\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

மாநாடு

அப்துல் காலிக் ஊட்டியில் நடக்கும் தனது தோழியின் திருமணத்திற்குத் துபாயிலிருந்து கோவைக்கு விமானத்தில் வருகிறான். அந்தத் திருமணத்தில் விருப்பம் இல்லாத தோழியை அவளுடைய காதலனுடன் சேர்த்து வைக்க, அங்கிருந்து கடத்தி வரும்போது, அவனும் நண்பர்களும் போலிஸ் அதிகாரி தனுஷ்கோடியிடம் மாட்டிக்கொள்கிறார்கள். கோவையில் நடக்கும் ஒரு மாநாட்டில் வைத்து, முதலமைச்சரைக் கொல்லும் திட்டத்தில் அப்துலை பலிகடாவாக்க முயலுகிறார் அந்தப் போலிஸ் அதிகாரி. அதன் மூலம் மதக்கலவரத்தையும் உருவாக்க சில அரசியல்வாதிகளுடன் இணைந்து திட்டமிடுகிறார் அவர். இதுவரை இது ஒரு சிம்பிள் கதை.

இந்தத் திட்டம் அப்துலுக்குத் தெரிய வருகிறது. பிறகு, அவர் கொல்லப்படுகிறார். அவர் இறக்கும்போது, விமானத்தில் தூக்கத்திலிருந்து எழும்புகிறார். அதே சம்பவங்கள் திரும்ப நடக்கிறது. என்ன நடக்கப் போகிறது என்று ஏற்கனவே தெரிந்து இருப்பதால், இச்சமயம் தவறைச் சரி செய்ய முயலுகிறார். ஆனாலும், வேறுவிதமாகக் கொல்லப்படுகிறார். திரும்ப, விமானத்தில் தூக்கத்தில் இருந்து எழும்புகிறார்.

இது தான் ‘டைம்லூப்’. என்ன, ஏது, எப்படி என்று ரொம்பவும் குழம்பாமல், திரையில் இயக்குனர் வெங்கட் பிரபு செய்திருக்கும் மேஜிக்கை ரசிக்கத் தொடங்கினால், இப்படம் உங்களுக்கு ரொம்பவும் பிடிக்கும். தமிழ் ரசிகர்களை நம்பி இப்படி ஒரு படம் எடுத்திருப்பது, தமிழ் ரசிகர்கள் மீது அவர் வைத்திருக்கும் உச்சக்கட்ட நம்பிக்கை எனலாம். ஒருவருக்கு ‘டைம்லூப்’ என்றாலே குழப்பி எடுக்கும். இதில் இருவருக்கு ‘டைம்லூப்’ ஆகிறது. இருந்தாலும், தலையைச் சொறிய வைக்காமல் ரசித்துப் பார்க்க வைத்துவிடுகிறார் இயக்குனர்.

சிம்பு நீண்ட நாட்களுக்குப் பிறகு பார்க்கும்படியான ஒரு படத்தில் பார்க்கும்படியான தோற்றத்தில் நடித்துள்ளார். நிறைய இடங்களில் அடக்கி வாசித்து, தேவையான இடங்களில் மட்டும் ரசிக்கும்படியாக நடித்திருக்கிறார். கல்யாணி பிரியதர்ஷன் ‘டைம்லூப்’ உபயத்தில் நிறையக் காட்சிகளில் வருகிறார். ஆனால், கதையில் சின்னக் கதாபாத்திரம் தான். நாயகனுக்கு இணையான கதாபாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யா. நடிப்பில் நாயகன் மட்டுமில்லாமல் அனைவரையும் தூக்கிச் சாப்பிட்டிருக்கிறார். யார் ஹீரோ என்று சமயங்களில் யோசிக்க வைத்து விடுகிறார். எஸ்.ஏ.சந்திரசேகர், ஒய்.ஜி.மகேந்திரா, சந்திரசேகர் என சென்ற தலைமுறை சீனியர் நடிகர்களுடன், ப்ரேம்ஜி, மஹத், கருணாகரன் என இந்தத் தலைமுறை நடிகர்களும் நடித்திருக்கிறார்கள். வெங்கட் பிரபு படத்தில் ப்ரேம்ஜி நடித்திருக்கிறார் என்று தனியாகச் சொல்லவும் வேண்டுமா?

முதலமைச்சரைக் கொல்லும் சதியை முறியடிப்பது என்ற சாதாரணக் கதையை ‘டைம்லூப்’  மூலம் ஸ்பெஷலாக்கி, அதன் உடன் தற்போதைய ட்ரெண்டான சமூக அக்கறை என்ற மூலாம் பூசி மேலும் ஸ்பெஷலாக்கி இருக்கிறார்கள். பல பிரச்சினைகள் நமது வாழ்விலும் திரும்பத் திரும்ப வருவதும், நாம் அதை எப்போதும் போல் கடந்து செல்வதும் ‘டைம்லூப்’  போலத் தான் என்பதைச் சொல்லாமல் சொல்லியிருக்கிறார்கள்.

வெங்கட் பிரபுவின் ரசிக்கும்படியான திரைக்கதைக்குப் பக்கபலமாக எடிட்டர் பிரவீணும் இசையமைப்பார் யுவன் சங்கர் ராஜாவும் தங்களது சிறப்பான பங்களிப்பைக் கொடுத்துள்ளனர். எடிட்டர் ரிச்சர்ட் நாதனின் ஒளிப்பதிவு நன்றாக இருந்தாலும், ஒரு ‘பளிச்’ குறைவுதான். திமிறி ஓடும் குதிரைகளைக் கட்டுப்படுத்தி, வெற்றிப்பாதையில் செலுத்தியிருக்கிறார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.

இந்தப் படத்தின் கதையின் போலவே பல்வேறு திருப்பங்கள், விறுவிறுப்புகள் கொண்டது இப்படத்தின் உருவாக்கக் கதை. குண்டான சிம்பு ஒல்லியானது, நடுவில் கோபித்துக்கொண்டு மகாமாநாடு எடுக்கப்போகிறேன் என்று கிளம்பியது, படத்தின் ரிலீஸ் தேதி மாறிக்கொண்டே வந்தது, ரிலீஸ் ஆவதற்குச் சில மணி நேரங்கள் முன்பு பட வெளியீடு திரும்பவும் தள்ளி வைப்பு என்றது என்று ஏகப்பட்ட ட்விஸ்டுகள் இப்படம் வெளியாவதற்கு முன்பு வரை. பல தடைகளைக் கடந்து வெளியான படம், அனைவருக்கும் மகிழ்ச்சியளிக்கும் வண்ணம் வெற்றி பெற்றுள்ளது. சிம்புவுக்கும், வெங்கட் பிரபுவிற்கும் நீண்ட காலத்திற்குப் பிறகு ஒரு வெற்றி கிடைத்துள்ளது. இந்தப் படத்திற்கு அவர்கள் உழைத்தது போல் திரும்பத் திரும்ப உழைத்தால், படத்தில் வரும் சம்பவங்கள் போல் திரும்பத் திரும்ப வெற்றி ரீப்பிட்டாக ‘டைம்லூப்’  ஆகலாம்.

  • சரவணகுமரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad