள்ளி தத்தித்தத்தி நடந்தே வந்தது.

ஏக்கம் கலந்த கீதத்துடன்  தொலைவிலிருந்து வந்த ஒரு குயிலின் கூவலும், சிட்டுக்குருவிகளைப் போன்ற குட்டிக் குருவிகளின் கூட்டமும், அருகில் காகங்களின் கரைதலும், நம் ஊரின் நினைவுகளுக்குள் இழுத்துச் சென்றன. காகங்கள், அடர்த்தியான கறுப்பில், பருந்தின் அளவில் இருந்தன. நிலத்தில் இரயில் வண்டிப் பூச்சிகளும், பெரிய, நீள புழுக்களும், பதட்டமேயின்றி ஊர்ந்து சென்றன.  

சின்னஞ்சிறு பறவைகள்  சில, அணிற்பிள்ளைகளைத்  துரத்திக் கொண்டிருந்தன.  என் காலடி ஓசையக் கேட்டு விருட்டென்று, சிறு புதருக்குப் பின்னால் பதுங்கி எட்டிப் பார்த்த முயல் குட்டியின் கண்களில் மிரட்சி தெரிந்தது.

நேற்று இரவே சாலையின் எதிர்ப்புறத்தில் இருந்து புறப்பட்ட ஆமை ஒன்று, மிக சுவாதீனமாக, சாலையைக் கடந்து, கிட்டதட்ட இந்தப்பக்க சாலையின் எல்லையை நெருங்கிக் கொண்டிருந்தது.

மரங்களும், செடிகளும், கொடிகளும், புதர்களும் வஞ்சனையில்லாமல் அழகைக் கொட்டிக் கொண்டிருந்தன. களைச் செடிகள் என்று ஒதுக்கப்பட்ட புதர்களில் மிகக் களையாக வண்ண மயமான பூக்கள், தென்றல் சொல்லிய இரகசியத்தைக் கேட்டு, வெட்கமாகத் தலை குனிந்து சிரித்தன.  காற்று சொல்லிய நகைச்சுவையைக் கேட்டு, கைகொட்டிச் சிரித்தன, மரங்களின் கிளைககளும், அதன் இலைகளும். எங்கிருந்தோ வந்த ஒரு சுகந்தமான மெல்லிய மணம் காற்றில் மிதந்து வந்து நாசியை நிறைத்தது.

வானத்தை நிமிர்ந்து பார்த்த போது அதன் பிரமாண்டத்திற்கு முன், பூமியின் மீதான இயற்கையின் இரகசியங்கள் அத்தனை பெரிதாக இல்லையோ எனத் தோன்றியது.    பூமிப்பந்து செல்லமாக மெதுவாக கதிரவனை நோக்கிச் சுழன்றது. சூரியனின் கிரணங்கள் வரிவரியாகத் தெரிய ஆரம்பித்தன. பார்த்துக் கொண்டிருக்கும் போதே, வானில் ஒரு மாயாஜாலம் தோன்ற ஆரம்பித்தது. பல வித நிறங்களும், விதவிதமான வடிவங்களில் மேகங்களுமாக அந்த வர்ணஜாலங்கள் பரவசத்தை ஏற்படுத்தியது. அடர்ந்த மரங்களுக்கு இடையே சூரியக் கதிர்கள், உருக்கிய தங்கமாய் ஒளிர்ந்து வழிந்தது.   சில விநாடிகளில், ஒரு கம்பீரமான பேரரசனைப் போல், கதிரவன் தன்னை முழுவதுமாக வெளிப்படுத்திக் கொண்டு பேரொளி ஏற்பட்ட அந்த விநாடியில், அந்த பிரமாண்டத்தை உள் வாங்கிக் கொள்ள முடியாத பிரமிப்பில் நின்று விட்டேன்.

கதிரவனின் கதிர்கள் பட்டு அருகில் உள்ள குளத்தின் நீர் முழுவதும் பொற்குளமாக மிளிர்ந்தது.  மீன்கள் தாங்க முடியாத மகிழ்ச்சியில் முங்கிக் குளித்து, களித்து நீந்தின.    சாலையின் எதிர்ப்புறத்திலிருந்து, ஒரு மகாராணியைப் போன்ற கர்வத்துடன்  ஒரு தாய் வாத்து நிமிர்ந்து நடந்து வர, எங்களுக்கென்ன மனக்கவலை என்பது போல பின்னாலேயே ஐந்தாறு உல்லாசமான குட்டி வாத்துகளும் நிதானமாக சாலையைக் கடந்து, நடந்து புல்பரப்பின் மீதேறி, குளத்துக்குள் இறங்கின. 

சுத்தமான காற்று, உற்சாகமாய் இரசிக்க இயற்கையின் அற்புதங்கள், பிற உயிர்களின் அசைவுகள் என, நம் குடியிருப்புகளைச் சுற்றி அத்தனை அதிசயங்கள் கொட்டிக் கிடக்கின்றன.  இதை அனுபவிக்க நாம் கொடுக்க வேண்டிய விலை, அதிகாலை உறக்கம் விடுத்து எழுவதுதான்.  ஒரு நாளாவது அதிகாலையில் எழுந்து, நம் அருகாமையிலேயே உள்ள இனிமையான, உயிர்ப்பான இன்னொரு உலகத்தைக் கண்டு, களித்து உடலும், உள்ளமும் புத்துணர்ச்சிப் பெறுவோம். வாழ்க்கை வாழ்வதற்கே! இயற்கையைப் போற்றி, மகிழ்வோம்!!

  • மீனாட்சி கணபதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad